புனே: மகாராஷ்டிர மாநிலம் புனேவைச் சேர்ந்த 20 வயது மாணவர், முஸ்லீம்களுக்கு எதிராக வெறித்தனமான டிவிட் போட்டு தற்போது கைதாகியுள்ளார்.
மிகவும் மோசமான முறையில் அவர் போட்டிருந்த டிவிட்டுக்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்தன.
இதையடுத்து அந்த மாணவர் மீது போலீஸார் மத துவேஷ தடுப்புப் பிரிவு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
அந்த நபரின் பெயர் அமிதேஷ் சிங். 20 வயதாகும் இவர் முதலாமாண்டு சிவில் என்ஜீனியரிங் மாணவர் ஆவார். டிவிட்டரில் மே 2ம் தேதி அவர் ஒரு துவேஷமான, வெறித்தனமான டிவிட்டைப் போட்டிருந்தார்.
அதில், 3000 முஸ்லீம்களை நாளையே கொல்லுங்கள் என்று போட்டிருந்தார். இதைப் பார்த்த பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.
பல்வேரு பிரபலங்களும் இந்த இளைஞர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிவிட்டரில் கருத்து தெரிவித்திருந்தனர்.
மேலும் தனது டிவிட்டர் பக்கத்தில் தான் பாஜகவைச் சேர்ந்தவன் என்றும், பாரதிய ஜனதா இளைஞர் பிரிவின் புனே நகர துணைத் தலைவர் என்றும் போட்டிருந்தார் அமிதேஷ் சிங். மேலும் மோடியை டிவிட்டர் பக்கத்தில் அவர் பாலோ செய்தும் வந்தார்.
இதனால் கூடுதல் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் தனது டிவிட் போஸ்ட்டை அழித்து விட்டார் அமிதேஷ் சிங். ஆனால் அவர் போட்டிருந்த டிவிட் காட்டுத் தீ போல பரவி விட்டது.
இதையடுத்து புனே போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். விசாணையில் குதித்தனர். அப்போதுதான் அவர் ஒரு மாணவர் என்று தெரிய வந்தது.
அதேசமயம், அவர் பாஜகவைச் சேர்ந்தவர் இல்லை என்றும் தெரிய வந்ததாம். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் சதீஷ் நிகாம் கூறுகையில், தனது செயலுக்காக அந்த மாணவர் வருத்தம் தெரிவித்தார்.
தற்போது அந்த போஸ்ட் நீக்கப்பட்டு விட்டது. இருப்பினும் அவரது போஸ்ட்டை பலர் ஷேர் செய்துள்ளனர். தற்போது சிங்கைக் கைது செய்துள்ளோம்.
அவர் மீது மதத்தின் பெயரால் இரு பிரிவினருக்கு இடையே துவேஷத்தைத் தண்டி விடுதல், குறிப்பிட்ட மதத்தினரின் உணர்வுகளை வேண்டும் என்றே தூண்டுவது, சைபர் தீவிரவாத குற்றச்சாட்டு ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர் என்றார்.