இரண்டு நாள் அதிகாரபூர்வ பயணத்தை சிறிலங்காவுக்கு மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி, சற்று முன்னர், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி பயணம் செய்த போயிங் 757 விமானம் சற்று முன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த ஜோன் கெரியை…
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, அமெரிக்காவுக்கான சிறிலங்கா தூதுவர் பிரசாத் காரியவாசம், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசேியாவுக்கான உதவிச் செயலர் நிஷா பிஸ்வால் மற்றும் வெளிவிவகார அமைச்சு அதிகாரிகள் விமான நிலையத்தில் வரவேற்றார்.
அதையடுத்து கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை வழியாக அவர், கொழும்பு நகருக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
சிறிலங்காவுக்கு எந்த வழியிலான உதவியை வழங்கவும் தயார்
02-05-2015
இலங்கையர்கள் தமது எதிர்காலத்தை வடிவமைக்க எந்த வழியிலான உதவிகளையும் வழங்க அமெரிக்கா தயாராக உள்ளதாக, அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி வாக்குறுதி அளித்துள்ளார்.
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுடன் இன்று காலை நடத்திய சந்திப்பை அடுத்து, கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்த போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
“சிறிலங்காவின் மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற அமெரிக்கா விரும்புகிறது.
ஊழலை ஒழிக்கவும், ஜனநாயக நிறுவனங்களை கட்டியெழுப்பவும், நல்லிணக்க செயல்முறைகளின் மூலம், கடந்த காலத் தவறுகளை சரி செய்யவும், சிறிலங்காவின் புதிய அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளை அமெரிக்கா பாராட்டுகிறது.
நான் இங்கு வந்திருப்பதற்குக் காரணம், ஜனநாயகத்தை மீளமைப்பதற்கான உங்களின் பயணத்தில், அமெரிக்க மக்கள் உங்களுடன் நிற்கிறார்கள் என்பதை சிறிலங்கா மக்களுக்கு கூறுவதற்காகத் தான்.
இலங்கையர்கள் தமது எதிர்காலத்தை வடிவமைக்க எந்த வழியிலான உதவிகளையும் வழங்க அமெரிக்கா தயாராக உள்ளது.
உங்களுடனான எங்களின் பங்குடமையை, பரவலாக்கவும், ஆழப்படுத்தவும் நாம் விரும்புகிறோம். இரண்டு நாடுகளும், ஆண்டுதோறும் பங்குடமை கலந்துரையாடலை ஆரம்பிக்கவுள்ளன.
அமெரிக்காவின் திறைசேரி மற்றும் வர்த்தகத் திணைக்களங்களின், அதிகாரிகள் சிறிலங்கா அரசாங்கத்துக்கு தொழில்நுட்ப உதவிகளை வழங்குவார்கள்.” என்றும் ஜோன் கெரி தெரிவித்தார்.
சிறிலங்கா பிரதமர் ரணிலுடனும் பேச்சு நடத்தினார் ஜோன் கெரி
02-05-2015
அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி தலைமையிலான உயர்மட்டக் குழுவினர், இன்று மதியம் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை கொழும்பில் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர்.
சிறிலங்கா பிரதமரின் அதிகாரபூர்வ பணியகமான அலரி மாளிகையில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
இதன்போது, இருதரப்பு உறவுகளை வலுப்படுத்திக் கொள்வது குறித்தும், சிறிலங்கா அரசாங்கத்தின் தற்போதைய, எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன.
இந்தப் பேச்சுக்களில், அமெரிக்க இராஜாங்கச் செயலருடன், தெற்கு மத்திய ஆசியாவுக்கான உதவிச் செயலர் நிஷா பிஸ்வால் உள்ளிட்ட அமெரிக்க அதிகாரிகளும் பங்குபற்றினர்.
சிறிலங்கா அதிபரை சந்தித்தார் ஜோன் கெரி – தேர்தல் வெற்றிக்கு நேரில் வாழ்த்து
02-05-2015
இரண்டு நாள் அதிகாரபூர்வ பயணத்தை சிறிலங்காவுக்கு மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி, சற்று முன்னர், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கடந்த ஜனவரி மாதம் 8ம் நாள் நடந்த அதிபர் தேர்தலில், வெற்றிபெற்றதற்கு, அமெரிக்க இராஜாங்கச் செயலர் நேரில் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.
இந்தச் சந்திப்பில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும், சிறிலங்காவில் ஆட்சிமாற்றத்துக்கு பின்னர் ஏற்பட்டுள்ள நிலைமைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.