தமிழ் படங்களுக்கு தற்போது உலகம் முழுவதும் பல இடங்களில் வரவேற்பு உள்ளது.
அந்த வகையில் இந்த வருடம் வந்த பல படங்கள் அமெரிக்காவில் வசூல் சாதனை படைத்துள்ளன.
இந்நிலையில் அமெரிக்காவில் 8 வயது ஆகும் ஒரு சிறுமி சைவம் படக்குழுவினர்களுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
இதில் ‘நான் தமிழ் படங்களே பார்த்தது இல்லை, ஆனால், உத்ரா விருது வாங்கியுள்ளார் என்று அறிந்து இந்த படத்தை பார்த்தேன்.எனக்கு படம் மிகவும் பிடித்திருந்தது.
ஆனால், ஏன் இந்த படத்தில் கூட காதல்? காதல் இல்லாமல் உங்களால் படமே இயக்க முடியாதா? தமிழ் படங்களில் ஒரு ஆண் ஒரு பெண்ணை காதலிக்காமல் படமே இல்லையா? என எழுதியுள்ளார்.
சைவம் திரைப்பட விமர்சனம்!
தொடர்ந்து முன்னணி ஹீரோக்களை வைத்து, பெரிய பட்ஜெட்டில் படம் இயக்கி வந்த இயக்குநர் விஜய்,
முதல் முறையாக புதுமுகங்களை வைத்து குறைந்த பட்ஜெட்டில் இயக்கியிருக்கும் படம் ‘சைவம்’. பெரிய ஹீரோக்களை வைத்து படம் இயக்கிய விஜய், அவர்களுக்காக திரைக்கதை அமைக்க, இப்படத்தின் மூலம் சினிமாவை ரசிக்கும் ரசிகர்களுகாக திரைக்கதை அமைத்திருப்பது, படத்தின் ஒவ்வொரு காட்சிகளிலும் தெரிகிறது.
ஒரு வேளை சாப்பாட்டுக்கே, ஓடுவது, பறப்பது, நீந்துவது என்று வகை வகையான் அசைவ உணவுகளை சமைக்கச் சொல்லி தனது சம்சாரத்திற்கு ஆடர் போடும் நாசர்.
தனது வீட்டில் உள்ள ஆடு, மாடு மற்றும் கோழிகளுக்கு ராமு, சோமு, கண்ணன் என்று மனிதர்களின் பெயர்களை வைத்து வளர்த்து வருகிறார்.
இந்த கூட்டத்தில் உள்ள பாப்பா என்ற சேவல், நாசருடன் கிராமத்திலேயே வாழ்ந்து வரும் அவருடைய மகனின் குழந்தையான சாராவின் பேவரைட்.
இந்த நிலையில், வெளிநாடுகளில் வாழ்ந்துக்கொண்டிருக்கும் நாசரின் மகள், மகன், அவர்களுடைய பிள்ளைகள் என அனைவரும் கோவில் திருவிழாவிற்காக கிராமத்திற்கு வருகிறார்கள்.
மூன்றாண்டுக்கு ஒருமுறை வரும், அவர்களின் வருகைக்காக காத்திருக்கும் நாசர், அவர்களுடன் சந்தோஷமாக நாட்களை கழிக்கிறார்.
அந்த நேரத்தில் குடும்பத்தில் ஒரு அசம்பாவிதம் நடக்க, அதற்கு கடவுளுக்கு வேண்டிக்கொண்ட நேர்த்திக்கடன் எதையாவது செய்யாமல் மறந்திருப்பீர்கள், அதை செய்தால் சரியாகிவிடும், என்று கோவில் பூசாரி சொல்கிறார்.
