கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு மனு விசாரணையில் தங்களை 3ம் தரப்பு வாதியாக சேர்த்துக்கொள்ள வேண்டும் என்ற சுப்பிரமணியன் சுவாமி வாதமும், அன்பழகன் தரப்பு வாதமும் நிறைவு பெற்றதும்…
நீதிபதி குமாரசாமி: (அன்பழகன் தரப்பு வழக்கறிஞர் சரவணனைப் பார்த்து) ஏதாவது சொல்ல நினைக்கிறீர்களா?
சரவணன்: சி.ஆர்.பி.சி. செக்ஷன் 301ன்படி இவ்வழக்கில் தனிநபர் ஆஜராகி வாதிட உரிமை உள்ளது. அதனால், எங்களை இவ்வழக்கில் 3ம் தரப்பு வாதியாக சேர்த்துக்கொண்டு வாதிட அனுமதிக்க வேண்டும்.
நீதிபதி: அன்பழகன் திமுக பொதுச்செயலாளராக இருக்கும்போது அவரை எப்படி தனிநபர் என்று சொல்ல முடியும்?
சரவணன்: எந்த ஒரு தனிநபரும் என்று சொல்லி இருக்கிறது. அதனால், எந்தப் பொறுப்பில் இருப்பவருக்கும் அது பொருந்தும்.
நீதிபதி: இந்த வழக்கில் நீங்கள் பாதிக்கப்பட்டவர்களா?
சரவணன்: யார் பாதிக்கப்பட்டவர் என்பது வழக்கின் தன்மையைப் பொருத்து அமையும். இந்த வழக்கைப் பொறுத்தவரை தமிழக மக்களின் வரிப்பணம் வீணாக்கப்பட்டிருப்பதால், தமிழக மக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டவர்கள்தான்.
நீதிபதி: நீதிமன்றத்தின் நேரத்தை வீணாக்காமல் சொல்ல வேண்டியதை இறுதியாகச் சொல்லுங்கள்.
சரவணன்: சிறப்பு நீதிமன்றம் எங்களை 3ம் தரப்பு வாதியாக அனுமதித்ததைப்போல இந்த நீதிமன்றமும் அனுமதிக்க வேண்டும். நாங்கள் சிறப்பான முறையில் அரசு வழக்கறிஞருக்கு உதவியாகவும், எங்களுடைய நியாயமான வாதத்தை முன்வைக்கவும் அனுமதிக்க வேண்டும். ஊழலுக்கு எதிராக செயல்படுவதுதான் எங்களின் நோக்கம்.
நீதிபதி: நீங்கள் ஆட்சியில் இருந்தபோது ஊழலை ஒழிக்க என்ன செய்தீர்கள்?
சரவணன்: எங்கள் தலைவர் கலைஞர் 1974ல் லோக் ஆயுக்தா கொண்டுவர முயற்சி செய்தார். ஆனால், கொண்டுவர முடியவில்லை.
நீதிபதி: (பவானிசிங்கைப் பார்த்து) இதற்கு என்ன சொல்றீங்க?
பவானிசிங்: எனக்கு உதவியாக இருக்க இவர்களுக்குப் பதில் சுப்பிரமணியன் சுவாமி சிறந்தவர்.
நீதிபதி: (குமாரைப் பார்த்து) நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
இந்த மேல்முறையீட்டு மனுவில் அரசு வழக்கறிஞர் பவானிசிங் ஆஜராகி வாதிடும்போது 3ம் தரப்பு வாதிகள் யாரையும் சேர்க்கக் கூடாது. இதுபோன்று எந்த ஒரு வழக்கிலும் 3ம் தரப்பு வாதிகளைச் சேர்க்கவில்லை. இப்படி ஒரு வழக்கில் 3ம் தரப்பு வாதியாக வாதிட கேட்பது விசித்திரமாக இருக்கிறது.
அன்பழகன் வெளியேற்றம், சு.சாமி நுழைவு...
அன்பழகன் தரப்பு வாதத்தையும், சுப்பிரமணியன் சுவாமி, பவானிசிங், ஜெயலலிதா தரப்பு வாதங்களைக் கேட்ட பிறகு, யாரை இவ்வழக்கில் 3ம் தரப்பு வாதியாக சேர்க்க வேண்டும் என்று நீதிபதி குமாரசாமி தீர்ப்பு வழங்கினார்.
நீதிபதி: அரசு வழக்கறிஞருக்கு உதவியாக இருக்க வேண்டும் என்று அன்பழகன் வழக்கறிஞர் வாதிட்டார். ஆனால், ஒரு பக்கம் அரசு வழக்கறிஞருக்கு உதவியாக இருப்பதாகவும், இன்னொரு பக்கம் அரசு வழக்கறிஞரை நீக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றத்தில் ரிட் மனுவும் போடுகிறார்கள்.
