வல்வெட்டித்துறையில் 29.11.1970 அன்று குட்டிமணி, தங்கத்துரை மற்றும் பலருடன் நான் நடத்திய கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு கேட்டு அனுமதி மறுக்கப்பட்டிருந்த தம்பி பிரபாகரன் பின்னர்

அந்தக் கூட்டம் முடியும் வரை காத்திருந்து பின்னர் நான் வெளியே வந்தபோது என்னை   சனசமூக நிலையத்தின் முன்றலில் தனது நண்பன் சுரேஷ்குமாருடன் சந்தித்ததாக  எனது முன்னைய பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.

எனது இந்தப் பதிவில்,  எமக்கிடையிலான இந்த முதல் சந்திப்பில் நாங்கள் பேசிய  விடயங்கள் பற்றியும் பின்னர் இடம்பெற்ற சில சம்பவங்கள் பற்றியும் விபரிக்கிறேன்.

சுமார் இரண்டு மணிநேரம் வெளியே காத்து நின்ற பிரபாகரன் நான் கூட்டம் முடிந்து வெளியே வந்ததும் என்னிடம் வந்து தன்னை அறிமுகம் செய்து நான் முதல் நாள் சிதம்பரா கல்லூரியில் நடத்திய கூட்டத்தில் தெரிவித்த கருத்துக்களில் ஏற்பட்டிருந்த சந்தேகங்களை தீர்த்துக்கொண்டார்.

சனசமூக நிலையத்தில் சந்தித்த நாம் நடந்தபடியே  சுரேஷ்குமாரின் வீட்டை நோக்கி கதைத்துக்கொண்டு சென்றிருந்தோம்.

இதற்கிடையில் சுரேஷ்குமாரின் வீடும் வந்து விட்டிருந்தது.   எமது கலந்துரையாடல் சுரேஷ்குமாரின் வீட்டுக்குள்ளேயும் தொடர்ந்தது.

தமிழ் சிங்களம் என்ற மொழி அடிப்படையிலான தரப்படுத்தல் முறைமை பற்றி மேலும் விளக்கமாக என்னிடம் கேட்டுக்கொண்ட பிரபாகரன் தன்னையும் மாணவர் பேரவையில் ஒரு உறுப்பினராக சேர்த்துக்கொள்ளுமாறு வேண்டிக்கொண்டார்.

பிரபாகரன் அப்போது உயர்தர வகுப்பு மாணவனாக இல்லாமல் இருந்தமையினால் தயக்கம் கட்டிய நான் உயர்தர வகுப்பு வரும் வரை பொறுத்திருக்குமாறு வேண்டினேன்.

ஆனால், மாணவர் பேரவையில் சேர வேண்டும் என்ற பிரபாகரனின் பிடிவாதத்தையும் பற்றுறுதியினையும் என்னால் தட்டிக்கழிக்க முடியவில்லை.

அன்றைய தினம் சனசமூக நிலையத்தில் கூட்டம் முடிவடைந்த பின்னர் மாணவர் பேரவையில் இணைவதற்கு சில மாணவர்கள் கோரியிருந்தபோதும் மறுத்திருந்த நான், பிரபாகரன் என்னுடன் ஆர்வமாக கதைத்த விதம் காரணமாக அவரையும் சுரேஷ்குமாரையும் பேரவையில் இணைத்துக்கொள்ள சம்மதித்தேன்.

V.pirapakaran-19712-217x300இளவயதில் பிரபாகரன்

1970 ஆம் ஆண்டு நவம்பர் 23 ஆம் திகதி ஸ்தாபிக்கப்பட்ட பின்னர் தமிழ் மாணவர் பேரவையில் இணைந்து கொண்ட முதல் மாணவர்களாக பிரபாகரனும் அவரது நண்பன் சுரேஷ்குமாரும் இருந்தனர்.

அவர்களது உறுப்புரிமைக்கான ஆதாரமாக மஞ்சள் நிறத்திலான அங்கத்துவ பற்றுச்சீட்டு அவர்களுக்கு வழங்கப்பட்டது.

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு பிரபாகரன் செய்துள்ள மகத்தான பங்களிப்புக்கான முதலாவது அடியாக இது அமைந்தது.

