நடிகை திரிஷாவுக்கும், படஅதிபர் வருண்மணியனுக்கும் 2 மாதங்களுக்கு முன் நடந்த திருமண நிச்சயதார்த்தம் திடீரென ரத்தாகி திருமணம் நின்று போனது படஉலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.

நிச்சயதார்த்தத்துக்கு முன் திரிஷாவும், வருண்மணியனும் தனி விமானத்தில் ஜோடியாக சுற்றினார்கள். தாஜ்மகாலுக்கும் சென்று வந்தனர்.

இருவீட்டார் சம்மதத்துடன் இவர்களது நிச்சயதார்த்தம் நடந்தது. இதில் இருவீட்டார் உறவினர்களும் பங்கேற்றார்கள். மறுநாள் நடிகர்– நடிகைகளுக்கு தடபுடலாக விருந்து அளித்தும் அசத்தினார்கள்.

இவ்வருடம் இறுதியில் இருவரும் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டனர். ஆனால் தற்போது கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டார்கள். திருமணத்தை திரிஷாதான் நிறுத்தினார் என்று செய்தி பரவி உள்ளது.

திருமணத்துக்கு பிறகு திரிஷா நடிக்கக்கூடாது என்று மணமகன் வீட்டார் தரப்பில் நிபந்தனை விதிக்கப்பட்டதாம்.

திருமணத்துக்கு முன்னால் கைவசம் உள்ள படங்களை முடித்துவிடும்படியும் கூறினார்களாம். அதோடு கடைசியாக வருண்மணி தயாரிக்கும் படமொன்றில் நடிக்க கால்ஷீட் கேட்கப்பட்டது என்கின்றனர்.

ஆனால், சினிமாவுக்கு முழுக்கு போட திரிஷாவுக்கு விருப்பம் இல்லை. திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து சினிமாவில் நடிப்பேன் என்று கூறியுள்ளார்.

அதோடு புதிதாக வந்த படங்களுக்கும் கால்ஷீட் கொடுத்துள்ளார். தொடர்ந்து கதைகளும் கேட்டுள்ளார். இது வருண்மணியின் தரப்பினருக்கு பிடிக்கவில்லை.

இதனால் இருவருக்கும் பிளவு ஏற்பட்டது. வருண்மணியனை சந்திப்பதையும் பேசுவதையும் திரிஷா தவிர்த்தார். வருண்மணியன் குடும்ப நிகழ்ச்சி ஒன்றிலும் பங்கேற்காமல் புறக்கணித்து விட்டார்.

அவர் தயாரிப்பதாக இருந்த படத்தில் இருந்தும் விலகி விட்டார். இதனால் திரிஷாவுக்கு பதில் அப்படத்தில் நடிக்க டாப்சியை தேர்வு செய்தனர்.

திருமணம் நின்று போனதற்கு இதுவே காரணம் என கூறப்படுகிறது. நிச்சயதார்த்த மோதிரத்தையும் திரிஷா கழற்றி விட்டதாக கூறப்படுகிறது.

இருவரையும் சமரசப்படுத்த நடந்த முயற்சியும் தோல்வி அடைந்து விட்டது. தற்போது திரிஷா மீண்டும் படங்களில் பிசியாக நடிக்க துவங்கியுள்ளார்.

Share.
Leave A Reply