கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு விசாரணையில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் தரப்பினர் வாதங்கள் முடிவடைந்ததை அடுத்து…
மெடோ அக்ரோ ஃபார்ம்ஸ், ரிவர்வே அக்ரோ ஃபார்ம்ஸ், சையனோரா, இந்டோ தோஹா, லெக்ஸ் பிராபர்டீஸ், ராம்ராஜ் அக்ரோ மில்ஸ் ஆகிய கம்பெனிகள் சார்பாக வாதிடப்பட்டது.
மெடோ அக்ரோ ஃபார்ம்ஸ், ரிவர்வே அக்ரோ ஃபார்ம்ஸ் கம்பெனிகளின் சார்பாக வழக்கறிஞர் ஆதித்யா சோந்தி வாதிட்டார்.
ஆதித்யா சோந்தி: இந்த வழக்கில் குற்றவாளிகளான ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசிக்கும் எங்கள் நிறுவனத்துக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது.
எங்கள் நிறுவனத்தில் உள்ள பங்குதாரர்கள் யாரும் குற்றவாளிகள் கிடையாது. ஏ3 சுதாகரனும், ஏ4 இளவரசியும் சிறிது காலம் எங்கள் நிறுவனத்தில் இயக்குநராக இருந்தனர்.
கம்பெனிகளுக்கு என்று தனியாக சொத்துகள் இருந்தது. இந்த நிறுவனங்கள் பங்குதாரர்களுக்குச் சொந்தமானது அல்ல.
அதேபோல இந்த கம்பெனிகள் வழக்கு காலகட்டத்துக்கு முன்பே தொடங்கபட்டது. வருமானவரி ஆவணங்களை கீழமை நீதிமன்றத்தில் கொடுத்தும் அதை கருத்தில் கொள்ளாமல் எங்கள் நிறுவனத்தைப் பறிமுதல் செய்தது தவறு.
நீதிபதி குமாரசாமி: (குறுக்கீடு செய்து) ஏ1 ஜெயலலிதா பொது ஊழியராக இருந்தபோது மாதம் 1 ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளார்.
ஆனால், வழக்கு காலகட்டத்தின் இறுதியில் முறைகேடாக வருமானத்துக்கு அதிகமாக 66 கோடி சொத்து சேர்த்துள்ளதாக தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை விசாரணை செய்து உறுதி செய்துள்ளது.
குற்றவாளிகளுக்கும் கம்பெனிகளுக்கும் தொடர்பு இருப்பதாகவும், அவர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து பணப்பரிமாற்றம் நடந்துள்ளதையும் உரிய ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளது. அதை அடிப்படையாக வைத்தே கீழமை நீதிமன்றம் கம்பெனிகளைப் பறிமுதல் செய்துள்ளது.
ஆதித்யா சோந்தி: மெடோ அக்ரோ ஃபார்ம்ஸ் ரூ.1,50,00,000 மதிப்பிலான பங்குகளையும், சுதாகரன் இயக்குநராக இருந்தபோது கிருஷ்ணகுமார் ரெட்டி, அனில்குமார் ரெட்டி, சுப்புராம ரெட்டி ஆகியோர் தலா ரூ.1,00,000 வீதம் ரூ.3,00,000 வழங்கி இருக்கிறார்கள்.
அதற்கான வருமானவரி ஆதாரத்தை வருமானவரித் துறையில் காட்டி இருக்கிறார்கள். மொடோ அக்ரோ ஃபார்ம்ஸுக்கு என்று ரூ.18,00,000 மதிப்பிலான சொத்துகள் இருக்கிறது.
ரிவர்வே அக்ரோ ஃபார்ம்ஸ் ரூ.1,75,00,000 மதிப்பிலான பங்குகளும், இந்த கம்பெனிகளுக்கு சொந்தமாக ரூ.37,00,000 சொத்துகளும் இருக்கிறது.
இந்த இரண்டு கம்பெனிகளின் சொத்துகளும், சுதாகரனும் இளவரசியும் இயக்குநர்கள் ஆவதற்கு முன்பே வாங்கப்பட்டுள்ளது. இந்த கம்பெனிகளுக்கு ஏ1 ஜெயலலிதாவிடம் இருந்து பணம் பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்களை தமிழக ஊழல் தடுப்பு போலீஸார் நிரூபிக்கவில்லை.