இப்படி இரு வேறுபட்ட கருத்துகளைக் கொண்டிருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது எப்படி இவர்களால் அரசு வழக்கறிஞருக்கு உதவ முடியும்?
மேலும் அன்பழகன் திமுக பொதுச்செயலாளராக இருப்பதால் ஏ1-க்கு அரசியல் எதிரி என்பதும் தெரிய வருகிறது. அவர்களும் (அன்பழகன் தரப்பினரும்) அதிகாரத்தில் இருந்திருக்கிறார்கள்.
அப்போது ஊழலை ஒழிக்க எந்த முயற்சியும் எடுத்ததைப்போல தெரியவில்லை. இதையெல்லாம் பார்க்கும்போது அன்பழகன் பொது நோக்கத்தோடு இதில் ஆஜராவதாகத் தெரியவில்லை.
கொல்கத்தா உயர்நீதிமன்றம் ஒரு வழக்கில் தனிநபர் வாதிட அனுமதி மறுத்திருக்கிறது. அதனால், இந்த வழக்கிலும் அன்பழகன் என்ற தனிநபர் தன்னை இவ்வழக்கில் 3ம் தரப்பு வாதியாக இணைத்துக்கொள்ள கொடுத்த மனுவைத் தள்ளுபடி செய்கிறேன்.
அதேபோல இந்த வழக்கில் சுப்பிரமணியன் சுவாமி தன்னை சுதந்திரமாக வாதிடவும், எழுத்துபூர்வமாக தன் வாதத்தைப் பதிவுசெய்யவும் அனுமதி கேட்டிருக்கிறார். இவர் இந்த வழக்கில் முதல் புகார்தாரராகவும், இவ்வழக்கில் சாட்சியாகவும் இருந்து தன் கருத்தை பதிவு செய்திருக்கிறார்.
மேலும் அரசு வழக்கறிஞர் தனக்கு உதவியாக இருக்க சுப்பிரமணியன் சுவாமி சிறந்தவராக இருப்பார் என்று கூறியதாலும், சுப்பிரமணியன் சுவாமியை இவ்வழக்கின் அரசு வழக்கறிஞருக்கு உதவியாக இருக்க அனுமதிக்கிறேன்.
மேலும், இறுதி வாதம் நிறைவில் சுப்பிரமணியன் சுவாமி, தன் கருத்தை எழுத்துபூர்வமாக பதிவு செய்யவும் அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனால், இவ்வழக்கில் சுப்பிரமணியன் சுவாமியை இணைத்துக்கொண்டு சுதந்திரமாக வாதிட அனுமதிக்க முடியாது.
மனுவைக்கூட சரியாக எழுதத் தெரியாதா?
பவானிசிங் வழக்கறிஞர் செபஸ்டீன் தலைமை நீதிபதி வகேலாவிடம், ‘‘ஏற்கெனவே பவானிசிங்கை நீக்க உத்தரவிட்டவர் நீங்கள்தான்.
அதனால், உங்கள் முன்னிலையில் வழக்கு விசாரிக்கப்பட்டால் தீர்ப்பு ஒருதலைபட்சமாக இருக்கும் என்பதால், இதை வேறு பெஞ்சுக்கு மாற்ற வேண்டும்’’ என்றார்.
அதையடுத்து கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வகேலா, இந்த வழக்கை நீதிபதிகள் குமார், வீரப்பா அடங்கிய பெஞ்சுக்கு மாற்றினார்.
அதையடுத்து நீதிபதிகள் குமார், வீரப்பா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அன்பழகன் தரப்பு வழக்கறிஞர் நாகேஷ் தன் மனுவை நீதிபதி குமாரிடம் கொடுத்தார். நீதிபதி குமார் அந்த மனுவைப் படித்துப் பார்த்துவிட்டு…
நீதிபதி குமார்: இதில் 3வது பார்ட்டி யாரு?
நாகேஷ்: நாங்கள்தான்.
நீதிபதி குமார்: மாநில ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை என்று எழுதி இருக்கிறீர்கள்? எந்த மாநிலம் என்று குறிப்பிடவில்லையே? எந்த மாநில ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை?
நாகேஷ்: தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை.
நீதிபதி குமார்: அதை ஏன் மனுவில் எழுதவில்லை. சீனியர் வழக்கறிஞர் என்கிறீர்கள். மனுவைக்கூட சரியாக எழுதத் தெரியாதா? மனுவைத் திருத்தம் செய்து கொடுங்கள். மனுவை திருத்தம் செய்து கொடுக்க எவ்வளவு நேரம் ஆகும்?
நாகேஷ்: ஒரு மணி நேரத்தில் திருத்தம் செய்து கொடுக்கிறோம்.
