இலங்கையில் பொலிசார் இலஞ்சம் வாங்கிதான் பழக்கம். ஆனால் அதிசயமாக இலஞ்சம் கொடுக்க முற்பட்டவரை நெல்லியடி பொலிஸார் கைதுசெய்தமை அதிசயமான விடயம் தானே!
நெல்லியடி போக்குவரத்துப் பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முற்பட்ட சந்தேகநபர் ஒருவரை வியாழக்கிழமை (23) மாலை கைது செய்துள்ளதாக நெல்லியடி பொலிஸார் வெள்ளிக்கிழமை (24) தெரிவித்தனர்.
அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் ரக வாகனம் ஒன்றை வீதியில் கடமையில் இருந்த நெல்லியடி பொலிஸார் மடக்கிப் பிடித்தனர்.
அவ்விடத்துக்கு வந்த பிறிதொரு நபர் தனக்கு நெல்லியடி பொறுப்பதிகாரியை தெரியும் என்றுகூறி, டிப்பர் சாரதியிடம் ஒரு தொகைப்பணத்தைப் பெற்று, மடக்கிப் பிடித்த போக்குவரத்துப் பொலிஸாரிடம் கொடுக்க முற்பட்டுள்ளார்.
பணத்தை கொடுக்க முற்பட்ட நபரை பொலிஸார் கைது செய்தனர்.
பொலிஸாரை கடமையைச் செய்யவிடாது தடுத்தமை மற்றும் இலஞ்சம் கொடுத்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களில் சந்தேகநபர் மீது வழக்குப் பதிவு செய்யவுள்ளதாக பொலிஸார் கூறினர்.
உணவக வாள்வெட்டில் இருவர் காயம்; மூவர் கைது
24-04-2015
யாழ்.சாவகச்சேரி சந்தியில் அமைந்துள்ள உணவகத்துக்குள் நுழைந்து உணவக பணியாளர்கள் இருவரை வாளால் வெட்டிய சந்தேகநபர்கள் மூவரை கைது செய்துள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் வெள்ளிக்கிழமை (24) தெரிவித்தனர்.
வியாழக்கிழமை (23) இரவு இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் முல்லைத்தீவு, மல்லாவியைச் சேர்ந்த சேவகன் ரமேஸ் (வயது 37), தவராசா ஜெயராம் (வயது 34) ஆகிய இருவரும் படுகாயமடைந்து சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உணவகத்துக்கு உணவருந்துபவர்கள் போலச் சென்ற சிலர், அங்கிருந்த பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தி இருவரை வாளால் வெட்டிவிட்டு, தப்பிச் செல்ல முயன்ற போது, அங்கு நின்றிருந்த பொலிஸார் மூவரை மடக்கிப் பிடித்தனர்.
அவர்களிடமிருந்து வாளொன்றும் மீட்கப்பட்டது. மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் கூறினர்.