சென்னை: கொருக்குப்பேட்டை ஜெஜெ நகர் முத்து (20). இவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்த பிரபாகர் (20). சிறுவயதில் இருந்தே நண்பர்கள். அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

ஆனால், தங்கள் காதலை ரகசியமாக வைத்திருந்தனர். அந்த பெண்ணும் இருவரில் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த வாரம் முத்து, தன் சிறுவயது நண்பனிடம் தன் காதல் குறித்து தெரிவித்துள்ளார்.

அதற்கு பிரபாகர், ‘‘ அப்படியா.. நானும் ஒரு பெண்ணை காதலிக்கிறேன். இரண்டுபேரும் நாம் நம் காதலிகளை அழைத்து கொண்டு வெளியூருக்கு சென்று திருமணம் செய்து கொள்வோம் என்று கூறியுள்ளார்.

பின்னர், தன் காதலி பெயரை முத்து கூறியுள்ளார். இதனால், பிரபாகர் ஆச்சர்யமடைந்து, அட.. நான் காதலிக்கும் பெண்ணின் பெயரும், நீ சொல்கின்ற பெண்ணின் பெயரும் ஒன்றாக இருக்கிறது.

நண்பர்களான நமக்கு கிடைக்கும் பெண்ணின் பெயரிலும் ஒற்றுமை இருக்கிறது என்று சந்தோஷத்துடன் கூறினார்.

ஆனால், அடுத்த கேள்வி அவர்களின் 10 ஆண்டுகளுக்கும் மேலான நட்ப்பை நடுத்தெருவில் போட்டு மிதித்து விட்டது.

ஆம், அந்த பெண் நாம் வசிக்கும் தெருவில்தான் உள்ளார் என்று முத்து கூறினார். இதனால், அதிர்ச்சி அடைந்த பிரபாகர், அந்த பெண்ணா.. அவளை நான்தான் காதலிக்கிறேன். அவளை விட்டு தா என்று பிரபாகர் சண்டையிட்டுள்ளார்.

ஆனால், முத்து தன் காதலையும், காதலியையும் விட்டுத் தர தயாராக இல்லை. எனவே, காதல் விஷயத்தில் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு முத்து, கொருக்குப்பேட்டை ஜீவா நகர் வழியாக நடந்து சென்றார். அப்போது, அங்கு வந்த பிரபாகரன், அவரை வழிமறித்து காதலை விட்டுவிடு என்று தகராறு செய்தார்.

பின்னர், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரை வெட்டினார். உடனே முத்துவும், பதிலுக்கு அவர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, பிரபாகரனை வெட்டினார்.

இதில், இரண்டுபேரும் சாலையில் மயங்கி விழுந்தனர். இதை பார்த்த அப்பகுதி மக்கள், அவர்களை மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

புகாரின்படி ஆர்கே நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்தபோதுதான், காதலுக்காக இரண்டு நண்பர்கள் பிரிந்ததும், ஒருவரை ஒருவர் கொலை செய்யும் அளவுக்கு துணிந்ததும் தெரியவந்தது.

சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான காதல் தேசம் படத்தில் வரும் காட்சியை போல் நடந்த இச்சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply