கர்நாடகாவில் நடைபெற்று வரும் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் ஜெயலலிதா தரப்பு சார்பாக வழக்கறிஞர்கள் சுதந்திரம், குமார், மணிசங்கர், பசந்த் உள்ளிட்டோரும் அரசு தரப்பில் பவானிசிங்கும் ஆஜராகி வாதிட்டனர்.
சசிகலாவின் வருமானம்…
பசந்த்: சசிகலாவுக்கு 1992-93 காலகட்டத்தில் கிடைத்த வருமானம் ரூ.4,41,615. அதே காலகட்டத்தில் வெளிநாட்டில் இருந்து வந்த கிஃப்ட் ரூ.51,47,955.
இவை பரிசு பொருட்கள் என்பதால் வரி இல்லை என்று சொல்லி வருமானவரித் துறை ஏற்றுக்கொண்டது. ஆனால், தமிழக ஊழல் மற்றும் கண்காணிப்புத் துறையும், சிறப்பு நீதிமன்றமும் ஏற்றுக்கொள்ளவில்லை.
அதேபோல 1993-94 காலகட்டத்தில் ரூ.10,00,000 வருமானம் கிடைத்தது. அதை வருமான வரியில் காட்டி இருந்தோம். ஆனால், வருமானவரித் துறையினர் ரூ.15,00,000 என்று பதிவு செய்தனர்.
அதை எதிர்த்து மேல்முறையீடு செய்ததில் ரூ.12,00,000 என்று தீர்ப்பு கிடைத்தது. அதை எதிர்த்து வருமானவரித் துறை தீர்ப்பாயத்துக்குச் சென்றபோதுதான் 10,00,000.00 என்று ஏற்றுக்கொள்ளப்பட்டது.
1994-95, 1995-96, 1996-97 என 3 ஆண்டுகளில் கிடைத்த மொத்த வருமானம் ரூ.1,29,95,805. இதை வருமானவரித் துறை ஏற்றுக்கொண்டுள்ளது. ஆனால் சிறப்பு நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை.
அதேபோல ஹவுசிங் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் சசிகலா ரூ.60,00,000 கடன் வாங்கினார். அதை தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையும், சிறப்பு நீதிமன்றமும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், ஹவுசிங் ரியல் எஸ்டேட் நிறுவனம், தாங்கள் சசிகலாவுக்கு கடன் கொடுத்ததாக உறுதி செய்துள்ளது.
சசிகலாவுக்கு சொந்தமான நிலத்தை விற்பதற்காக பரணி ஃபியூச்சர் ஆர்ட்ஸ், ரிவர்வே, மெடோ அக்ரோ ஃபார்ம்ஸ் நிறுவனங்களில் போட்ட விற்பனை ஒப்பந்தத்தால் பரணி ஃபியூச்சர் ஆர்ட்ஸிடம் இருந்து ரூ.22,00,000, ரிவர்வேயிடம் இருந்து ரூ.65,00,000, மெடோ அக்ரோ ஃபார்ம்ஸில் இருந்து ரூ.35,00,000 கிடைத்தது. இதையெல்லாம் சிறப்பு நீதிமன்றம் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை.
கொடநாடு வாங்க ரூ.2,20,00,000 பணத்தை 8 நிறுவனங்கள் தங்கள் பங்களிப்பாகக் கொடுத்திருக்கிறார்கள்.
அதேபோல் சசிகலாவுக்கு சொந்தமான நிலத்தை 2,90,000 ரூபாய்க்கு விற்றதை கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை.
சசி என்டர்பிரைசஸ் நிறுவனத்தில் ஜெயலலிதா பங்குதாரர் என்ற முறையில் ரூ.75,00,000 கொடுத்ததையும் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை.
சசிகலா பங்குதாரராக இருந்த நிறுவனம் கட்டடங்களை வாடகைக்கு விட்டத்தில் கிடைத்த வருமானம் ரூ.16,47,800. அதையும் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை.
