யாழ்ப்பாணம் சுன்னாகம் ஐயனார் கோயிலடிக்கு அண்மையிலுள்ள வெள்ளவாய்க்கால் வீதியில் இடி மின்னல் தாக்கியதில் மின்சார வயர் அறுந்து விழுந்து ஏற்பட்ட அனர்த்தத்தில் 30 வயது தந்தையும் அவரது 9 வயது மகனும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் இன்று திங்கட்கிழமை (04.5.2015) பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
இன்று திங்கட்கிழமை பிற்பகல் கடுமையான மழை கொண்டிருந்த வேளையில் சுன்னாகத்திலுள்ள சலூனுக்கு சைக்கிளில் தலைமயிர் வெட்டுவதற்காகச் சென்று விட்டுச் சுன்னாகம் ஐயனார் கோயிலுக்கு அண்மையிலுள்ள வெள்ள வாய்க்கால் வீதியால் தமது வீடு நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தனர்.
அந்த வீதியில் முழங்காலுக்கு மேல் வெள்ளம் காணப்பட்டமையால் தந்தையார் தனது மகனை சைக்கிளால் இறக்கி நடாத்தி அழைத்து வந்துள்ளார்.
அப்போது குறித்த பகுதியில் காணப்பட்ட தென்னைமரத்தில் இடி விழுந்ததால் மின்சார வயர் அறுந்து திடீரெனக் கீழே விழுந்துள்ளது.
இதன் போது ஏற்பட்ட மின் தாக்கத்தில் சிக்கி இருவரும் வெள்ளத்துக்குள் மயங்கிச் சரிந்துள்ளனர். அதன் பின்னர் 2.30 மணியளவில் அப் பகுதிப் பொதுமக்கள் இருவரையும் மீட்டு அம்புலன்ஸ் மூலம் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.
இவர்களைப் பரிசோதித்த வைத்தியர்கள் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
இடி விழுந்தமையால் தென்னை மரம் கருகிக் காணப்பட்டதுடன் மின்சார வயரிலிருந்து மின்கடத்தப்பட்டுக் கொண்டுமிருந்தது. இதனால் அப் பகுதிப் பொதுமக்களும் வீதியால் பயணிப்பவர்களும் பெரிதும் அச்சமடைந்தனர்.
சம்பவம் தொடர்பில் உடனடியாக சுன்னாகம் மின்சார சபைக்கும்,பொலிஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. எனினும் மின்சார சபையினர் அசிரத்தையுடன் செயற்பட்டதாகவும்,பிற்பகல் 4 மணியளவிலேயே சம்பவ இடத்திற்கு வருகை தந்ததாகவும் பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
குறித்த அனர்த்தத்தில் சிக்கி மல்லாகம் தெற்குக் கல்லாரைப் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான பாலச்சந்திரன் றஜீவன்(வயது-30), அவரது ஒரேயொரு ஆசை மகனான சுன்னாகம் திருஞானசம்பந்தர் வித்தியாசாலையில் தரம்-4 இல் கல்வி பயிலும் றஜீவன் நிருஜன் (வயது-9) ஆகிய இருவருமே உயிரிழந்தவர்களாவார்.
சம்பவம் தொடர்பில் தெல்லிப்பழைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த சம்பவத்தால் மல்லாகம் தெற்கு கல்லாரைப் பகுதி முழுவதும் சோகமயமாகக் காணப்படுகிறது
மனைவி மற்றும் பிள்ளைகளை துன்புறுத்திய துன்னாலை வேம்படி பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தரை எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியில் வைக்குமாறு பருத்தித்துறை பதில் நீதவான் உருத்திராபதி விஜயராணி திங்கட்கிழமை (04) உத்தரவிட்டார்.
சந்தேகநபரை சிறைச்சாலை அதிகாரிகளின் மேற்பார்வையில் தெல்லிப்பளை மனநல வைத்தியசாலையில் அனுமதித்து, அதன் வைத்திய அறிக்கையை எதிர்வரும் வழக்கு தவணையின் போது, சமர்பிக்குமாறும் நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
சந்தேகநபரான குடும்பஸ்தர் தினந்தோறும் மதுபோதையில் வீட்டுக்குச் சென்று மனைவியை தாக்குவதுடன், பிள்ளைகளையும் துன்புறுத்தி வந்துள்ளார். பிள்ளைகளை பாடசாலை செல்ல விடாது தடுத்தும் வந்துள்ளார்.
மனைவி நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததற்கு அமைய விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சந்தேகநபரான குடும்பஸ்தரை திங்கட்கிழமை (04) கைது செய்து நீதவானின் வாசஸ்தலத்தில் சந்தேகநபர் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.
யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை சூரியவத்தை பகுதியிலுள்ள வீடொன்றில் திங்கட்கிழமை (04) காலை 2 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய் பெறுமதியான நகைகள் திருடப்பட்டுள்ளதாக, உரிமையாளர் முறைப்பாடு செய்துள்ளார் என ஊர்காவற்றுறை பொலிஸார் கூறினர்.
வீட்டிலுள்ளவர்கள் யாழ். நகருக்குச் சென்றிருந்த நேரம், வீட்டுக்குள் நுழைந்து அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த 2 பவுண் சங்கிலி, 2 பவுண் காப்பு, ¾ பவுண் மோதிரம் என்பன திருடப்பட்டுள்ளன.
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் கூறினர்