நீதிபதி: உங்களுக்கு முன்பு பேசியவர்கள் குற்றவாளிகளுக்கு வழங்கிய அபராதத் தொகையை பற்றி பேசவில்லை.
நீங்கள் அப்பாவிகள் அல்ல. 18 வருடமாக இந்த வழக்கு நடைபெற்று வருகிறது. குற்றப்பத்திரிகையிலும் உங்கள் கம்பெனிகளின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இவ்வளவு நாள் என்ன செய்துக்கொண்டிருந்தீர்கள்?
குற்றவாளிகள் விடுதலையானால் கம்பெனிகள் விடுவிக்கப்பட்டுவிடலாம் என நினைத்துக்கொண்டிருந்தீர்களா?
ஆதித்யா சோந்தி: 1999-ல் கம்பெனிகள் பறிமுதல் செய்தபோதே வழக்கு தொடுத்துள்ளோம். கம்பெனிகளின் மேல்முறையீட்டு மனுவும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.
நீதிபதி: உங்கள் கம்பெனிகளுக்கு வருமானம் எங்கிருந்து வந்தது? அதற்கான ஆதாரங்கள் தாக்கல் செய்ய வேண்டும். ஆதாரங்கள் இருக்கிறதா?
ஆதித்யா சோந்தி: இருக்கிறது. சந்தாதாரர்கள் செலுத்திய பணத்துக்கான ரசீது, பேங்க் வரவு செலவு கணக்குகள், பேலன்ஸ்ஷீட் இருக்கிறது.
சுதாகரன், இளவரசிக்காக வாதிட வரவில்லை…
ஆதித்யா சோந்தி: 1969 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் ஒரு நிறுவனத்தை பறிமுதல் செய்ய வேண்டும் என்றால் அந்த நிறுவனத்தைப் பறிமுதல் செய்வதற்கு முன்பே நோட்டீஸ் வழங்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறது.
நீதிபதி: 1973-ல் சட்ட கமிஷன் கிரிமினல் அமென்மென்டில் 452&ன்படி முன்கூட்டியே நோட்டீஸ் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. பறிமுதல் செய்த பிறகு நோட்டீஸ் கொடுக்கலாம் என்று சொல்லி இருக்கிறது.
ஆதித்யா சோந்தி: எங்கள் கம்பெனிகள் சுதந்திரமாக செயல்படக்கூடிய கம்பெனிகள். இந்த கம்பெனிக்கு யாரும் பினாமிகள் அல்ல. சுதாகரனும் இளவரசியும் குறுகிய காலம் மட்டும் இயக்குநர்களாக இருந்தார்கள்.
வழக்கு காலகட்டத்துக்கு முன்பே சசிகலா இக்கம்பெனியை வாங்க ஒப்பந்தம் போட்டு, பிறகு விலகிக்கொண்டார். சசிகலா இந்த கம்பெனியின் பினாமி என்றால், எதற்காக ஒப்பந்தம் போட வேண்டும்.
நீதிபதி: இந்த வழக்கில் பினாமி சட்டம் வராது. பினாமி சட்டத்தின் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படவில்லை. 13(1)இ ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ்தான் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனால், 13(1)இ பற்றி விளக்குங்கள்.
ஆதித்யா சோந்தி: என் மனுதாரர்களுக்கு 13(1)இ ஊழல் தடுப்பு சட்டம் பொருந்தாது. ஏனென்றால் 13(1)இ அரசு ஊழியர்களுக்குதான் பொருந்தும். என் மனுதாரர்கள் அரசு ஊழியர்கள் கிடையாது. அதனால் 13(1)இ பொருந்தாது.
நீதிபதி: ஊழல் தடுப்பு சட்டம் 13(1)இ மட்டும் பார்க்கக் கூடாது. கூட்டுச்சதி 120(பி), குற்றம் செய்ய உடந்தை 109 இணைத்துதான் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
ஆதித்யா சோந்தி: நான் சுதாகரன், இளவரசிக்காக வாதாட வரவில்லை. கம்பெனி சார்பாக வாதிட வந்திருக்கிறேன்.
