அமெரிக்கா விடுதலைப் புலிகள் அமைப்பை வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புக்களிltte logoன் பட்டியலில் 1997ம் ஆண்டு அறிவித்திருந்தது. அதாவது சிறிலங்கா விடுதலைப் புலிகளைப் பயங்கரவாத அமைப்பாக அறிவிப்பதற்கு முன்னதாகவே அமெரிக்கா புலிகளை பயங்கரவாத அமைப்பாக அறிவித்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.
விடுதலைப் புலிகள் அமைப்பை ஒரு பயங்கரவாத அமைப்பாக முதன்முதலில் இந்தியாதான் பிரகடனப்படுத்தியிருந்தது. இந்தியாவின் முன்நாள் பிரதமர் ராஜீவ் காந்தியைப் படுகொலை செய்தார்கள் என்று குற்றம் சுமத்தி விடுதலைப் புலிகளை இந்தியா 1992ம் ஆண்டு தடை செய்தது.
அதனைத் தொடர்ந்து அமெரிக்கா விடுதலைப் புலிகள் அமைப்பை சர்வதேச பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலில் 1997ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 8ம் திகதி இணைத்துக் கொண்டது. (அமெரிக்கா விடுதலைப் புலிகள் அமைப்பை விஷேட சர்வதேச பயங்கரவாதிகள் அமைப்பாக (Specially Designated Global Terrorist) 2.11.2001 ல் பிரகடனம் செய்து தடை செய்துள்ளது)
1998ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் சிறிலங்கா அரசாங்கம் விடுதலைப் புலிகளை தடை செய்தது. (இந்தத் தடையை புரிந்துணர்வு ஒப்பந்தத்தைத் தொடர்ந்து 2002 செப்டெம்பர் 4ம் திகதி நீக்கிய போதும், 2009ம் ஆண்டு ஜனவரி 7ம் திகதி மீண்டும் புலிகள் மீதான தடையை நடைமுறைப்படுத்தியது)
2000ம் ஆண்டு பிரித்தானியா விடுதலைப் புலிகள் அமைப்பை ஒரு பயங்கரவாத அமைப்பாகக் கூறி தடை செய்தது.
2001ம் ஆண்டு அவுஸ்திரேலியா விடுதலைப் புலிகள் அமைப்பை ஒரு பயங்கரவாத அமைப்பாகப் பிரகடனப்படுத்தி (Resolution 1373) தடைசெய்தது.
2006ம் ஆண்டு மே மாதம் 17ம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த 27 நாடுகள் விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக பிரகடனம் செய்து தடை செய்தன. விடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் ஏகப் பிரதிரிகள் என்கின்ற வாதத்தை ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றம் நிராகரித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
2006ம் ஆண்டு முதல் விடுதலைப் புலிகளைத் தடை செய்த கனடா, விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் தனது நாட்டில் அரசியல் தஞ்சம் வழங்குவதில்லை என்கின்ற கொள்கையையும் கடுமையாகக் கடைப்பிடித்து வருகின்றது.
ஆக உலகில் ஜனநாயக நாடுகள் என்று கூறப்படுகின்ற 32 நாடுகள் விடுதலைப் புலிகளைப் பயங்கரவாத அமைப்பாகப் பிரகடனப்படுத்தி தடை செய்துள்ளதுடன், தற்பொழுதும் அந்தத் தடையை நீடித்தும் வருகின்றன.
இன்று யுத்தம் முடிவடைந்து, விடுதலைப் புலிகள் தங்கள் ஆயுதங்களை மௌனித்ததாக அறிவித்து 5 ஆண்டு கடந்து விட்டுள்ள நிலையிலும், விடுதலைப் புலிகளைத் தடை செய்துள்ள 32 நாடுகளில் எந்த ஒரு நாடும் புலிகள் மீதான தடையை இதுவரை நீக்கவில்லை. அப்படி நீக்குவதான சமிஞ்ஞையையும் இதுவரை வெளிப்படுத்தவில்லை.
விடுதலைப் புலிகள் மீது சுமார் 32 நாடுகள் எதற்காக தடையை விதித்தன
விடுதலைப் புலகள் மீது மேற்படி இந்த நாடுகள் ஏதற்காகத் தடைகளை விதித்தன என்று பார்க்கின்ற பொழுது, பொதுவாக சில முக்கிய குற்றச்சாட்டுக்களை முன்வைத்தே புலிகள் மீதான தடைகளை அந்நாடுகள் விதித்ததுடன், விடுதலைப் புலிகள் அமைப்பை ஒரு பயங்கரவாத அமைப்பாகவும் அடையாளப்படுத்தியிருந்தன.
1.விடுதலைப் புலிகள் தற்கொலைத் தாக்குதல்களை மேற்கொள்கின்றார்கள்.
2. விடுதலைப் புலிகள் சிறுவர்களை ஆயுதப் போராட்டத்தில் நேரடியாக ஈடுபடுத்துகின்றார்கள். சர்வதேச ஆயுதக் கடத்தல்களில் ஈடுபடுகின்றார்கள்.
ஜனநாயக ரீதியாகத் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநதிகளைக் கொலை செய்கின்றார்கள்.இவைகள்தான் புலிகள் அமைப்பினைத் தடை செய்வதற்காக அனேகமான நாடுகள் முன்வைத்த முக்கியமான காரணங்கள்.
இதுபோன்ற பொதுவான குற்றச்சாட்டுக்கள் ஒருபுறம் இருக்க, விடுதலைப் புலிகள் மீது இந்த நாடுகள் தடைகளை விதிப்பதற்கும், புலிகள் அமைப்பை ஒரு பயங்கரவாத அமைப்பாக பிரகடனப்படுத்துவதற்கும் வேறு சில குற்றச்சாட்டுக்களும், காரணங்களும் கூறப்படுகின்றன. உதாரணத்திற்கு, விடுதலைப் புலிகள் கடற்கொள்ளை நடவடிக்கைகளில் ஈடுபட்டதான ஒரு குற்றச்சாட்டு சில நாடுகளால் முன்வைக்கப்பட்டு வருகின்றது.
ஐரிஷ் மோனா (Irish Mona) என்ற கப்பலை 1995ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் விடுதலைப் புலிகள் கடத்தியதாகவும், பிறின்சஸ் வேவ் (Princess Wave ) என்ற கப்பலை 1996ம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் புலிகள் கடத்தியதாகவும், அதனா (Athena) என்ற கப்பலை சர்வதேச நீர்ப்பரப்பில் வைத்து 1997ம் ஆண்டு மே மாதம் புலிகள், கடத்தியதாகவும்..,
1997ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் எம்.வீ. கோடியலிடி (MV Cordiality ) என்ற கப்பலையும், 1998ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் பிரின்சஸ் காஷ் (Princess Kash) என்ற கப்பலையும் 2006ம் ஆண்டு டிசம்பர் மாதம் எம்.வீ.பாரா-3 (MV Farah III ) என்ற கப்பலையும் சர்வதேச கடற்பரப்பில் வைத்து விடுதலைப் புலிகள் கடத்தியதாகவும் சர்வதேச நாடுகள் குற்றம் சுமத்துகின்றன.
அத்தோடு, 1999ம் ஆண்டு மே மாதம் 25ம் திகதி இந்தியாவில் இருந்து புறப்பட்ட மலேசியாவுக்குச் சொந்தமான எம்.வி. சிக் யங் (MV Sik Yang) என்ற கார்கோ கப்பல் இலங்கையின் வடக்கு–கிழக்கு கடல் பிரதேசத்தில் வைத்து வைத்து காணாமல் போயிருக்கின்றது.
அந்தக் கப்பலில் பயணம் செய்ய 31 மாலுமிகளுக்கும் என்ன நடந்தது என்றும் தெரியவில்லை. அந்தக் கப்பலை விடுதலைப் புலிகளே கடத்தி இருக்கவேண்டும் என்றும், அதனது பெயரை மாற்றி தமது நடவடிக்கைகளுக்கு அந்தக் கப்பலை புலிகள் பயன்படுத்தியதாகவும் சர்வதேச நாடுகள் சில குற்றம் சுமத்தியிருந்தன.
