என்ன அநியாயம்? எமது நாட்டில் பெண்கள் சுதந்திரமாகவும், நிம்மதியாகவும் வாழக் கூடிய சூழல் இன்று இல்லையா? 14 வருடங்கள் ஒரு தாய் ஸ்தானத்திலிருந்து அப்பாடசாலைக்கு வரும் பிள்ளைகளை தனது பிள்ளைகள் போல் அரவணைத்து பாதுகாத்த ஒரு அப்பாவி பெண்ணை மிகவும் ஆக்ரோஷமாக கொலை செய்திருக்கிறார்கள்.
எதற்காக மனித மனங்கள் இவ்வளவு காட்டுமிராண்டித் தனமாக மாறிவருகின்றன? இந்த குறுகிய காலப்பகுதிக்குள் மட்டும் எமது நாட்டில் எத்தனை பெண்கள் பரிதாபகரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர்?
ஆனால், அவற்றை செய்த குற்றவாளிகளை பொலிஸார் கண்டுபிடித்தாலும், அவர்கள் ஏதோ ஒரு வகையில் தமது தண்டனையிலிருந்து தப்பித்து மீண்டும் சுதந்திரமாக வெளியில் நடமாடுகின்றார்கள்.
ஆனால் எங்களுடைய பெரியம்மாவை கொலை செய்த குற்றவாளியைக் கண்டுபிடிப்பது மட்டுமின்றி அவனுடைய முகத்திரையை கிழித்து தகுந்த தண்டனையை வழங்குங்கள் என்று நாம் கெஞ்சிக்கேட்கின்றோம்.
சந்திரிகா
இன்று எமது வீட்டிலுள்ள பெண்ணுக்கு இப்படியொரு நிலைமை ஏற்பட்டுள்ளது என்றால், நாளை இன்னுமொரு பெண்ணுக்கும் இதே நிலைமை ஏற்படலாம்.
எனவே விரைவில் குற்றவாளியை தகுந்த ஆதாரங்களுடன் கண்டுபிடித்து கடுமையான தண்டனையை வழங்குங்கள்.
ஒருவேளை குற்றவாளிகள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்தாலும் இறைவனின் தீர்ப்பிலிருந்து அவர்களால் தப்பிக்க முடியாது.”
இவ்வாறு கண்ணீருடன் புலம்புகின்றார் பம்பலப்பிட்டியிலுள்ள பிரபல பாடசாலையில் கொடூரமான முறையில் கொலைசெய்யப்பட்டவரின் மகள் முறையிலான யுவதியொருவர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பம்பலப்பிட்டியில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் 44வயதான சந்திரிகா என்ற பெண் கொலை செய்யப்பட்டு
எனவே குறித்த பெண்ணின் கணவரான சிவலிங்கத்தினால் பம்பலப்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டை தொடர்ந்து இந்த விடயம் ஊடகங்கள் வாயிலாகவும், இணையத்தளங்களின் மூலமாகவும் காட்டுத்தீ போல் பரவியதுடன், மனித நேயம் கொண்ட மனங்கள் அனைத்தையும் “என்ன அநியாயம்?” என்று வாயை மூடி அழும் நிலைக்கு தள்ளியது.
இந்த நிலையில் இச்சம்பவம் தொடர்பாக கொலை செய்யப்பட்ட பெண்ணின் உறவினர்களிடமும், பம்பலப்பிட்டிப் பொலிஸாரிடமும் இருந்து கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில், களுபோவில பகுதியில் அகலவத்த சுமதிபால– சண்முகவடிவு தம்பதிகளுக்கு 1970ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 05ஆம் திகதி மகளாக பிறந்த சந்திரிகாவின் தந்தை பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர்.
எனவே சிறுவயது முதலே தமிழ், சிங்கள மொழிகளை சரளமாகப் பேசக்கூடிய சந்திரிகா கிருலப்பன்னை பகுதியிலுள்ள சிற்றன்னை முறையிலான ஜானகி என்பவரின் பாதுகாப்பிலேயே தங்கியிருந்து தனது கல்வி நடவடிக்கைகளை தொடர்ந்தார்.
எனவே சிறு வயது முதலே சந்திரிகா தனது பெற்றோரிடம் இருந்ததை விட சிற்றன்னையுடன் இருந்தே அதிகம். சிற்றன்னையும் தன் வயிற்றில் பிறந்த மகளைப் போலவே சந்திரிகாவை பார்த்துக் கொண்டாள்.
