விழுப்புரம்: லட்சக்கணக்கான திருநங்கைகள் பங்கேற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா இன்றுடன் நிறைவடைகிறது.
செவ்வாய் இரவு பூசாரி கையினால் தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள் இன்று அரவான் பலியிடப்பட்ட உடன் விதவைக் கோலம் பூண்டு ஒப்பாரி வைத்து அழுதனர்.
விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா கூவாகத்தில் உள்ள கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.
இந்த விழாவில் பங்கேற்று கூத்தாண்டவரை வழிபடுவதற்காக மும்பை, டெல்லி, புனே, சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்தும் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான திருநங்கைகள் பங்கேற்றனர்.
இந்த திருவிழாவில் கூத்தாண்டவர் எனப்படும் அரவாண் சுவாமியை திருநங்கைகள் தங்களது கணவராக ஏற்றுக்கொண்டு கோவிலில் தாலி கட்டிக் கொள்வார்கள். அரவாண் களப்பலிக்கு பின்னர் திருநங்கைகள் அனைவரும் விதவை கோலம் ஏற்பார்கள்.
கூத்தாண்டவர் கோவில்
கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் சித்திரைப் பெருவிழா, கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி சாகை வார்த்தலுடன் தொடங்கியது. மே 4ஆம் தேதி கம்பம் நிறுத்தும் நிகழ்ச்சியும், 5ஆம் தேதியான நேற்று இரவு சுவாமிக்கு கண் திறத்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றன.
தாலி கட்டிய திருநங்கைகள்
திருநங்கைகள் அனைவரும் நேற்று மணப்பெண் போல தங்களை அலங்கரித்து கொண்டு அங்குள்ள கடைகளில் புதிதாக மஞ்சள் கயிறு மற்றும் தாலியை வாங்கி வந்து கோயில் முன் கூடியிருந்தனர். பின்னர், கோயிலில் உள்ள பூசாரிகளின் கையால் தாலி கட்டிக் கொண்டனர்.
கும்மியடித்து கொண்டாட்டம்
தங்களுக்கு திருமணமான மகிழ்ச்சியை கொண்டாடும் வகையில் நேற்று இரவு முழுவதும் கோயிலில் கும்மியடித்து ஆடிப்பாடி மகிழ்ந்தனர். இந்த விழாவில், திருநங்கைகள் மட்டுமன்றி வேண்டுதலுக்காக ஆண்களும் பூசாரி கைகளால் தாலி கட்டிக் கொண்டனர்.
அரவாண் தேரோட்டம்
இன்று அதிகாலை அரவாண் சிரசுக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் அரவாண் சிரசு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. திருநங்கைகள் கூடி நின்று கும்மியடித்து ஆடிப்பாடினார்கள். இதையொட்டி காலை 7 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது.
பாட்டு பாடிய திருநங்கைகள்
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தார்கள். தேர் புறப்பட்டவுடன் விவசாயிகள் தாங்கள் கொண்டு வந்த காய்கறிகளையும், தானியங்களையும் அரவாண் மீது வீசி வணங்கினார்கள். தேர் வலம் வந்தபோது திருநங்கைகள் கற்பூரம் ஏற்றி பாட்டு பாடி மகிழ்ந்தார்கள்.
அரவாண் களப்பலி
பின்னர் தேர் அழிகளம் நோக்கி புறப்பட்டது. அப்போது திருநங்கைகள் ஒப்பாரி வைத்து அழுதனர். மதியம் 1.30 மணிக்கு அழிகளம் எனப்படும் நத்தம் பகுதிக்கு தேர் சென்றடைந்தது. அங்கு அரவாண் களப்பலி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
விதவைக் கோலத்தில்
அப்போது திருநங்கைகள் தங்கள் தலையில் சூடியிருந்த மல்லிகை பூக்களை பிய்த்து எறிந்தார்கள். நெற்றியில் உள்ள குங்கும பொட்டை அழித்தார்கள்.
வளையல்களை உடைத்தெரிந்தார்கள். தாலியை அறுத்தார்கள். பின்னர் அவர்கள் கிணற்றுக்கு சென்று குளித்து வெள்ளை சேலை அணிந்து விதவை கோலம் பூண்டு சோகமயமாக ஊருக்கு புறப்பட்டார்கள். அந்த காட்சி அனைவரின் கண்களையும் கலங்க வைத்தது.