1992-93 முதல் 1996-97 வரை சசிகலாவுக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் விவசாயம் செய்ததால் கிடைத்த வருமானம் ரூ.9,22,550. அதையும் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை.
1994-95ல் திராட்சை விற்ற வகையில் ரூ.10,20,000 கிடைத்தது. அதையும் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. 1996-97ல் சசிகலாவுக்குச் சொந்தமான பழைய மில்டிங்கில் இருந்த உதிரி கட்டுமானப் பொருட்களை விற்ற வகையில் ரூ.6,00,000 கிடைத்தது. அதையும் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை.
சசிகலா பங்குதாரராக இருந்த ஜெயா பப்ளிகேஷன் கீழ் இயங்கி வந்த நமது எம்.ஜி.ஆர் நாளிதழில் ஸ்கீம் டெபாசிட் மூலம் கிடைத்த ரூ.14,00,00,000 பணத்தையும் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை.
இப்படி சசிகலாவின் மொத்த வருமானம் ரூ.31,30,83,797. ஆனால், தமிழ்நாடு ஊழல் தடுப்பு போலீஸார் சசிகலாவின் வருமானமாக ரூ.5,80,79,609.00 என்று குறிப்பிடுகிறார்கள்.
சசிகலாவின் செலவுகள்…
சசிலாவின் தாயார் பெயரில் இயங்கும் செங்கமலத் தாயார் நினைவு மகளிர் கலைக்கல்லூரிக்கு மார்பிள்ஸ் வாங்கியது ரூ.8,50,000.
அதை தமிழக ஊழல் தடுப்பு போலீஸார் 10,82,000 என்று காட்டி இருக்கிறார்கள். எவ்வளவு சதுர அடிக்கு எவ்வளவு மார்பிள்ஸ் வாங்கினார்கள் என்று குறிப்பிடவில்லை. அதற்கான தொகையை அந்தக் கல்லூரியே கொடுத்திருப்பதாகவும் சொல்கிறது.
1994-95 காலகட்டத்தில் கல்லூரியில் மின்சாரக் கட்டணம் 15.16 லட்சம் என்று தமிழக ஊழல் தடுப்பு போலீஸார் காட்டி இருக்கிறார்கள். அதற்கான சரியான பில் வைக்கவில்லை. ஒரு ரெஸிப்ட் வைத்திருக்கிறார்கள்.
அதில் யாருடைய கையெழுத்தும் கிடையாது. அதை வேல்யூ செய்த பொதுப்பணித்துறை பொறியாளர், மின்கட்டணம் அந்த கல்லூரிதான் கட்டியதாக சொல்லுகிறார். அதனால் அந்த தொகையை சசிகலாவின் செலவில் இருந்து நீக்க வேண்டும்.
சசிகலா பங்குதாரராக இருந்த ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் நிறுவனம், காயத்திரி நெட்ஸுக்கு சொந்தமான இடத்தில் வாடகைக்குதான் இருந்தோம். 11.80 லட்சம் சொத்துகள் வாங்கியதாக சசிகலா செலவில் காட்டியிருப்பது தவறு.
கொடநாடு எஸ்டேட் கூடுதல் கட்டடம் கட்டியதற்கான செலவு 12,00,000.00 என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள். இந்த கட்டடம் செக்பீரியட்டுக்கு (91-96) முன்பு கட்டியதாகவும், பிறகு பிறழ்சாட்சியகளாக மாறி 2 அல்லது 3 வாரத்தில் கட்டியதாக சொல்லுகிறார்கள். இதை எங்கள் செலவு கணக்கில் இருந்து நீக்க வேண்டும்.
இப்படி மொத்த செலவுகள் ரூ.6,48,00,000. தமிழக ஊழல் தடுப்பு போலீஸார் 2,90,00,000 என்று பதிவு செய்துள்ளது.
kumarasamy karnataka
உங்கள் மீதுள்ள குற்றங்களை மட்டும் வாதிடுங்கள்!
இதையடுத்து, சசிகலாவின் சொத்துப் பட்டியலை பசந்த் தாக்கல் செய்தார்.
பசந்த்: சசிகலாவின் வருமானத்தை 21.17% குறைத்து காட்டி இருக்கிறார்கள். சசிகலா தனிப்பட்ட முறையில் வாங்கிய மொத்த சொத்துகள் ரூ.15,00,00,000.
இது அனைத்தும் சசிகலாவுக்குச் சொந்தமானது. இதற்கும் ஜெயலலிதாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஜெயலலிதா அரசு பதவியில் இருந்து சம்பாதித்த பணத்தில் இருந்து எங்களுக்குக் கொடுக்கப்பட்டது என்று சொல்வது தவறு.
நீதிபதி குமாரசாமி: உங்களுடைய வாதத்தை மட்டும் முன்வையுங்கள். ஜெயலலிதாவைப் பற்றி வாதிட வேண்டாம்.
ஜெயலலித்தா விடுவிக்கப்பட்டால், நாமும் விடுவிக்கப்படலாம் என நினைக்கிறீர்களா? உங்கள் மீதுள்ள குற்றங்களை மட்டும் வாதிடுங்கள்.
பசந்த்: குற்றப்பத்திரிக்கை தவறாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
நீதிபதி: அதைப் படியுங்கள்
நீதிபதி: (பவானிசிங்கை பார்த்து) எஃப்.ஐ.ஆரில் கூட்டுச்சதி இடம் பெற்றுள்ளது. ஆனால், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும்போது கூட்டுச்சதி இடம் பெறவில்லை. ஏன்? சசிகலா, ஜெயலலிதா கூட்டுச்சதியில் ஈடுபட்டதற்கான ஆவணபூர்வமான சாட்சியங்கள் என்ன இருக்கிறது?
பவானிசிங்: அனைத்தும் சந்தரப்ப சாட்சியங்களால் நிருபிக்கப்பட்டுள்ளது.
நீதிபதி: இப்படி பல வழக்குகளில் சாட்சியங்கள் சரியாக நிரூபிக்கப்படாததால் பல குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டு விடுகிறார்கள். இந்திரா காந்தி கொலை வழக்கில்கூட அப்படிதான் நடைபெற்றது.
அதிகாரம் யாருக்கு?
பவானிசிங்கை நீக்க வேண்டும் என்று அன்பழகன் மனு, நீதிபதிகள் குமார், வீரப்பா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அன்பழகன் தரப்பில் நாகேஷும், பவானிசிங் சார்பாக நாகானந்த்தும், கர்நாடக அரசு சார்பாக கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை வழக்கறிஞர் ரவிவர்ம குமாரும் ஆஜரானார்கள்.
நாகானந்த்: இந்த வழக்கில் பவானிசிங் சிறப்பு நீதிமன்றம் மட்டுமல்ல உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் வரை வாதிட உரிமை உள்ளது. இதற்காக தனியாக அரசாணை பிறப்பிக்கத் தேவையில்லை. சி.ஆர்.பி.சி 301-ன்படி பவானிசிங் மேல்முறையீட்டில் ஆஜராகும் அதிகாரம் உண்டு.
உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளையும், பஞ்சாப், ஹரியனா, இமாசலப்பிரதேசம், உத்தரப்பிரதேச மாநில உயர்நீதிமன்றத் தீர்ப்புகளைப் பார்த்தால், ஒரு வழக்கில் சிறப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டவர்கள்தான் அந்த வழக்கில் இறுதி வரை ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
நீதிபதி குமார்: மேல்முறையீட்டில் ஆஜராகும்படி அரசாணை வழக்கும் அதிகாரம் கர்நாடகாவுக்கு உள்ளதா? தமிழக அரசுக்கு உள்ளதா?
நாகானந்த்: இவ்வழக்கில் தமிழக அரசின் கீழ் இயங்கிவரும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறைதான் புகார்தாரர் என்பதாலும், விசாரணை ஏஜெண்சியாக இருப்பதாலும் தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறைக்குதான் தங்கள் வழக்கறிஞரை நியமிக்கும் அதிகாரம் உள்ளது.
நீதிபதி குமார்: 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் உள்ளவர்களைத்தான் கீழ் நீதிமன்றத்தில் அரசு சிறப்பு வழக்கறிஞராக நியமிக்கப்படுகிறார்கள். அவர்கள் எந்த நீதிமன்றத்திலும் ஆஜராகலாம். ஒவ்வொரு முறையும் அரசாணை தேவையில்லை.
நாகேஷ்: சி.ஆர்.பி.சி 301-ன்படி கீழ் நீதிமன்றத்தில் அரசு சிறப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டவர், மேல்முறையீட்டில் ஆஜராக மீண்டும் அரசாணை பெற்றுதான் ஆஜராக வேண்டும்.
நீதிபதி குமார்: பவானிசிங் நியமன ஆணையில் ‘தீஸ் கேஸ்’ என்று குற்றிப்பிட்டுள்ளதால், அந்த வழக்கு சம்பந்தமாக எந்த நீதிமன்றத்திலும் ஆஜராகலாம்.
நாகேஷ்: இல்லை யுவர் ஆனர். ‘யு ஆர் இன்சார்ஜ் ஆப் திஸ் கேஸ்’… அந்த நீதிமன்றத்துக்கு மட்டுமே பொருந்தும். மேல்முறையீட்டில் ஆஜராக முடியாது.
ரவிவர்மகுமார்: இந்த வழக்கு பெங்களூருக்கு மாற்றப்பட்டபோது உச்சநீதிமன்ற உத்தரவுபடி கர்நாடக அரசு கீழமை நீதிமன்றத்தில் அரசு சிறப்பு வழக்கறிஞராக ஆச்சார்யா நியமிக்கப்பட்டார். அவர் ராஜினாமா செய்த பிறகு, பவானிசிங் நியமிக்கப்பட்டார்.
அரசு சிறப்பு வழக்கறிஞர்கள்தான் மாறி இருக்கிறார்கள். உச்சநீதிமன்ற விதிமுறைகள் மாறவில்லை. அது பவானிசிங்குக்கும் பொருந்தும். பவானிசிங் நியமனம் கீழ் நீதிமன்றத்துக்கு மட்டுமே பொருந்தும்.
நீதிபதி குமார்: சி.ஆர்.பி.சி 301-ன்படி வழக்கு சம்பந்தப்பட்ட எந்த நீதிமன்றத்திலும் ஆஜராகலாம். தனியாக அரசாணை பெற வேண்டியதில்லை. கீழ் நீதிமன்றத்தில் சிறப்பு வழக்கறிஞரே மேல்முறையீட்டிலும் ஆஜராகலாம். அவர் மேல்முறையீட்டில் ஆஜராகவில்லை என்றால்தான், மற்ற அரசு வழக்கறிஞரை நியமிக்கலாம்.
நாகானந்த்: உச்சநீதிமன்றம் பவானிசிங்கை அரசு சிறப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டுள்ளது. அவர் மேல்முறையீட்டிலும் ஆஜராக உரிமை உள்ளது.
நாகேஷ்: என்னுடைய வாதத்தில் உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட சில வழக்குகளின் தீர்ப்பு நகலை தாக்கல் செய்ய விரும்புவதால் கால அவகாசம் வேண்டும்.
நீதிபதி குமார்: மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு 2.30 மணிக்கு தாக்கல் செய்யுங்கள் நாளை தீர்ப்பு வழங்கிவிடலாம்.
அன்பழகன் மனு தள்ளுபடி!
அடுத்த நாள் நாகேஷ், நாகானந்த் இருவரும்பல மாநில உயர்நீதிமன்ற வழக்குகளையும், உச்சநீதிமன்ற வழக்குகளையும் மேற்கோள் காட்டி விரிவாக வாதிட்டார்கள்.
