புதுடெல்லி: இந்துக்கடவுள் ராமர் பாகிஸ்தானில் தான் பிறந்தார் என்றும்,  உண்மையான ராமஜென்ம பூமி பாகிஸ்தானில்தான் உள்ளது என்றும்  ஆய்வாளர்கள் கூறுவதாக அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரிய உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரிய உறுப்பினர் அப்துல் ரஹீம் குரேஷி டெல்லியில் நேற்று தனது புத்தகத்தை வெளியிட்டுப் பேசினார். மஜ்லீஸ் இ இத்தகாதுல் முஸ்லீமின் கட்சி தலைவர் அசாதுதீன் உவைசி புத்தகத்தை வெளியிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் அப்துல் ரஹீம் குரேஷி பேசுகையில்,” உண்மையான ராம ஜென்ம பூமி பாகிஸ்தானில் தான் உள்ளது.

அயோத்தியில் அல்ல. பிரபல தொல்லியல் துறை ஆய்வாளரான ஜஸ்ஸூ ராம் மேற்கொண்ட ஆய்வுகளின் முடிவுகளை இந்த புத்தகத்தில் நான் மீண்டும் வெளியிட்டுள்ளேன்.

அவரது ஆய்வின்படி அயோத்தியில் ராமன் பிறக்கவில்லை. ராமன் பிறந்த இடம் தற்போது பாகிஸ்தானில் உள்ளது.

இந்திய பிரிவினைக்கு முன்பாக அந்த இடத்தை` ராமன் தேரி` என்று அழைத்தார்கள். தற்போது அது `ரஹ்மான்தேரி` என்று அழைக்கப்படுகிறது.

எனவே உண்மையான ராம ஜென்ம பூமி  தற்போது பாகிஸ்தானில் உள்ள ஹரப்பாவில் அமைந்துள்ளது. அயோத்தியில் நடத்தப்பட்ட 3 தொல்லியல் அகழ்வில் ராமன் பிறந்ததற்கான அடையாளங்கள் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

மாறாக ராமன்தேரியில் அதற்கான தடயங்கள் இருப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்” என்றார்.

அசாதுதீன் ஒவைசி பேசுகையில்,  பாபர் மசூதி விவகாரத்தில் முஸ்லிம்களுக்கு உரிய நீதி கிடைக்க செய்ய வேண்டும்.

வகுப்புவாத பேச்சுகளை பேசிய வாஜ்பாய், அத்வானி போன்றோருக்கு மத்திய அரசு பாரத ரத்னா, பத்ம பூஷன் விருது கொடுத்து கவுரவித்துள்ளது வருத்தத்திற்குரியது.

பாபர் மசூதி இடிப்பதற்கு முன்பாக அவர்கள் இருவரும் பேசிய பேச்சுக்களால்தான்  நாட்டில் மிகப் பெரிய அளவில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன.

எனவே அனைத்து முஸ்லிம் எம்.பி.களும் டெல்லியில் கூடி பாபர் மசூதி குறித்து ஆலோசனை நடத்த வேண்டும். இந்த வழக்கை உச்சநீதி மன்றம் விரைந்து விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும்” என்றார்

Share.
Leave A Reply