காலத்துக்கு காலம் அறிவியல் வளர்ச்சியில் பல்வேறு விதமான ஆராய்ச்சிகள், விசாரணைகள் என்பன புதிய கோணங்களில் முன்னெடுக்கப்பட்ட போதும் சில சம்பவங்கள் ஏன்? எதற்காக? யாரால் ? மேற்கொள்ளப்படுகின்றன என்ற சரியான விடையின்றி தீராத மர்மங்களாகவே நீடித்துக்கொண்டு செல்கின்றன.
அந்தவகையில் இலங்கையில் இரத்தினபுரி, கஹவத்தை பகுதியில் 2008 ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் பெண்களின் மர்ம கொலைச் சம்பவங்கள் இப்பிரதேசம் தொடர்பாக நாடளாவிய ரீதியில் மக்கள் மத்தியில் அச்சவுணர்வை ஏற்படுத்தியுள்ளன.
இரத்தினபுரி மாவட்டத்தில் கஹவத்தை பிரதேசம் இலங்கையில் பெருந்தோட்டத் துறையின் வளர்ச்சியில் பெரும் பங்களிப்பை செய்யும் ஒரு பிரதேசமாகும்.
பெருந்தோட்டக் கம்பனிகளுக்கு சொந்தமான தோட்டங்களையும், அதனை அண்மித்த சிங்கள கிராமங்களையும் கொண்ட கஹவத்த பிரதேசத்தில் முதல் முதலில் கஹவத்த கொட்டகெதன, ஓபாத தோட்டத்தை சேர்ந்த 56 வயதுடைய பெண்ணொருவர் 2008ஆம் ஆண்டு ஜூலை மாதம் கொலை செய்யப்பட்டிருந்தார்.
இதனையடுத்து 2012 ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக கஹவத்த கொட்டகெதன பிரதேசத்தின் வராபிட்டிய, நிலதுர, திவுல்வெல ஆகிய பிரதேசங்களில் வயதான ஒன்பது பெண்கள் தனித்தனியாக கொலை செய்யப்பட்டு அவர்களது வீட்டிலிருந்து மிக தொலைவிலுள்ள இடங்களில் சடலங்களாக மீட்கப்பட்டனர்.
இதனையடுத்து இம் மர்மக் கொலைகள் 2012 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் இரட்டைக் கொலை என்ற பரிணாமத்தை பெற்றது.
கஹவத்தை கொட்டகெதன பிரதேசத்தை சேர்ந்த நில்மனி என்ற 52 வயது நிரம்பிய பெணணொருவரும், அவருடைய 19 வயதுடைய மகள் சத்துரங்கனியும் கொலை செய்யப்பட்டிருந்தனர்.
அதனை தொடர்ந்து அதே ஆண்டு மே மாதம் 31ஆம் திகதி தயாவதி என்ற 61 வயது பெண்ணும், அவருடன் இருந்த திருமணமாகாத 51 வயதுடைய திலகவதி என்ற பெண்ணும் கொலை செய்யப்பட்டு முற்றாக தீயில் கருகிய நிலையில் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டிருந்தன.
எனவே இவ்வாறு 2008 ஆம் ஆண்டு தொடக்கம் 2012 ஆம் ஆண்டு வரை கஹவத்த பிரதேசத்தில் தொடர்ந்து இடம்பெற்று வரும் பெண்களின் மர்மக் கொலைகளை தடுக்கும் முகமாகவே இதே ஆண்டு கஹவத்த கொட்டகெதன பிரதேசத்துக்குள்ளேயே பொது மக்களின் பாதுகாப்புக்காக பொலிஸ் காவலரண் ஒன்றும் அமைக்கப்பட்டது.
எனினும் துரதிஷ்டவசமாக அதே ஆண்டும் ஜூலை மாதம் 19ஆம் திகதி 65 வயது நிரம்பிய பிரேமலதா, 35 வயது நிரம்பிய அவரது மகள் புஷ்பகுமாரி ஆகியோர் தீயில் எரியூட்டப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் 2012 ஆம் ஆண்டு ஜூலை மாதமாகும் போது அதுவரை இடம்பெற்ற மர்மக் கொலைகளின் எண்ணிக்கை 15ஆக அதிகரிக்க முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன இப்பிரதேசத்துக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டார்.
அதன் பின் ஒரிரு மாதங்கள் பெண்களின் மர்மக் கொலைகள் எதுவும் அப்பிரதேசத்தில் பதிவாகாத நிலையில் மீண்டும் ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி வராபிட்டிய, பன்சலை வீதியை சேர்ந்த 66 வயதுடைய சந்திராவதி என்ற பெண்ணின் கொலை பதிவானது.
எனினும் இக்கொலைச் சம்பவத்துக்கு பிறகு இரு ஆண்டுகள் இப்பிரதேசத்தில் கொலைச் சம்பவங்கள் எதுவும் இடம்பெறாமையால் மக்கள் ஓரளவுக்கு நிம்மதியாக வாழக்கூடிய சூழ்நிலை உருவானது.