கனடா, ரொறன்ரோவை அடித்தளமாகக் கொண்டு செயற்படும் மெக்கனைஸ் நிறுவனம் (Mackenzie Institute), உலகளாவிய ரீதியில் திட்டமிட்ட ரீதியாக மேற்கொள்ளப்படும் குற்றச் செயல்கள் பற்றிய ஆய்வினைச் செய்து வரும் ஒரு சர்வதே அமைப்பு. விடுதலைப் புலிகளைப் புலிகள் அமைப்பான சர்வதேச ரீதியில் ஆயுதக் கடத்தல்களை மேற்கொண்டு வருவதாக இந்த மெக்கனைஸ் நிறுவனம் (Mackenzie Institute) வெளியிட்ட அறிக்கையானது, சர்வதேச மட்டத்தில் விடுதலைப் புலிகள் தடை செய்யப்படுவதற்கு முக்கிய காரணமாக அமைந்திருந்தது.
விடுதலைப் புலிகள் ஆயுத மற்றும் வெடிபொருட்களைக் கடத்தி வருவதாகவும் (international arms trafficking), இந்தக் கடத்தல்களுக்கு புலிகள் சர்வதேசக் கடற்பரப்பைப் பயன்படுத்தி வருவதாகவும் இந்த அமைப்பு குற்றம் சுமத்தியிருந்தது.
சர்வதேச மட்டத்தில் விடுதலைப் புலிகளுக்கு மியன்மாரிலும், தாய்லாந்தின் புகெட் பகுதியிலும் தளங்கள் இருப்பதாகவும், தன்சானியாவில் இருந்து சிறிலங்கா அரசாங்கம் கொள்வனது செய்திருந்த 32,400 மோட்டார்களை (81mm) கடத்தியதாகவும் இந்த நிறுவனம் குற்றம் சுமத்தியிருந்தது
அதேபோன்று விடுதலைப் புலிகள் தமிழ் மக்கள் அதிகமாக வாழும் நாடுகளில் பலவந்தமாக நிதிச் சேகரிப்பில் ஈடுபடுவதாகவும், கடல் கொள்ளை, ஆட்களை ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டுக்கு இரகசியமாகக் கொண்டு செல்லுதல்…,
போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகள், ஆயுதக் கடத்தல்கள் போன்றன காரணமாக சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு பணம் சேகரிப்பதாகவும் பல சர்வதேச அமைப்புக்கள், பல நாடுகளின் புலனாய்வு அமைப்புக்கள் குற்றம் சுமத்தியிருந்தன.
இவற்றிற்கு மேலாக, விடுதலைப் புலிகள் அமைப்பிற்கும் சில இஸ்லாமிய போராட்டக் குழுக்களுக்கும் இடையில் தொடர்பு இருப்பதாக பரவலாக வெளிவந்த செய்திகள்கூட, மேற்குலகம் விடுதலைப் புலிகள் மீது தடை விதிப்பதற்கும், விடுதலைப் புலிகளுக்கு எதிரான தமது நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் காரணமாக அமைந்திருந்தன.
70களின் நடுப்பகுதியில் பலஸ்தீன விடுதலை அமைப்பான Popular Front for the Liberation of Palestine என்ற அமைப்பிடம் விடுதலைப் புலிகள் பயிற்சி பெற்றது மாத்திரம் அல்ல, இந்த அமைப்புடன் இணைந்து தெற்கு லெபனானில் புலிகளும் நேரடியாகப் போராடியதற்கான ஆதாரங்களை இந்தியப் புலனாய்வுப் பிரிவினர் உலக நாடுகள் சிலவற்றின் புலனாய்வுப் பிரிவினருக்கு வழங்கியிருந்தார்கள்.
