மொரோக்கோவில் இருந்து 8 வயது சிறுவன், ஸ்பெயின் நாட்டிற்கு சூட்கேசில் கடத்தப்பட்டு உள்ளான் என்று ஸ்பெயின் போலீசார் தெரிவித்து உள்ளனர்.
19-வயது இளம்பெண், செயுத்தா விமான நிலையத்திற்கு சூட்கேசுடன் வந்துள்ளார். அப்போது சூட்கேஸ் ஸ்கேனிங் கருவியில் வைக்கப்பட்டு உள்ளது.
சூட்கேசில் 8 வயது சிறுவன் இருப்பது, சோதனையில் தெரியவந்தது. உடனடியாக அந்த பெண்ணை தடுத்து நிறுத்தி அதிகாரிகள் சூட்கேசை திறுந்து பார்த்தனர். அப்போது சிறுவன் உள்ளே இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
உடனடியாக சிறுவனை மீட்டு அதிகாரிகள், குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 8 வயது சிறுவன் அபு என்றும், ஐவரி கோஸ்டை சேர்ந்தவர் என்றும் தெரியவந்து உள்ளது.
உடனடியாக சூட்கேசை தூக்கிவந்த 19 வயது பெண்ணை அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெண்ணை நீதிபதி முன்னர் ஆஜர்படுத்தினர்.
சிறுவனின் தந்தையையும் அதிகாரிகள் கைது செய்து உள்ளனர். அவரும் சட்டவிரோதமாக ஸ்பெயின் நாட்டிற்குள் நுழைய முயன்றபோது சிக்கிக் கொண்டார்.
பெட்டியில் கடத்தப்பட்ட சிறுவன்
அவரிடம் விசாரிக்கப்பட்டு வருகிறது. சிறுவனின் தந்தையும் ஐவரி கோஸ்டை சேர்ந்தவர், ஆனால் ஸ்பெயினின் கனாரே தீவில் வாழ்ந்து வருகிறார்.
தன்னாட்சி நகரமான செயுத்தாவின் வழியாக ஸ்பெயின் நாட்டிற்கு ஊடுருவ இதுபோன்று வருடத்திற்கு ஆயிரக்கணக்கானோர் சட்டவிரோத செயல்கள் ஈடுபட்டு சிக்கிக் கொள்கின்றனர்.
ஆப்பிரிக்காவில் இருந்து சட்டவிரோதமாக ஊடுருபவர்களால் ஸ்பெயினில் பெரும் பிரச்சனை நிலவுகிறது. கடந்த 2014 -ம் ஆண்டில் மட்டும் சுமார் 16 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் சட்டவிரோதமாக ஊடுருவ முயற்சி செய்தனர் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதில் 5 ஆயிரம் பேர் வெற்றிகரமாக ஸ்பெயின் நாட்டிற்குள் ஊடுருவிவிட்டார்கள் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது. கடந்த 2013ம் ஆண்டில் 3 ஆயிரம் பேர் ஊடுருவி உள்ளனர்.
சிறுவன் கடத்தப்பட்டது, ஸ்கேனிங்கில் கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பான புகைப்படங்கள் உலக மீடியாக்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.