எனினும் இரு ஆண்டுகள் நிம்மதியாக எவ்வித அச்ச நிலையுமின்றி வாழ்ந்த கஹவத்த பிரதேச மக்களுக்கு இவ்வாண்டு ஜனவரி 15ஆம் திகதி மீண்டும் தலையில் இடி வீழ்ந்ததை போன்ற ஒரு சம்பவம் கஹவத்த ஒபானவத்தை பிரதேசத்தில் இடம்பெற்றது.
இச்சம்பவத்தில் தமிழ் யுவதியொருவர் கொல்லப்பட்டார்.
இதனைத்தொடர்ந்து கடந்த 5ஆம் திகதி மற்றுமொரு பெண் மர்மமான முறையில் காணாமல் போய் நீரோடையொன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.
39 வயது நிரம்பிய சந்திரமல்காந்தி என்ற மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டவராவர்.
கணவன், மூன்று பிள்ளைகள் என்ற சந்திர மல்காந்தினியின் குடும்பத்தில் சம்பவ தினத்தன்று மல்காந்தினியின் பிள்ளைகளின் இருவர் உறவினர் வீடு ஒன்றுக்கு சென்ற நிலையில், கணவனும் 4ஆம் திகதி இரவு ஊரிலுள்ள ஒருவரின் மரண வீட்டுக்கு சென்றிருக்கின்றார்.
இதனைத் தொடர்ந்து தனது 12வயது மகனுடன் நித்திரைக்கு சென்றார் மல்காந்தி. கணவனோ மரண வீட்டிலிருந்து அடுத்த நாள் (2015.04.05) அதிகாலை 1.45 மணியளவில் வந்த போது வீட்டின் பின் கதவு திறந்திருந்தது. மனைவி வீட்டிலிருக்கவில்லை.
அதனைத் தொடர்ந்து 12 வயது மகனை எழுப்பி தாய் தொடர்பாக விசாரிக்க அவனுக்கும் தாய் எங்கு சென்றார்? என்னவானார்? என்று நடந்த எதுவுமே தெரியாதிருந்தது.
அதுமட்டுமின்றி, வீட்டின் அனைத்து இடங்களிலும் இரத்தக்கறைகள் காணப்பட்டன, இதனையடுத்து பதற்றமடைந்த மல்காந்தியின் கணவர் வீட்டிலிருந்து 750 மீற்றர் தொலைவிலுள்ள கஹவத்தை கொட்டகெதன பொலிஸ் காவலரணில் தனது மனைவியைக் காணவில்லை என்ற முறைப்பாட்டினைப் பதிவு செய்தார்.
இவ்வாறு சந்திர மல்காந்தியின் கணவரினால் கஹவத்தை கொட்டகெதன பொலிஸ் காவலரணில் பதிவு செய்த முறைப்பாட்டுக்கு இணங்க கொட்டகெதன பொலிஸார் சம்பவ இடத்துக்கு வந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்தனர்.
5ஆம் திகதி இரவு 10.30 வரை வீட்டின் உட்புற பகுதி, சுற்றுப்புற பகுதிகளில் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்த போதும் எவ்வித தகவல்களும் சந்திர மல்காந்தி தொடர்பாக கிடைக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து இரண்டாவது நாளாக கொட்டகெதன பொலிஸாருடன் இணைந்து கடற்படையினரும் தேடுதல் பணிகளில் ஈடுபட்ட போதே வீட்டிலிருந்து சுமார் 600 மீற்றர் தூரத்திலுள்ள நீரோடையொன்றிலிருந்து சந்திர மல்காந்தியின் சடலம் நிர்வாண நிலையில் மீட்கப்பட்டது.
இதனையடுத்து சடலம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனைகளின் படி கூரிய ஆயுதத்தினால் தலைப்பகுதியில் பலமாக தாக்கப்பட்டமை காரணமாகவே மண்டை ஓடு பாதிப்புற்று உயிரிழந்துள்ளார் என்பது உறுதிப்படுத்தப்பட்டது.
எனினும் குற்றவாளி தொடர்பாக இதுவரை எவ்வித சரியான தகவல்களும் கிடைக்காத நிலையில் கஹவத்தை பொலிஸாருடன், கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரும் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இவ்வாறு கஹவத்தை பகுதியில் பல பெண்களின் கொலைச் சம்பவங்கள் தீராத மர்மங்களாக தொடரும் இன்றைய நிலையில் இச்சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் மேலும் துரிதப்படுத்தப்பட்டு கஹவத்தை பகுதியில் இடம்பெறும் மர்மக் கொலைகளின் சூத்திரதாரர்கள் பற்றிய உண்மை தகவல்கள் விரைவில் துலங்க வேண்டும் என்பதே இன்றைய நிலையில் அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.
-வசந்தா அருள்ரட்ணம்-