கமல், பரபரப்பாக இருப்பார்; இப்போது மிகப் பரபரப்பாக இருக்கிறார். ‘ஃபிலிம் மேக்கிங்’ வேலைகள் முடிந்த பின்னர், அந்தப் படத்தை சிக்கல் இல்லாமல் வெளியிட வைக்கும் ‘அசைன்மென்ட்’ சமீபமாகச் சேர்ந்திருக்கிறது. அதையும் சமாளிக்கிறார் சந்தோஷமாக!
‘’அதென்ன அடுத்தடுத்து உங்க படங்களையே அட்டாக் பண்றாங்க?”
‘’நானே சிரிக்க ஆரம்பிச்சுட்டேன். அதை சீரியஸா எடுத்துக்க முடியலை. திடீர்னு ஒருத்தர் ‘ஆ’னு கத்துறார்.
‘ஏன் கத்துறீங்க?’னு கேட்டா, ‘என் காலை நீங்க மிதிச்சுட்டா வலிக்குமே!’னு சொன்னார். காலை மிதிச்சாத் தானே ‘ஸாரி’ கேட்க முடியும்? ஆனா, இப்பெல்லாம் எச்சரிக்கையா முன்கூட்டியே கத்திடுறாங்க. ‘உத்தம வில்லன்’ படம் பார்த்தா, எல்லோரும் சிரிக்கத்தான்போறாங்க.
ஆனா, அதுக்குள்ள கமல் ஹாசனை எதிர்க்கிறதுல இந்து, முஸ்லிம் எல்லாரும் ஒண்ணாகிடுவாங்கபோல. காந்திகூட செய்ய முடியாததை கமல் செஞ்சதா இருக்கட்டுமே! ஆனா, அதெல்லாம் அர்த்தமே இல்லாத போராட்டமா இருக்கு.
வட இந்தியால ஒரு அரசியல்வாதி, ‘முஸ்லிம்களுக்கு ஓட்டுரிமை தேவையே இல்லை. அப்படிச் செய்தால், நாடு திருந்தி விடும்’னு சொல்லியிருக்கார்.
அதுக்காக யாராவது இங்கே எதிர்த்துக் குரல் கொடுத் திருக்காங்களா? என்னை மட்டும் ஏன் எதிர்க்கணும்? நான் வீம்பா இருக்கிறது காரணமா இருக்கலாம்.
ரஜினி சொல்ற மாதிரி, ‘என்னை வாழவைக்கும் தெய்வங்களே…‘னு சொல்லிட்டேன்னா, தெய்வத்தின் கருணை அவங்களுக்கு வந்திரும்போல.
ஆனா, நான் அவங்களை மனிதர்களாகத்தானே பார்க்கிறேன். அதனால் மனிதனுக்குள்ள எல்லா குரூரங்களையும் என்கிட்ட காட்டுறாங்க!”
‘’கே.பாலசந்தர் கடைசியா நடிச்ச படம் ‘உத்தம வில்லன்’. படப்பிடிப்புத் தருணங்களில் நீங்க அதை உணர்ந்தீங்களா?’
‘’படத்துல நீங்க நடிக்கிறீங்கனு சொன்னப்பவே, ‘பாதியில நான் செத்துப் போயிட்டா, என்னடா பண்ணுவே?’னு கேட்டார்.
‘அப்படிலாம் சொல்லாதீங்க சார்’னு சொன்னேன். ‘டேய்… நீ பார்த்த பழைய பாலசந்தர் இல்லைடா இப்போ’ன்னார். பலவாறு சமாதானப்படுத்தி நடிக்கவைச்சோம்.
முதல் நாள் ஷூட்டிங்ல, ‘ஆரம்பத்துலயே அபசகுனமா பேசுறேன்னு நினைக்காத… நான் இந்தப் படத்துல நடிச்சே ஆகணுமா? லைட்டா கண்ணைக் காட்டுறேன்.
