இலங்கையின் தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவிற்கும், வடக்கு மாகாணசபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் ‘பனிப்போர்’ ஒன்று நிலவி வருவதாக ஊடகங்கள் சிலாகித்து வருகின்றன.

இந்தப் பிரச்சினை வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்றுவது சம்பந்தமாக ரணில் தெரிவித்த ஒரு கருத்துச் சம்பந்தமாக உருவானது என்பது எல்லோருக்கும் தெரியும்.

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் வடக்கிலிருந்து இராணுவத்தைப் பெருமளவு குறைத்து, அவர்கள் வசம் இருக்கும் பொதுமக்களின் காணிகளை உரியவர்களிடம் கையளிக்கப் போவதாக ரணில், இன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா உட்பட எதிரணியினர் மக்களுக்கு வாக்குறுதி அளித்தனர்.

இதுவும் இன்ன பிற காரணங்களுக்காகவும்தான் தாம் மைத்திரியை ஆதரிப்பதாகச் சொல்லியே முதலமைச்சர் விக்னேஸ்வரனின் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஜனாதிபதி தேர்தலில் மைத்திரியை ஆதரித்தது.

ஆனால் வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்றுவது நடைமுறைச் சாத்தியமில்லாதது என்பதை இந்த இரண்டு பகுதியினரும் நன்கு அறிவார்கள்.

அதைத் தெரிந்து கொண்டே மக்களை ஏமாற்றப் பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசினர். ஆனால் இப்பொழுது ரணில் சிங்கள மக்களையும், இராணுவத்தையும் தம்மை நம்ப வைக்கவும், எதிர்க்கட்சிகளின் தாக்குதல்களில் இருந்து தப்பவும் வடக்கிலிருந்து இராணுவத்தை அகற்ற முடியாது என்கிறார்.

அதேபோல, “மைத்திரியை தமிழ் மக்களுக்கு எந்தவிதமான பிரயோசமும் இல்லாமல் ஏன் ஆதரித்தீர்கள்?” என்ற தமிழ் மக்களின் கோபாவேசமான கேள்வியிலிருந்து தப்புவதற்காக ஏதாவது ஒரு நாடகம் போட வேண்டிய தேவை முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும் இருக்கிறது.

அதற்கும் அப்பால் “நீங்கள் முதலமைச்சராக நான்கு வருடங்கள் இருந்து என்னத்தை வெட்டிக் கிழிச்சனிங்கள்?” என்ற தமிழ் மக்களின் இன்னொரு கேள்விக்கு நான்கு வருடங்களுக்குப் பின்னர் பதில் சொல்ல வேண்டிய தேவையும் விக்னேஸ்வரனுக்கு இருக்கிறது.

இந்தக் கேள்வியை விக்னேஸ்வரனுடன் இன்னொரு ‘பனிப்போரை’ நடாத்தி வரும் மாவை சேனாதிராசா கூட சில வேளைகளில் கேட்கக்கூடும்!

அதுமட்டுமின்றி, சம்பந்தனுக்குப் பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப் பதவியை சுவீகரிப்பதற்கு காத்துக் கொண்டிருக்கும் விக்னேஸ்வரன் தன்னை ஒரு ‘பயில்வான்’ எனத் தமிழ் மக்களுக்குக் காட்ட வேண்டிய தேவையும் இருக்கிறது.

இந்த இரு பக்கத் தேவைகளையும் மனதில் கொண்டு உருவாக்கப்பட்ட நாடகம்தான் ரணில் – விக்னேஸ்வரன் இடையிலான ‘பனிப்போர்’ என்பதை இந்த இரு தரப்பினரதும் வரலாற்றை நன்கு அறிந்தவர்கள் புரிந்து கொள்வர்.

இது ஒருபுறமிருக்க, இவர்களது ‘பனிப்போர்’ குறித்து அண்மையில் ஊடகவியலாளர் ஒருவர் கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தனிடம் கேள்வி எழுப்பிய போது, அவர் கொடுத்த பதில் சம்பந்தனின்  உண்மையான சுயரூபத்தை அம்பலத்துக்குக் கொண்டு வந்திருக்கிறது.

அவர் தனது பதிலில் ஊடகங்களுக்கு கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்திருக்கிறார். இது தங்களுடைய உட்கட்சிப் பிரச்சினை என்றும், இதில் ஊடகங்கள் தேவையில்லாமல் மூக்கை நுழைக்கக்கூடாது என்றும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்!

“என்னய்யா, நாட்டின் பிரதமருக்கும், தமிழ் மக்களின் முக்கியமான ஒரு பகுதியின் முதலமைச்சருக்கும் இடையில் உருவாகியுள்ள “மோதல்’ உட்கட்சி விவகாரமா?

கடந்த காலத்தில் மகிந்த அரசின் கீழ் ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் நசுக்கப்படுகிறார்கள் என ஐ.தே.க அணியினருடன் சேர்ந்து கூப்பாடு போட்ட  நீங்கள்…,

இப்பொழுது உங்கள் பிரச்சினையில் மட்டும் ஊடகங்கள் மௌனமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுவது என்ன விதமான ஊடக தர்மம் அல்லது சுதந்திரம்?” என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.

அத்துடன் ரணிலுக்கும் விக்னேஸ்வரனுக்கும் அப்படி ஒரு பிரச்சினையும் இல்லையென்று ஒருபுறத்தில் மறுக்கும் சம்பந்தன், மறுபுறத்தில் இந்தப் பிரச்சினைக்கு என்ன செய்வது என்று கூட்டமைப்பு தலைவர் என்ற முறையில் தனக்குத் தெரியும் எனவும் அகங்காரத்துடன் கூறியிருக்கிறார்.

இங்கும் கூட 4 கட்சிகள் அங்கம் வகிக்கும் கூட்டமைப்பில் ஆலோசித்து இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என்று அவர் சொல்லவில்லை. ‘நானே எல்லாம்’ என்ற அகங்காரத்துடனும், சர்வாதிகாரத்தனத்துடனும்தான் பதில் இறுத்திருக்கிறார்.

இதிலிருந்து தெரிகிறது இவர்கள் ஊடகங்களை மதிக்கும் விதமும், உட்கட்சி ஜனநாயகத்தைப் பேணும் முறையும் தெளிவாகின்றது.

தமிழ் மக்கள் ஏமாந்த ‘சோணகிரிகளாக’ இருக்கும் வரை அவர்கள் இதுவும் செய்வார்கள், இன்னமும் செய்வார்கள்.

Share.
Leave A Reply