நீதிபதி குமார்: ஒரு மணி நேரத்தில் திருத்தம் செய்து கொடுங்கள். ஆனால், விசாரணை நாளைக்குத்தான் நடைபெறும்.
அடுத்த நாள் மனு விசாரணைக்கு வந்தபோது…
நாகேஷ்: இந்த மனுவில் சில திருத்தங்கள் செய்ய வேண்டி இருப்பதால், விசாரணையை நாளைக்கு ஒத்தி வைக்க வேண்டும்.
நீதிபதி குமார்: சரி. கறுப்பு கோட்டு போட்டு வரும் வழக்கறிஞர்கள் சமூக பொறுப்போடு நடந்துகொள்ள வேண்டும்.
நீதிமன்ற நடைமுறைகள் அனைத்தையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். முதல் நாள் விசாரணையின்போது நீங்கள் கொடுத்த மனுவில் பிழைகள் இருந்ததால், இப்படி நான் சற்று கடுமையாக பேசிவிட்டேன். அதை தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.
பவானிசிங் சீனியர் வழக்கறிஞர் இல்லையா?
பவானிசிங்கை நீக்குவது சம்பந்தமான மனு மீது நீதிபதிகள் குமார், வீரப்பா முன்னிலையில் அன்பழகன் தரப்பு வழக்கறிஞர் நாகேஷ், பவானிசிங் சார்பாக நாகானந்த், கர்நாடக அரசு சார்பாக தலைமை வழக்கறிஞர் ரவிவர்மகுமார் ஆகியோர் ஆஜராகி வாதிட்டதில் இருந்து…
நாகேஷ்: ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்துக்கு வழக்கை மாற்றும்போது. மாற்றப்பட்ட மாநிலம்தான் அரசு வழக்கறிஞரை நியமிக்க வேண்டும். அதன் அடிப்படையில்தான் கர்நாடக அரசு ஆச்சார்யாவை நியமித்தது. அவர் ராஜினாமா செய்ததும், சீனியர் அரசு வழக்கறிஞர் பவானிசிங் நியமிக்கப்பட்டார்.
நீதிபதி குமார்: பவானிசிங் எப்போது நியமிக்கப்பட்டார்?
நாகேஷ்: பிப்ரவரி. 6. 2013.
நீதிபதி குமார்: இந்த மனுவில் வேறு அனுபவம் வாய்ந்த மூத்த வக்கீல் யாரையாவது என்று குறிப்பிட்டுள்ளீர்கள்? அதற்கு என்ன அர்த்தம்?
நாகேஷ்: பவானிசிங்குக்குப் பதில் வேறு சீனியர் வழக்கறிஞரை நியமிக்க வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம்.
நீதிபதி குமார்: அப்படியானால் பவானிசிங் சீனியர் வழக்கறிஞர் இல்லையா?
நாகேஷ்: பவானிசிங் சீனியர் வழக்கறிஞர்தான். இந்த வழக்கில் கர்நாடக அரசுதான் அரசு வழக்கறிஞரை நியமிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் சொல்லி இருக்கிறது. அதை கர்நாடக அரசு செயல்படுத்த வேண்டும்.
நீதிபதி குமார்: இதை சொல்ல நீங்கள் யார்?
நாகேஷ்: இவ்வழக்கில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்று இந்த வழக்கை கர்நாடகாவுக்கு மாற்றியது நாங்கள்தான்.
நீதிபதி குமார்: குற்றவாளிகளுக்கு எப்போது தண்டனை கிடைத்தது?
நாகேஷ்: செப்டம்பர். 27. 2014.
நீதிபதி குமார்: அவர்களின் கிரிமினல் எண் என்ன?
நாகேஷ்: ஜெயலலிதா கிரிமினல் எண் 835, சசிகலா கிரிமினல் எண் 836, சுதாகரன் கிரிமினல் எண் 837, இளவரசி கிரிமினல் எண் 838 – 2014.
அழகிரிக்கு ஆந்திராதான் வக்கீலை நியமித்தது!
நீதிபதி குமார்: இந்த வழக்கின் புகார்தாரர் யார்?
நாகேஷ்: தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை.
நீதிபதி குமார்: தீர்ப்பின் நகலைக் கொடுங்கள். (நாகேஷ் தீர்ப்பின் நகலைக் கொடுத்தார் அந்த நகலைப் பார்த்துவிட்டு, பவானிசிங் வழக்கறிஞரைப் பார்த்து) இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?
நாகானந்த்: இந்த வழக்கை நீதிமன்றத்தில் நடத்தி வருவது தமிழக ஊழல் தடுப்பு போலீஸார். அவர்கள்தான் நியமனம் செய்து இருக்கிறார்கள்.
