அமெரிக்க கூட்டுபடை தாக்குதலில் காயம் அடைந்த ஐ.எஸ். தீவிரவாத இயக்க தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி மரணம் அடைந்ததாக ஈரான் ரேடியோ அறிவித்துள்ளது.

அல் பாக்தாதி

ஈராக் நாட்டின் சமர்ரா பகுதியில் பிறந்தவர் அபுபக்கர் அல் பாக்தாதி. இவர் பாக்தாத் பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய கல்வியில் பி.ஏ., எம்.ஏ. பட்டங்களும், பிஎச்.டி. ஆராய்ச்சி பட்டமும் பெற்றவர். ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எல். என்ற இயக்கத்தை உருவாக்கி, அந்த இயக்கத்தை எதிர்த்த ராணுவத்துடன் ஈராக், சிரியா ஆகிய நாடுகளில் உள்நாட்டு போரை நடத்தியவர்.

மேற்கு ஈராக், லிபியா, வடகிழக்கு நைஜீரியா, சிரியா ஆகியவற்றை தன்னாட்சி பெற்ற இஸ்லாமிய நாடுகளாக (ஐ.எஸ்.) அறிவித்து அதற்காக போரிட்டு வந்தார்.

2011-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 4-ந் தேதி அல் பாக்தாதியை அமெரிக்கா சர்வதேச தீவிரவாதியாக அறிவித்தது. அதோடு அவரை உயிருடன் பிடிக்கவோ, பிணமாக மீட்கவோ தகவல் தருபவர்களுக்கு இந்திய மதிப்பில் சுமார் ரூ.60 கோடி பரிசு தருவதாகவும் அறிவித்தது.

ஐ.எஸ். தீவிரவாத இயக்கம்

ஈராக்கில் அமெரிக்கா போன்ற நாடுகளின் தலையீட்டை எதிர்த்து போரிட்ட அவர் 2010-ம் ஆண்டு உள்நாட்டில் உள்ள அல்-கொய்தா இயக்கத்தின் கிளையை தனிப்பட்ட ஐ.எஸ். என்ற தீவிரவாத இயக்கமாக மாற்றினார்.

தலீபான் இயக்க தலைவர் முல்லா உமருடனும் நெருக்கமாக இருந்தார். இதன் மூலம் உலகளவில் தன்னை ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் தலைவராக உயர்த்திக் கொண்டார்.

ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தை எதிர்த்து அமெரிக்கா தலைமையிலான கூட்டுபடைகள் வான்வழி தாக்குதல்கள் நடத்தி வருகிறது.

கடந்த மார்ச் மாதம் சிரியா எல்லையில் உள்ள நினெவே மாவட்டம் அல்பாஜ் என்ற இடத்தில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுபடைகள் நடத்திய வான்வழி தாக்குதலில் அல் பாக்தாதி பலத்த காயம் அடைந்தார்.

மரணம்

பின்னர் அவர் மிகவும் மெதுவாக குணமடைந்து வருவதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் நேற்று அல் பாக்தாதி மரணம் அடைந்ததாக தகவல்கள் வெளியானது. இந்த தகவலை ஈரான் வானொலியும் உறுதி செய்தது.

ஆனால் அல் பாக்தாதியின் கூட்டாளிகள் அவர் சாகவில்லை, கடுமையான காயங்கள் அடைந்து இருப்பதால் குணமடைய நீண்டகாலம் ஆகும் என்றனர்.

அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

/p>

கடந்த ஆண்டும் தகவல்

ஏற்கனவே 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் 7-ந் தேதி ஈராக்கின் மோசுல் நகரில் அமெரிக்க கூட்டுபடை நடத்திய வான்வழி தாக்குதலில் அல் பாக்தாதி இறந்துவிட்டதாக தகவல் வெளியானது. அவர் சாகவில்லை, லேசான காயம் மட்டுமே அடைந்துள்ளார் என்றும் ஒரு தகவல் வெளியானது.

அதே மாதத்தில் 13-ந் தேதி அல் பாக்தாதி பேசிய ஒரு ஆடியோ தகவல் வெளியானது. சமூக வலைதளங்கள் வழியாக அவரது 17 நிமிட பேச்சு வெளியானது.

அதில், ‘ஒரே ஒரு வீரர் இருந்தால் கூட ஐ.எஸ். போராளிகள் சண்டையை நிச்சயம் நிறுத்த மாட்டார்கள். சிரியா, ஈராக்கில் உள்ள அமெரிக்க கூட்டுபடைகளின் முகாம்கள் தோல்வி அடைந்துள்ளது’ என்று அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

குடும்பம்

அல் பாக்தாதியின் குடும்பம் பற்றிய சரியான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

அல் பாக்தாதியின் வயது 43. அவருக்கு அஸ்மா பாஸி முகம்மது அல்-துலாய்மி மற்றும் இஸ்ரா ரஜப் மஹல் குவைசி என்ற  2 மனைவிகள் இருப்பதாகவும், 11 வயதில் ஒரு மகன் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share.
Leave A Reply