ஜனாதிபதியின் பாதுகாப்பு வளையத்தை ஊடறுக்கும் அளவுக்கு அவரது பாதுகாப்பு பலவீனமாக இருந்தது ஏன் என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.
ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் பாதுகாப்பு வளையத்தைக் கடந்து சென்ற பின்னரே, இராணுவக் கோப்ரலிடம் கைத்துப்பாக்கி இருப்பதைக் கண்டறிந்து வெளியேற்றியிருக்கிறார் விசேட அதிரடிப்படை அதிகாரி.
அம்பாந்தோட்டையில் நடந்த- ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்ற, ஸ்ரீலங்காசுதந்திரக் கட்சிக் கூட்டத்தில், நாமல் ராஜபக் ஷவின் பாதுகாப்புக்காகச் சென்றிருந்த, இராணுவ கோப்ரல் ஒருவர், துப்பாக்கியு டன் நுழைந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக உருவெடுத்திருக்கின்றன.
கொமாண்டோ படைப்பிரிவைச் சேர்ந்த கோப்ரல் சேனக குமார என்ற அந்த இராணுவ அதிகாரி தனது கைத்துப்பாக்கியுடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அருகிலேயே சென்றிருந்தார்.
இந்த விவகாரம் குறித்து வெளியாகும் செய்திகள் அனைத்தும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பவே செய்திருக்கின் றன.
ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுக் கொண்டிருந்த போது, அலரிமா ளிகையில், ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வதற்கான சதித்திட்டம் தீட்டப்பட்டதாக முன்னர் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதுகுறித்து அரசாங்கத்தின் சார்பில், குற்ற ப்புலனாய்வுப் பிரிவிடம் முறைப்பாடு செய்யப்பட்டது. அதையடுத்து, விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டன.
ஆனாலும், அதுகுறித்த மேல் நடவடிக்கைகள் ஏதும் இன்னமும் எடுக்கப்படவில்லை. சட்டமா அதிபரின் ஆலோசனைக்காக காத்திருப்பதாக, பொலிஸ் தரப்பு கூறுகிறது.
அலரி மாளிகையில் எந்தச் சூழ்ச்சியும் நடக்கவில்லை என்று மஹிந்த ராஜபக் ஷ தரப்பு திரும்பத் திரும்பக் கூறி வருகிறது.
அதேவேளை அரச தரப்போ, ஏதோ நடந்தது என்றும், ஆனால், சரியான ஆதாரங்கள் இல்லை என்று மழுப்புகின்ற நிலைக்கு வந்திருக்கிறது.
இதில் உண்மைதான் என்ன என்ற கேள்வி மக்களிடம் இருந்தாலும், அதனைத் தெளிவுபடுத்த யாரும் தயாராக இல்லை. இந்தநிலையில், தற்போதைய அரசாங்கத் தரப்பு அலரி மாளிகைச் சூழ்ச்சி என்று கதை கட்டி விட்டதோ என்று மக்கள் சந்தேகிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
சரியான ஆதாரங்களைத் திரட்டி குற்றச்சாட்டுகளை முன்வைக்கத் தவறினால், இதுபோன்ற நிலை ஏற்படுவது தவிர்க்க முடியாதது.
தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்த ஆரம்பத்தில் முன்னைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கம் மீது முன்வைத்த குற்றச்சாட்டுகள் பல பின்னர் காணாமற் போயின அல்லது கைவிடப்பட்டன.
எனவே, அலரி மாளிகைச் சதித்திட்டம் குறித்த உண்மைகள் வெளிப்படுத்தப்படாத வரையில், அதுவும், பொய்யாக இருக்கலாமோ என்ற கருத்தையே ஏற்படுத்தும்.
ஜனாதிபதியாகத் தெரிவாக முன்னரே, மைத்திரிபால சிறிசேனவின் பாதுகாப்பு கேள்விக்குறியான ஒன்றாகத்தான் இருந்து வந்தது.
இவரது பாதுகாப்புக் கருதி, தேர்தல் நாளன்று இரவு நண்பர் ஒருவரின் தென்னந்தோப்புக்குள் மறைந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது.