உச்சநீதிமன்றத்தில் நடைப்பெற்ற சாந்திதேவி வழக்கில் அவருடைய கணவர் ஊழல் வழக்கில் நீதிமன்றத்தில் நடைபெற்றது.
அவர் வீட்டில் பணம், நகைகளை கைப்பற்றியபோது, அவரது மனைவி சாந்திதேவியும் கூட்டுச்சதியில் ஈடுபட்டதாக வழக்கு நடைபெற்றது.
பிறகு சாந்திதேவி ‘எங்கள் வீட்டில் கைப்பற்றப்பட்ட பணம், நகைகள் என்னுடையது. நான் பிசினஸ் செய்தேன். அதன் மூலம் கிடைத்த வருமானம் இது.
அதை வருமானவரித் துறையிலும் காட்டி, அதற்கு வருமானவரித் துறை ஆவணங்களும் இருக்கிறது’ என்றதும் நீதிமன்றம் அந்த வழக்கைத் தள்ளுபடி செய்தது.
அதுபோல எங்கள் ஏ1 ஜெயலலிதாவிடம் கூட்டுச்சதி செய்து எங்கள் கம்பெனிகளை யாரும் வாங்கவில்லை. அதற்கு வருமானவரித் துறையில் கணக்கும் காட்டி இருக்கிறோம்.
பங்குதாரர்களுக்கும் கம்பெனி சொத்துகளுக்கும் சம்பந்தமில்லை…
மெடோ அக்ரோ ஃபார்ம்ஸ், ரிவர்வே அக்ரோ ஃபார்ம்ஸ் சார்பாக வாதிட்ட ஆதித்யா, தன் வாதத்தை நிறைவு செய்து, கம்பெனிகளின் வரவு, செலவு திட்ட அறிக்கையை சமர்பித்தார்.
அதன் பிறகு ராம்ராஜ் அக்ரோ மில்ஸ் சார்பாக கர்நாடக உயர்நீதிமன்றம் முத்த வழக்கறிஞர் உதயஹொள்ளா ஆஜராகி வாதிட்டார்.
உதயஹொள்ளா: ராம்ராஜ் அக்ரோ மில்ஸ் கம்பெனி 1986&ல் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால், தமிழக ஊழல் தடுப்பு போலீஸார் வழக்கு காலகட்டமான 1991&96 தொடங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது தவறு.
இந்த கம்பெனியை பறிமுதல் செய்ய வேண்டும் என்பதற்காகவே, இந்த கம்பெனியின் கட்டட கட்டுமான செலவுகளை அதிகப்படுத்திக் காட்டி இருக்கிறார்கள்.
கீழமை நீதிமன்றம் இதை ஏற்றுக்கொண்ட பிறகும் எங்கள் கம்பெனியை இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்படவில்லை.
இதற்காக நாங்கள் வருமானவரித் துறை ஆவணங்கள், பேலன்ஸ்ஷீட், ஆடிட்டர் ரிப்போர்ட் அனைத்தையும் காட்டி இருக்கிறோம். இந்த கம்பெனியின் ஒரு பங்கு 3 ரூபாய் வீதம் 2,24,000 பங்குகளை 6,72,000 ரூபாய்க்கு சுதாகரனும் இளவரசியும் வாங்கினார்கள்.
நீதிபதி: சுதாகரனின் அம்மா ஜெயலலிதா தமிழக முதல்வராக இருந்ததால், அவருடைய பணம்தான் இந்த கம்பெனியில் போடப்பட்டுள்ளது?
உதயஹொள்ளா: இந்தியவில் கூட்டுக் குடும்பங்களாக இருந்தாலும், ஒவ்வொருவருக்கும் தனித் தனித் வரவு செலவுகள் இருக்கும். ஒருவருக்கு ஒருவர் சம்பந்தம் இருக்காது.
நீதிபதி: சுதாகரனும் இளவரசியும் இந்த கம்பெனியில் எவ்வளவு காலம் இயக்குநர்களாக இருந்தார்கள்?