இவ்வாறு சிற்றன்னையின் பாதுகாப்பில் வளர்ந்தவர் ஒப்பந்த அடிப்படையில் கட்டட, மின்சார திருந்த வேலைகளை செய்து கொடுக்கும் தொழிலாளியான சிவலிங்கம் என்பவரை சுமார் 20 வருடங்களுக்கு முன் காதலித்து பெற்றோர், உறவினர்களின் சம்மதத்துடன் திருமண பந்தத்தில் இணைந்தார்.
எனவே, திருமணத்துக்கு பின்னர் ஒரே பிரசவத்தில் இரு அழகிய பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்த சந்திரிகா, தனது குடும்பத்தின் பொருளாதார நிலையை கருதி பம்பலப்பிட்டியிலுள்ள பிரபல ஆண்கள் பாடசாலைக்கு அன்றைய நிலையில் 3000 ரூபா சம்பளத்துக்கு வேலைக்கு சென்றாள்.
அங்கு அவருக்கு பாலர் வகுப்புக்கு வரும் சிறு குழந்தைகளை கவனித்து பராமரிக்கும் பொறுப்புமிக்க வேலைகளை செய்ய பணிக்கப்பட்டது.
எனவே அன்று முதல் பள்ளி வாழ்வில் அடியெடுத்து வைக்கும் மழலை செல்வங்களை ஒரு அன்னையைப் போல் அரவணைத்து அவர்களுக்கு தேவையான அனைத்தையும் செய்து பாலர் வகுப்பறைகளையும் பொறுப்புடன் பாராமரித்தமையால் அதே பாடசாலையில் 14 வருடங்கள் பணியாற்ற அவரால் முடிந்தது.
இவ்வாறு 14 வருடங்கள் பிரபல ஆண்கள் பாடசாலையில் பணிபுரிந்து வந்த நிலையில் (இன்று) கிடைக்கும் 15,000 ரூபா சம்பளம் அதிகரிக்கும் வாழ்க்கை செலவுகளுக்கு போதாமையினால் வெளிநாட்டில் தொழிலொன்றுக்கு செல்வதற்கு முடிவெடுத்தார்.
அதற்கமைய வெளிநாட்டு தொழில் முகவர் ஒருவரின் உதவியுடன் அதற்குரிய ஆயத்தங்களை செய்ததுடன், பாடசாலை நிர்வாகத்துக்கு தனது இராஜினாமா கடிதத்தை கையளித்தார்.
எனினும், பாடசாலை நிர்வாகத்தினர் புதியொருவரை நியமிக்கும் வரை பணிபுரியுமாறு அன்பு கட்டளை விடுத்திருந்தனர்.
எனவே, தொடர்ந்து பாடசாலை நிர்வாகத்தினரின் வேண்டுக்கோளுக்கிணங்க பணியாற்றி வந்த நிலையில் தான் கடந்த 19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்த பாலர் வகுப்பு சிறுவர்களின் தமிழ், சிங்கள புத்தாண்டு விழாவுக்கான ஆயத்தங்களை செய்வதற்காக 18ஆம் திகதி காலை 7.30மணியளவில் வீட்டிலிருந்து குறித்த பாடசாலைக்கு சென்றிருக்கின்றார்.
அதற்கு பிறகு காலை 10 மணியளவில் வீட்டிலிருந்த பிள்ளைகள் இருவருடனும் தொலைபேசியில் உரையாடிய சந்திரிகா பிள்ளைகளிடம் நேரத்துக்கு சாப்பிட்டு கவனமாக வீட்டிலிருக்குமாறும், தான் இன்னும் சிறிது நேரத்தில் வீட்டுக்கு வந்துவிடுவதாகவும் தெரிவித்துள்ளார்.
அது தான் பிள்ளைகள் இருவரும் தன் தாயுடன் பேசிய கடைசி ஓரிரு வார்த்தைகள். அதற்கு பிறகு பிள்ளைகள் 11 மணிக்கும் 12மணிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் தாய்க்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய போது அந்த அழைப்புக்கு எந்தப் பதிலும் கிடைக்கவில்லை.
எனவே “தாய் ஏதும் வேலையாக இருப்பார். வீட்டுக்கு வருவார் தானே” என்று தாயின் வருகைக்காக காத்திருந்தவர்களுக்கு இறுதியில் ஏமாற்றங்களும், ஆறாத காயங்களுமே எஞ்சியிருந்தன.