நாகேஷ்: நியமனம் செய்யவில்லை. அனுமதிதான் அளித்திருக்கிறார்கள்.
நாகானந்த்: உச்சநீதிமன்றம் ஏற்கெனவே நியமன ஆணை கொடுத்திருக்கிறது. இது உச்சநீதிமன்றம் வரை மேல்முறையீடு செல்வதற்குப் பொருந்தும். கீழமை நீதிமன்றத்தில் ஆஜரானதைப்போல இங்கும் ஆஜராகி வருகிறார்.
கடந்த 20 நாட்களாக இந்த விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை 3 மாதத்தில் முடிக்க உச்சநீதிமன்றம் முறையிட்டு இருக்கிறது. இந்நிலையில் அரசு வழக்கறிஞரை மாற்றினால், வழக்கு பாதிக்கும். வழக்கை தாமதப்படுத்தும் நோக்கத்தில் வேண்டும் என்றே இந்த மனுவைத் தாக்கல் செய்திருக்கிறார்கள். பவானிசிங் தன் பணியை சிறப்பாக செய்துகொண்டிருக்கிறார்.
நீதிபதி: (கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை வழக்கறிஞரைப் பார்த்து) இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?
ரவிவர்மகுமார்: கீழ்நீதிமன்றத்தைத் தொடர்ந்து மேல்முறையீட்டிலும் பவானிசிங் ஆஜராகி இருக்கிறார். நாங்கள் நியமன ஆணை கொடுக்கவில்லை. இந்த வழக்கில் அரசு தலையிட விரும்பவில்லை. நீங்கள் சொல்லும் தீர்ப்புக்குக் கட்டுப்படுகிறோம்.
நாகேஷ்: ஜெயேந்திரர் வழக்கை தமிழகத்தில் இருந்து பாண்டிசேரிக்கு மாற்றியபோது, தமிழக அரசுதான் அந்த வழக்கின் அரசு வழக்கறிஞரை நியமித்தது.
அதை பாண்டிசேரி கீழமை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. அதையடுத்து, ஜெயேந்திரர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். சென்னை உயர்நீதிமன்றமும் இந்த வழக்கை தமிழக போலீஸ் வழக்கு பதிவு செய்ததால், தமிழக அரசு இவ்வழக்கில் அரசு வழக்கறிஞரை நியமித்தது சரிதான் என்றது.
நீதிபதி குமார்: (குறுக்கீடு செய்து) பாண்டிசேரிக்கு உயர்நீதிமன்றம் எங்கு இருக்கிறது?
நாகேஷ்: சென்னை உயர்நீதிமன்றம்தான்.
நீதிபதி குமார்: அப்படியென்றால், இந்த வழக்கை பதிவு செய்ததும் தமிழக ஊழல் தடுப்பு போலீஸார்தான். அதனால், நீங்களும் சென்னை உயர்நீதிமன்றத்திலேயே முறையிடலாமே?
நாகேஷ்: இந்த வழக்கு கர்நாடகத்துக்கு மாற்றப்பட்டிருக்கிறது. கர்நாடகாவிலேயே உயர்நீதிமன்றம் இருப்பதால் இங்கு முறையிட்டு இருக்கிறோம்.
சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அடுத்து, ஜெயேந்திரர் உச்சநீதிமன்றத்துக்குச் சென்றார். உச்சநீதிமன்றம் தமிழக அரசு இவ்வழக்கில் அரசு வழக்கறிஞரை நியமித்தது தவறு. ஒரு வழக்கு எந்த மாநிலத்துக்கு மாற்றப்படுகிறதோ, அந்த மாநிலம்தான் அரசு வழக்கறிஞரை நியமிக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறது.
நீதிபதி குமார்: நீங்களும் உச்சநீதிமன்றத்துக்குச் செல்லலாமே! அதை விட்டுவிட்டு இங்கு வந்திருக்கிறீர்கள்?
நாகேஷ்: அதேபோல மதுரை அழகிரி வழக்கு தமிழ்நாட்டில் நடைபெற்றால் சரியாக இருக்காது என்று ஆந்திராவில் உள்ள நெல்லூர் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. அந்த வழக்கில் அரசு வழக்கறிஞரை ஆந்திரா அரசுதான் நியமித்தது.
நீதிபதி குமார்: இதுபற்றி எனக்கு தெளிவாக 10-ம் தேதி விளக்க வேண்டும். 10-ம் தேதி இந்த மனு மீது தீர்ப்பளிக்கப்படும்.
-வீ.கே.ரமேஷ்
படங்கள்: வி.சதீஷ்குமார்
நீதிபதி சாதகமான தீர்ப்பை வழங்க மாட்டார்!’ (ஜெ. வழக்கு விசாரணை-11)