அது கடந்த ஏப்ரல் 6 ஆம் திகதி. சூரியன் தனது ஒளியை பரப்ப ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே காட்டுத் தீ போல் ஒரு செய்தி பரவுகிறது.
அதாவது பண்டாரகமை பொலிஸ் நிலையத்தின் வழக்குகளை கையாளும் பிரிவின் பொறுப்பதிகாரியாக இருந்த உப பொலிஸ் பரிசோதகர் ஆர். டப்ளியூ. டப்ளியூ. பலிஹவதென (53 வயது) கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்பதே அந்த செய்தியாகும்.
ஆம். உப பொலிஸ் பரிசோதகர் பலிஹவதென பாணந்துறை தெற்கு பொலிஸ் பிரிவின் பெக்கேகம எனும் ஊரில் உள்ள அவரது வீட்டிலேயே இவ்வாறு கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டிருந்தார்.
“சேர்… நான் சப் இன்ஸ்பெக்டர் பலிஹவதெனவின் மனைவி பேசுகிறேன். சேர் அவரை யாரோ கொலை செய்து விட்டார்கள். கட்டிலில் சடலமாக இருக்கிறார்.
தலையணையெங்கும் இரத்தக்கறை உள்ளது. பயமாக இருக்கிறது சேர்…” என 6 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு பாணந்துறை தெற்கு பொலிஸ் நிலையத்துக்கு வந்த அவசர அழைப்பில் கூறப்பட்டது.
உடன் செயற்பட்ட பொலிஸார் பாணந்துறை பிரிவிற்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சர் சமன் ரத்நாயக்கவின் ஆலோசனைக்கு அமைவாக ஸ்தலத்துக்கு சென்று விசாரணைகளை ஆரம்பித்தனர்.
ஸ்தலத்துக்கு சென்ற பொலிஸார் உப பொலிஸ் பரிசோதகர் பலிஹவதெனவின் வீட்டை குற்றப் பிரதேசமாக பிரகடனம் செய்து தடயங்களை தேட ஆரம்பித்தனர்.
வீட்டின் இடது பக்க அறையொன்றில் உப பொலிஸ் பரிசோதகர் பலிஹவதென கட்டிலில் சடலமாக கிடந்தார்.
அந்தக் கட்டிலுக்கு போடப்பட்டிருந்த நுளம்பு வலை பெரிதாக கசங்கி இருக்கவில்லை. கொஞ்சம் அந்த நுளம்பு வலை விலகியிருந்தது.
சடலமாக கிடந்த பலிஹவதெனவின் கழுத்தில் ஆழமான ஒரு வெட்டுக் காயம் மட்டுமே காணப்பட்டது.
தலையணை இரத்தத்தால் நனைந்திருக்க இறுதி நேரத்தில் போராடி இருக்கத்தக்க எந்த தடயமும் அங்கு காணப்படவில்லை.
இந்நிலையில் மேல் மாகாணத்துக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தரவின் ஆலோசனைக்கு அமைய பாணந்துறை பொலிஸ் அத்தியட்சர் சமன் ரத்நாயக்க ஸ்தலத்துக்கு மோப்ப நாய் மற்றும் பொலிஸ் தடயவியல் பிரிவை அழைத்து தடயம் சேகரிக்க பாணந்துறை தெற்கு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு ஆணையிட்டார்.
அதன்படி களுத்துறை பொலிஸ் நிலைய மோப்ப நாயான “வூசி” ஸ்தலத்துக்கு அழைக்கப்பட்டதுடன் சடலமாக உப பொலிஸ் பரிசோதகர் கிடந்த அறையிலிருந்து தடயமாக தலைமுடியொன்று பொலிஸாருக்கு கிடைத்தது.
இந்நிலையில் என்ன நடந்தது என அறிய சடலமாக கிடக்கும் உபபொலிஸ் பரிசோதகரின் மனைவியான ரத்ன ரஞ்சனியின் (49 வயது) வாக்கு மூலம் ஒன்றினை பொலிஸார் கோரினர்.