ஞாயிற்றுக்கிழமை காலை வரை சந்திரிகா வீட்டிற்கு வரவில்லை. கணவர் சிவலிங்கம், உறவினர்கள், பிள்ளைகள் என்று அனைவரும் அவருடைய தொலைபேசிக்கு அழைப்பை ஏற்படுத்திய போதும் இவருடைய தொலைபேசி இலக்கத்திலிருந்து எந்தவித பதிலும் கிடைக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து பதற்றமடைந்த குடும்பத்தவர்கள் பாடசாலைக்கு சென்று பார்ப்போம் என்ற முடிவுக்கு வந்தனர்.
அதன்படி அவருடைய கணவரும், இரு பெண் பிள்ளைகளும், சந்திரிகாவுக்கு மகன் முறையிலான தினேஷ் என்பவரும்(பெயர் மாற்றப்பட்டுள்ளது) பிரபல பாடசாலைக்கு சென்று சந்திரிகா தொடர்பாக விசாரித்திருக்கின்றார்கள் எனினும் அவர்களிடமிருந்து சரியான எந்த பதிலும் கிடைக்கவில்லை.
இதனை தொடர்ந்து “எங்களை உள்ளே செல்ல அனுமதி தாருங்கள் நாங்கள் சென்று பார்க்கின்றோம்” என்று கெஞ்சி மன்றாடினார்கள்.
எனினும் பாடசாலை நிர்வாகத்தினர் இரு பாடசாலை மாணவர்களை அனுப்பி சந்திரிகா உள்ளே எங்கும் இருக்கின்றாரா? என்று பார்த்துவருமாறு பணித்தனர்.
அவர்கள் அங்கு சென்று பார்த்துவிட்டு அவர் உள்ளே இல்லை என்றே பதிலளித்தனர். எனினும், குடும்பத்தவர்கள் விடுவதாய் இல்லை. உள்ளே வகுப்பறைகளை திறந்து காட்டுங்கள், நாங்கள் பார்க்கின்றோம் என்று உடும்புப்பிடியாய் அங்கேயே நின்றுகொண்டிருந்தனர்.
அதன் பின்னர், பாதுகாப்பு அதிகாரி சிவலிங்கத்தையும்,தினேஷையும் அழைத்து சென்று பாலர் வகுப்பறையையும் அதன் அருகே இருந்த களஞ்சிய அறையையும் திறந்து காட்டியுள்ளார்.
அப்போது களஞ்சிய அறையில் இருந்த மேசையில் சந்திரிகா கடைசியாக வீட்டிலிருந்து செல்லும் போது அணிந்திருந்த ஆடையும், கைப்பையும் சிவலிங்கத்தின் கண்களுக்கு தென்பட்டன.
எனவே, சந்திரிகா “இங்கு தான் எங்கோ இருக்க வேண்டும்” என்ற உறுதியான முடிவுக்கு வந்த கணவர் தொடர்ந்து களஞ்சிய அறையை சுற்றி தேடிய போது அங்கிருந்த மேசையொன்றில் உடலிலிருந்த ஆடைகள் அனைத்தும் களையப்பட்டு, கடுமையான வெட்டுக்காயங்களுடன் உயிரற்ற சடலமாக சந்திரிகா கிடந்தார்.
அதனை கண்டு சிவலிங்கம் அதிர்ச்சியில் உறைந்துபோனார். பல வருடங்கள் காதலித்து திருமணத்தில் இணைந்து 20 வருடங்கள் இன்பத்திலும், துன்பத்திலும் பங்கேற்ற ஆசை மனைவி மிகக் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருப் பதை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
இதனையடுத்து அவர் பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்த முறைப்பாட்டுக்கமைய பம்பலப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
அதன்படி சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் சடலத்தை பார்வையிட்ட போது அவரது சடலம் விழி பிதுங்கிய நிலையில், உடலில் பல பாகங்களில் வெட்டுக்காயங்களும், தலைப்பகுதி கடுமையான முறையில் தாக்கப்பட்டும் காணப்பட்டன.
இதனை தொடர்ந்து பாடசாலை வட்டாரத்திலிருந்து மோப்ப நாய்களின் உதவியோடு தடயங்களை சேகரித்ததுடன், சடலத்தை கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மேலதிக பிரேத பரிசோதனைகளுக்காக அனுப்பி வைத்தனர்.
அதன்பின்னர் பிரேத பரிசோதனைகள் நிறைவடைந்த கையோடு உறவினர்களிடம் சடலம் கையளிக்கப்பட்டது.