‘பாவம்… அவருக்கு உடம்புக்கு முடியலை’னு சொல்லி வேற நல்ல ஆக்டரை வைச்சு எடுத்துக்கோயேன்’னார். ஆனா, அடுத்தடுத்த நாட்கள்ல அவர் நடிச்சதைப் பார்த்து மிரண்டுட்டேன். எங்களுக்கு எல்லாம் நடிப்பு சொல்லிக் கொடுத்த தகப்பன் இல்லையா!
இதுல ஒரு தமாஷ் என்னன்னா… ’உத்தம வில்லன்’ எடிட்டர் மிக இளைஞர். பழைய சரித்திரம் தெரியாது.
கே.பாலசந்தர் ஆக்டிங் பார்த்து நாங்க சிலாகிச்சுட்டு இருந்தோம். அவர் அமைதியாவே இருந்தார். ‘ஏன்… பிடிக்கலையா?’னு கேட்டேன்.
‘ரொம்ப நல்லா இருந்துச்சு. ஆனா, தப்பா நினைக்கலைனா ஒண்ணு சொல்லிக்கிறேனே… உங்க குரு, ஏன் சார் நடிப்புல நாகேஷைக் காப்பி அடிக்கிறார்?’னு கேட்டார். சிரிச்சுட்டே சொன்னேன், ‘நாகேஷுக்கும் அவர்தான் குரு. அதான் நாகேஷ் சாயல். பிள்ளை ஏன் அப்பா மாதிரி இருக்கார்னு கேட்கணுமே தவிர, அப்பா ஏன் பிள்ளை சாயல்ல இருக்கார்னு கேட்கக் கூடாது’ன்னேன்.
நாகேஷ், ஆரம்பகாலப் படங்கள்ல ஜெர்ரி லூயிஸ் மாதிரி நிறையப் பண்ணினார். கே.பாலசந்தர் படங் களுக்குப் பிறகுதான் தன் பாணினு ஒண்ணு வெச்சுக்கிட்டு நடிக்க ஆரம்பிச்சார்.
நாகேஷோட பல வர்ணங்கள்ல அதுவும் ஒண்ணு. ‘காதலிக்க நேரமில்லை‘ பார்த்தீங் கன்னா ’சித்ராலயா’ கோபு மாதிரியே மாறி இருப்பார். அப்படி அப்படியே கிரகிக்கிற தன்மைக்கு நாகேஷ் சிறந்த முன்னுதாரணம்!”
‘’சுஹாசினி, ‘மௌஸ் பிடிக்கிறவங்க எல்லாரும் விமர்சனம் பண்றாங்க. தகுதி உள்ளவங்கதான் விமர்சனம் பண்ணணும்’னு சொல்லி இருக்காங்களே!”
‘’அப்போ டிக்கெட் போட்டு அத்தனை பேருக்கும் கொடுக்காதீங்க. அற்பனுக்கும் கையில் மௌஸ் கிடைத்தால், அவன் பிடிக்கத்தான் செய்வான்.
ஏன்னா, மௌஸ் அவனுடையது. குடை அவனுடையது போல. அதை ஒண்ணும் பண்ண முடியாது. விமர்சனத்தைத் தடுக்கவும் கூடாது. சுஹாசினியுடைய கருத்தை தவறு எனச் சொல்லவில்லை. அதுவும் ஒரு கருத்து. அவ்வளவுதான்!”
‘’ஷமிதாப்’ல அக்ஷராவைப் பார்த்துட்டு என்ன சொன்னீங்க?’
‘’இப்போ மௌஸ்ல விமர்சனம் பண்றாங்கனு பேசுறோம். அப்போ எல்லாம் ஹவுஸ்லயே அதை ஆரம்பிச்சுடுவாங்க.
’’16 வயதினிலே’ பார்த்துட்டு எங்க அம்மாவே ’என்னடா… இப்படிப் பண்ணிட்டே!’னு ஆச்சர்யமா சொல்வாங்க. நல்லதைப் பாராட்டாம இருக்க மாட்டாங்க.
அக்ஷரா நல்லா நடிக்கலைனாதான் பிரச்னை. இன்னும் அடுத்தடுத்த படங்கள் பண்றப்போ, கே.பாலசந்தர் மாதிரி ஒரு டைரக்டர் கிடைக்கிறப்போ, அவங்களும் ஜொலிப்பாங்க. எனக்கு ’ஷமிதாப்’ படம் பெரிய தாக்கத்தை உண்டாக்கலை. சுமாராத்தான் இருந்தது!”
‘’சின்ன வயசுலேயே நாயகன்’ல வயசான வேஷத்துல நடிச்சீங்க. இப்போ இந்த வயசுல வயசுக்கேத்த ரோல்ல நடிக்கலாமேனு தோணினது உண்டா?”
’”நான் எல்லா வகையான கேரக்டர்களையும் செய்து பழகியவன். நான் பேர் குறிப்பிட விரும்பலை. நீங்க சொல்வது மற்ற நடிகர்களுக்குப் பொருந்தலாம்.
ரஜினி சாரின் ’தப்புத்தாளங்கள்’ படத்துல மிக வயோதிகனாக நடித்திருந்தேன். 21 வயசுல இருந்தே அண்ணன் வி.கே.ராமசாமி போல நானும் வயசான ரோல் நிறைய செய்துட்டுத்தான் இந்த இடத்துக்கு வந்திருக்கேன். கேரக்டராகத்தான் தெரிய வேண்டும் என நினைப்பேன்.
சினிமாவுக்கு வந்து 50 வருஷமாச்சு… இன்னும் ஒண்ணுமே பண்ணலையேங்கிற பதற்றம் மட்டும் இருக்கு. அந்தப் பதற்றம் இல்லைன்னா, வி.ஆர்.எஸ் வாங்கிட்டுப் போயிடுவேன்.
சீக்கிரமே ‘வாமமார்க்கம்’னு ஒரு படம் பண்ணப்போறேன். பரிசோதனை முயற்சின்னும் சொல்லலாம். வயசை மனசுல வைச்சுக்காம அப்படியான பரிசோதனைகளை எடுக்கிற மனசுக்கு, எப்பவும் வயசு ஆகாது!”
‘’என்னதான் நல்ல சினிமான்னாலும் ’தேவர் மகன்’ தென் மாவட்டங்கள்ல இரு சாதிப் பிரிவினரிடையே தவறான புரிதலை உண்டாக்குச்சு. படம் முழுக்க சாதிப் பெருமை பேசிட்டு, ’கடைசியில சாதி இல்லை. பிள்ளை குட்டிகளைப் படிக்க வைங்கடா’னு சொல்றது நியாயமா?”
‘’நான் எப்பவும் அப்படியான விளையாட்டு விளையாடலை. என் மனசுல இருந்த பரமக்குடியின் நினைவுகளால் நான் நிஜமாவே வேதனைப்பட்ட, கோபப்பட்ட விஷயத்தை வெச்சு பண்ண படம்தான் ’தேவர் மகன்’.
அந்தப் படத்திலும் ரொம்ப உள்ளே போகலை. சொல்லப்போனா, படம் சம்பந்தமா எனக்கும் இளையராஜாவுக்கும் மட்டும்தான் தெக்கத்தி வட்டாரத்தைப் பத்தின புரிதல் இருக்கும்.
படத்தின் இயக்குநர் பரதன், ஒரு மலையாளி. சிவாஜி சாருக்கே அந்தக் கலாசாரம் கொஞ்ச தூரம்தான். அவர் தஞ்சாவூர் வட்டாரம். அதனால மேல்பூச்சாகத்தான் அதைச் செய்து இருப்போம்.
நியாயமா இரு சாதிகளுக்கு இடையிலான விஷயங்களை உரக்கப் பேசியிருக்கணும் ’தேவர் மகன்’. ஆனா, எல்லோரும் படம் பார்க்கணும்கிற நோக்கத்துல உருவாக்கிய படம் அது.
’பாகப்பிரிவினை’க்கும் ‘தேவர் மகனு’க்கும் பெரிய வித்தியாசம் கிடையாது. ஆனா, ’விருமாண்டி’ வேற. இறங்கிப் பண்ணிய படம். ‘சண்டியர்’னா சாதிப் பேரு கிடையாது.
ஆனா, ’விருமாண்டி’ங்கிற பேரு கள்ளர் சமூகத்துல வைக்கிற பேரு. உத்துக் கவனிச்சீங்கன்னா படத்துல விருமாண்டியோட ஒரு நண்பன் நாவிதனா இருப்பான். இன்னொருத்தன் முஸ்லிமா இருப்பான்.
ஏன்னா, ஜாதி மத வித்தியாசம் பார்க்காத நல்ல ஆன்மா அவன். படத்துல சாதி ஏற்றத்தாழ்வுகளைப் பேசுறது ரோகிணி நடிச்ச ’ஏஞ்சலா காத்தமுத்து’ கேரக்டர் மட்டும்தான்.
அவங்க மூலமா படத்துல தலித் குரலை அழுத்தமாப் பதிவுபண்ணியிருப்பேன். அதுக்கு மேல சாதிப் பிரசங்கம் பண்றதுக்கு அந்தக் கதையில தேவையும் இல்லை, அது சினிமாவோட கடமையும் இல்லை!”
‘’நீங்களே ஏன் முழுக்க ஒரு தலித் கேரக்டரிலோ இஸ்லாமிய கேரக்டரிலோ நடிச்சது இல்லை?”
‘’’மருதநாயகம்’ வந்திருந்தா, அது ஓரளவுக்கு தலித் கேரக்டர் படமா இருந்திருக்கும். ‘தசாவதாரம்’ பூவராகன் கேரக்டர், மணல் கடத்தலுக்கு எதிரான ஒரு தலித்தின் குரல்தான்.
எனக்கு ஜாதிகள் பிடிக்கவே பிடிக்காதுங்க. எனக்கு யார் மீதும் கரிசனமும் கிடையாது; கோபமும் கிடையாது.
ஜாதி ஒரு வியாதி. ஆனா, வண்டிக்கு நம்பர் பிளேட் மாதிரி, அது மனுஷனைப் பிடிச்சுருச்சு. இங்கே அரசியல் வாதிகள்தான் ஜாதியை வளர்த்துட்டே போறாங்க.
கேட்டா, ‘வாழையடி வாழை’னு சொல்றாங்க. ஆனா, அப்படி எல்லாம் எதுவும் இல்லை. வாழைத்தோட்டமே இல்லாம எப்படிப் பண்றதுனு எங்களுக்குத் தெரியும்.
அடிக்க வேண்டிய மருந்தை அடிச்சா வாழைத் தோட்டமே பஸ்பமாகிடும். ஆனா, ஜாதிக்கு போஷாக்கு ஊட்டி புரதச்சத்துக் கொடுத்து வளர்க்கிறதே அரசியல் கட்சிகள்தான்!”
‘’இந்த ஆதங்கத்தை வைச்சே ஒரு படம் பண்ணலாமே..?”
‘’ஒண்ணுமே இல்லாமலே பிரச்னை பண்றாங்க. நான் அதை வேற படமா எடுத்தேன்னா, என்ன ஆகும்? ஆனா, இதுக்கும் ஒரு சப்ஜெக்ட் வெச்சிருக்கேன். ‘உள்ளேன் ஐயா’னு டைட்டில். அதைப் படமாக்கினா… நிச்சயமா ஜெயில்தான்!”
‘’அட… தலைப்பே வித்தியாசமா இருக்கே! கதை என்ன?’
‘’அந்தக் கதையைச் சொல்லச் சொல்லி எந்தச் செலவும் இல்லாம, என்னை ஜெயிலுக்கு அனுப்பிடலாம்னு பார்க்கிறீங்களா? தலைப்பில் ஒரு மாணவத்தனம் இருக்கும்.
ஆனா, விஷயம் வேற. கீழ்வெண்மணி கோபமும் ரணமும் எனக்கு இன்னும்கூட ஆறலை. அதை உணர, நான் தலித்தா பிறந்திருக்கணும்னு அவசியம் இல்லை. மனுஷனாப் பிறந்து இருந்தாலே போதும். பக்கத்துல தமிழ் இனம் அழிஞ்சுருச்சு. ஒண்ணுமே பண்ண முடியலையே நம்மால!
20 வருஷமாப் பேசினோம்… போராடினோம். ஆனா, இனப்படுகொலை நடந்து முடிஞ்சுருச்சே. செயல்படாத அரசியல்வாதிகள்தான் நடந்த தமிழ் ஈழ இனப்படுகொலைக்குக் காரணம்.
இதை எல்லாம் சினிமா மூலம்தான் சொல்லணும்னு இல்லை. பாபர் மசூதி இடிச்சப்போ, ‘எனக்கு அதில் உடன்பாடு இல்லை’னு முதல் ஆளா குரல் கொடுத்தது நான்தான்.
ஆனா, இன்னைக்கு அவங்க ஆட்சிதான் நடந்துட்டு இருக்கு. மறுபடியும் சொல்றேன்… இந்தியா ஒற்றுமையா இருக்கணும்கிறதுதான் என் நோக்கம். அதுக்காக என் குரலுக்கு மதிப்பு கிடைக்கும் இடங்களில் ஆதரவு கொடுத்துட்டோ, போராடிட்டோ இருப்பேன்!’
“சமீபமா உங்களுக்கு நெருக்கமான ஆளுமைகள் அடுத்தடுத்து இறந்துட்டாங்க. அந்த இழப்புகள் எதை உணர்த்தின?”
‘’என் மரணத்தை உணர்த்துச்சு. எல்லா எழவு வீட்டுலயும் போய் நாம அழறதோட சைக்காலஜி என்ன? செத்தவனுக்காகவா..? இல்லவே இல்லை. ‘நானும் இதுபோல ஒருநாள் சாவேனே’னு நினைச்சுதான் அந்த அழுகை வருது. ஆனா, அழுதும் பிரயோஜனம் இல்லையே.
கே.பாலசந்தரையோ, நாகேஷையோ இருக்குற வரை மதிக்கிறதுல, நான் பிசகு பண்ணியது இல்லை. ‘அடக்கி வாசிடா… சும்மா பண்ணா தேடா’ம்பார் கே.பி சார்.
இந்தியாவிலேயே அப்படி ஒரு ஆளு கிடையாது. இத்தனை பேருக்கு அள்ளிக்கொடுத்த கொடை வள்ளல். கமல், ரஜினினு மட்டும் பலர் சொல்லலாம். ஜெயப்பிரதா, ஸ்ரீ தேவி எல்லாரும் எந்தக் கணக்குல வருவாங்க? அவர்கிட்ட கத்துக்கிட்ட அந்தத் திறமைத் தேடல்தான் இப்போ வரை பல பேரை நான் தேடித் தேடிப் பயன்படுத்தத் தூண்டுகோலா இருக்கு.
சிங்காரவேலன்’, ‘தேவர் மகன்’ எல்லாம் வடிவேலுக்கு ரெண்டாவது, மூணாவது படம். இப்போ அவர் தன்னை வேற இடத்துக்கு கொண்டுபோகலையா? எம்.எஸ்.பாஸ்கர், அப்படி ஒரு நடிகர்.
