நெல்லை: பாளை அருகே உள்ள பூக்குழி கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் (வயது65) விவசாயி. இவரது மகள் பேச்சியம்மாள் (42). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த செல்லத்துரை (44) என்பவருக்கும் திருமணம் செய்து கொடுத்துள்ளனர்.

இவர்களுக்கு ரீபா, ஜான்சி, ரென்வி என்ற 3 மகள்களும், பிரேம்குமார் என்ற மகனும் உள்ளனர்.

பெருமாளின் மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். தனியாக வசித்த பெருமாளுக்கு பக்கத்து வீட்டை சேர்ந்த மாரியம்மாள் (37) என்ற பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.

மாரியம்மாள், கணவரை பிரிந்து அங்கு தனியாக வசித்து வந்தார். இதனால் பெருமாள் அடிக்கடி இரவு நேரங்களில் மாரியம்மாள் வீட்டுக்கு சென்று உல்லாசமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த கள்ளத்தொடர்பு விவகாரம் பெருமாளின் மகள் பேச்சியம்மாளுக்கு தெரியவந்தது. இதனால் அவர் தனது தந்தையை கண்டித்தார்.

வயதுக்கு வந்த பேத்தி இருக்கும் போது இப்படி கள்ளத்தொடர்பு வைக்கலாமா? என்றும் கண்டித்துள்ளார்.

மேலும் கள்ளக்காதலி மாரியம்மாள் வீட்டுக்கு சென்று, வீட்டை காலி செய்து விட்டு வெளியேறு என்றும் பேச்சியம்மாள் சத்தம் போட்டுள்ளார். இருந்த போதிலும் அவர்கள் இருவரும் தங்களது தொடர்பை விடவில்லை.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு பெருமாள், தனது கள்ளக்காதலி மாரியம்மாள் வீட்டுக்கு சென்றார். அப்போது மாரியம்மாள், பெருமாள் ஆசைக்கு இணங்க மறுத்து, பேச்சியம்மாளை கண்டித்து விட்டு வந்ததால் தான் அனுமதிப்பேன் என்று கூறியதாக கூறப்படுகிறது.

இதனால் பெருமாளுக்கு தனது மகள் மீது ஆத்திரம் ஏற்பட்டது. அவர் நேராக அரிவாளுடன் மகள் பேச்சியம்மாள் வீட்டுக்கு சென்று அவருடன் தகராறு செய்தார்.

அப்போது அவர் பெற்ற மகள் என்றும் பாராமல் அரிவாளால் பேச்சியம்மாளை சரமாரி வெட்டினார். சம்பவ இடத்திலேயே அவர் ரத்த வெள்ளத்தில் பலியானார்.

இதுகுறித்து முன்னீர் பள்ளம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்துக்கு சேரன்மகாதேவி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மற்றும் போலீசார் விரைந்து சென்று பேச்சியம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

உடனடியாக தனிப்படை போலீசார் விரைந்து சென்று வெளியூர் தப்பி ஓட முயன்ற பெருமாளை கைது செய்தனர். கொலை செய்ய தூண்டியதாக பெருமாளின் கள்ளக்காதலி மாரியம்மாளும் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply