ஜேர்மன்விங்ஸ் நிறுவன விமானமொன்று பிரான்ஸில் கடந்த மாதம் 24 ஆம் திகதி 150 பேருடன் வீழ்ந்து நொறுங்கியமைக்கு கணினி ஊடுருவல்காரர்கள் காரணமாக இருக்கலாம் என விமானப் போக்குவரத்து நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஜேர்மனியைச் சேர்ந்த 27 வயதான துணை விமானியான அன்ட்ரீஸ் லுபிட்ஸே இவ்விமானத்தை வேண்டுமென்றே மலையில் மோதச்செய்து தற் கொலைசெய்து கொண்டதுடன் ஏனைய 149 பேரின் மரணத்துக்கு வழிவகுத்துள்ளார் என புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
விமானத்தின் கறுப்புப்பெட்டியின் மூலம் பெறப்பட்ட தகவல்கள் மற்றும் ஒலிப்பதிவுக் கருவிகளில் பதிவாகியிருந்த குரல்கள், மற்றும் ஒலிகளின் அடிப்படையில் இத்தகவல் வெளியிடப்பட்டிருந்தது.
ஆனால், அவ்விமானத்தின் கணினிகள் மூலம் விமானத்தின் செயற்பாடுகளை தொலைவிலிருந்து வேறு யாரேனும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து இந்த அனர்த்தத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என விமானப் போக்குவரத்து நிபுணரான மெத் அண்டர்சன் தெரிவித்துள்ளார்.
சிகாக்கோ நகரை தளமாக்க கொண்ட இண்டிகோ ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் தலைவரான மெத் அண்டர்சன் இது தொடர்பாக மேலும் கூறுகையில், ‘இந்த அனர்த்தத்துக்கு பல விடயங்கள் காரணமாக இருக்கலாம்.
விமானத்தின் இலத்திரனியல் கருவிகளை ஊடுருவி விமானத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தமையும் ஒரு காரணமாக இருக்க முடியும்.
இதன் காரணமாக யுத்த மற்றும் அரச தலைவர்களின் விமானங்களில் மேலதிக பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கும்.
ஆனால், சிவில் விமானங்களில் அத்தகைய ஏற்பாடுகள் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.
எனினும், துணை விமானி அன்ட்ரீஸ் லுபிட்ஸ் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் அவர் குறைந்தபட்சம் 5 மருத்துவர்களின் உதவியை நாடியிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.
பார்வைக் குறைபாட்டு அபாயத்தையும் அவர் எதிர்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
தலைமை விமானியின் கோப்பியில் கலப்படம்? இதேவேளை, தலைமை விமானியான பட்ரிக் சோடன் ஹெய்மரை கழிவறைக்குச் செல்லவைப்பதற்காக சிறுநீரை தூண்டும் இரசாயனமொன்றை அவரின் கோப்பியில் துணை விமானி அன்ரீஸ் லுபிட்ஸ் கலந் திருந்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.
இது தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.