ஆனா, அதை ரொம்பத் தாமதமாகத்தான் ஏத்துக்குறோம். எந்த வேஷம் கொடுத்தாலும் செய்வார். சுப்பையா, பாலையா இல்லைனு சொல்றீங்களே.
இருக்கிறப்போ, இவங்களை ஏன் கொண்டாட மறக்குறோம்? எம்.எஸ்.பாஸ்கருக்கு, நாகேஷ்கிட்ட எதை ரசிக்கணும்னு தெரியும், தமிழ் தெரியும், இலக்கியம் தெரியும், குதிரை ஏற்றம், டப்பிங் தெரியும். ஆக, இருக்கிறப்போ எல்லாரையும் அவங்கவங்களுக்கான முக்கியத்துவத்தோடு மதிச்சா, இழப்பின்போது பெரிய வலியை உணர மாட்டோம்!”
‘’தமிழகத்தின் டாஸ்மாக் கலாசாரம் பற்றி என்ன நினைக்கிறீங்க?’
‘’டாஸ்மாக் தமிழ்நாட்டின் பெரும் சோகம்… சாபம்! காலையில 7 மணிக்கே கடைக்கு முன்னாடி நிக்கக் கூடாதுனு அவனுக்குத் தெரியாதா என்ன? மனுஷ மனசுல மந்த நிலையைத்தான் மது உண்டாக்கும்.
ஆக, மந்த மரங்களுக்குத்தான் நாம தண்ணீர் ஊத்திட்டு இருக்கோம். எதிர்காலத்துல நிழல் தராத கிளைகள்கொண்ட மரங்களைத்தான் நாம விட்டுட்டுப் போகப்போறோம்.
எந்த விஷயமும் நம்மை அடிமையாக்க விடக் கூடாது. நான் அதையும் செய்து பார்ப்போமே என்ற நினைப்பில் முன்பு எப்போதோ செய்ததுதானே தவிர, பிறகு அந்தப் பக்கம் போகவே இல்லை. காபியைக்கூட 30 வயதைக் கடந்த பிறகுதான் குடித்தேன். அதையும் என் சொல்படி வைத்திருக்கிறேன்.
எந்தப் பழக்கமும் என்னை அடிமைப்படுத்த விட்டது இல்லை. அவ்வளவு ஏன் சினிமாவுக்கேகூட நான் அடிமை இல்லை. ‘கமலுக்கு சினிமாதான் மூச்சு’னு சிலர் சொல்வாங்க. அது பொய்.
எனக்கு மூச்சு ஆக்ஸிஜன்தான். ‘சினிமாவை நிறுத்திடுங்க’ எங்கிட்ட சொன்னா, சினிமா பார்த்துட்டே வேற ஏதாவது ஒரு வேலை பார்ப்பேன். சினிமா எனக்கு ஒரு தொழில். எனக்குப் பிடிக்கும்.
அது இல்லைனு ஆகிட்டா, சினிமா பார்த்துக்கிட்டு இருப்பேன். அப்படி யாரும் எந்தப் பழக்கத்துக்கும் பானத்துக்கும் அடிமையாகக் கூடாது!’
‘’டி.டி.ஹெச் இங்கே ஏன் சாத்தியமாகலை?”
‘’பைபிளை பாதிரியார்கள் மட்டும்தான் வைத்திருக்க வேண்டும். மற்றவர்கள் அச்சடிக்கக் கூடாது எனச் சொன்னால் எப்படி இருக்குமோ, அப்படி இருக்கு சினிமா விநியோக முறையைக் கட்டுப்படுத்துவது. பைபிளை அச்சகங்களில் அச்சடிக்கத் தடை விதித்ததால், கிறிஸ்துவம் அழிந்துவிடவில்லை.
