கிட்டத்தட்ட பத்தாண்டுகளாகத் தொடர்ந்த சிக்கலான விவாதங்களின் பின்னர், பிரித்தானியா நாளை முதல், தனது நாட்டை விட்டு வெளியேறும் மற்றும் நாட்டிற்குள் உள்நுழையும் மக்களின் எண்ணிக்கையைக் கணக்கெடுப்பதற்கான நடைமுறையை மீளவும் அறிமுகப்படுத்தவுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் 100 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் பிரித்தானிய விமானநிலையங்களை வந்தடைவதாகவும்,  கிட்டத்தட்ட  3.5 மில்லியன் மக்கள் பிரித்தானியாவைப் பார்வையிடுவதற்காகவும், இங்கு வசிப்பதற்கும், வேலைசெய்வதற்கும் மற்றும் கற்கைகளை மேற்கொள்வதற்காகவும் விண்ணப்பிப்பதாகப் பிரித்தானிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

ஆனால் குடியகல்வு மற்றும் குடிவரவு தொடர்பான போதியளவு கணக்கெடுப்புக்கள் இல்லாததால், பிரித்தானியாவில்  நுழைவிசைவு  காலாவதியான பின்னரும் நாட்டை விட்டு வெளியேறாத மக்களைக் கண்டுபிடிக்க முடியாதுள்ளது.

நாட்டிற்குள் உள்நுழையும் மற்றும் வெளியேறும் மக்களைக் கணக்கெடுப்பதற்கான நடைமுறையை மீண்டும் அறிமுகப்படுத்தவுள்ளதாக தற்போது பிரித்தானியாவை ஆளும் பழமைவாதக் கட்சியும் தாராளவாத ஜனநாயகக் கூட்டணி அரசாங்கமும் 2010ஆம் ஆண்டு அறிவித்தது.

தற்போது பிரித்தானியாவில் பொதுத்தேர்தல் இடம்பெறுவதற்கு இன்னமும் 30 நாட்களே உள்ள நிலையில், குடிவரவு என்பது பாரியதொரு சிக்கலான பிரச்சினையாக மாறியுள்ளது.

தற்போதைய பிரித்தானிய அரசாங்கம், தேர்தலில் தோல்வியுறுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்த விரும்பவில்லை.

2014 குடிவரவுச் சட்டத்தில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் மூலம் நாட்டிற்குள் உள்நுழையும் மற்றும் வெளியேறுவோரைக் கணக்கெடுப்பதற்கான அதிகாரம் துறைமுகங்கள் மற்றும் விமானநிலையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

‘குடிவரவு மற்றும் குடியகல்வில் ஈடுபடுவோர் தொடர்பாகக் கணக்கிடுவதானது நாட்டை விட்டு வெளியேற்றப்பட வேண்டியவர்களா அல்லது இல்லையா என்பதை உறுதிப்படுத்த முடியும்.

பிரித்தானியாவில் இந்த நடைமுறை காணப்பட்டது. ஆனால் முன்னைய அரசாங்கங்களால் இந்த நடைமுறை நீக்கப்பட்டது.

இந்த நடைமுறையானது ஜோன் மேஜர் அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்டு ரொனி பிளேயர் அரசாங்கத்தால் தொடரப்பட்டது.

நாட்டிலிருந்து வெளியேறுவோரையும் உள்நுழைவோரையும் கணக்கெடுக்கும் நடைமுறையை மீண்டும் அறிமுகப்படுத்துமாறு 2004லிருந்து ரொனி பிளேயர் அரசாங்கத்தாலும் தாராளவாத ஜனநாயகவாதிகளாலும்  பரப்புரை மேற்கொள்ளப்படுகிறது’ என கிளெக் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நுழைவிசைவு காலாவதியாவதற்கு முன்னர் நாட்டை விட்டு மக்கள் வெளியேறுவதை உறுதிப்படுத்துவதற்காக, ஏற்கனவே  சுற்றுலாப்  பயணிகள்  3000 பவுண்ட்ஸ் பெறுமதியான பிணையை வழங்கவேண்டும் என பிரித்தானியாவால் அறிவிக்கப்பட்டது.

இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஸ், சிறிலங்கா, நைஜீரியா, கானா போன்ற நாடுகளிலிருந்து ‘உயர் ஆபத்து மிக்க பயணிகள்’ பிரித்தானியாவுக்குள் உள்நுழைவதற்கு ஆறு மாத கால நுழைவிசைவுக்கு 3000 பவுண்ட்சை பிணையாக வழங்க வேண்டும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிவிப்புத் தொடர்பில் எதிர்ப்பு ஏற்பட்டதால் இறுதியில் இப்பரிந்துரை கைவிடப்பட்டது.

இந்தநிலையில், நாளை முதல், பிரித்தானியாவின் அனைத்து விமானநிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் உள்வரும், வெளிச்செல்லும் பயணிகள் பதிவு செய்யப்படுவர்.

இந்தத் தரவானது நுழைவிசைவு காலாவதியான பின்னரும் நாட்டில் சட்டரீதியற்ற முறையில் தங்கியிருப்போரைக் கைது செய்வதற்கு உதவும்.

அத்துடன், அவர்களின் சாரதி அனுமதிப் பத்திரத்தை ரத்துச் செய்வதற்கும் மற்றும் வங்கிக்கணக்குகளைத் திறப்பதைத் தடுப்பதற்கும் உதவும் எனவும் பிரித்தானிய உள்த்துறைச் செயலகம் தெரிவித்துள்ளது.

‘நாட்டிற்குள் உள்நுழையும் மற்றும் வெளிச்செல்வோரைப் பதிவு செய்தலானது நாட்டின் தேசிய பாதுகாப்பையும் பலப்படுத்தும்.

இதன்மூலம் காவற்துறை மற்றும் பாதுகாப்புச் சேவைகள் சந்தேக நபர்களையும் குற்றவாளிகளையும் பயங்கரவாதிகளையும் தொடர்ந்தும் கண்காணிக்க முடியும்’ என உள்விவகாரச் செயலகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Share.
Leave A Reply