உலகின் பிரம்மாண்டமான யானை பறவை முட்டை லண்டனில் ஏலம் விடப்பட உள்ளது.
“யானை ஏன் முட்டை போடாது தெரியுமா?…” “ஏன்?” “அவ்ளோ பெரிய உயரத்துல இருந்து முட்டை போட்டா உடஞ்சு போயிருமே அதான்” … என்று காமெடியாக பேசிக்கொள்வார்கள்.
உண்மையிலேயே மிகப்பெரிய பிரம்மாண்டமான யானை பறவை முட்டை ஒன்றினை ஏலம் விடப்போகிறார்கள். இந்த முட்டை கோழி முட்டையை விட 200 மடங்கு பெரியதாகும்.
இதை வைத்து எத்தனை பேருக்கு ஆம்லேட் போடலாம் என்று மட்டும் யோசிக்காதீர்கள். இது 400 ஆண்டுகள் பழமையானது.
மடகாஸ்கர் தீவில் கண்டுபிடிக்கப்பட்ட, இந்த யானை பறவையின் முட்டை தற்போது லண்டனில் ஏலத்திற்கு வைக்கப்பட்டுள்ளது.
யானை பறவைகள் இந்திய பெருங்கடலில் தென் ஆப்பிரிக்காவுக்கு கிழக்கே உலகிலேயே 4 வது பெரிய தீவான மடகாஸ்கர் தீவில் உயிர் வாழ்ந்தற்கான ஆதாரங்கள் உள்ளன.
இங்கு உலகிலேயே மிகப்பெரிய பறவை இனமான யானை பறவை (ஏப்யோர்னிஸ்) உள்ளிட்ட அரிய வகை பறவையினங்கள் 17-ம் நூற்றாண்டில் உயிர் வாழ்ந்துள்ளன.
காலப்போக்கில் அவை முற்றிலும் அழிந்துவிட்டன. ஆனால் மடகாஸ்கர் தீவில் கண்டுபிடிக்கப்பட்ட யானை பறவையின் பிரமாண்ட சைஸ் முட்டை இங்கிலாந்தில் ஏலத்துக்கு வர உள்ளது.
இதுதொடர்பாக சம்மர் பிளேஸ் ஏல நிறுவனத்தின் தலைவர் எர்ரோல் புல்லர் கூறியதாவது: யானை பறவை இனம் தொடர்பாக பல புத்தகங்களை எழுதியுள்ளேன்.மடகாஸ்கர் தீவில் கண்டுபிடிக்கப்பட்ட முட்டை, மற்ற பறவைகளின் முட்டைகளை விட மிக பெரிதாக உள்ளது. டைனோசர் முட்டையை விட இது பெரியது. நெருப்பு கோழி முட்டையை விட 8 மடங்கும், கோழி முட்டையை விட 200 மடங்கும் பெரியது.
இதுபோன்ற முட்டையை, எனது வாழ்நாளில் இதுவரை கண்டதில்லை. ஒரு அடி நீளத்துக்கு இது உள்ளது. தற்போது இந்த முட்டையை பறவையின ஆய்வாளர்கள் பரிசோதித்து வருகின்றனர்.
சாதாரண நாட்டுக்கோழி முட்டையை அருகில் வைத்து இந்த யானை பறவை முட்டையை பார்வைக்கு வைத்துள்ளனர். இதை பார்க்கும் போது எவ்ளோ பெரிய முட்டை என்று வாயை பிளக்கின்றனர் பார்வையாளர்கள்.
ரூ.50 லட்சத்துக்கு மேல் ஏலம் (£50,000)
இந்த முட்டையானது 30 சென்டிமீட்டர் உயரம் கொண்டது (11.81 இஞ்ச்). இந்த முட்டையை அடுத்தவாரம் ஏலத்தில் விடப்பட உள்ளது. இதற்கான விலையாக 76000 அமெரிக்க டாலர்கள் நிர்ணயம் செய்துள்ளனர். அநேகமாக இது ரூ.50 லட்சத்துக்கு மேல் ஏலம் போகும் எதிர்பார்க்கப்படுகிறது.