1954 ஆம் ஆண்டு  பிறந்த  பிரபாகரன் 1970 ஆண்டு   தமிழ் மாணவர் பேரவையில் இணைந்தபோது தனது பதினாறாவது பிறந்தநாளைக் கடந்து இரண்டு நாட்கள் மட்டுமே ஆகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அன்றைய தினம், சந்திப்பின் முடிவில், இருவரையும் பரீட்சைக்கு சிறந்த முறையில் தயாராகுமாறு கூறிவிட்டு பரீட்சையின் பின்னர் மீண்டும் சந்திப்பதாக கூறி விடைபெற்றேன்.

என்னுடனான சந்திப்பு மிகுந்த மன நிறைவை கொடுத்திருக்க வேண்டும். பேருந்து நிலையம் வரை வந்து அவர்கள் இருவரும் என்னை வழி  அனுப்பி வைத்தனர்.

யாழ்ப்பாணம் திரும்பிச் சென்ற நான் மாணவர் பேரவை பிரசார நடவடிக்கைகளில் தீவிரமாகி விட்டேன்.

க. பொ . த (சாதாரண தர) பரீட்சை வரை காத்திருக்குமாறும் பரீட்சையில் கவனம் செலுத்துமாறும் பிரபாகரனுக்கு நான் அறிவுரை கூறியிருந்தபோதிலும்

, அவரது மனதில் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த விடுதலைத் தீ அவரை பரீட்சை பற்றி கவனம் செலுத்த விடவில்லை.

அவருடனான கலந்துரையாடலில் அபோதைய கல்வி அமைச்சர் பதியுதீன் பற்றியும் கூறியிருந்தேன்.

சந்தர்ப்பம் ஒன்றை பயன்படுத்தி பதியுதினுக்கு பாடம் புகட்டுவதற்கு பிரபாகரன் முடிவு செய்கிறார். வல்வெட்டித்துறை வேம்படிப்பகுதியில் அமைந்திருந்த யோககுரு என்னபவரின் வீட்டினுள் அதற்கான வேலைகளை பிரபாகரன் இரகசியமாக மேற்கொண்டார்.

யோககுரு தென்னிலங்கையில் மகரகம என்ற இடத்தில் உணவுச்சாலை ஒன்றினை நடத்திவந்தார். அப்போது பாடசாலை விடுமுறைக் காலம் ஆகையால் பிரபககனின் நண்பனும் யோககுருவின் இளைய மகனுமான சுராஜன் தவிர அவரது குடும்ப உறுப்பினர்கள் எல்லோரும் மகரகம சென்றிருந்தனர்.

Osmania-opening-300x221பதியுதீன்

சுராஜனுடன் இணைந்து  படிப்பதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து புறப்பட்டுசெல்லும் பிரபாகரன் அங்கு பதியுதினுக்கு எதிரான எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றை திட்டமிட்டார்.

தனது தந்தையாரின் காக்கிநிற நீண்டகாற் சட்டையுடன் பழைய மேல்ச்சட்டை ஒன்றை பயன்படுத்தி தனது நம்பிக்கைக்குரிய நண்பர்களுடன் இணைந்து பதியுதினின் கொடும்பாவியை ஒன்றை தயாரித்தார்.

தனது தகப்பனாரின் உடைகளுக்குள்  வைக்கோல் மற்றும் பழையதுணி,  பஞ்சு ஆகியவற்றை அடைந்து கொடும்பாவியை தயாரித்தனர்.

இந்த செயற்பாட்டில் பிரபாகரனுடன் சிவபாலி என்ற சிவபாலன்,  குலம் என்ற குலசிங்கம், தம்பியையா எனப்பட்ட இராஜேந்திரா மற்றும் நடேஸ் ஆகியோர்களுடன் 1968ம் ஆண்டுமுதல் எப்பொழுதும் பிரபாகரனுடன் உற்ற நண்பனாக இருந்து வந்த  மகேந்திரராஜா என்ற மோகனும் பங்கெடுத்துக்கொண்டனர்.

1970 டிசம்பர் மாதம் நடைபெற்ற க.பொ.த சாதாரணதர இறுதிப்பரீட்சையின் இறுதி  நாளன்று அதிகாலையில் இருள்  சூழ்ந்திருந்த வேளையில் வேம்படியிலுள்ள வேப்ப மரத்தின் தெற்குத்திசையாக நீண்டிருந்த கிளையொன்றில் பதியுதீன் என எழுதப்பட்ட கொடும்பாவியை இவர்கள் கட்டித் தொங்கவிட்டனர்.

தமிழீழத்துக்கான  விடுதலைப்போராட்டத்தில் தம்பி பிரபாகரன் தலைமையேற்று நடத்திய முதலாவது அரச எதிர்ப்பு நிகழ்வாக இந்த நடவடிக்கையை குறிப்பிடலாம்.

இந்த சம்பவம் பின்னாளில் பிரபாகரன் கூறக் கேள்விப்பட்டது. அவர் பற்றிய பல தகவல்களையும் , சம்பவங்களையும் பின்னர் விரிவாக பதிவிடுகிறேன்.

இதற்கிடையில் யாழ்ப்பாணத்தின் பல பாகங்களிலும் பிரசார நடவடிக்கைகளை மேற்கொண்டு பல மாணவர்களை மாணவர் பேரவையில் இணைத்து விட்டிருந்தோம்.

இதன்பின்னர்,  கிளிநொச்சி, மன்னார் முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களுக்கும் சென்று பிரசாரம் செய்து புதிய அங்கத்தவர்களை இணைத்துக் கொண்டோம்.

1970 ஆம் ஆண்டின் இறுதி நாட்களில் பெரும் எண்ணிக்கையான மாணவர்களை இணைந்து ஒரு பலம் மிக்க அமைப்பாக மாணவர் பேரவையை கட்டி எழுப்பி இருந்தோம்.

அத்துடன் எமது பிரசாரங்கள் மாணவர்கள்  மத்தியில் மட்டுமன்றி வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் மத்தியில் ஒரு பெரும் அரசியல் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி இருந்தது.

tamil-eelam-map

1971ம் ஆண்டின்  முதல் இரு மாதங்களில் மாணவர் பேரவை வடக்கு மற்றும் கிழக்கு மகாணங்களில் தனது அரசியல் செயற்திட்டங்களை முன்னெடுக்கத் தொடங்கி இருந்தது.

யாழ்ப்பாணத்திலும் சுன்னாகத்திலும் பேரவைக்கான பொதுமக்கள் தொடர்பு காரியாலயங்கள் திறந்து வைக்கப் பட்டன.

அரசியல் கட்சிகள் போல் அன்றி பதிவுசெய்யப்படாத ஒரு அமைப்பாக இருந்த போதிலும், வடக்கு கிழக்கு மாகாணங்களில் மட்டுமன்றி கொழும்பு மற்றும் இடங்களில் இருந்தும் பல அரச ஊழியர்களும் தமிழ் இனஉணர்வாளர்களும் கூட எமக்கு ஆதரவளித்தனர்.

தமிழ் மாணவர்களுக்கு எதிரான தரப்படுத்தல் முறைமை தமிழ் மாணவர் பேரவையின் தோற்றத்துக்கு பிரதான காரணியாக இருந்தபோதிலும், தமிழ் மக்களுக்கெதிரான சிங்கள அரசாங்கங்களின் தொடர்ச்சியான அடக்குமுறையானது தமிழ் இன விடுதலை உணர்வையும் அதற்கான போராட்ட குணத்தையும் மாணவர் பேரவையின் உறுப்பினர்கள் மத்தியில் பெரிதும் வளர்த்து விட்டிருந்தது.

tamilmakkalkura-blogspot-maaveerar-naal2(குட்டிமணி மற்றும் தங்கத்துரை)

தமிழ் மக்களின் விடுதலை நோக்கி தீரம் மிக்க இளைஞர்களான பெரியசோதி, சிவகுமாரன், குட்டிமணி, தங்கத்துரை, நடேசுதாசன்  ஆகியோர் உட்பட பல இளைஞர்கள் பற்றுறுதியுடன் போராட்ட நடவடிக்கைகளை ஆரம்பித்தனர்.

சிங்கள அரசாங்கமும் அதன் இனவாத அரசியல்வாதிகள் ஒருபுறமும், மறுபுறம் சிங்கள அரசாங்கங்களின் தமிழர் விரோத செயற்பாடுகளுக்கு உடந்தையாக சிங்கள அரசாங்கங்களுக்கு ஆதரவளித்து வந்த தமிழ் அரசியல் வாதிகளும் எதிரிகளாக தென்பட்டனர்.

