சிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச வரும் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1.35 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையவுள்ள நிலையில், அவரை சிறிலங்கா காவல்துறையினர் கைது செய்யப்பட்டார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

சிறிலங்கா அதிபர் தேர்தலுக்குப் பின்னர், தனது மனைவியுடன் அமெரிக்காவுக்குச் சென்ற பசில் ராஜபக்ச, திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்றுள்ள 65000 மில்லியன் ரூபா மோசடி தொடர்பாக நீதிமன்றத்தில் சாட்சியமளிக்க நாடு திரும்பவுள்ளார்.

இன்றுபிற்பகல் 4.30 மணியளவில், அமெரிக்காவின் மின்னெபொலிஸ் அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து அவர், சன் கன்றி உள்நாட்டு விமான சேவை மூலம்,  ஜோன் எவ்.கெனடி விமான நிலையத்தை சென்றடைவார்.

அங்கிருந்து, எமிரேட்ஸ் விமானம் மூலம், டுபாய்க்குப் பயணமாவார்.

இதற்காக அவருக்கு, எமிரேட்ஸ் விமானத்தில், கட்டணம் அதிகமுள்ள வர்த்தக பிரிவில் ஆசனம் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த விமானத்தில் வர்த்தக வகுப்பில் 10 ஆசனங்கள் மாத்திரமே உள்ளன. அவற்றில் மூன்று ஆசனங்களே முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் பசில் ராஜபக்சவும் ஒருவராவார்.

டுபாயில் இருந்து எமிரேட்ஸ் விமானத்தில் முதல் வகுப்பில், பயணம் மேற்கொண்டு, வரும் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1.35 மணியளவில் கட்டுநாயக்கவை வந்தடைவார்.

பசில் ராஜபக்ச தனியாகவே கொழும்பு திரும்பவுள்ளார் என்றும், அவரது மனைவி வரவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை,  பசில் ராஜபக்ச கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்படமாட்டார் என்றும், அவரைக் கைது செய்வதற்காக பிடியாணை பிறப்பிக்கப்படவில்லை என்றும், சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

தாம் அவருக்கு, நிதிக்குற்றப் பிரிவில் வாக்குமூலம் அளிப்பதற்கு முன்னிலையாகுமாறு சாதாரணமான முறையில் அவருக்கு அறிவிப்போம் என்றும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, கடுவெல நீதிமன்றத்தில் திவிநெகும  திணைக்களத்தில் இடம்பெற்ற மோசடி தொடர்பான வழக்கில், பசில் ராஜபக்சவைக் கைது செய்வதற்கு தடை விதிக்கக் கோரி, தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிமன்றம் நிராகரித்திருந்த்து குறிப்பிடத்தக்கது.

இதனால், அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்படுவார் என்று முன்னர் எதிர்பார்க்கப்பட்டது.

Share.
Leave A Reply