‘மோதிரத்திலும் காலண்டரிலும் வெங்கடாசலபதி உருவம் இருக்கிறதால, திருப்பதி வெங்கடாசலபதிக்கு மகிமை குறையும்னு நினைக்கிறீங்களா?’னு என் சினிமா நண்பர்கிட்ட கேட்டேன்.
இத்தனை வெங்கடாசலபதிகளையும் வெச்சுக்கிட்டு தானே திருப்பதிக்கும் ஆயிரக்கணக்குல செலவு பண்ணிப் போறோம்.
சினிமா ஒரு அனுபவம். என்னை மாதிரியான ஆட்களுக்கு அதைப் பார்த்துதான் ஆகவேண்டும். ஆனா, தியேட்டர் உரிமையாளர்கள் தேவை இல்லாமப் பயப்படுறாங்க.
ஹோட்டல்கள் வந்ததால் வீட்டுல சமைக்கிறதை நிறுத்திட் டோமா? அல்லது வீட்டுல சமைக்கிறதுக்கு விதவிதமா சமையல் பாத்திரங்கள் வந்ததால ஹோட்டல் வியாபாரம்தான் படுத்துருச்சா? எல்லாத்துக்கும் இங்கே இடம் இருக்கு.
இருக்கிற பிரச்னைகளை சரி பண்ணிட்டு, பிளாக் டிக்கெட் அதிகம் போகாமல் எல்லோருக்கும் சினிமா போய் சேர்ற மாதிரி பண்ணா, ஒரு வெற்றித் தமிழ் சினிமாவின் வசூல் 300 கோடி என்பது துல்லியமான கணக்கு. அது ஆடு தாண்டும் காவிரிதான். ஆனால், தலைக்காவிரியில் தண்ணீர் வற்றிப்போகவிடாமல் பார்த்துக்க வேண்டியது நம் எல்லோரின் கடமை!’
‘’ரஜினியும் நீங்களும் சேர்ந்து நடிக்கலாமே! ஏன் இன்னும் திட்டமிட்டுத் தவிர்க்கிறீங்க?”
‘’என்னத்துக்கு? எங்க ரெண்டு பேருக்கும் சம்பளம் கொடுத்துட்டா, படத்தை எதை வெச்சு எடுக்கிறது? படத்தோட விலையை ஏன் அவ்வளவு ஏத்தணும்? யோசிங்க..!
வருமானத்துல ஆசைப்படுபவர்கள் மட்டும்தான் இந்தக் கூட்டு முயற்சியில ஆர்வம் காட்டுவார்கள். வேணும்னா, ரெண்டு பேரும் கெஸ்ட் ரோல்ல ஒரு படத்துல நடிக்கலாம்.
இதுக்காக ஏன் வர்த்தகரீதியா குழப்பத்தை உண்டாக்கணும்? எங்க சம்பளத்தை நாங்க ஏன் குறைச்சுக்கணும்? அந்தத் தியாகத்தை நாங்க யாருக்காக பண்ணணும்? ரசிகர்களுக்காக பண்ணுங்கன்னா, அதான் சின்னதா ஒரு கெஸ்ட் ரோல் பண்றோம்னு சொல்றேனே!
எங்களை ஒரு படத்துல சேர்ந்து பார்த்த சந்தோஷம் அவங்களுக்குக் கிடைச்சுருமே. படம் பூரா நாங்க சேர்ந்து நடிச்சு எந்தத் தியாகமும் பண்ண வேண்டியது இல்லை. இது எல்லாத்தையும்விட, நல்ல கதை வேணும். தேவை இல்லாம ரசிகர்கள் தியேட்டர்ல அடிச்சுக்கக் கூடாது. இது பத்திலாம் நாங்க ரெண்டு பேரும் பலமுறை பேசியிருக்கோம்.
’கமல் ‘மருதநாயகம்’ல நான் நடிச்சுக்கட்டுமா?’னு அவர் கேட்டார். ‘என்ன வேஷம் எனக்குக் கொடுப்பீங்க?’ன்னும் கேட்டிருக்கார்.
