‘எனது சகோதரன் பசில் ராஜபக்ஷ அமெரிக்காவில் இருக்கும் போது, அவரைத் தொடர்புகொண்டு நான் கதைத்தேன். அப்போது, இலங்கைக்கு மீண்டும் வர வேண்டாம், அவ்வாறு வந்தால் கைது செய்வார்கள் என்று நான் அறிவுறை கூறினேன்’ என்று முன்னாள் ஜனாதிபதியும் பசில் ராஜபக்ஷவின் சகோதரருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
இருப்பினும், ‘நான் களவு செய்யவில்லை. நான் வராமளிருப்பது மஹிந்த அண்ணான உங்களுக்கு அவமானம். அதனால் நான் இலங்கைக்கு வருவேன்’ என்று அவர் எனக்கு பதிலளித்தான்.
ஆனால், நான் அவனிடம் சொன்னது போலவே நடந்தேறிவிட்டது’ என்று மஹிந்த கூறினார்.
‘இருப்பினும் பரவாயில்லை. நானும் 3 மாதங்கள் சிறையில் இருந்தவன் தான். நாடாளுமன்ற உறுப்பினரொருவர் ஓரிரு மாதங்கள் சிறைவாசம் அனுபவித்து வந்தால் தவறில்லை’ என்றும் மஹிந்த ராஜபக்ஷ தனது சகோதரன் தொடர்பில், மாத்தளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது குறிப்பிட்டார்.
பசில் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, சிறைச்சாலை மருத்துவமனையில் இருந்து கொழும்பு தேசிய மருத்துவமனையின் வெளிநோயாளர் சிகிச்சை பிரிவிற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
சிறைச்சாலை அதிகாரிகளுடன் சென்ற முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, வெளிநோயாளர் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டதாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி முறைகேடுகள் தொடர்பில் வாக்கு மூலம் வழங்குவதற்காக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, காவற்துறை நிதி மோசடி பிரிவிற்கு நேற்றைய தினம் சென்றிருந்தார்.
இதன்போது, அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
இதனையடுத்து, அவர், கடுவளை நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டதுடன், எதிர்வரும் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.
இதன்பின்னர், அவர் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இதேவேளை, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுடன், பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் மற்றும் திவிநெகும திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் ஆகியோர் தேசிய மருத்துவமனையின் வெளிநோயாளர் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிடம் வாக்குமூலத்தை வழங்குவதற்காக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆணைக்குழுவின முன்னால் பிரசன்னமாகி இருந்தார்.
இதன் போது அவர் விசாரணைக்கு உட்படுத்துப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரது ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பல நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்த கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று தடையுத்தரவை பிறப்பித்திருந்த நிலையிலேயே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ இன்றையதினம் வாக்கு மூலம் வழங்கியிருக்கவில்லை.
தம்மை விசாரிப்பதற்காக அழைக்கப்பட்ட விடயம் பழைய விடயம் என்பதால், அது குறித்து ஆய்வு செய்ய வேண்டி இருப்பதால், மேலும் கால அவகாசம் வழங்குமாறு ஆணைக்குழுவிடம் அவரின் சட்டத்தரணிகள் கோரினர்.
இதனை ஆணைக்குழு ஏற்றுக் கொண்டதை அடுத்து அவர் அங்கிருந்து வெளியேறினார்.
அவருக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய தமக்கே இவ்வாறான நிலைமை என்றால், ஏனைய அதிகாரிகளின் நிலை குறித்து மக்களே தீர்மானிக்க வேண்டும் என்று கூறினார்.
இதனை அடுத்து கோட்டாபய ராஜபக்ஷ, வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பசில்ராஜபக்ஷவை சந்திப்பதற்காக சென்றார்.