“சேர்… எனக்கு 10, 13 வயதுகளில் இரு மகன்மார் உள்ளனர். நான் அவர்களுடன் முன் அறையில் நித்திரைக்கு சென்றேன்.
வழமை போலவே அவர் தனியான அறையில் நித்திரைக்கு சென்றார். அதிகாலை முதலில் நான் எழும்பி அவரை எழுப்புவது வழக்கம்.
அதன்படி இன்றும் (6 ஆம் திகதி) அதிகாலை 4.30 மணிக்கு எழுந்து அவரது அறைக்கு சென்றேன். அப்பொழுது தான் அவர் இரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு பொலிஸாருக்கு அறிவித்தேன்” என்று ரத்ன ரஞ்சனி கூறி முடித்தார்.
அதனை தொடர்ந்து பொலிஸார் தடயவியல் நிபுணர்களின் உதவியுடன் வீட்டை சல்லடையிட்டு நபர்கள் அல்லது கொலைகாரர்கள் வீட்டுக்குள் புகுந்திருக்கலாம் என சந்தேகிக்கத்தக்க வாயில் ஒன்றினை வீட்டின் மேல் தளத்தில் பொலிஸாரால் அவதானிக்க முடிந்தது.
அத்துடன் வீட்டின் கீழ் தளத்திலிருந்த குளியலறை பக்கமாக மேல் மாடிக்கு ஒருவரால் ஏறி வரக்கூடிய வசதிகள் இருப்பதையும் பொலிஸார் அவதானித்தனர்.
இந் நிலையில் இக் கொலைக்கு இரு சந்தேக நபர்கள் வந்திருக்க வேண்டும் எனவும் மிகத்திட்டமிட்ட வகையில் அது செய்யப்பட்டிருக்க வேண்டுமென்பதையும் பொலிஸார் அனுமானித்துக்கொண்டனர்.
இந் நிலையில் உப பொலிஸ் பரிசோதகர் பலிஹவதென ஏன் கொல்லப்பட்டார் ? யாரால் கொல்லப்பட்டார் ? அதன் பின்னணி என்ன? என்பதற்கு விடை காண வேண்டிய தேவை இருந்தது.
இதற்கிடையே ஸ்தலத்துக்கு அழைத்து வரப்பட்ட களுத்துறை பொலிஸ் நிலைய மோப்ப நாய் வூசி மோப்பம் பிடித்து வீட்டிலிருந்து 100 மீற்றர்களுக்கு உட்பட்ட பற்றைக் காடு நிறைந்த இடத்தை நோக்கி சென்றது.
அந்த சிறு காட்டுப்பகுதியை சோதனை செய்த பொலிஸார் அதிலிருந்து 18அங்குல நீளம் கொண்ட மன்னா கத்தியொன்றினை கண்டு பிடித்தனர்.
குறித்த கத்தியே உப பொலிஸ் பரிசோதகரை கொலை செய்ய பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என பொலிஸார் சந்தேகித்தனர்.
இந் நிலையில் அந்தக் கத்தியை “வூசி” மோப்ப நாய்க்கு மோப்பம் பிடிக்கச் செய்த பொலிஸார் விசாரணைகளில் முன்னேற்றத்தை எதிர்பார்த்து முன்னேறினர்.
எனினும் மோப்ப நாயோ எதிர்பாராத விதமாக கொலை இடம்பெற்ற வீட்டினுள்ளேயே சென்றதுடன் கொலையாளி நுழைந்ததாக சந்தேகிக்கப்பட்ட மேல் மாடிக்கு படிகளில் ஏறியது. மோப்ப நாயின் இந் நகர்வு பொலிஸாரை சிந்திக்க வைத்தது.
இந்நிலையில் பொலிஸார் தடயமாக சந்தேகித்து மீட்டிருந்த திறப்பொன்றினையும் “வூசி” ஊடாக மோப்பம் பிடிக்கச் செய்தனர்.
அந்த சந்தர்ப்பத்திலும் “வூசி” நேராக கொலையுண்ட உப பொலிஸ் பரிசோதகரின் வீட்டின் மேல் மாடிக்கே சென்றது. இது பொலிஸாரின் சந்தேகத்தை அதிகரித்தது.