இதை கேட்ட நாசரின் மனைவி, ஒரு சமயம் நமது குடும்பத்தை விபத்தில் இருந்து காப்பாற்றியதற்காக எல்லைச் சாமிக்கு சேவல் ஒன்றை நேந்திவிட்டோம், ஆனால் அதை கோவிலுக்கு கொடுக்காமல், இன்னமும் வீட்டில் தான் வைத்திருக்கிறோம்,
அதனால் தான் இப்படி நடந்தது என்று கூற, குடும்பத்தில் உள்ள அனைவரும், தங்களுக்கு ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சனைகளுக்கும் இது தான் காரணம் என்று கருதுகிறார்கள்.
இதனால், திருவிழாவின் போது பாப்பா என்ற அந்த சேவலை, பலிகொடுத்துவிட வேண்டும் என்று குடும்பமே கோரஸ் பாடுகிறது.
அதே சமயம், இவர்களிடம் இருந்து பாப்பாவை காப்பற்ற முயற்சிக்கிறார் சிறுமி சாரா.
இந்த நிலையில் திடீரென்று சேவல் காணாமல் போகிறது. சாமிக்காக நேந்திவிட்ட சேவலை பலிகொடுத்தால் தான் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் தீரும் என்று குடும்பத்தில் உள்ள அனைவரும் நம்ப, சேவலை தேடுவதில் தீவிரம் காட்டுகிறார்கள்.
காவல் நிலையத்தில் புகார் கொடுக்கும் அளவுக்கு சேவல் தேடுவதில் தீவிரம் காட்டும் இவர்கள் சேவலை கண்டுபிடித்து பலி கொத்தார்களா இல்லையா, அதே சமயம் இவர்களிடம் இருந்து சேவலை காப்பாற்ற நினைக்கும் சாரா என்ன செய்தார், என்பது தான் க்ளைமாக்ஸ்.
கதைக்களம் சிறியதாக இருந்தாலும், விஜய் அதை கையாண்ட விதமும், காட்சிப்படுத்திய விதமும், திருக்குறளைப் போன்று ரொம்ப அர்த்தத்தை வெளிப்படுத்துகிறது.
நாசர் மற்றும் காமெடி நடிகர் ஜார்ஜ் ஆகியோரைத் தவிர மற்ற நடிகர்கள் அனைவரும் புதுமுகங்கள் தான்.
இவர்களுக்கு பெரிதாக நடிப்பு வராது என்பதை புரிந்துக்கொண்ட விஜய், அதையே படத்தின் பலமாக்கி, அவர்களுடைய கதாபாத்திரங்களை எதார்த்தமாக நடமாட விட்டிருக்கிறார்.
எந்த வேடம் கொடுத்தாலும் நாசர் என்ற நடிகரை ஓரம் கட்டிவிட்டு, அந்த வேடமாகவே மாறும் சக்திக் கொண்ட நாசர், இந்த படத்திலும் தனது சக்தியை காண்பித்திருக்கிறார்.
வயதான கதாபாத்திரத்திற்காக அவருக்கு போடப்பட்டுள்ள கெட்டப்பையும், மேக்கப்பையும் உண்மையனதாக ஆக்கியுள்ளது நாசரின் நடிப்பு.
நாசர் வீட்டில் வேலை பார்க்கும் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஜார்ஜ் மற்றும் அவரது மனைவியாக வரும் மாலதி இருவரும் காமெடி ஏரியாவில் கலக்கியிருக்கிறார்கள்.
நாசரின் மகன் பாஷா இப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகியுள்ளார். பாலிவுட் வரவோ என்று நினைக்க அவைக்கிறது பாஷாவின் தோற்றம்.
அவருடைய துறு துறு நடிப்பு கவருகிறது. அதுவும் அத்தைப் பெண்ணைப் பார்ப்பதற்காக, அவர் செய்யும் அலப்பறைகள் ரசிக்க வைக்கிறது.
பாஷாவின் அத்தைப் பெண்ணாக நடித்துள்ள துவாராவின் நடிப்பும் அழகுதான். பிறகு எப்போதும் ஆங்கிலம் பேசிக்கொண்டு திரியும் அந்த சுட்டி வில்லனின், சுட்டித்தனமும் ரசிகக் வைக்கிறது.
முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள குழந்தை நட்சத்திரம் சாரா, நடிப்பில் ரொம்பவே தேர்ச்சிப் பெற்றிருக்கிறார். காட்சிகளை உணர்ந்து, எக்ஸ்பிரஸன்கள் கொடுத்திருக்கும் இவரை இயக்குநர் விஜய் ரொம்ப நன்றாகவே வேலை வாங்கியுள்ளார்.
ஜி.வி.பிரகாஷ்குமாரின் இசையில் பாடல்கள் மொலாடியாக திரைகக்தைக்கு ஏற்றவாறு அமைந்திருக்கிறது. பின்னணி இசையில் ரொம்பவே மெனக்கெட்டுள்ள மனுஷன், தனது இசையால் படத்திற்கு என்ன செய்ய வேண்டுமோ அதை சிறப்பாகவே செய்திருக்கிறார்.
சேவலை விரட்டும் காட்சிகளில் ஒளிப்பதிவாளர் நீராவ்ஷா என்ன பாடு பட்டிருப்பாரோ, அதையெல்லாம் வெளிக்காட்டிக் கொள்ளாமல் செட்டிநாட்டு வீடுகளையும், அந்த கிராமத்தையும் ரொம்ப அழகாக காண்பித்திருக்கிறார்.
ஒரு வீட்டினுள் முழுப்படமும் நகர்ந்தாலும், அது ஒரே ஒரு லோக்கேஷன் தான் என்ற எண்ணமே ஏற்படாத வகையில் காட்சிகளை படமாக்கியிருக்கும் அவருக்கு பெரிய சபாஷ் போடலாம்.
எபெக்ட்ஸ் என்ற பெயரில், காட்சிகளை ரசிக்க முடியாமல் செய்யும் எடிட்டர் ஆண்டனிக்கு என்ன ஆனதோ, அந்த மாதிரியான எந்த வெட்டி வேலையையும் செய்யாமல், நிதானமாக கத்திரிப் போட்டிருக்கிறார். இதையே பாலோ பண்ணுங்க ஆண்டனி சார்.
காணாமல் போன சேவல் எங்கு இருக்கிறது என்பதை இடைவேளையின் போதே நமக்கு காண்பித்துவிடும் இயக்குநர் விஜய், அது இருக்கும் இடத்தை மற்றவர்கள் எப்படி தெரிந்துக்கொள்ளப் போகிறார்கள் என்பதை ரசிக்கும்படி சொல்லியிருக்கிறார்.
படத்தின் க்ளைமாக்ஸ் என்ன என்பதை சிலர் யூகித்தாலும், படத்தின் மீதான சுவாரஸ்யம் குறையாமல் பார்த்துக் கொள்கிறது பாஷா, துவரா ஜோடியின் காதலும், அதனால் அவர்கள் குடும்பத்தில் ஏற்படும் திடீர் மோதலும்.
மொத்தத்தில் தலைப்புக்கு ஏற்றவாறு அனைத்து தரப்பு மக்களும் பார்க்க கூடிய அளவுக்கு ஒரு சத்தான சைவ உணவை தான் சமைத்திருக்கிறார் இயக்குநர் விஜய்.
இத்தனை நாட்களாக இந்த படத்தை ஏன் எடுக்கவில்லை? என்று விஜயை ரசிகர்கள் கேள்வி கேட்கும், அளவுக்கு கவித்துவமாக இப்படத்தை இயக்கியிருக்கிறார்.
பெரிய ஹீரோக்களை வைத்து படங்களை இயக்கியபோது இயக்குநர் விஜய்க்கு கிடைக்காத அங்கீகாரம், ‘சைவம்’ படத்தின் மூலம் கிடைக்கப்போவது உறுதி.
– ஜெ.சுகுமார்.