இலங்கையில் யுத்தத்தினால் முதுகுத்தண்டு வடம் பாதிக்கப்பட்டு அவயவங்கள் செயலிழந்துள்ளவர்களுக்கு நாட்டிலேயே முதற் தடவையாக வடமாகாண சபை மாதாந்த உதவி பணக்கொடுப்பனவு திட்டத்தை ஆரம்பித்திருக்கின்றது.

காசநோய், இருதய நோய் போன்ற குணமாக்க முடியாத நோய்களைக் கொண்டுள்ள நோயாளிகளுக்கும், குடும்பத் தலைவனை இழந்த விதவைப் பெண்களுக்கும் இலங்கை அரசாங்கம் இத்தகைய மாதாந்த உதவி பணக்கொடுப்பனவை வழங்கி வருகின்றது.

ஆயினும் யுத்தத்தில் படுகாயமடைந்து முள்ளந்தண்டு (முதுகுத்தண்டு) வடம் பாதிக்கப்பட்டு நடக்க முடியாத நிலையில் உள்ளவர்களுக்கு இத்தகைய உதவி அரசாங்கத்தினால் இன்னும் வழங்கப்படவில்லை.

முதுகுத்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாதந்தோறும் சாதாரணமாக 15 ஆயிரம் ரூபாய் வரையில் வைத்தியம் மற்றும் மருத்துவமனைகளுக்குச் சென்று வருவதற்கான செலவுகளுக்குப் பணம் தேவைப்படுகின்றது.

இது அவர்களின் அடிப்படைத் தேவையாகும். ஆனால் யுத்தத்தில் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் வாழ்வாதாரத்துக்கான தொழில் முயற்சிகளில் ஈடுபட முடியாதவர்களாகவும், ஏனைய குடும்ப உறுப்பினர்களைச்  சார்ந்திருக்க  வேண்டியவர்களாகவும்  இருக்கினறார்கள். இதனால், அவர்கள் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்கியிருக்கின்றார்கள்.

இத்தகைய நிலைமையில் உள்ள தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இந்த மாதாந்த உதவிப் பணம் வழங்கும் திட்டத்தை தாங்கள் ஆரம்பித்துள்ளதாக வடமாகாண சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் பி.சத்தியலிங்கம்  தெரிவித்தார்.

கழுத்துக்குக் கீழ் செயலிழந்தவர்களுக்கு மாதாந்தம் 3 ஆயிரம் ரூபாவும், இடுப்புக்குக் கீழ் இயங்க முடியாதவர்களுக்கு மாதம் 1,500 ரூபாவும் ஏப்ரல் மாதம் முதல் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, இந்த திட்டத்தை வவுனியாவில் வியாழனன்று ஆரம்பித்து வைத்ததன் பின்னர் அமைச்சர் கூறினார்.

தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான இந்த மாதாந்த உதவி பணக் கொடுப்பனவின் தொகையை மேலும் அதிகரிப்பதற்கான முயற்சிகளை வடமாகாண சபை விரைவில் மேற்கொள்ளும் என்றும் அவர்கள் தமது தேவைகளைத் தாங்களே பூர்த்தி செய்து கொள்வதற்குரிய பயிற்சிகள் மற்றும் உதவிகளை வழங்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் வடமாகாண சுகாதாதரத்துறை அமைச்சர் டாக்டர் பி.சத்தியலிங்கம் தெரிவித்தார்.

Share.
Leave A Reply