உதயஹொள்ளா: எங்கள் கம்பெனியில் சுதாகரனும் இளவரசியும் 94 முதல் 95 வரைதான் இருந்தார்கள். பிறகு இருவரும் 1995-ல் ஃபார்ம் 32 படி விலகிக்கொண்டார்கள்.
நீதிபதி: இந்த கம்பெனியின் ஆட்டிட்டராக யார் இருந்தது?
உதயஹொள்ளா: ஸ்ரீகாந்த் என்பவர் இருந்தார். அவர்தான் வருமானவரித் துறையில் கம்பெனியின் வரவு செலவு காட்டி வருமானவரித் துறை ஆவணங்களைப் பெற்றிருக்கிறார்.
எங்கள் கம்பெனியில் ராம் உடையார், தில்லைநாயகம், வெங்கடாசலம், எத்திராஜ் போன்றோர் பங்குதாரர்களாக இருந்தார்கள்.
கம்பெனி சட்டப்படி இயக்குநர்களுக்கோ பங்குதாரர்களுக்கோ கம்பெனியின் சொத்தில் உரிமை இல்லை. எனவே, இந்த வழக்கில் இருந்து எங்கள் நிறுவனத்தை விடுவிக்க வேண்டும்.
தமிழக ஊழல் தடுப்பு போலீஸார் மீது நடவடிக்கை எடுப்பேன்…
கம்பெனிகள் வழக்குகள் அனைத்தும் நிறைவு பெற்றதும்…
நீதிபதி குமாரசாமி: (அரசு வழக்கறிஞர் பவானிசிங்கைப் பார்த்து) அடுத்து நீங்கள் உங்கள் வாதத்தை ஆரம்பியுங்கள்.
பவானிசிங்: நான் படிப்பதற்காக 5 நாட்கள் அவகாசம் வேண்டும்.
நீதிபதி: உச்சநீதிமன்றம் தினந்தோறும் நடத்தச் சொல்லி இருப்பதால், அவகாசம் கொடுக்க முடியாது. மதியம் வாதாட வேண்டும். புலன்விசாரணை அதிகாரி நல்லமநாயுடு தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையும், அவருடைய வாக்குமூலத்தை படியுங்கள். பிறகு வாதம் செய்யலாம்.
பவானிசிங்: மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு படிக்கிறேன்.
நீதிபதி: என்ன வாதங்களை வைத்து வாதிட போகிறீர்கள்?
பவானிசிங்: சாட்சியங்களின் வாக்குமூலம், குற்றப்பத்திரிகை மற்றும் பட்டியல்கள்
நீதிபதி: ஜெயலலிதா உட்பட 4 பேர் மீது எதன் அடிப்படையில் 65 கோடி ரூபாய் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக வழக்கு போட்டீர்கள்? ஜெயலலிதா 1 ரூபாய் சம்பளம் வாங்கி இருக்கிறார்.
அவருக்கு எப்படி 65 கோடி வந்தது? அதற்கான ஆதாரங்கள் எங்கே? ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்கள் ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு 9 1/2 கோடி என்கிறார்கள். நீங்கள் 65 கோடி என்கிறீர்கள். அதற்கு தகுந்த ஆதாரங்களோடு விளக்கம் கொடுக்க வேண்டும்.
பவானிசிங்: (தமிழ்நாடு ஊழல் தடுப்பு டி.எஸ்.பி., சம்பந்தத்தைப் பார்த்து) எப்படி வந்தது?
சம்பந்தம்: ஆவணங்கள் இருக்கிறது.
நீதிபதி: (பவானிசிங்கைப் பார்த்து) குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது யார்? அவர் நேரில் ஆஜராக வேண்டும்.
பவானிசிங்: (சம்பந்தத்தைப் பார்த்து) யார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது?
சம்பந்தம்: இவ்வழக்கின் புலன்விசாரணை அதிகாரி நல்லமநாயுடு. அவருக்கு உடல்நிலை சரியில்லை 93 வயதாகிறது. (உண்மையில் நல்லமநாயுடுக்கு 73 வயதுதான் ஆகிறது.)
நீதிபதி: அடுத்த அதிகாரி யார்?
சம்பந்தம்: எஸ்.பி சௌந்திரராஜன் இருந்தார். அவர் இறந்துவிட்டார்.
நீதிபதி: தற்போது யார் தமிழக ஊழல் தடுப்புப் பிரிவின் இன்சார்ஜ்?
சம்பந்தம்: தற்போது சண்முகபிரியா என்ற லேடி எஸ்.பி-தான் இன்சார்ஜ்.
நீதிபதி: எத்தனை வருடம் இந்த வழக்கில் நீங்கள் இருக்கிறீர்கள்?
சம்பந்தம்: 98ல் இருந்து இருக்கிறேன். கீழமை நீதிமன்றத்திலும் இருந்தேன்.
நீதிபதி: அப்படியென்றால் எல்லா ஆவணங்களையும் நீதிமன்றத்துக்கு எடுத்துவரத் தெரியாதா? 20 வருடமாக இவ்வழக்கு நடைபெற்று வருகிறது.
நீங்கள் எல்லா ஆவணங்களையும் சரியாக பின்பற்றாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது. மேலும், இவ்வழக்கின் ஆதாரமாக இருக்கும் ஆவணங்கள் இல்லையென்று சொன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.
20 வருடமாக நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்து இருக்கிறீர்கள். சரியான ஆவணங்களைக் கொடுக்கவில்லை என்றால், உங்கள் மீது நடவடிக்கை எடுப்பேன். எதன் அடிப்படையில் இவ்வளவு நாட்கள் வாதம் செய்கிறீர்கள்?
ஜெயலலிதா மீது போடப்பட்ட ஒவ்வொரு ரூபாய்க்கும் நீங்கள் கணக்கு காட்ட வேண்டும். எப்படி ஆடிட் செய்தீர்கள்? எந்த ஆடிட்டரை வைத்து ஆடிட் செய்தீர்கள்? நீங்களாகவே கணக்கு போட்டீர்களா? இவற்றையெல்லாம் தகுந்த ஆதாரத்தோடு விளக்க வேண்டும்.
சம்பந்தம்: குற்றப்பத்திரிகையில் இருக்கிறது.
நீதிபதி: (பவானிசிங்கைப் பார்த்து) குற்றப்பத்திரிகை என்றால் என்ன?
பவானிசிங்: (சம்பந்தத்தைப் பார்த்து) குற்றப்பத்திரிகை என்றால் என்ன?
சம்மந்தம்: புலன் விசாரணை, சாட்சியங்கள், வழக்கு பற்றிய முழு விவரங்கள்.
நீதிபதி: அப்படியென்றால் ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்பது தெரியாதா? அவர்கள் தரப்பு வாதத்திற்கு நீங்கள் ஆதாரங்களோடு கூடிய ஆவணங்களைக் காட்டி பதில் சொல்லியாக வேண்டும்.
நல்லமநாயுடுவின் வாக்குமூலத்தைத் திருந்த வேண்டும்!
மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு… பவானிசிங் அரசு தரப்பு சாட்சி நல்லமநாயுடுவின் வாக்குமூலத்தை படிக்க மட்டுமே செய்தார்.
இடையில் குறுக்கீடு செய்த ஜெ. தரப்பு வழக்கறிஞர் செந்தில் வாக்குமூலத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்றபோதுகூட பவானிசிங் வாய் திறக்கவில்லை. தனக்கு ரூம் வேண்டும் என்ற கோரிக்கையைதான் வைத்தார்.
பவானிசிங்: ஜெயலலிதா 91-96 வரை முதல்வராக இருந்தபொது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் சுப்பிரமணியன் சுவாமி சென்னை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதையடுத்து சென்னை அமர்வு நீதிமன்றம் ஊழல் தடுப்பு அதிகாரி லத்திகா சரணை நியமித்து விசாரணை செய்ய ஆணையிட்டது.
அதன் பிறகு பெருமாள் இவ்வழக்கை விசாரித்து எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தார். அதன் பிறகு எஸ்.பி நல்லமநாயுடு தலைமையில் 9 குழுவினராகப் பிரிந்து ஜெயலலிதாவின் போயஸ் கார்டன், ஹைதராபாத் திராட்சைத் தோட்டம், கட்டடங்கள் என பல இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
செந்தில்: இந்த வாக்குமூலத்தில் நிறைய தவறுகள் இருக்கிறது. அதை நாங்கள் திருத்தம் செய்து கொடுக்க அனுமதிக்க வேண்டும்.