அவர் படத்துல நான் நடிக்கக் கேட்டப்போ, ‘படத்துல ஒரே ஒரு நல்ல வேஷம். அதை நானே செய்றேனே. போயிடுங்க…. நீங்க வராதீங்க கமல்’னு சிரிச்சுட்டே சொன்னார். இதெல்லாம் நாங்க தமாஷா பேசிக்கிற விஷயங்கள். ஆனா, படமா பண்றப்ப தமாஷ் ஆகிடக் கூடாதுல்ல!”
நன்றி, ஆனந்த விகடன். முத்திரைக் கதைகளுக்கு.
செவிவழிச் செய்திகளாகவே முதலில் திரு.ஜெயகாந்தனின் பெயரும் சிறுகதைகளும் என்னை வந்தடைந்தன.
அம்மாவின் சாளேஸ்வரத்தால், எனது அக்காவை படிக்கச் சொல்லிக் கேட்பார். கூடவே கேட்டு உணர்ந்ததுதான் அவர் கதைகளை. வியந்து வியந்து என் தாயும் தமக்கையும் ஜெயகாந்தன் புகழ் பாடக் கேட்டு வளர்ந்தவன்.
‘அடடே… இந்த வயசுலயே ஜெயகாந்தன் எல்லாம் படிக்கிறியா?’ என என்னை வியந்தவரிடம், ’படித்தது இல்லை; கேட்டதுதான்’ என்ற விளக்கம் நான் தந்தது இல்லை.
வேதத்தை செவிவழிக் கேட்டுக் கற்கலாம் என்றால், நான் ஜெயகாந்தன் கற்றவன். பிறகு எழுதும் ஆசை வந்ததினால் ஜெயகாந்தனை எழுத்து வடிவத்திலும் பரிச்சயப்படுத்திக்கொண்டேன்.
அவர் எழுத்துக்களை ஆரம்பத்தில் காந்தர்வ விவாகம் செய்துகொண்டேன். மேலும் பல எழுத்துக் களுடன் காதல் ஏற்பட்டாலும் முதற்காதல் இன்னும் உயிர்த்தே இருக்கிறது.
நான் ஜெயகாந்தனை நெருங்கியதே இல்லை. எழுத்திலும் சரி, நேரிலும் சரி. ‘பெரியகோயில் பார்த்திருக்கிறாயா?’ எனக் கேட்பவரிடம், ‘பார்த்ததுதான், தொட்டுப்பார்த்தது இல்லை’ என்பதுபோல.
திரு.சிவாஜியின் நடிப்பில் எனக்கு இருந்த வியப்பு, சத்யஜித் ரேயின் இயக்கத்தில் எனக்கு இருந்த மரியாதை, பாரதியின் கவிதைகளைக் கண்டு இருந்த பயம்போல எனக்கு திரு.ஜெயகாந்தனின் எழுத்தின் பால் பயம் உண்டு.
ஜெயகாந்தனின் கோபம் கலந்த கனிவும், தெளிவான வாழ்க்கை வழியும் எனக்குப் பிடிக்கும். அவை என் வழியாக இல்லாதிருப்பினும்கூட.
சிறு வயதிலேயே ஒளவை போல தமிழ்த் தாத்தாவாகிவிட்ட என் ஜே.கேவுக்கு சாவுகூடத் தடை இல்லை. என் செவி வழிப் புகுந்தெனை ஆட்கொண்டதுபோல என் பேரன் பேத்திகளிலும் அவர் தாக்கம் தென்படும். ‘அது நடக்கப் பார்த்துவிட்டுத்தான் நான் சாவேன். இது உறுதி ஜே.கே.’
அன்புடன்,
கமல்.
ஆர்.சரண், ம.கா.செந்தில்குமார்