இரண்டு மணித்தியாலங்களில் சூழ்ச்சி செய்து அரசாங்க ஆட்சியை பிடிப்பது என்பது முட்டாள்தனமான கருத்து என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அவ்வாறான ஒரு விடயத்திற்கு திட்டம் தீட்டவே அதிக நேரம் எடுக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அல்ஜசீரா ஊடகத்திற்கு வழங்கியுள் விசேட செவ்வியில் தேர்தல் தின சூழ்ச்சி குற்றச்சாட்டு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தேர்தல் தினத்தன்று இரவு அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள எவ்வித திட்டங்களும் தீட்டவில்லை என்றும் தோல்வியுற்றால் விடைபெற்றுச் செல்வதற்கு முன்னதாகவே தீர்மானித்திருந்ததாகவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
30 வருட யுத்தத்தின் போது கடைசி கட்டங்களில் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் யுத்தக் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தோல்விக்கு காரணமாக அமைந்ததா?
என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த மஹிந்த ராஜபக்ஷ, இல்லை, தனக்கு எதிராக சிறந்த முறையில் திட்டமிடப்பட்ட தேர்தல் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டதாக பதில் அளித்துள்ளார்.
யுத்தத்தின் போது பல உயிர்கள் காவு கொல்லப்பட்ட பின்பே வெற்றி கிடைத்தது. அது பயனுள்ளதாக அமைந்ததா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, ஆம். பயனுள்ளதாக அமைந்தது இல்லையேல் இன்றும் நாம் யுத்தத்தை எதிர்நோக்க வேண்டியிருந்திருக்கும் என்றும் பதிலளித்துள்ளார்.
இலங்கையில் அடுத்த பிரதமராக வர முடியுமா? என்று எதிர்பார்க்கிறீர்களா? என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு, தான் அப்படி சொல்லவில்லை.
ஆனால் போட்டியிட்டால் வெற்றிபெறுவது நிச்சயம் என்று மஹிந்த ராஜபக்ஷ பதில் அளித்துள்ளார்.