அதேபோன்று 1998ம் ஆண்டில் விடுதலைப் புலிகளால் வெளியிடப்பட்ட பிரகடனம் ஒன்றில், உலகின் முதலாளித்துவதற்கு எதிராக போராடிவரும் சர்வதேச விடுதலைப் போராட்ட சக்திகள், சோசலிச நாடுகள் போன்றனவற்றுடன் கைகோர்த்து நாமும் போராடுவோம் என்று கூறப்பட்டிருந்ததையும், மேற்குலகம் தனது கவனத்தில் எடுத்துக் கொண்டிருந்தது.
இதே போன்று ஜனநாயகத்தின் ஒரு முக்கிய தளம் என்று கூறி அமெரிக்க பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டு வெளிவருகின்ற Westminster Journal என்ற செய்தி ஊடகம்….,
விடுதலைப் புலிகள் அமைப்பு 1990ம் ஆண்டில் மொறோ இஸ்லாமிய விடுதலை முன்னணி (Moro Islamic Liberation Front -MILF) என்ற அமைப்பிற்கும், அபுசையாப் குழு (Abu Sayyaf Group -ASG) என்று அமைப்பிற்கும் பயிற்சி வழங்கியதை மேற்குலகின் புலனாய்வு அமைப்புக்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக தனது ஆய்வுக் கட்டுரையில் தெரிவித்திருந்தது.
இந்த இரண்டு அமைப்புக்களுமே சர்வதேச பயங்கவாத அமைப்பாக உலக நாடுகளால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள அல்கைதாவுடன் தொடர்புபட்ட அமைப்புக்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதே போன்று இந்திய இஸ்லாமிய போராட்ட அமைப்பான அல் உம்மா (Al Ummah) என்ற அமைப்பிற்கும் விடுதலைப் புலிகள் பயிற்சி வழங்கியதாக இந்தியப் புலனாய்வுப் பிரிவு குற்றம் சுமத்தியிருந்தது.
இது போன்று சர்வதேச மட்டத்தில் பல்வேறு நிறுவனங்களினாலும், ஊடகங்களினாலும், நாடுகளினாலும் விடுதலைப் புலிகள் அமைப்பைக் குறிவைத்து பரவலாக முன்வைக்கப்பட்ட பலவிதமான குற்றச்சாட்டுக்கள் கூட,
உலகில் உள்ள முக்கியமான 32 நாடுகள் புலிகள் அமைப்பினை ஒரு பயங்கரவாத அமைப்பாக அடையாளப்படுத்துவதற்கும், பிரகடனப்படுத்துவதற்கும், தடைசெய்வதற்கும், புலிகள் அமைப்பை அழிப்பதற்கு துணை போவதற்கும் காரணமாக இருந்தன.
இங்கு ஒரு விடயத்தை நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். மேலே முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அனைத்தும். பொய்யாகச் சோடிக்கப்பட்டவை, அந்தக் குற்றச்சாட்டுக்களுக்கும் விடுதலைப் புலிகள் அமைப்பிற்கும் இடையில் தொடர்புகள் இருக்கவே முடியாது என்று எழுந்தமானமாக நாம் கூறிவிடவும் முடியாது.
புலிகள் அமைப்பினைத் தடை செய்த 32 நாடுகளும் வெறும் ஊடகச் செய்திகளையும், தனிப்பட்ட நிறுவனங்களின் அறிக்கைகளையும், சிறிலங்கா அரசாங்கத்தின் குற்றச்சாட்டுக்களையும் மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு புலிகள் அமைப்பினைத் தடைசெய்யும் முடிவுக்கு நிச்சயம் வந்திருக்கமாட்டாது.
தமது நாடுகளின் புலனாய்வுப் பிரிவுகளினூடாகப் பெற்ற தகவல்களின் அடிப்படையில்தான் நிச்சயம் அந்த முடிவுக்கு வந்திருக்கும். எனவே உலகம் வகுத்துள்ள நியதிகளை மீறி விடுதலைப் புலிகள் அமைப்பு சில காரியங்களை நிகழ்த்தியிருக்கின்றது என்பதில் சந்தேகம் இல்லை.
-பிறின் நாத்-