தமிழ் மக்களின் அரசியல் தலைமைகளின் செயற்பாடுகள் எவ்வாறு இளைஞர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை தோற்றுவித்து மாணவர் பேரவையின் தோற்றத்துக்கு காரணமாக இருந்தது என்பதை எனது முதலாவது பதிவிலே குறிப்பிட்டிருந்தேன்.

அத்துடன், 1965 நடைபெற்ற பொதுத்தேர்தலில் பின்னர் ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து தமிழரசுக் கட்சி ஆட்சி அமைத்த பின்னர் தமிழ் மக்களை பாதிக்கும் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்றன என்றும் அவற்றை எனது அடுத்த பதிவில் குறிப்பிடுவதாகவும் எழுதி இருந்தேன். அவற்றை இந்தப்பதிவில் சுருக்கமாக விபரிக்கிறேன்.

1961 ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க தலைமையில் அமைந்த அரசாங்கம் புத்தூர், அல்வாய், அச்சுவேலி மற்றும் கரவெட்டி போன்ற இடங்களில் முதன் முதலாக பௌத்த சிங்கள பாடசாலைகளை திறந்தது.

மாவட்ட சபை மசோதாவை பாராளுமன்றத்தில் கொண்டுவருவதாக 1965 இல் தமிழரசுக்கட்சிக்கு உறுதிமொழியளித்திருந்த டட்லி சேனநாயக்கா, சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பௌத்த மகா சங்கங்களின் எதிர்ப்பு காரணமாக அதனை நிறைவேற்ற முடியாது என்று 1969 இல் கைவிடுகிறார்.

zzzzz-1-300x1251966இல் கொண்டுவரப்பட்ட ‘சிறப்பு தமிழ்மொழி அமுலாக்கல்’ சட்டவிதிகள் அமுலாக்கப்படாத நிலையில் 1956 வரை சிங்களம் படிக்கவேண்டாமென்று மேடைமேடையாக முழங்கிய தமிழ் அரசியல்வாதிகள் குறிப்பாக தமிழரசுக்கட்சியினர் புதிதாக சேர்ந்த தமிழ் அரச ஊழியர்கள் ஐந்தாம்

வகுப்புவரை சிங்களமொழியில் தேர்ச்சி அடையவேண்டுமென்ற சட்டத்தை ஏற்றுக்கொண்டனர். ஒருவகையில், இது 1956இல் பண்டாரநாயக்கா கொண்டுவந்த சிங்களம் மட்டும் சட்டத்தை ஏற்றுக்கொள்ளுதல் என்பதாகும்.

இவையெல்லாவற்றுக்கும் மேலாக தமிழர் சிங்களவர் என இனரீதியாக பிரித்துக்காட்டும் தேசிய அடையாளஅட்டை வழங்கும் மசோதா பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சியினால் கொண்டு வரப்பட்டது.

இந்த அடையாள அட்டை மூலமே குறிப்பாக 1970இன் பின் தமிழர்கள் இனரீதியாக இலகுவாக அடையாளம் காணப்பட்டு இன்றுவரை சிங்கள அரசாங்கங்களினால் துன்புறுத்தப்பட்டு வருகின்றனர்.

இந்த சட்டத்துக்கு ஆதரவளித்தது மட்டுமன்றி ‘நாய்க்கு பட்டிபோல தமிழனுக்கு அடையாளஅட்டையா?’ என கோசமிட்டு இச்சட்டமூலத்தை எதிர்த்து வாக்களித்த காவலூர் நவரத்தினத்தை கட்சியைவிட்டு வெளியேற்றி தமது அரச விசுவாசத்தை தமிழரசுக்கட்சியினர் வெளிப்படுத்தியிருந்தனர்.

இவ்விடைக்காலங்களில் உள்ளூராட்சி அமைச்சராயிருந்த திரு. திருச்செல்வம் அவர்கள் அமைச்சருக்குரிய சகல சுகபோகங்களையும் தனிப்பட்டமுறையில் அனுபவித்தபோதும் தான்சார்ந்த தமிழ் இனத்திற்காக எதையும் செய்ய முடியாத கையாளாகாத நிலையிலேயே எப்பொழுதும் காணப்பட்டார்.

ஒரு உதராணமாக, ஐக்கிய தேசிய கட்சி ஆட்சி அமைப்பதற்கு ஆதரவளிக்கும் நிபந்தனைகளில் ஒன்றாக திருகோணமலையை புனித நகராக்குவதையும் தமிழரசுக் கட்சி உள்ளடக்கியிருந்தது.

