ஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில்… அரசு வழக்கறிஞர் பவானிசிங் வாதம் குறித்து எழுதி வருகிறோம். சாட்சியங்கள் கொடுத்த வாக்குமூலங்களை நீதிபதி குமாரசாமி முன் படித்து வந்ததை  எழுதி இருந்தோம். வாக்குமூலங்கள் வாசிப்பது இன்றும் தொடர்கிறது…

கதிரேசன் வாக்குமூலம்

பெயர்: கதிரேசன்
அரசு சாட்சி: 256
தந்தை பெயர்: ராமசாமி
இருப்பிடம் 4/கி, சிமிஞி குவாட்டர்ஸ்
பதவி: கூடுதல் கண்காணிப்பாளர்
வயது: 55

10.1.2003 ல் கொடுத்த வாக்குமூலம்…

‘‘நான் 9.8.2000 முதல் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையில் சிறப்பு புலானாய்வுப் பிரிவு 1ல் கூடுதல் கண்காணிப்பாளராக பணிபுரிந்தேன். 1.9.1996 முதல் துணை கண்காணிப்பாளராக இருந்தேன்.

அதற்கு முன்பு காஞ்சிபுரம் துணை கண்காணிப்பாளராகவும் இருந்துள்ளேன். திருமதி லத்திகா சரணின் புலன்விசாரணைக்கு உதவி செய்து வந்தேன்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு எதிரான குற்றவியல் வழக்கு 13/கிசி 1996 நல்லமநாயுடுவிற்கும் உதவியாக இருந்தேன். இந்த வழக்கு தொடர்பான தகவல்களை சேகரிக்க 23, 24 மற்றும் 25.9.1996 ஆகிய 3 நாட்கள் ஹைதராபாத்திற்குச் சென்றேன்.

24.9.1996 ல் சீனிவாசராவ் என்பவரை விசாரித்து வாக்குமூலத்தையும் பதிவுசெய்தேன். பஷீராபாத் திராட்சைத் தோட்டம் மற்றும் ஜீ.டி மெட்லாவின் ஆவணங்களைப் பெற்று, பிறகு சென்னை திரும்பினேன்.

17.10.96 ல் சென்னை முதன்மை அமர்வு நீதிபதி சோதனை வாரன்ட் பிறப்பித்தார். சாட்சிகள் நடராஜன், அடைக்கலராஜ் முன்னிலையில் க.எண் 6/5 கலாசேத்ரா வீட்டை காலை 9 முதல் பிற்பகல் 3 மணி வரை சோதனையிட்டேன்.

சோதனையின்போது 1 ரிவால்வரும், 1 பிஸ்டலும் 42 ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. 18.10.1996 ல் நீதிமன்ற உத்தரவுபடி நீலாங்கரை சிங்காரவேலன் தெருவில் உள்ள க.எண் 3/212 வீட்டை சோதனையிட சென்றேன்.

வீடு பூட்டப்பட்டிருந்தது. சாவிகள் இல்லை. புஷ்பா என்ற பணியாளர் சாட்சியின் முன்னிலையில் வீட்டை சீல் வைத்து, பாதுகாப்புக்காக ஆட்களை நியமித்தேன்.

அதே நாளில் நீதிமன்ற வாரன்ட்படி க.எண் 7 கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நீலாங்கரை ராஜா நகர் க.எண் 4/130 வீட்டையும் சோதனையிட்டேன். அந்த வீட்டின் மேல்மாடி திறந்து இருந்தது.

அங்கு சாட்சிகளுடன் சசிகலா இருந்தார். மாலை 3 முதல் 4 வரை சோதனையிட்டதில் எந்தப் பொருட்களும் பறிமுதல் செய்யப்படவில்லை. தரைத்தளத்தை சீல் வைத்து பாதுகாப்பிற்காக ஆட்களை நியமித்தேன்.

இந்த கட்டடங்களுக்குப் பின்புறம் 5 கட்டடங்கள் இருந்தன. 3வது கட்டடத்தில் ஒருவர் வாடகைக்கு இருந்தார். மற்ற கட்டடங்கள் பூட்டப்பட்டு இருந்தன. சோதனை தொடர்பான அறிக்கை தயாரிக்கப்பட்டு இளவரசி கையொப்பம் பெறப்பட்டது.

25 மற்றும் 26.10.1996ல் பொதுப்பணித் துறையின் கட்டடப் பிரிவு நிர்வாகப் பொறியாளர் கோவிந்தன் நீலாங்கரை வீடுகளை அளவீடு செய்தபோது நான் இருந்தேன்.

29.10.1996ல் கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள க.எண் 7 வீட்டின் பூட்டை உடைத்து காவலாளி ராஜூ மற்றும் சாட்சிகள் முன்னிலையில் சோதனையிட்டேன். அதில் 7 பொருட்கள் கைப்பற்றப்பட்டது.

கைப்பற்றப்பட்ட பொருட்கள் பட்டியலை தயார் செய்து ராஜூவின் கையொப்பம் பெறப்பட்டது. 1.11.1996ல் நீலாங்கரை சிங்காரவேலன் தெருவில் உள்ள 3/212 வீட்டைத் திறந்து சோதனையிட்டேன்.

பணிப்பெண் புஷ்பா கூட இருந்தார். எந்தப் பொருட்களும் கைப்பற்றப்படவில்லை. 7.12.1996ல் சென்னை முதன்மை அமர்வு நீதிபதி பிறப்பித்த சோதனை வாரன்ட் உத்தரவுபடியும், நல்லம நாயுடுவின் அறிவுரைபடியும் புலனாய்வு குழுவினருடன் ஹைதராபாத் திராட்சை தோட்டத்தை சோதனையிட சென்றேன்.

8, 9 மற்றும் 10.12.1996 ஆகிய 3 நாட்கள் திராட்சைத் தோட்டத்தையும் அதில் உள்ள பெரிய பங்களாவையும் சோதனையிட்டேன். ஆந்திரா அரசின் 2 சாட்சிகள் மற்றும் வழக்கறிஞர் சேதுராமன் மற்றும் உதவியாளர் ராமவிஜயன் முன்னிலையில் சோதனை நடந்தது.

திராட்சைத் தோட்டத்தை அடுத்துள்ள பழைய புனரமைப்பு கட்டடம், வேலையாட்கள் தங்கிய கட்டடங்கள் சோதனையிடப்பட்டன. இந்த வழக்கு தொடர்பான எந்த ஆவணங்களும் கிடைக்கப் பெறவில்லை. நான் மகஜர் தயாரித்தேன்.

சென்னையில் இருந்து வந்திருந்த பொதுப்பணித் துறை பொறியாளர் வேலாயுதம் திராட்சைத் தோட்ட பங்களா, வாகனங்கள், பாதுகாவலர்கள் குடியிருப்பு, ஜெனரேட்டர் ஆகியவற்றின் மதிப்பீட்டைக் கணக்கிட்டார்.

10.12.1996 ல் எனது வேண்டுகோளுக்கேற்ப அரசு சாட்சிகள் லதா, சஞ்ஜைகுமார், திராட்சைத் தோட்டத்தின் மகசூல் மதிப்பைக் கணக்கிட்டனர்.

அதே நாளில் எங்களுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இதே சாட்சிகள் மற்றும் பிரதிநிதிகள் முன்னிலையில் செகந்திராபாத் ராதிகா காலனி வீட்டை சோதனையிட சென்றோம். உள்ளூர் நீதிபதியிடம் எழுத்துபூர்வமாக தகவல் தெரிவித்தேன்.

வீடு பூட்டப்பட்டிருந்தது. சாவி கிடைக்கவில்லை என்பதால், வீட்டை சீல் வைத்து காவலாளியை நியமித்து சென்னை திரும்பினோம். 18.2.1997 அன்று அந்த வீட்டுக்குச் சென்று சோதனை செய்ததில் எதுவும் கிடைக்கவில்லை. நான் மகஜரைத் தயாரித்து உள்ளூர் நீதிபதியிடம் தெரிவித்தேன்.

கண்டனம் கண்டனம் என்று போடுகிறார்கள் மை லார்ட்!

மேலே குறிப்பிட்டுள்ள வாக்குமூலத்தை பவானிசிங் படித்துக்கொண்டிருக்கும்போது, நீதிபதி குமாரசாமி கன்னத்தில் கையை வைத்துக்கொண்டு அமைதியாக கேட்டுக்கொண்டே இருந்தார். எங்கேயும் குறுக்கீடு செய்து கேள்விகளை கேட்கவில்லை. இறுதியில்…

பவானிசிங்: நான் வழக்கை படித்து ரெடியாவதற்கு ஒரு வாரம் கால அவகாசம் வேண்டும்.