நீதிபதி: எல்லா வாக்குமூலத்திலும் தவறு இருக்கிறதா?
செந்தில்: 42 வாக்குமூலங்களில் நிறைய தவறுகள் இருக்கின்றன.
நீதிபதி: எப்போது திருத்தம் செய்து தரப்போகிறீர்கள்?
செந்தில்: திங்கள்கிழமை தருகிறோம்
பவானிசிங்: வழக்கு ஆவணங்கள் அனைத்து நீதிமன்றத்தில்தான் இருக்கிறது. அதைப் படிக்க வேண்டும். அதனால் எனக்கு இந்த நீதிமன்றத்தில் ரூம் ஒதுக்கித் தர வேண்டும்.
நீதிபதி: ஏன் உங்களுக்கு ரூம் இல்லையா?
பவானிசிங்: இல்லை.
நீதிபதி: சரி நான் சொல்லி ரூம் தரச் சொல்கிறேன். ஆனால், அதற்கான சார்ஜ் தமிழ்நாடு அரசு கொடுக்க வேண்டும். நாளைக்கு தலைமை வழக்கறிஞர் நேரில் ஆஜராக வேண்டும்.
தலைமை வழக்கறிஞர் ரவிவர்மகுமார்: இந்த வழக்கில் இவர் நியமிக்கப்பட்டதே தெரியாது. நியூஸ் பேப்பரைப் படித்துதான் தெரிந்துகொண்டேன். இதுவரை பவானிசிங் என்னிடம் கேட்கவில்லை. உடனே கொடுத்துவிடுகிறேன்.
நீதிபதி: பவானிசிங் நீக்கம் சம்பந்தமான அன்பழகன் வழக்கு எந்த நிலையில் இருக்கிறது?
மணிசங்கர்: உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.
அரசாங்கத்தின் ஊதுகுழலாக இருக்கக் கூடாது…
நீதிபதி: 1960-ல் ஆல் இந்திய சர்வீஸில் பெரும்பாலும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்தான் இருந்தார்கள். ஏனென்றால், தமிழர்களுக்கு ஆங்கிலப்புலமை அதிகமாக இருந்தது.
மத்திய நிதித்துறையிலும் 20 சதவிகிதத்துக்கு மேற்பட்டவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்தான். வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மிகவும் குறைவு.
இது பொதுவான தகவல். இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால், இந்த வழக்கில் தொடர்ந்து ஒரு நாளைக்கு 8 முதல் 10 மணி நேரம் கவனம் செலுத்துவதால், கொஞ்ச நேரம் புத்துணர்ச்சி பெறுவதற்குதான் சொல்கிறேன். பவானிசிங், நீங்கள் ஆரம்பிக்கலாம்!
பவானிசிங்: இந்த வழக்கின் முதல் குற்றவாளியான ஜெயலலிதாவின் வீட்டை சோதனை செய்து அங்கிருந்த தங்க, வைர நகைகளைக் கைப்பற்றினோம். அதிகாரி வாசுதேவன் நகைகளை வேல்யூ செய்தார். செங்கல்வராயன் என்ற அதிகாரி சேலைகளை மதிப்பீடு செய்தார்.
நீதிபதி: (குறுக்கீடு செய்து) அரசாங்கத்தின் ஊதுகுழலாக இருக்கக் கூடாது. சி.ஆர்.பி.சி-யின் எந்தப் பிரிவின் அடிப்படையில் வீட்டை சோதனை செய்தீர்கள்?
பவானிசிங்: (சம்பந்தத்தைப் பார்த்து) ஏன் ஆய்வு செய்தீர்கள்?
சம்பந்தம்: முறைப்படி அனுமதிபெற்று சோதனை செய்தோம்.
நீதிபதி: (பவானிசிங்கைப் பார்த்து) தமிழக ஊழல் தடுப்பு போலீஸார் ஜெயலலிதாவின் வீட்டை ரெய்டு செய்து நகைகள் கைப்பற்றியபோது வீடியோ எடுக்கப்பட்டதா?
