காலில் ஏற்பட்ட வலிக்கு சிகிச்சை பெற சென்ற மாணவியுடன் சில்மிசம் புரிந்த ஆயுர்வேத வைத்தியங்கள் செய்யும் பரியார் ஒருவர் பொதுமக்களால் நையப்புடைக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவின் உடையார்கட்டு இருட்டுமடுவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தச்சம்பவம் நடந்துள்ளது. 54 வயதான ஆசாமியே வாங்கிக்கட்டியுள்ளார்.
17வயதான பபடசாலை மாணவிக்கு கால்பாதத்தில் கடந்த சில தினங்களாக தொடர் வலி இருந்திருக்கிறது. சம்பவதினத்திற்கு இரண்டு நாட்கள் முன்னதாக அவரது கால் நன்றாக வீங்கியுள்ளது. இதனையடுத்து, அந்த பகுதியில் உள்ள பரியாரிடம் தாயார் அழைத்து சென்றிருக்கிறார். பரியார் தனிமையில் வசித்து வருகிறார்.
மாணவியை பரிசோதித்த பரியார், சில மூலிகைகளை வைத்து பாதத்தில் கட்டியுள்ளார். மறுநாள் மதியம் மீண்டும் மாணவியை வருமாறு சொல்லியுள்ளார்.
மறுநாள் சற்று தாமதமாகுமென்றும், தாயார் வந்து காத்திருந்து சமையல் வேலைகளை தாமதப்படுத்த வேண்டாமென இனிக்க இனிக்க பேசியுள்ளார்.
பரியாரின் பேச்சை நம்பிய தாயார், மாணவியை தனிமையில் அனுப்பியுள்ளார்.
சிகிச்சைக்கு தனிமையில் வந்த மாணவியை தனது குடிசைக்குள் நீண்டநேரம் காக்க வைத்த பரியார், பின்னர் மாணவியின் காலிற்கு எண்ணெய் தடவ வேண்டுமென கூறி, அவரை படுக்க வைத்துள்ளார்.
பின்னர் எண்ணெய் தடவும் பாணியில் எல்லைமீறி செயற்பட்டுள்ளார். இந்த இம்சையை பொறுத்துக் கொள்ள முடியாத மாணவி சத்தமிட்டபடி அவரிடமிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
அவரது அவலக்குரலால் அந்தப்பகுதியில் ஆட்கள் குழுமிவிட்டார்கள். விடயத்தையறிந்து மாணவியின் பெற்றோரும் அங்கு வந்துவிட, எல்லோரும் சேர்ந்த பரியாரை பிரித்து மேய்ந்துள்ளனர்.
அங்கிருந்த மரத்தில் கட்டிவைத்து அவரை அடித்துள்ளனர். பின்னர் கிராமசேவகர் தலையிட்டு, நிலைமையை கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளார்.
மறுநாள் திங்கட்கிழமை இதனை விசாரித்து, பொலிசாரிடம் அறிவிப்பதென அவர் மக்களை சமாதானப்படுத்தினார்.
எனினும், பரியார் திங்கட்கிழமை காலையில் இருட்டுமடுவிலிருந்து தலைமறைவாகிவிட்டார்.