சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உட்பட நால்வரை விடுதலை செய்து கர்நாடக உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி சி.ஆர்.குமாரசாமி வெளியிட்டுள்ள இன்றைய தீர்ப்பில், கீழ் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இதனால் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது நெருங்கிய தோழி சசிகலா மற்றும் சசிகாலாவின் உறவினர்களான சுதாகரன், இளவரசி ஆகியோரும் விடுதலையாகியுள்ளார்கள்.
இதே வழக்கில் வழங்கப்பட்டிருந்த தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது போல, அவருக்கு விதிக்கப்பட்டிருந்த அபராத தொகையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இருந்தபோதும் இதே வழக்கில் மேல்முறையீடு செய்யவும் அனுமதி வழங்கி இன்றைய உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அஇஅதிமுகவின் தொண்டர்கள் இந்த தீர்ப்பை வரவேற்று பல்வேறு பகுதிகளிலும் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள்.
சுப்ரமணிய சுவாமி “அதிர்ச்சி”
ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் இன்று திங்களன்று வெளியாகியுள்ள தீர்ப்பு அதிர்ச்சி அளிப்பதாக சுப்ரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி சி.ஆர்.குமாரசாமி வெளியிட்டுள்ள இன்றைய தீர்ப்பில் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரும் விடுவிக்கப்பட்டுள்ளது குறித்து சுப்பிரமணியன் சுவாமி கூறுகையில் தான் இதை தெரிவித்தார்.
அத்தோடு இந்த வழக்கில் தான் மேல்முறையீடு செய்யப்போவாதாகவும் அவர் அப்போது குறிப்பிட்டார்.
இந்த மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜனவரி மாதம் 5ஆம் தேதி தொடங்கியது.
நீதிபதி சி.ஆர். குமாரசாமி முன்பாக விசாரணைகள் 45 நாட்களுக்கு நடைபெற்று வந்தன. பின்னர் கடந்த மார்ச் 11ஆம் தேதி தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
முன்னதாக, இந்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கியிருந்த உச்சநீதிமன்றம், மே மாதம் 12ஆம் தேதிக்குள் இந்த வழக்கை முடிக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டிருந்தது.
இதற்கிடையில், இந்த வழக்கில் அரசுத் தரப்பு வழக்கறிஞராக பவானி சிங் நியமிக்கப்பட்டது செல்லாது என தி.மு.கவின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பவானி சிங் முன்வைத்த வாதத்தை ஏற்றுக்கொள்ளக்கூடாது என கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி உத்தரவிட்டது.
அதில் அரசு தரப்பு வழக்கறிஞராக பவானி சிங் நியமிக்கப்பட்டது முறைகேடான விவகாரம்தான் என்று கூறியிருந்த இந்திய உச்சநீதிமன்றம், எனினும் மறுவிசாரணை நடத்த தேவையில்லை என்றும் குறிப்பிட்டிருந்தது.
அத்தோடு தி.மு.கவைச் சேர்ந்த க.அன்பழகனும் கர்நாடக அரசு நியமிக்கும் வழக்கறிஞரும் தங்கள் தரப்பு வாதத்தை எழுத்து மூலமாக தங்கள் வாதத்தைத் தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிடப்பட்டது.
மீண்டும் முதல்வராகிறார் ஜெயலலிதா; விரைவில் பதவியேற்பு!
சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்ட அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, மீண்டும் தமிழக முதலமைச்சராக பதவியேற்க உள்ளார்.
பதவியேற்பு எப்போது?
வரும் புதன்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமையன்று அவர் முதல்வராக பதவியேற்கலாம் என்று அதிமுக வட்டரங்கள் தெரிவிக்கின்றன. தீர்ப்பை தொடர்ந்து தலைமை செயலகத்தில் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சர்கள் போயஸ் தோட்டம் வருகை
இந்நிலையில் தீர்ப்பை தொடர்ந்து தமிழக அமைச்சர்கள் அனைவரும் போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதா இல்லம் முன்பு கூடி உள்ளனர்.
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்
இதனிடையே ஜெயலலிதாவை மீண்டும் முதலமைச்சராக, அதாவது அதிமுக சட்டமன்ற தலைவராக தேர்ந்தெடுக்க அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது.
அதிமுகவினர் கொண்டாட்டம்
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து போயஸ் தோட்டம், அதிமுக தலைமை அலுவலகம், மாவட்ட அதிமுக அலுவலகங்கள் முன்னர் திரண்டுள்ள அதிமுகவினர் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் ஆடிப்பாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.