வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களையும் சேர்ந்த கூட்டுறவு அமைப்புகளும், கூட்டுறவுத் தொழிற்சங்கங்களும் இணைந்து யாழ்ப்பாணத்தில் பிரமாண்டமான முறையில் மேதினத்தைக் கொண்டாடியுள்ளன.
பல்லாயிரக்கணக்கான கூட்டுறவாளர்கள் இன்று பிற்பகல் 2மணிக்கு நல்லூர் சங்கிலியன் பூங்காவில் இருந்து பேரணியாகப் புறப்பட்டு மாலை 3.30மணிக்கு யாழ் வீரசிங்கம் மண்டபத்தை சென்றடைந்தனர்.
இப் மேதின எழுச்சிப் பேரணியை வடக்கு மாகாண முதலமைச்சர் க. வி. விக்னேஸ்வரன் கொடியசைத்து ஆரம்பித்து வைத்தார்.
கூட்டுறவைப் பலப்படுத்துவோம் என்ற கருப்பொருளில் இடம் பெற்ற இம் மேதினப் பேரணியில், ஐந்து மாவட்டங்களில் இருந்தும் கூட்டுறவு அமைப்புகளின் செயற்பாடுகள் மற்றும் கூட்டுறவு அமைப்புகள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் ஏராளமான ஊர்திகள் இடம்பெற்றிருந்தன.
அத்தோடு, தவில்- நாதஸ்வரக் கச்சேரி, பாண்ட் வாத்திய இசைக்கச்சேரி ஆகியனவும் இடம்பெற்றிருந்தன.
இப் பேரணியில் வடக்கு மாகாண கூட்டுறவுத்துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசன், சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வடமாகாணசபை உறுப்பினர்கள் பா.கஜதீபன், கே.சயந்தன், த.சித்தார்த்தன், க.சிவாஜிலிங்கம் மற்றும் அனந்தி சசிதரன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.
பேரணியின் முடிவில் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் மேதினப் பொதுக்கூட்டம் நடைபெற்றதோடு, பேரணியில் இடம்பெற்ற ஊர்திகளில் மாவட்ட ரீதியாக முதலாம் இடத்தைப் பெற்ற ஊர்திகளுக்கான பரிசளிப்பும் இடம் பெற்றது.
கூட்டுறவாளர்களின் இம் மேதின எழுச்சிப் பேரணியை, 95ஆம் ஆண்டுக்குப் பிறகு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மாபெரும் பேரணி எனப் பலரும் தெரிவித்துள்ளனர்.