திருகோணமலையைத் தமிழர்களின் தலைநகராக கொண்டுவரும் ஒரு தந்திரோபாய நடவடிக்கையாகவே இதனை தமிழரசுக் கட்சி கருதியிருந்தது.

இதன்பொருட்டு, திருகோணமலையின் எல்லைகளை முடிவுசெய்வதற்காக திருச்செல்வம் ஒரு ஆலோசகர் குழுவை அமைத்தார்.

ஆனால், அவரையோ அன்றி தமிழரசுக் கட்சியையோ ஆலோசிக்காமல் பிரதமர் டட்லி சேனாநாயக்கா அந்தக் குழுவை கலைத்திருந்தார்.

இவ்வாறு தொடர்ந்து ஏற்பட்ட பல்வேறுபட்ட அவமானங்கள் மற்றும் ஏமாற்றங்கள் காரணமாக 16.09.1968 அன்று தனது அமைச்சுப் பதவியை திருச்செல்வம் ராஜினாமா செய்தார். ஆனாலும், ஆளும் ஐக்கிய தேசியக்கட்சிக்கு தொடர்ந்து தமிழரசுக் கட்சியினர் ஆதரவு வழங்கி வந்தனர்.

தமிழரசுக் கட்சியினரின் செயற்பாடுகள் இவ்வாறு ஏமாற்றம் அளிக்கும் வகையில் இருந்த அதேவேளை, இலங்கை அரசாங்கங்களின் தமிழ் மக்களுக்கெதிரான இனப் பாகுபாடு அடிப்படையிலான செயற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டிருந்தன.

இதனால், இளைஞர்கள் மத்தியில் அதிருப்தியும் சீற்றமும் அதிகரித்திருந்தது. இதுவே, தமிழ் மாணவர் பேரவையின் தோற்றத்துக்கு முக்கிய காரணமாக இருந்தது.

‘ஈழத் தமிழ் இயக்கத்தின்’ தோற்றமும் வீழ்ச்சியும்

உண்மையில் தமிழ் மாணவர் பேரவையின் உருவாக்கத்துக்கு முன்னர் 1969 இல் தோற்றம் பெற்ற “ஈழத் தமிழ் இயக்கம்” பற்றி குறிப்பிடுவது இங்கு முக்கியமானது.

எவ்வாறு தமிழ் மாணவர் பேரவை ஈழ விடுதலை இயக்கங்கள் தோற்றம் பெறுவதற்கு காரணமாக இருந்ததோ, அதேபோல் மாணவர் பேரவையின் தோற்றத்துக்கு “ஈழத் தமிழ் இயக்கம்” காரணமாக இருந்தது என்று கூறலாம்.

Tamil-Ilaiyan-1-1-1-300x197

யாழ்ப்பாணத்தின் புகழ் பூத்த பாடசாலைகளான சென். பற்றிக்ஸ் கல்லூரி, யாழ். மத்திய கல்லூரி, யாழ். பரியோவான் கல்லூரி, யாழ். இந்துக் கல்லூரி ஆகியவற்றின் மானவர்களே இந்த ஈழத் தமிழ் இயக்கத்தின் உருவாக்கத்தில் முன்னின்று செயற்பட்டனர்.

குறிப்பாக, சென். பற்றிக்ஸ் கல்லூரி மாணவர்களே ஈழத் தமிழ் இயக்கத்தின் தோற்றத்துக்கு காரணமாக இருந்தனர் என்று குறிப்பிடலாம்.

மைக்கேல் தம்பிநாயகம் (சென். பற்றிக்ஸ் கல்லூரி), விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் சர்வதேச தொடர்பாளராக இருந்த லோரன்ஸ் திலகர் ( சென். பற்றிக்ஸ் கல்லூரி), தற்போது ஈ. பி.டி.பி அமைப்பில் இருக்கும் வடமாகாண எதிர்க்கட்சி தலைவரான சின்னத்துரை தவராசா (கொக்குவில் இந்துக் கல்லூரி) ,

zzzzz-3

தியாகி பொன். சிவகுமாரன் ( யாழ். இந்துக் கல்லூரி), தற்போது லண்டனில் வசிக்கும் புலம் பெயர் செயற்பாட்டாளரான மருத்துவர் ஜெயசுந்தரம் (சென் ஜோன்ஸ் கல்லூரி), சந்திரசேகரம் (சென். பற்றிக்ஸ் கல்லூரி), ஜோசப் வில்வராஜா (சென். பற்றிக்ஸ் கல்லூரி), இலங்கை மன்னன் (சென். பற்றிக்ஸ் கல்லூரி), முத்துக்குமாரசாமி மற்றும் ஹிட்லர் ஆகியோரை ஈழத் தமிழ் இயக்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர்களாக குறிப்பிடலாம்.