இதனிடையேதான் ஸ்தலத்துக்கு வந்த பாணந்துறை நீதிவான் ருச்சிர வெலிவத்த விசாரணைகளை குற்றப் புலனாய்வு பிரிவுக்கு ஒப்படைக்க உத்தரவிட்டார்.
அதன் பிரகாரம் பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்ககோனின் ஆலோசனைக்கு அமைய குற்றப் புலனாய்வு பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன குற்றப்புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர், உப பொலிஸ் பரிசோதகர்களான மகதுங்க தெல்வத்த, ரத்னவீர உள்ளிட்ட சிறப்புக் குழு விசாரணைகளை ஆரம்பித்தது.
இந்த சிறப்புக் குழுவுக்கு மேலதிகமாக மேலும் 5 பொலிஸ் குழுக்களும் விசாரணைகளில் ஈடுபட்டிருந்தன.
இந் நிலையில் பிரதான பொலிஸ் விசாரணையை பாணந்துறை தெற்கு பொலிஸாரிடமிருந்து பொறுப்பேற்ற இந்த சிறப்பு பொலிஸ் குழு அதுவரை இடம்பெற்றிருந்த விசாரணைகளை அப்படியே தொடர்ந்தது.
மோப்ப நாய் வூசி யின் செய்கைகளால் உப பொலிஸ் பரிசோதகர் பலிஹவதெனவின் கொலையுடன் ஏதோ ஒரு வகையில் அவரது வீட்டில் இருந்த ஒருவருக்கு தொடர்பு இருக்க வேண்டும் என சிறப்பு பொலிஸ் குழு சந்தேகித்தது.
அது குறித்து ஆராய்ந்த போது கொலை இடம்பெற்ற இரவு வேளையில் இவ்வீட்டில் உபபொலிஸ் பரிசோதகரும் அவர் மனைவி ரத்ன ரஞ்சனியும் இரு பிள்ளைகளுமே இருந்துள்ளமை தெரிய வந்தது.
இந் நிலையில் தான் சிறப்புப் பொலிஸ் குழுவின் சந்தேகம் மனைவி ரத்ன ரஞ்சனி மீது விழுந்தது. எனினும் சிறப்புப் பொலிஸ் குழு அதனைக் காட்டிக் கொள்ளவில்லை.
ஏப்ரல் 8ஆம் திகதி புதன்கிழமை உப பொலிஸ் பரிசோதகரின் இறுதிக் கிரியைகள் இடம்பெற்று முடியும் வரையில் விசாரணைகளில் எவ்வித முன்னேற்றமும் இல்லாததைப் போன்றே பாவனை செய்து கொண்டு சிறப்புப் பொலிஸ் குழு தனது நடவடிக்கைகளை தொடர்ந்தது.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகரவின் தகவல்களின்படி இக்காலப் பகுதியில் சிறப்பு பொலிஸ் குழு ரத்ன ரஞ்சனியின் தொலைபேசி இலக்கத்தை வைத்து அறிவியல் தடயங்களை சேகரித்திருந்ததுடன் அவற்றை பகுப்பாய்வு செய்து வந்துள்ளது.
அதன்பயனாகவே உப பொலிஸ் பரிசோதகரான பலிஹவதெனவின் கொலையின் பின்னணியினை கண்டறிந்து சந்தேக நபர்களை கைது செய்ய முடிந்ததாக உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவான் குணசேகர சுட்டிக்காட்டுகிறார்.
இந்நிலையிலேயே உபபொலிஸ் பரிசோதகரின் கொலையானது ஒப்பந்த அடிப்படையில் செய்யப்பட்டது என்பதை சிறப்பு பொலிஸ் குழு வெளிப்படுத்தியது.
அறிவியல் உள்ளிட்ட தடயங்கள் ஊடாக உபபொலிஸ் பரிசோதகரின் மனைவி ரத்ன ரஞ்சனி இந்த கொலையுடன் ஏதேனும் ஒரு தொடர்பை கொண்டிருக்க வேண்டும் என சந்தேகித்த குற்றப்புலனாய்வு பிரிவின் சிறப்பு பொலிஸ் குழு அவரது இரு மகன்மாரையும் உறவினர் ஒருவரிடம் ஒப்படைத்து விட்டு அவரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அவரிடம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் கொலையாளியின் மர்ம முடிச்சுக்கள் அவிழ்ந்தன.
“சேர்…. எனது கணவர் எனக்கும் பிள்ளைகளுக்கும் சொல்லொணா சித்திரவதைகளை செய்தார். ஒழுங்காக உண்டு மகிழவோ உடுக்கவோ அவர் விடவில்லை.
அவரது இன்னல்களை பொறுக்க முடியாமலேயே நான் அவ்வாறு அவரை தீர்த்துக்கட்டினேன்..”என ரஞ்சனி கூறி முடிப்பதற்குள் பொலிஸார் அடுத்தடுத்து கேள்விகளை தொடுத்து கொலை தொடர்பில் அனைத்து விபரங்களையும் சேகரித்தனர்.
“நானும் பிள்ளைகளும் ஒவ்வொரு நாளும் கஷ்டப்பட்டோம். அவர் எனது சொத்துக்கள் அனைத்தையும் அவரது பெயருக்கு மாற்றிக்கொண்டார். எல்லா விதத்திலும் நாம் கஷ்டங்களை அனுபவித்தோம்.
குறைந்தபட்சம் உண்ணவோ உடுக்கவோ எமக்கு சுதந்திரம் இருக்கவில்லை. நான் காலையில் இருந்து இரவு வரை கடையில் கஷ்டப்பட்டேன். (கொலை செய்யப்பட்ட உபபொலிஸ் பரிசோதகர் பாணந்துறை நகரில் சில்லறைக்கடையொன்றுக்கு உரிமையாளர்.
காலை முதல் மாலை வரை ரஞ்சனியே அதனை நிர்வகித்துள்ளார். அதன் பின்னர் இரவு 10.00 மணிவரை வேலை விட்டு வரும் உபபொலிஸ் பரிசோதகர் நிர்வகித்துள்ளார்.) முட்டைகளை கூட எண்ணி பதுக்கினார்.
அரிசி மூடைகளை அடையாளமிட்டே வைத்தார். இந்த அட்டூழியங்களை பொறுத்துக் கொள்ள முடியாமலேயே அவரை கொலை செய்ய தீர்மானித்தேன்.
அது தொடர்பில் வீட்டின் அருகே உள்ள கோழிக்கடை முதலாளி பலந்தவிடம் ஒப்பந்தம் செய்தேன். 10000 ரூபாவை செலுத்தினேன்.
வேலை முடிந்ததும் 50000 ரூபா தருவதாக கூறினேன்” என ரத்ன ரஞ்சனி விடயங்களை வெளிப்படுத்த சிறப்பு பொலிஸ் குழு கோழிக்கடை முதலாளி பலந்தவை கைது செய்தது.
இந்த கைதைத் தொடர்ந்து கொலை எப்படி நடந்தது என்பதையும் ஏனைய சந்தேக நபர்களையும் புலனாய்வு பிரிவின் சிறப்பு பொலிஸ் குழு அடுத்தடுத்து கைது செய்தது.
10000 ரூபாவை கொடுத்து ரஞ்சனி கோழிக்கடை முதலாளி பலந்தவிடம் தனது கணவரை கொலை செய்ய ஒப்பந்தம் கொடுத்த பின்னர், பலந்தவே இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த சிலாவத்துறையைச் சேர்ந்த தனது பங்காளியான இந்திக பஸ்நாயக்கவை சேர்த்துக்கொண்டுள்ளான்.
அத்துடன் உபபொலிஸ் பரிசோதகரை கொலை செய்ய ரஞ்சனியின் மாமியாரான 78 வயதுடைய டீ.எம். சந்ராவதியும் பங்களிப்பு செய்துள்ளதை கண்டறிந்த பொலிஸார் அவரையும் கைது செய்தனர்.