இதையெல்லாம் 3 மணி நேரம் நீதிபதி குமார், வீரப்பா கேட்டார்கள். இறுதியாக தீர்ப்பையும் 2.30 மணி நேரம் விரிவாக படித்தார் நீதிபதி குமார்.
‘‘அன்பழகன் தாக்கல் செய்த மனு மீது உச்சநீதிமன்றம் உத்தரவின் பேரில் இவ்வழககு கர்நாடகத்துக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் 10 ஆண்டுகளுக்கு மேல் கிரிமினல் வழக்குகளில் நல்ல அனுபவம் வாய்ந்த மூத்த வழக்கறிஞரை நியமிக்க கர்நாடக அரசும், கர்நாடக உயநீதிமன்ற தலைமை நீதிபதியும் கலந்து ஆலோசித்து நியமிக்க உத்தரவிட்டது.
அதன்படி ஆச்சார்யா நியமிக்கப்பட்டார். அவர் ராஜினாமா செய்ததை அடுத்து, பவானிசிங் நியமிக்கப்பட்டார். அவர் கீழமை நீதிமன்றத்தில் வாதாடினார். குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றார்கள்.
அதையடுத்து குற்றவாளிகள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். அந்த விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் பவானிசிங்கே ஆஜராகி வருகிறார். ‘இது சட்டத்துக்குப் புறம்பானது. பவானிசிங் நியமனம் கீழமை நீதிமன்றத்துக்கு மட்டுமே பொருந்தும். மேல்முறையீட்டிற்கு பொருந்தாது.
புதியதாக அரசாணை பெற வேண்டும். இவ்வழக்கு கர்நாடகாவில் நடைபெறுவதால் தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறைக்கோ, தமிழக அரசுக்கோ அரசு வழக்கறிஞரை நியமிக்கும் உரிமை கிடையாது’ என்று சீனியர் வழக்கறிஞர் நாகேஷ் வாதிட்டார்.
ஆனால், இதுபோன்ற வழக்குகளில் அரசு ஒருமுறை நியமன ஆணை கொடுத்தால் போதுமானது. அதை வைத்து அனைத்து நீதிமன்றத்திலும் ஆஜராகலாம் என்று பவானிசிங் வழக்கறிஞர் நாகானந்த் வாதிட்டார்.
ஆச்சார்யா நியமிக்கப்பட்டபோது என்ன வழிமுறைகள் பின்பற்றப்பட்டதோ அதே வழிமுறைகள் பவானிசிங்குக்கும் பொருந்தும் என, தலைமை வழக்கறிஞர் ரவிவர்மகுமார் கூறியுள்ளார்.
பவானிசிங்குக்கு கர்நாடக அரசு வழங்கிய நியமன ஆணையில் ‘இந்த வழக்கு’ என்று குறிப்பிடப்பட்டுள்ளதால், இந்த வழக்கு எந்த நீதிமன்றத்தில் நடைபெற்றாலும் அதில் ஆஜராக முடியும்.
ஆனால், சங்கராச்சாரியார் வழக்கில் ஒரு மாநிலத்தில் நடைபெறும் வழக்கில் அந்த மாநிலம்தான் அரசு வழக்கறிஞரை நியமிக்க வேண்டும் என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதால், தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறைக்கு அதிகாரம் கிடையாது.
இந்த மேல்முறையீட்டு விசாரணையை 3 மாதத்தில் முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு ஒவ்வொரு நாளும் தொடர்ந்து நடைபெறுவதால், இந்த நிலையில் இந்த நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பால் வழக்கு பாதிக்கப்படும் என்பதால், நீங்கள் உச்சநீதிமன்றத்தை அணுகி தீர்வை பெற்றுக்கொள்ளுங்கள். அதனால் இந்த மனுவை தள்ளுபடி செய்கிறேன்’’ என்றார்.
-வீ.கே.ரமேஷ்