குறிப்பாக அரசுடன் இணைந்திருந்த இடதுசாரிக் கட்சியினைச் சேர்ந்த தமிழ் அரசியல்வாதிகளின் செயற்பாடுகளை  மாணவர் பேரவையினால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

Alfredகுறிப்பாக, அந்தக் காலத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கு ஆதரவாக செயற்பட்டு வந்த சிங்கள அடிவருடியான யாழ் நகர மேயர் ‘அல்பிரட் தங்கராசா துரையப்பா’ மீது எமது  கோபம் முதலில் திரும்புகிறது.

ஆனால், இந்த அல்பிரட் துரையப்பா யாழ்ப்பாண நகரத்தினை நவீனமயப்படுத்துவதிலும் அழகுபடுத்துவதிலும் பெரும் பணி ஆற்றியிருந்தார்.

யாழ்ப்பாணத்தின் பிரபல விளையாட்டு அரங்கான  ’துரையப்பா ஸ்ரேடியத்தினை’  நிர்மாணித்த பெருமையும் இவரையே சாரும்.

அத்துடன் வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாண பொது நூலகத்தை  முதன் முதலில் திறந்துவைத்தவரும் இவர்தான்.

இருந்தபோதிலும், அதிகார முகம் காரணமாக அளவுக்கு அதிகமாக சிங்கள அரசியல் வாதிகளுடன் உறவாடி சிங்கள கட்சிகளை குறிப்பாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை யாழ்ப்பணத்தில் வளர்ப்பதில் அக்கறை காட்டினார்.

யாழ் மாவட்ட சுதந்திர கட்சி அமைப்பாளர் பதவியை பெற்றுக்கொண்டு   அன்றைய தபால் தந்தி அமைச்சராக இருந்த செல்லையா குமாரசூரியருடன் போட்டி போட்டுக்கோண்டு அக்கட்சியை யாழ்ப்பாணத்தில் வளர்ப்பதில் குறியாக இருந்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் உயர்மட்ட உறுப்பினர்களுடன் இவருக்கு நல்ல உறவு இருந்தது. சிங்கள அடிவருடி என்பதற்கு மேலாக தமிழ் மக்களின் கலாசாரத்துக்கு குந்தகம் விளைவிக்கும் செயற்பாடுகளில் இவர் ஈடுபட்டமை எமக்கு அவர் மீதான கோபத்தை அதிகரித்திருந்தது.

யாழ்ப்பாணத்துக்கு வரும் சிங்கள அரசியல்வாதிகளை திருப்திப்படுத்தி பதவி மற்றும் அதிகாரம் என்பவற்றை பெற்றுக்கொள்வதற்காக இவர் பெண்களை  பயன்படுத்தினார்.

இதனால், 1971 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அல்பிரட் துரையப்பாவை கொலை செய்வதற்கு நானும் சிவகுமாரனும் முயற்சிக்கிறோம்.

இவரை கொலை செய்வதற்கு எவ்வாறு டைனமைட் மூலம் குண்டொன்றை தயாரித்தோம்,  எவ்வாறு இந்த குண்டுத் தாக்குதலை நடத்தினோம், ஏன் இந்த தாக்குதல் வெற்றியளிக்கவில்லை, எவ்வாறு சிவகுமாரன் கைது செய்யப்பட்டான் என்பன போன்ற விடயங்களை எனது அடுத்த பதிவில் குறிப்பிடுகிறேன்.

-சத்திய சீலன்-

முன்னைய பதிவுகள் ……

பாடசாலைத் தோழர்களுடன் பிரபாகரன் கலந்து கொண்ட முதல் கூட்டம்: ஈழ விடுதலைப் போராட்டம் – (பாகம்-4)

சிவகுமாரன் வைத்த குண்டு: ஈழ விடுதலைப் போராட்டம் – (பாகம்-3)

ஈழத் தமிழ் இயக்கத்தின்’ தோற்றமும் வீழ்ச்சியும்: ஈழ விடுதலைப் போராட்டம் – (பாகம்-2)

தமிழ் மாணவர் பேரவையின் தோற்றம்: ஈழ விடுதலைப் போராட்டம் – (பாகம்-1)

Share.
Leave A Reply