நீதிபதி: ஒரு வார கால அவகாசம் கொடுக்க முடியாது. உச்சநீதிமன்றம் தினந்தோறும் நடத்தச் சொல்லி இருக்கிறது. வேண்டுமென்றால், பிப்ரவரி 27 ம் தேதி ஒரு நாள் வெள்ளிக்கிழமை விடுமுறை கொடுக்கிறேன். சனி, ஞாயிறும் சேர்த்து மொத்தம் 3 நாட்கள் எடுத்துக் கொள்ளுங்கள்.

பவானிசிங்: முடியாது. நான் படிக்க வேண்டும் ஒரு வார காலம் விடுமுறை வேண்டும்.

நீதிபதி: இப்படி பேச வேண்டாம். நீதிமன்ற நடவடிக்கைகளை பத்திரிகையாளர்கள் உற்றுக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.

நேற்று நான் உள்ளூர் பத்திரிகைகளைப் பார்த்தேன். நான் அரசு வழக்கறிஞரிடம் கண்டிப்போடு பேசியதாக எழுதி இருந்தார்கள். நான் அரசு வழக்கறிஞரிடம் அனைத்து கேள்விகளையும் கோபமாக கேட்பதில்லை.

பவானிசிங்: (குறுக்கீடு செய்து) தாவு பிரஸ்னே கேள்தீறி, அதற்கே நானு உத்ர கொடுத்தினி அதறே மீடியாதல்லி தாவு நல்லல்லோ கண்டனே கண்டனே மாடுவுதாகி ஹக்குதாரே மை லார்ட். (தாங்கள் கேள்வி கேட்கிறீர்கள், அதற்கு நான் பதில் கொடுக்கிறேன். ஆனால், மீடியாக்களில் தாங்கள் என்னை கண்டனம் கண்டனம் செய்வதாக வெளியிடுகிறார்கள் மை லார்ட்.)

நீதிபதி: இங்கு எத்தனை பத்திரிகையாளர்கள் இருக்கிறீர்கள்? (அனைவரும் எழுந்து நின்றோம்) எழுந்திருக்க வேண்டாம். அமருங்கள். பத்திரிகைகளுக்கென்று தர்மம் இருக்கிறது.

பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் வழிகாட்டுதல் பற்றி உங்களுக்குத் தெரியும். பத்திரிகைகளில் இலக்கணப் பிழைகள் வரலாம். ஆனால் தகவல்களை திரித்து எழுதக் கூடாது. அதற்காக பத்திரிகைகளைப் புறக்கணிக்கவும் முடியாது. உங்களுக்கென்று பொறுப்புகள் இருக்கிறது. அதை உணர்ந்து எழுத வேண்டும்.

(ஜெ. தரப்பு வழக்கறிஞர் குமாரைப் பார்த்து) நீங்கள் எப்போது ஒவ்வொரு குற்றவாளியின் தனித்தனியான சொத்துப்பட்டியல், வருமானம், செலவுகள், நீங்கள் குறிப்பிடுவது, தமிழக ஊழல் தடுப்பு போலீஸார் பதிவு செய்திருப்பது ஆகியவற்றை அட்டவணையாகத் தருவீர்கள்?

குமார்: இன்று 26 ம் தேதி. 4.3.2015 புதன்கிழமை தருகிறோம்.

நீதிபதி: அப்படியென்றால் பவானிசிங்கும் கால அவகாசம் கேட்பதால், மீண்டும் 4ம் தேதி நீதிமன்றத்தை வைத்துக்கொள்ளலாம். 4ம் தேதி மீண்டும் நீதிமன்றம் தொடரும்.

வழக்கை ஒத்தி வைக்க வேண்டும்!

பவானிசிங்கை நீக்க வேண்டும் என்று அன்பழகன் தரப்பு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்கள். இது மார்ச் 9ம் தேதி விசாரணைக்கு வர இருக்கும் நிலையில், அன்பழகனின் வழக்கறிஞர் குமரேசன் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார்.