ஜனாதிபதியாகத் தெரிவான பின்னரும், மைத்திரிபால சிறிசேனவின் பாதுகாப்பு சற்று கேள்விக்குரிய ஒரு விடயமாகவே இருந்து வந்திருக்கிறது.
கடந்த பெப்ரவரி 4ஆம் திகதி, பாராளுமன்ற வளாகத்தில் சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெற்ற போதும் கூட, அங்கு வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்று அரசல் புரசலான தகவல்கள் கசிந்திருந்தன.
எகிப்தில் ஜனாதிபதியாக இருந்த அன்வர் சதாத், இராணுவ அணிவகுப்பு ஒன்றின் போது, திடீரென ட்ரக்கில் இருந்து குதித்த படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டிருந் தார்.
அதுபோன்றதொரு நிகழ்வுக்கான வாய்ப்பு இருப்பதாகக் கருதி சுதந்திர தின நிகழ்வுகளில் போதிய பாதுகாப்பு முன்னேற்பா டுகள் செய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன.
என்றாலும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பாதுகாப்பு குறித்த கரிசனைகள் உயர்மட்டத்தில் இருப்பதை அது வெளிப்ப டுத்தியிருந்தது.
அதையடுத்தே, அம்பாந்தோட்டையில் கடந்த மாதம் 25ஆம் திகதி சுதந்திரக் கட்சிக் கூட்டத்தில் மைத்திரிபால சிறிசேனவுக்கு அருகே இராணுவ கோப்ரல் ஒருவர் துப்பாக்கியுடன் சென்றிருக்கிறார்.
இது நிச்சயமாக ஒரு பாதுகாப்பு மீறலாகவே கருதப்படுகிறது. குறிப்பிட்ட இராணுவ கோப்ரல் நாமல் ராஜபக் ஷவின் பாதுகாப்புக்காக சென்றவர் என்பதும், மஹிந்த ராஜபக் ஷவின் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்தவர் என்பதும் இந்த விவகாரத்தில் கூடுதல் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
அதேவேளை, ஜனாதிபதியின் பாதுகாப்பு வளையத்தை ஊடறுக்கும் அளவுக்கு அவரது பாதுகாப்பு பலவீனமாக இருந்தது ஏன் என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.
ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் பாதுகாப்பு வளையத்தைக் கடந்து சென்ற பின்னரே, இராணுவக் கோப்ரலிடம் கைத்துப்பாக்கி இருப்பதைக் கண்டறிந்து வெளியேற்றியிருக்கிறார் விசேட அதிரடிப்படை அதிகாரி.
அந்த இடத்தில் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவும் கவனயீனமாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதேவேளை, குறிப்பிட்ட இராணுவ கோப்ரல் தனது துப்பாக்கியுடன் நுழைந்தவுடன் கைது செய்யப்படாமல் விடுவிக்கப்பட்டு, சில நாட்களின் பின்னர் கைது செய்யப்பட்டதும் கேள்விகளை எழுப்புகிறது.
அதாவது, அந்தச் சம்பவம் கண்டும் காணாமல் விடப்படும் நிலை ஒன்று இருந்துள்ளது. விவகாரம் ஊடகங்களில் பரவிய பின்னர் தான், பாராளுமன்றத்திலும், ஜனாதிபதிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் என்று குரல் எழுப்பப்பட்ட பின்னர் தான் விசாரணைகள் தொடங்கியுள்ளன.
இந்த விசாரணைகள் இராணுவத் தரப்பிலும், பொலிஸ் தரப்பிலும் மேற்கொள்ளப்படுகின்றன. நாமல் ராஜபக் ஷ ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில், அம்பாந்தோட்டைக் கூட்டத்துக்குச் சென்றிருந்தார்.
அவருடன், குறிப்பிட்ட இராணுவ கோப்ரலை தானே அனுப்பியதாக மஹிந்த ராஜபக் ஷ வெளியிட்ட அறிக்கையில் கூறியிருக்கிறார்.
கொமாண்டோ படைப்பிரிவைச் சேர்ந்த கோப்ரல் சேனக குமார மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்தவர். அவரைத் தான் நாமலுடன் அனுப்பியிருந் தார் மஹிந்த.