தனது கணவர் மீது ஆத்திரத்தில் இருந்த ரஞ்சனி அவரை கொலை செய்யும் திட்டத்தை முதலில் மாமியாரான சந்ராவதியிடம் கூறியுள்ளார்.
உபபொலிஸ் பரிசோதகருடன் ஏற்கனவே கோபமாக இருந்துள்ள சந்ராவதி பழிவாங்க சந்தர்ப்பம் பார்த்து கொலை குறித்து ஆலோசனை வழங்கி கோழிக்கடை முதலாளிக்கு ஒப்பந்தம் கொடுக்கும் வரை ஒத்தாசை செய்துள்ளார்.
இந்நிலையில் தான் கடந்த 5ஆம் திகதி ஞாயிறன்று கடையை மூடி விட்டு வீட்டுக்கு வந்த உபபொலிஸ் பரிசோதகர் உடல் அலம்பி விட்டு இரவு உணவை உட்கொண்டுள்ளார்.
இந்த உணவில் தூக்க மாத்திரைகளை ரஞ்சனி கலந்திருந்ததால் அவர் சாப்பிட்டு சிறிது நேரத்திலேயே ஆழ்ந்த நித்திரைக்கு சென்றுள்ளார்.
இந்த தூக்க மாத்திரை யோசனையை சந்தேக நபரான இந்திக பஸ்நாயக்கவே ரஞ்சனிக்கு சொல்லிக்கொடுத்துள்ளதுடன் அவரே அம்மாத்திரைகளை வாங்கியும் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் அன்று இரவு கத்தியுடன் உள் நுழைந்த இந்திக்கவும் பலந்தவும் எவ்வித சிரமமும் இன்றி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த உபபொலிஸ் பரிசோதகர் பலிஹவதெனவை கழுத்தறுத்து கொலை செய்து விட்டு கத்தியை அருகில் உள்ள புதர் காட்டுக்குள் வீசி விட்டு தப்பிச்சென்றுள்ளனர்.
பொலிஸார் அந்த கத்தியை ஏற்கனவே மீட்ட நிலையில் இந்திக்க பஸ்நாயக்கவை மன்னாரில் வைத்து சிறப்பு பொலிஸ் குழு கைது செய்தது.
இந்நிலையில் கைதான நால்வரையும் கடந்த 23 ஆம் திகதி பாணந்துறை நீதிவான் ருச்சிர வெலிவத்த முன்னிலையில் ஆஜர்படுத்திய பொலிஸார் இந்திக்கவிற்கு எதிராக 48 மணி நேர தடுப்பு காவல் உத்தரவை பெற்றுக்கொண்டனர்.
ஏனையோரை எதிர்வரும் மே மாதம் 5 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார். 48 மணி நேர தடுப்புக்காவல் விசாரணையின் பின் இந்திக்கவும் மே 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
மனைவியும் அவர் மாமியாரும் சேர்ந்து கதைத்து முடிவெடுத்து கோழிக்கடை முதலாளிக்கும் அவர் நண்பருக்கும் ஒப்பந்தம் கொடுத்து உபபொலிஸ் பரிசோதகர் பலிஹவதென கொலை செய்யப்பட்டதாக சாட்சியங்கள் ஊடாக நிரூபணமாகியுள்ளன.
வழக்கு தொடரும் நிலையில் உறவினர்கள் வசம் இருந்த ரஞ்சனியின் பிள்ளைகள் இருவரும் சிறுவர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
விட்டுக்கொடுப்புகளும் புரிந்துணர்வும் இல்லாத இல்லற வாழ்க்கை எவ்வளவு அபாயகரமானது என்பதற்கு இந்த சம்பவம் ஒரு சான்று. தந்தை இறக்க தாய் சிறையில் வாட பிள்ளைகள் இங்கே காப்பகத்தில் அநாதைகள் ஆகின்றனர். சதி செய்பவர்கள் வாழ்வில் விதி விளையாடுகின்றது.
-எம்.எம்.எம். பஸீர்-