எனினும் கொலையுண்ட பெண்ணின் சடலம் நிர்வாணமாக காணப்பட்டதால் இப்பெண் பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் பொலிஸாருக்கு எழவே செய்தது. இதனால் அவரது சடலத்தின் உடற்பாகங்கள் டீ.என்.ஏ மற்றும் இரசாயனப் பரிசோதனைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டன.
அத்தோடு, அப்பெண்ணின் உறவினர்கள், குறித்த பாடசாலைக்கு அருகில் வசிப்போர், பாதுகாப்பு அதிகாரி, பழைய மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை நிர்வாகத்தினர் உட்பட பல்வேறு தரப்பினரிடமிருந்து வாக்குமூலங்கள் பெற்றுக் கொள்ளப்பட்டன.
பம்பலப்பிட்டி பிரதேசத்தில் அமைந்துள்ள குறித்த ஆண்கள் பாடசாலை சிறந்த பாதுகாப்பு வசதிகளை கொண்ட ஒரு பாடசாலையாகும். இலகுவில் உறவினர்களாகவிருந்தாலும் பாடசாலைக்குள்ளே செல்ல அனுமதிப்பதில்லை.
நுழைவாயிலருகில் வைத்தே விபரங்களை கேட்டு திருப்தியில்லாவிடின் திருப்பி அனுப்பி விடுவார்கள். அப்படியிருக்கையில் காவலாளியின் அனுமதியின்றி வெளியிலிருந்து யாரும் உள்ளே சென்று இத்தகையதொரு படுபாதக செயலை செய்திருக்க முடியாது.
அல்லது பாடசாலையை சார்ந்த யாரும் இக்கொலையை செய்திருக்க வேண்டும் என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்ததுடன் சந்திரிகாவின் தொலைபேசி இலக்கத்தின் ஊடான வலையமைப்புத் தகவல்களையும் மையப்படுத்தி இந்த விசாரணைகளை முன்னெடுத்தனர்.
இந்நிலையில் தான் கடந்த 22ஆம் திகதி கஹட்டகஸ்திகிலிய பிரதேசத்தைச் சேர்ந்த சரத் நிஸந்த பண்டிததரத்ன என்ற பாடசாலையின் பாதுகாப்பு அதிகாரியையும், சந்திரிகா வசித்து வந்த அதே பிரதேசத்தை சேர்ந்த செபஸ்டியன் லோரன்ஸ் என்பவரையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர்.
மேலும் இவர்கள் புதுக்கடை மூன்றாம் இலக்க நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
“இது இவ்வாறிக்க இந்த சம்பவம் குறித்து பொலிஸார் கூறுகையில், சம்பவ தினம் சந்திரிகாவும் லோரன்ஸூம் சந்தித்துள்ளதாக அவர்களின் தொலைபேசி அழைப்பிலிருந்து தெரியவந்துள்ளது.
கடந்த 18ஆம் திகதி காலை 11.30 மணியளவில் லோரன்ஸுக்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தி பாடசாலைக்கு வருமாறு கூறியுள்ளார்.
“இது சந்திரிகாவின் பூதவுடல் கல்லூரி களஞ்சிய சாலையில்
அதற்கமைய அங்கு வந்த லோரன்ஸுக்கும் சந்திரிகாவுக்கும் இடையில் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டு அதன் விளைவாக இச் சம்பவம் நேர்ந்திருக்கலாம் என்றும் அதேவேளை, சந்தேக நபரான லோரன்ஸ் அங்கிருந்து சென்ற பின்னர் சந்திரிகாவின் தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி அவருக்கு என்ன நடந்தது என அறிய முயன்றுள்ளார்.
இவை யாவும் ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருகி றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.”
அதுமட்டுமின்றி வெளிநபரொருவரை பாடசாலைக்குள் நுழைய அனுமதித்தது மற்றும் இச்சம்பவத்தை பொலிஸாருக்கு மறைத்தது தொடர்பாக பாடசாலையின் பாதுகாப்பு அதிகாரி கைது செய்யப் பட் டுள்ளார் என்றும் தெரிய வருகின்றது.
எது எவ்வாறாயினும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளின் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.
வன்புணர்ச்சி, சித்திரவதை, பெண்கள் விதவையாக்கப்படுதல், திருமணமுறிவுகள், தற்கொலை என்று பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் பல்வேறு வடிவங்களில் முற்றுபெறாத தொடர்கதைகளாக தொடர்ந்து கொண்டிருக்கின்றன என்பதும் வேதனைக்குரிய விடயமாகும்.
(ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதி வரை கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி…)