Yarl-Mutraveliயாழ் முற்றவெளி

கீழ்வரும் மூன்று விடயங்களை ஈழத் தமிழ் இயக்கத்தின் மிக முக்கியமான செயற்பாடுகளாக குறிப்பிடமுடியும்.

1. 1969 இல் யாழ் மாநகர சபை கேட்போர் கூடத்தில் ஒரு சர்வ கட்சி மகாநாட்டை ஈழத் தமிழ் இயக்கம் நடத்தியது.

கொள்கைகளிலும் செயற்ப்பாடுகளிலும் வேறுபட்டு நின்ற தமிழரசுக் கட்சி, சுயாட்சிக் கழகம், தமிழ் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளை ஒன்றிணைப்பதே இந்த மகாநாட்டின் நோக்கமாக இருந்தது.

இந்த மகாநாட்டில், வவுனியா சிவசிதம்பரம் ( தமிழ் காங்கிரஸ்), உடுப்பிட்டி சிவசிதம்பரம் ( தமிழ் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்), அமிர்தலிங்கம் (தமிழரசுக்கட்சி), கதிரவேற்பிள்ளை (தமிழரசுக்கட்சி- நல்லூர் பாராளுமன்ற உறுப்பினர்), வி. நவரத்தினம் (சுயாட்சிக் கழகம்), வி. பொன்னம்பலம் ( கம்யூனிஸ் கட்சி) ஆகியோருடன் பேராதனை பல்கலைக் கழகத்தின் தமிழ் இளைஞர் பேரவையில் இருந்து ராஜன் பிலிப்பிள்ளை (அருட்தந்தை தனிநாயகம் அடிகளாரின் மருமகன்), சிவேந்திரன் ( அல்பிரட் துரையப்பாவின் மருமகன்) மற்றும் நானும் கலந்துகொண்டோம்.

2. தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்று கோரி அதே ஆண்டில் (1969) யாழ்ப்பாணம் முனியப்பர் கோவிலுக்கு முன்பாக இரு உண்ணாவிரதம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் நூறுக்கும் அதிகமான இளைஞர்கள் கலந்துகொண்டனர்.

3. சியவச ( அதிஷ்டலாப சீட்டு), சலுசல ( கூட்டுறவு சங்கம் ) என்ற சிங்கள பெயர்களை எதிர்த்து ஊர்வலம் ஒன்றை யாழ் முற்றவெளியில் இருந்து கச்சேரி வரை நடத்தி மகஜர் ஒன்று அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டது.

1970 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சிவகுமாரன் நடத்திய குண்டு வெடிப்போடு பொலிசாரின் நடவடிக்கைகள் அதிகரிக்க ஈழத் தமிழ் இயக்கத்தின் உறுப்பினர்கள் பிரிந்துசென்றதுடன் இந்த அமைப்பும் கலைந்துபோனது.

sivakumaran_001sivakumaran
ஈழத் தமிழ் இயக்கத்தில் அங்கத்தவராக இருந்த அதேசமயம் எவ்வாறு சிவகுமாரன் இரகசியமான முறையில் தனது மிக நெருங்கிய சில சகாக்களுடன் இணைந்து 1970 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்த குண்டுவெடிப்பை மேற்கொண்டார் என்பதையும்…

இந்த குண்டு வெடிப்பு யாரை இலக்கு வைத்து எதற்காக எங்கே மேற்கொள்ளப்பட்டது என்பதையும் இந்த குண்டை எங்கே எப்படி அவர் செய்தார் என்பதையும் இந்த குண்டுவெடிப்பின் பின்னர் சிவகுமாரனுக்கு என்ன நடைபெற்றது என்பதையும் எனது அடுத்த பதிவில் எழுதுகிறேன்.

-சத்தியசீலனின்-

aaaaa

தமிழ் மாணவர் பேரவையின் தோற்றம்: ஈழ விடுதலைப் போராட்டம் – (பாகம்-1)

Share.
Leave A Reply