இஸ்லாமியர்கள் ஆண்டுதோறும் ஹஜ் யாத்திரை மேற்கொள்ளும் மக்கா-மதினா மற்றும் சவுதி அரேபியாவில் உம்ரா செய்ய ஆண்டு முழுவதும் போகும் புனிதத்தலங்களுக்கு இனி செல்லக் கூடாது என தங்கள் நாட்டு மக்களுக்கு ஈரான் அரசு திடீர் தடை விதித்துள்ளது.

சமீபத்தில் உம்ரா செய்வதற்காக சவுதிக்கு சென்ற ஈரானிய சிறுவர்கள் இருவர் ஜெட்டா விமான நிலையத்தில் அவமானப்படுத்தப்பட்டதையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அரசு தரப்பில் கூறப்படுகின்றது. எனினும். இந்த திடீர் தடையின் பின்னணியில் மற்றொரு காரணமும் இருப்பதாக யூகிக்கப்படுகின்றது.

ஈரானின் அண்டை நாடான ஏமனில் ஷியாப் பிரிவை சேர்ந்த ஹவுத்தி இனப் போராளிகளுக்கும் அங்குள்ள ஆளும் சன்னி வர்க்கத்தினருக்கும் இடையில் நடைபெற்றுவரும் உள்நாட்டுப் போரில் ஹவுத்தி போராளிகளுக்கு ஈரான் பண உதவியும், ஆயுதங்களும் வழங்கி வருவதாக நம்பப்படுகின்றது.

இந்நிலையில், ஏமனில் ஹவுத்தி படையினரின் கை ஓங்கிய வேளையில் அவர்களை எதிர்ப்பதற்கு படைகளை அனுப்பி உதவிடும்படி சவுதி அரசிடம் ஏமன் ஜனாதிபதி கேட்டுக் கொண்டார்.

இதனையடுத்து, ஏமனுக்கு அனுப்பப்பட்டுள்ள சவுதி விமானப்படை விமானங்களும், கப்பல்படையும் ஹவுத்தி போராளிகளின் நிலைகளை தாக்கி அழித்து வருகின்றன. இதனால், போரில் ஹவுத்தி படைகளுக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இந்த ஆத்திரத்தை மனதில் வைத்து ஏமனுக்கு உதவி செய்துவரும் சவுதி அரேபிய அரசை கண்டிக்கும் வகையில் சவுதியில் உள்ள புனிதத்தலங்களுக்கு செல்ல கூடாது என தங்கள் நாட்டு மக்களுக்கு ஈரான் அரசு திடீர் தடை விதித்துள்ளதாக சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

Share.
Leave A Reply