நீதிபதி குமாரசாமி: (சிரித்த முகத்தோடு) என்ன வந்திருக்கிறீர்கள்?

குமரேசன்: நாங்கள் புதியதாக ஒரு கோரிக்கை மனு தாக்கல் செய்திருக்கிறோம்.

நீதிபதி: என்ன கோரிக்கை மனு?

குமரேசன்: இந்த நீதிமன்றத்தில் எங்களை 3ம் தரப்பு வாதியாக சேர்த்துக்கொள்ள வேண்டும் என்ற மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த வழக்கின் அரசு வழக்கறிஞரை புதியதாக நியமிக்கக் கோரிய மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

அதை எதிர்த்து நாங்கள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறோம். மனு 9ம் தேதி ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட்டால், நாங்கள் தாக்கல் செய்துள்ள மனு பயனற்றதாகிவிடும். அதனால், இந்த வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்திருக்கிறோம்.

நீதிபதி: எந்தப் பிரிவின் கீழ் இந்த மனுவைத் தாக்கல் செய்திருக்கிறீர்கள்?

குமரேசன்: நீதிமன்றத்தில் பெட்டிஷன் தாக்கல் செய்ய வேண்டுமென்றால்தான், விதிகளின் கீழ் தாக்கல் செய்ய வேண்டும். மெமோ தாக்கல் செய்ய எந்த விதிகளும் பொருந்தாது.

நீதிபதி: இதை எதற்காக என்னிடம் தாக்கல் செய்தீர்கள்?

குமரேசன்: உச்சநீதிமன்றத்தில் நாங்கள் தாக்கல் செய்திருக்கின்ற மனுவை விசாரிக்கும் நீதிபதிகள், ‘உங்களுக்கு பல வழிகள் தெரியும். அதன்படி இந்த வழக்கு நிலுவையில் இருப்பதற்கு ஏற்றவாறு நீங்கள் நடந்துகொள்ள வேண்டும்’ என்று கூறியதன் அடிபடையில் நாங்கள் இந்த மனுவை இங்கு தாக்கல் செய்திருக்கிறோம்.

நீதிபதி: இங்கு தாக்கல் செய்ததன் நோக்கம் என்ன?

குமரேசன்: சாதாரணமாக ஒரு வழக்கு நீதிமன்றத்தில் நடந்துகொண்டிருக்கும்போது, அதற்கு சம்பந்தமான வழக்கு மேல்நீதிமன்றத்தில் நடந்துகொண்டிருந்தால், அதன் விவரத்தை வழக்கு நடந்துகொண்டிருக்கும் நீதிமன்றத்திற்குத் தெரிவிக்க வேண்டும். இது சட்டத்துறையின் நாகரிகம். அதன் அடிப்படையில் இந்த மனுவைத் தாக்கல் செய்திருக்கிறோம்.

நீதிபதி: ஏற்கெனவே நீங்கள் தாக்கல் செய்த மனு மீது அபராதம் விதிப்பதாக கூறி இருந்தேன்?

குமரேசன்: அந்த மனுக்களில் எங்கள் தரப்பு நியாயத்தைக் கூறி இருந்தோம். ஆனால், இந்த மனுவில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதை மட்டும் தங்கள் பார்வைக்கு தெரிவிக்கிறோம்.

நீதிபதி: இது உச்சநீதிமன்றத்திற்கும் உங்களுக்கும் இருக்கும் பிரச்னை இந்த நீதிமன்றத்திற்கு அதில் எந்தப் பங்கும் கிடையாது? (ஜெ. தரப்பு வழக்கறிஞர் குமாரைப் பார்த்து) இதற்கு நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

குமார்: இந்த மனு மீது பதில் மனு தாக்கல் செய்ய 2 நாட்கள் அவகாசம் வேண்டும்.

நீதிபதி: (பவானிசிங்கைப் பார்த்து) நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
பவானிசிங்: எனக்கு ஒரு வாரம் கால அவசாகம் வேண்டும்.

(அதையடுத்து இந்த மனு 11ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.)

– வீ.கே.ரமேஷ்
படங்கள்: ரமேஷ் கந்தசாமி

முன்னைய பகுதிகளை பார்வையிட இங்கே  அழுத்தவும் »» ஜெ. வழக்கு விசாரணை

Share.
Leave A Reply