ஒரு நாட்டின் அமைச்சரவை மாற்றப்படுவது இயல்பு. காலத்தின் தேவைகளைக் கருத்திற்கொண்டு உரியவர்களுக்கு உரிய இடத்தை அளிப்பது மாற்றத்தின் நோக்கமாக இருக்கும். இத்தகைய அமைச்சரவை மாற்றம் பெரும்பாலும் உள்நாட்டு அரசியலுடன் தொடர்புபட்டதாக இருக்கும்.
கடந்த வாரம் சவூதி அரேபியாவின் அமைச்சரவையும் மாற்றப்பட்டிருக்கிறது. இது வழமையான அமைச்சரவை மாற்றத்தைப் போன்றதாக இல்லை.
ஒரு குடும்பத்தினதும், தேசத்தினதும், பிராந்திய மற்றும் அரசியலினதும் செல்நெறியைத் தீர்மானிப்பதாக அமைந்துள்ளது.
சவூதி அரேபியாவின் மன்னராக இருப்பவர், 79 வயதுடைய சல்மான். அந்த இராச்சியத்தின் தேசபிதா என்று வர்ணிக்கப்படும் மன்னர் அப்துல் அஸீஸின் புதல்வர்களில் ஒருவர்.
மன்னர் சல்மான் அரியாசனம் ஏறி நான்கு மாதங்களே ஆகின்றன. தமது சகோதரர் மன்னர் அப்துல்லாவின் மறைவை அடுத்து அவர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்.
இவர் கடந்த வாரம் தமது சகோதரரின் மகன் மொஹம்மது பின் நாயெவ் என்பவரை முடிக்குரிய இளவரசராக அறிவித்துள்ளார்.
The new Crown Prince, Mohammed bin Nayef
இளவரசர் மொஹம்மது பின் நாயெவ் சவூதியின் பலமான உட்துறை அமைச்சராகத் திகழ்கிறார். இவருக்கு 50 வயது.
சமகால மன்னரின் மகனான இளவரசர் மொஹம்மட் பிரதி முடிக்குரிய இளவரசராக நியமிக்கப்பட்டுள்ளார். பாதுகாப்பு அமைச்சராகத் திகழும் இளவரசர் மொஹம்மட் மிகவும் இளையவர். அவருக்கு 34 வயது தான் ஆகிறது.
Saudi Arabian Prince Muqrin Bin Abdulaziz Al Saud
மன்னர் சல்மான், தமது மற்றொரு சகோதரரான முக்ரின் பின் அப்துல் அஸீஸ் என்பவரை முடிக்குரிய இளவரசர் என்ற பதவியில் இருந்து நீக்கியிருக்கிறார்.
இவருக்கு 69 வயது. இளவரசர் முக்ரியின் தாயார் யேமன் நாட்டைச் சேர்ந்தவர். அவர் மன்னர் அப்துல் அஸீஸின் வைப்பாட்டி என்ற அந்தஸ்தில் வைத்துப் பார்க்கப்படுபவர்.
இந்த அமைச்சரவை மாற்றம், சவூதி அரேபியாவின் அரியாசனத்தைக் கைப்பற்றப் போகும் இளவரசர்களின் வரிசையை முற்றுமுழுதாக மாற்றியமைத்துள்ளது.
இதனை மேலோட்டமாக ஆராய்கையில், மன்னர் சல்மான் முதியவர்களை ஓரங்கட்டி விட்டு இளையவர்களுக்கு வாய்ப்பு அளித்துள்ளார் என்ற தோற்றம் ஏற்படும்.
இந்தத் தோற்றம் ஒரு மாயை தானென்பது கசப்பான விடயம். இதற்குள் குடும்பப் பிரச்சினை தீவிரமாக மறைக்கப்படுகிறது.
சவூதி அரேபியாவைப் பொறுத்தவரையில், அதன் ஆட்சிக் கட்டமைப்பில் வயதுக்கு முக்கியத்துவம் அளிக்கும் பாரம்பரியம் இருந்தது. மூத்தவர்கள் கௌரவிக்கப்படுவார்கள்.
இன்று இளவரசர் முர்க்கின் சடுதியாக அப்புறப்படுத்தப்பட்டு, இளவரசர் முஹம்மது பின் நாயெவ்பை முடிக்குரிய இளவரசராகவும், தமது மகனை அவருக்கு அடுத்தபடியான முடிக்குரிய இளவரசராகவும் நியமித்தமை குறித்து சவூதி மக்கள் ஆச்சரியப்படுகிறார்கள்.
இதற்குரிய முக்கியமான காரணம் இந்த வரிசை தவறானது என்பது தான். மாமன்னர் அப்துல் அஸீஸூக்கு 45 புதல்வர்கள் உள்ளார்கள் என்பது பொதுவான மதிப்பீடு.
இவர்களில் பலர் உயிருடன் இருக்கையில், சவூதியின் முடிக்குரிய இளவரசர்கள் வரிசையில் இரண்டாவது இடத்தைப் பெற தமது இளைய மகனுக்கு அவர் வாய்ப்பளித்திருக்கிறார்.
இங்கு தான் கைகேயி நாடகம் நடந்திருப்பதாகக் கூறப்படுகிறது. மன்னர் சல்மான் தமது மூன்றாவது மனைவியை அதிகம் நேசிப்பவர். அந்த மனைவியின் மகன் தான், இளவரசர் மொஹம்மட்.
தமது மனைவியின் சொல்லைக் கேட்டு இளவரசர் மொஹம்மட்டுக்கு மன்னராகக் கூடிய வாய்ப்பைப் பெற்றுக் கொடுத்திருப்பது சவூதி மக்களுக்கு பிடிக்கவில்லை.
இளவரசர் மொஹம்மட் கடுமையாக உழைப்பாளியாக இருந்தாலும், அவருக்கு போதிய அனுபவம் இல்லை என்பது மக்களின் கருத்து.
மறுபுறத்தில், இந்த இளைஞரின் திறமையானவர் என்பதை நிரூபிப்பதற்காக அவருக்கு குருவி தலையில் பனங்காய் போன்றதொரு பாரிய சுமை ஒப்படைக்கப்பட்டுள்ளது.
யேமன் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவூதி அரேபியா முன்னெடுக்கும் இராணுவ நடவடிக்கைக்கு பொறுப்பாக இருப்பவர், இளவரசர் மொஹம்மட் தான்.
அது அரேபிய வளைகுடா பிராந்தியத்தில் சவூதி அரேபியாவின் வல்லாதிக்கத்தை நிலைநாட்டக் கூடிய முக்கியமான நடவடிக்கையாகும்.
மன்னர் சல்மான் மேற்கொண்டுள்ள அமைச்சரவை மாற்றத்தில் இன்னொரு முக்கியமான அம்சத்தையும் குறிப்பிட வேண்டும்.
அது, அமெரிக்காவை சமாளிக்கக்கூடிய வெளிவிவகாரக் கொள்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் நோக்கத்துடன் தொடர்புடையதாகும்.
முடிக்குரிய இளவரசராக நியமிக்கப்பட்ட முஹம்மது பின் நாயெவ், அமெரிக்காவுடன் நெருங்கிப் பணியாற்றியவர்.
2001ஆம் ஆண்டு தொடக்கம் அமெரிக்காவின் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைத்த அனுபவம் அவருக்கு உண்டு. அவரை அமெரிக்காவும் மதிக்கிறது.
மறுபுறத்தில், மன்னர் சல்மான் சவூதி தூதுவர் அப்துல் அல் ஜூபைரை புதிய வெளிவிவகார அமைச்சராக நியமித்துள்ளார்.
இவர்கள் இருவரும் அமெரிக்காவிடம் பேரம் பேசக்கூடிய ஆற்றல் கொண்டவர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கதாகும். இத்தகைய ஆற்றல் சமகால அரசியலில் தவிர்க்க முடியாத தேவையாக மாறியிருக்கிறது.
அரேபிய வளைகுடாவின் சமகால அரசியலை ஆராய்ந்தால், அங்கு சவூதி அரேபியாவிற்கும் ஈரானுக்கும் இடையிலான ஆதிக்கப்போட்டி நிலவுவதைக் காணலாம்.
இந்த ஆதிக்கப் போட்டியில் அமெரிக்கா தந்திரமான போக்கை அனுசரிக்கிறது. ஒரு புறத்தில் யேமன் கிளர்ச்சியாளர்க்கு எதிராக சவூதி அரேபியா முன்னெடுக்கும் போருக்கு அமெரிக்கா ஆதரவளிக்கிறது. மறுபுறத்தில் ஈரானுடன் அணுவாயுத உடன்படிக்கையை ஏற்படுத்தும் முயற்சிகளில் ஈடுபடுகிறது.
யேமன் மீதான வான்வழித் தாக்குதலில் உதவி செய்வதாக அமெரிக்கா கூறினாலும், அந்த உதவிகள் வாய் வார்த்தைகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதென சவூதி அரேபியா கருதுகிறது.
இஸ்லாமிய இராச்சிய கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான போராட்டத்தில் மாத்திரமன்றி, சிரியாவின் பஷார் அல் அசாத்திற்கு எதிரான போரிலும் அமெரிக்கா கூடுதலாக உதவி செய்ய வேண்டும் என்பது சவூதி அரேபியாவின் எதிர்ப்பார்ப்பாகும்.
சவூதி அரேபியாவைப் பொறுத்தவரையில், அமெரிக்காவைப் பகைத்துக் கொண்டும் எதுவும் செய்ய முடியாது. அதற்காக, அமெரிக்கா ஈரானின் பக்கம் சாய்வதையும் அனுமதிக்க முடியாது.
இந்தப் பிரச்சினையை சமாளிக்க வேண்டுமானால், அமெரிக்காவுடன் பேரம் பேசி அதனைத் தன்பக்கம் ஈர்ப்பது தான் சிறந்த வழி.
இளவரசர் முஹம்மது பின் நாயெவ் தலைமையிலான குழுவிற்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளதென்றால், அதன் பின்புலம் இதுவே.
அமைச்சரவையில் முதியவர்கள் ஓரங்கட்டப்பட்டு வயது குறைந்தவர்களுக்கு வாய்ப்பளிப்பதில் இன்னொரு நன்மையும் இருக்கிறது.
தனது போராட்டத்திற்குள் சவூதி இளைஞர்களை ஈர்த்துக் கொள்ள முனையும் இஸ்லாமிய இராச்சிய கிளர்ச்சிக்குழு, சவூதி அரேபியாவின் மன்னர் குடும்பம் கறைபடிந்தது என்ற பிரசாரத்தை தீவிரமாக முன்னெடுக்கிறது.
அமைச்சரவையில் இளம் தலைமுறையினருக்கு வாய்ப்பளிப்பதன் மூலம், அந்தப் பிரசாரத்திற்கு பதிலடி கொடுக்க முடியும்.
இன்று சவூதி சமூகத்தில் வேலைவாய்ப்பின்மை என்ற பிரச்சினை இருக்கிறது. வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்கள் அரச குடும்பத்தின் மீது அதிருப்தி கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில், அரச குடும்பத்தைச் சேர்ந்தவர் அல்லாத அப்துல் அல் ஜூபைரை நியமித்ததன் மூலம் இதற்குப் பரிகாரம் காண சவூதி மன்னர் முனைந்திருக்கிறார்.
எதிர்கால சவூதி அரேபியாவில் தமக்கும் வாய்ப்புண்டு என்ற நம்பிக்கையை ஏற்படுத்துவது அவரது நோக்கமாக இருக்கலாம்.
-சதீஸ் கிருஸ்ணபிள’ளை-