அம்பாந்தோட்டை, அங்குணகொலபெலஸ்ஸ பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் இடுப்பில் கைத்துப்பாக்கியுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நெருங்கிய பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் மெய்ப்பாதுகாவலர் என கூறப்படும் இராணுவ கொமாண்டோ படையணியின் கோப்ரல் தர வீரர் தொடர்பில் விரிவான விசாரணை ஒன்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோனின் ஆலோசனைக்கு அமைவாக ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த விசாரணைகளில் குறித்த இராணுவ கொமாண்டோ படையணியின் கோப்ரல் தர வீரரிடம் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வாக்கு மூலம் ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர கேசரியிடம் குறிப்பிட்டார்.
அத்துடன் மேலதிக விசாரணைகள் குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசேட குழுவொன்றூடாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில் குறித்த சம்பவம் குறித்தும் அந்த வீரர் நாமல் ராஜபக் ஷவின் மெய்பாதுகாவலர் தானா என்பதை உறுதி செய்துகொள்ளும் பொருட்டும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக் ஷவிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் ஒன்றை பெறுவது குறித்து புலனாய்வுப் பிரிவினர் அவதனம் செலுத்தியுள்ளனர்.
நாமல் ராஜபக் ஷவுக்கு இராணுவ கொமாண்டோ பாதுகாப்பு படை வீரர் எப்படி பாதுகாப்பளித்தார், அவர் ஏன் ஜனாதிபதியை நெருங்கினார், ஜனாதிபதியின் பாதுகாப்பில் குறைபாடுகள் இருந்ததா?
போன்ற பல்வேறு கோணங்களில் தொடர் விசாரணைகள் இடம்பெறுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர குறிப்பிட்டார்.
கடந்த 25 ஆம் திகதி சனிக்கிழமை அங்குணகொலபெலஸ்ஸ கோட்டையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த கூட்டத்துக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமை தாங்கியுள்ளார். இதன் போது பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் அங்கு சென்றிருந்த நிலையில் அம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக் ஷவின் பாதுகாவலரான இரணுவ மாண்டோ படையணியின் கோப்ரல் தரவீரர் ஆயுதத்துடன் பிரவேசிக்க முடியாத பகுதிக்குள் தனது கைத் துப்பாக்கியுடன் நுழைந்துள்ளார்.
நாமல் ராஜபக் ஷவின் மெய்ப் பாதுகாவலரை கண்டிப்பாக ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினர் சோதனை செய்திருக்க வேண்டும் என்ற நிலையில் அவர் சோதனைக்கு உட்படுத்தப்படாத நிலையிலேயே முன்னேறியதாக கூறப்படுகின்றது.
இந் நிலையில் அந்த கோப்ரல் தர அதிகாரி ஜனாதிபதியை நெருங்கிய போது அங்கு பாதுகாப்பு கடமையில் இருந்த பொலிஸ் விசேட அதிரடிப்படை வீரர் ஒருவர் விடயத்தை உணர்ந்து அவரை உடனடியாக சோதனை செய்துள்ளதுடன் அந்த பிரதேசத்தில் இருந்து அவரை அப்புறப்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளார்.
ஜனாதிபதி கலந்துகொள்ளும் நிகழ்வொன்றின் பாதுகாப்பு விடயங்களை ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவே கவனித்து வரும் நிலையில் குறித்த கூட்டத்தில் அந்த பாதுகாப்பு விடயங்களில் குறைபாடுகள் காணப்பட்டதாக பலரும் குற்றம் சுமத்தினர்.
இந் நிலையிலேயே இந்த விடயம் குறித்து பொலிஸ் மா அதிபர் நேரடியாக அவதானம் செலுத்தியுள்ளதுடன் விசாரணைகளை உடனடியாகவே குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் கையளித்துள்ளார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்னவின் ஆலோசனைக்கு அமைவாக இந்த விடயம் குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்காக பொலிஸாரே கடமையில் ஈடுபடுத்தப்படுகின்றனர். எனினும், எவ்வாறு நாமல் ராஜபக் ஷ மட்டும் இராணுவக் கொமாண்டோ படைப்பிரிவின் கோப்ரலை பாதுகாப்பு பிரிவில் இணைத்துக் கொண்டுள்ளார் என்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விசேட வேண்டுகோள் விடுக்கப்பட்டால் மட்டுமே பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு இராணுவ கொமாண்டோ படையணி வீரர்களின் பாதுகாப்பை பெற்றுக்கொள்ள முடியும்.
நாமலின் சாரதியாகவும் இராணுவ படைவீரர் ஒருவரே கடமையாற்றி வருகின்றார் என்பது விசாரணைகளில் வெளிவந்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
இந் நிலையிலேயே அங்குணகொல பெலஸ்ஸவில் வைத்து குறித்த இராணுவ கோப்ரல் அந்த சந்தர்ப்பத்திலேயே ஜனா திபதி பாதுகாப்புப் பிரிவினால் விடுதலை செய்யப்பட்டமை குறித்தும் அதனுடன் சம்பந் தப்பட்ட ஏனைய விவகாரங்கள் குறித்தும் தற்போது குற்றப் புலனாய்வு பிரிவு ஆராய்கின்றது.
இது தொடர்பாக நாமல் ராஜபக் ஷவிடம் விசரித்து குற்றப்புலனாய் வுப் பிரிவு வாக்கு மூலம் ஒன்றினை பெற்றுக் கொள்ளலாம் என பொலிஸார் சுட்டிக்காட்டினர்.