புதுடெல்லி: நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லியில் இன்று ஆம் ஆத்மி கட்சி நடத்திய ஆர்ப்பாட்ட பேரணியின்போது விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அரசியல் கட்சிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது கொண்டு வரப்பட்ட நிலம் கையகப்படுத்தும் மசோதாவில், பல்வேறு திருத்தங்களை செய்து புதிய மசோதா ஒன்றை தற்போதைய பா.ஜ.க. அரசு தயாரித்துள்ளது. இந்த மசோதா நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக அந்த மசோதா நிறைவேற்றப்படவில்லை. இருப்பினும், இந்த மசோதாவை நிறைவேற்றுவதில் பா.ஜ.க. அரசு தீவிரம் காட்டி வருகிறது.
இந்நிலையில், இந்த மசோதாவுக்கு நாடு முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள், விவசாயிகள் மற்றும் பொதுநல அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன. கடந்த இரு தினங்களுக்கு முன் காங்கிரஸ் சார்பில் டெல்லியில் பேரணி நடத்தப்பட்டது.
இந்நிலையில், நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆம் ஆத்மி சார்பில் டெல்லியில் இன்று ஆர்ப்பாட்ட பேரணி நடத்தப்பட்டது.
அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஜந்தர் மந்தரில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆம்ஆத்மி தொண்டர்களும், விவசாயிகளும் திரளாக கலந்து கொண்டனர்.
அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஒருவர் திடீரென அருகில் இருந்த மரத்தில் ஏறி தூக்குப் போட்டுக்கொண்டார்.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆம் ஆத்மி தொண்டர்கள் உடனடியாக மரத்தில் ஏறி, அவரை கீழே இறக்கி மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் மருத்துவமனைக்கு கொண்டு வரப்படும் முன்னரே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
தற்கொலை செய்து கொண்ட விவசாயி, ராஜஸ்தான் மாநிலம் தவுசாவை கஜேந்தர் என்பது தெரியவந்துள்ளது. தமது பயிர்கள் அனைத்தும் சேதம் அடைந்து, பெரும் நஷ்டம் ஏற்பட்டதால் தன்னால் இனிமேல் தனது மூன்று குழந்தைகளை காப்பாற்ற முடியாது என்பதாலும், பயிர்கள் சேதமடைந்ததை தொடர்ந்து தனது தந்தை தன்னை வீட்டைவிட்டு வெளியே துரத்திவிட்டுவிட்டதாலுமே தான் இந்த முடிவை ( தற்கொலை) மேற்கொள்வதாகவும் கஜேந்தர் கடிதம் எழுதி வைத்துள்ளார்.
Suicide note of Gajendra Singh
விசாரணைக்கு உத்தரவு
இதனிடையே இந்த தற்கொலை விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
போலீஸ் மீது கெஜ்ரிவால் குற்றச்சாட்டு
இந்நிலையில் தற்கொலை செய்துகொண்ட விவசாயியை காப்பாற்ற டெல்லி போலீசார் முயற்சிக்கவில்லை என கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார். ” அவர் ( விவசாயி) எங்கள் கண் முன்னே மரத்தில் ஏறினார். அவரை காப்பாற்றுமாறு நான் போலீஸாரிடம் கூறினேன்.
ஆனால் போலீஸார் எங்களது கட்டுப்பாட்டில் இல்லை. அந்த விவசாயி எங்களது கண் முன்னே மரத்தில் ஏறினார். யாருமே அவரை காப்பாற்ற முயற்சிக்கவில்லை” என கெஜ்ரிவால் மேலும் கூறினார்.
மனித உயிரைவிட அரசியல் முக்கியமாகவிட்டதா? சாடும் பா.ஜனதா
பா.ஜனதா தரப்பில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அக்கட்சித் தலைவர்களில் ஒருவரான சம்பிட் பத்ரா, ” மனித உயிரைவிட அரசியல் அதிக முக்கியத்துவமாகிவிட்டது மிகவும் வேதனை அளிப்பதாக உள்ளது. கெஜ்ரிவால் மருத்துவமனைக்கு செல்லாமல், மேடையில் பேசிய பின்னரே மருத்துவமனைக்கு சென்றுள்ளார்” என குற்றம்சாட்டியுள்ளார்.
மருத்துவமனைக்கு சென்ற ராகுல் காந்தி
இதனிடையே விவசாயி கொண்டு செல்லப்பட்ட மருத்துவமனைக்கு நேரில் சென்ற ராகுல் காந்தி, ” இந்த பிரச்னையை நான் அரசியலாக்க விரும்பவில்லை. ஆனால் இந்த பிரச்னையை நாடாளுமன்றத்தில் எழுப்புவேன்” என்றார்.
மேலும் முதலாளித்துவத்திற்கு ஆதரவாக மோடி அரசு கொண்டுவந்துள்ள நில கையகப்படுத்தும் சட்ட திருத்த மசோதாதான் இதற்கு காரணம் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.