சட்டரீதியாக நாமல் ராஜபக் ஷவுக்கு இரா ணுவ பாதுகாப்பு அளிக்க முடியாது. அவருக்கு பொலிஸாரே பாதுகாப்பு அளிக்கின்றனர்.
அப்படியிருக்க, குறிப்பிட்ட இராணுவ கோப்ரல் அந்தக் கூட்டத்துக்கு நாமலுடன் சென்றதும் தவறு, அவரை அங்கு அனுப்பியதும் தவறு.
மஹிந்த ராஜபக் ஷ, தானே அந்த கோப்ரலை அங்கு அனுப்பியதாகக் குறிப்பிட்டி ருக்கிறார். அவ்வாறாயின், அவருக்கு என்ன அதிகாரம் உள்ளது?
முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில் தனக்கு வழங்கப்படும் பாதுகாப்பை அவர் துஷ்பிரயோகம் செய்திருக்கிறார்.
தனக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகளை வேறொருவருக்கு வழங்குமாறு மஹிந்த ராஜபக்ஷவினால் உத்தரவிட முடியாது.
அதற்கு அவருக்கு எந்த அதிகாரமும் இல்லை. ஆனால், அத்தகைய உத்தரவை வழங்கி விட்டு, அதை எந்தச் கூச்சமும் இல்லாமல் அறிக்கை மூலம் ஒப்புக்கொண்டிருக்கிறார் அவர்.
இந்த இடத்தில், குறிப்பிட்ட இராணுவ கோப்ரலை மஹிந்த ராஜபக் ஷ அனுப்பிய போது, அவருக்குப் பொறுப்பாக இருந்த அதிகாரியான கேர்ணல் மகேந்திர பெர்னாண்டோவும் வேடிக்கை பார்த்திருக்கிறார்.
அதனால் தான், அவரிடம் இராணுவ விசாரணைப் பிரிவும், குற்றப்புலனாய்வுப் பிரிவும் விசாரணைகளை மேற்கொண்டிருக்கின்றன.
கேர்ணல் மகேந்திர பெர்னாண்டோ, நீண்ட காலமாக மஹிந்த ராஜபக் ஷவின் பாதுகாப்புக்குப் பொறுப்பாக இருப்பவர். அதைவிட ராஜபக் ஷ குடும்பத்துக்கு நெருக்கமானவர்.
அந்த வகையில் அவர் நாமல் ராஜபக் ஷவுடன், கோப்ரல் சேனக குமாரவை அனுப்பிய போது அதற்கு இணங்கியிருக்கிறார்.
இந்தச் சம்பவம், வெறுமனே ஜனாதிபதி யின் பாதுகாப்புக் குறித்த சந்தேகங்களை மட்டும் எழுப்பியிருக்கவில்லை. அதற்கும் அப்பால், மஹிந்த ராஜபக் ஷ இன்னமும் பாதுகாப்புப் பிரிவுகளில் செல்வாக்குச் செலுத்தும் ஒருவராக இருக்கிறார் என்பதை யும் உணர்த்தியிருக்கிறது.
அதனால் தான், அவரால் தனது பாதுகாப்பு பிரிவைச் சேரந்த ஒருவரை நாமலுடன் அனுப்ப முடிந்திருக்கிறது.
அதேவேளை, குறிப்பிட்ட கோப்ரலிடம் துப்பாக்கி இருந்தது என்பது உறுதிப் படுத்தப்பட்டுள்ள நிலையில், தண்ணீர் போத்தல்தான் இருந்தது என்று நாமல் ராஜபக் ஷ கூறியிருப்பதும், சந்தேகங்களை வலுப்படுத்தியிருக்கிறது.
இந்தச் சம்பவம் ஒரு சதியா? -சூழ்ச்சியா? என்று விசாரணைகள் இன்னமும் உறுதிப் படுத்தவில்லை.
ஆனாலும், ஜனாதிபதியின் பாதுகாப்பு கேள்விக்குள்ளாக்கப்படும் நிலையில் தான் இருக்கிறது என்பது உறுதியாகியிருக்கிறது.
அதைவிட பாதுகாப்பு விவகாரங்களில் மஹிந்தவின் செல்வாக்கு இன்னமும் அதி கம் இருப்பதையும் உணர்த்தியிருக்கிறது.இது ஆபத்தானது.