பவானிசிங்: (சம்பந்தத்தைப் பார்த்து) வீடியோ எடுக்கப்பட்டதா?
சம்பந்தம்: இல்லை.
நீதிபதி: சி.டி எடுத்தீர்களா?
சம்பந்தம்: இல்லை.
நீதிபதி: ஜெயலலிதா வீட்டில் கைப்பற்றப்பட்ட தங்க, வைர நகைகளை யார் மதிப்பீடு செய்தது?
பவானிசிங்: (ஜெ. தரப்பு வழக்கறிஞர் மணிசங்கரைப் பார்த்து) யார்?
மணிசங்கர்: அதிகாரிகள் வாசுதேன் மற்றும் ஜெகநாதன்
நீதிபதி: அப்போது ஜெயலலிதாவின் சார்பாக வீட்டில் யார் இருந்தது?
பவானிசிங்: (மணிசங்கரைப் பார்த்து) யார் இருந்தது?
மணிசங்கர்: (அடக்க முடியாமல் சிரிக்கிறார்…)
சம்பந்தம்: (மிகுந்த தயக்கத்தோடு…) பாஸ்கரன் என்பவர் இருந்தார்.
நீதிபதி: ஜெயலலிதா சார்பாக பாஸ்கரன் இருப்பதற்காக ஜெயலலிதா கொடுத்த ஒப்புதல் கடிதத்தைக் காட்டுங்கள்.
பவானிசிங்: (சம்பந்தத்தைப் பார்த்து) அந்தக் கடிதம் எங்கே? (சம்பந்தம் துளாவினார்.)
மணிசங்கர்: (மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு, எடுத்துக் கொடுத்தார்.)
நீதிபதி: (சம்பந்தத்தைப் பார்த்து) என்ன படித்திருக்கிறீர்கள்?
சம்பந்தம்: பி.எஸ்ஸி
நீதிபதி: செகண்ட் லாங்குவேஜ் என்ன?
சம்பந்தம்: ஆங்கிலம்.
நீதிபதி: பிறகு ஏன் பதிலளிக்க மறுக்கிறீர்கள்?
சம்பந்தம்: (மௌனம்)
இந்த வழக்கே ஒரு கதைதான் யுவர் ஆனர்!
பவானிசிங்: ஜெயலலிதா போயஸ்கார்டன் வீட்டை சோதனை செய்தபோது, ஜெயலலிதா இன்னொரு வழக்கில் அரெஸ்ட் செய்யப்பட்டு இருந்தார்.
நீதிபதி: ஜெயலலிதா போலீஸ் கஸ்டடியில் இருந்தாரா? சிறையில் அடைக்கப்பட்டாரா?
சம்மந்தம்: சிறையில் அடைக்கப்பட்டார்.
நீதிபதி: என்ன வழக்கில் அரெஸ்ட் செய்யப்பட்டார்.
பவானிசிங்: (சம்பந்தத்தைப் பார்த்து) எந்த கேஸ்?
சம்மந்தம்: தெரியவில்லை.
பவானிசிங்: அது ஊழல் வழக்கு கிடையாது. அது சி.ஆர்.பி.சி வழக்கு
குமார்: கலர் டிவி ஊழல் நடந்ததாக கைது செய்யப்பட்டார். 1996 டிசம்பர் 6 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். 7 ஆம் தேதி வீடு ரெய்டு செய்யப்பட்டது. சோதனை என்ற பெயரில் பெட்ரூம், பாத்ரூம் முதற்கொண்டு ஐந்து நாட்கள் ரெய்டு செய்து, அதை டிவியில் தொடர்ந்து ஒளிபரப்பச் செய்தார்கள்.
நீதிபதி: இன்றுபோல நாளைக்கும் கதை சொல்வதை விட்டுவிட்டு ஆதாரங்களோடு வாதிட வேண்டும்.
பவானிசிங்: (சிரித்துக்கொண்டே) இந்த வழக்கே ராமாயணம், மகாபாரதம் போன்ற கதைதான் யுவர் ஆனர்.
– வீ.கே.ரமேஷ்
படங்கள்: ரமேஷ் கந்தசாமி