ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையே கடந்த புதன்கிழமை நடைபெற்ற பேச்சவார்த்தை தொடர்பாக கருத்துத் தெரிவித்த ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் மஹிந்தவை மீண்டும் குறுக்கு வழியில் உள்ளே கொண்டு வர ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இடமளிக்க கூடாது எனக் கூறியுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷ உள்வாங்கப்படும் எந்தவொரு ஏற்பாட்டுக்கும் இந்நாட்டில் வாழும் தமிழ் பேசும் மக்கள் உடன்பட மாட்டார்கள் எனவும் அவர் கூறியிருக்கிறார்.
பெரும்பாலும் இது உண்மை தான். ஆனால், இந்த விடயத்தில் தமிழ் பேசும் மக்கள் அச்சம் கொள்ள எதுவும் இல்லை என்று தான் கூற வேண்டும்.
ஏனெனில், மைத்திரி-மஹிந்த ‘சமாதான பேச்சுவார்த்தை’ இரு சாராரும் ஒருவரை ஒருவர் ஏமாற்றும் நோக்குடன் நடத்தியதொன்றே தவிர வேறொன்றுமல்ல.
மைத்திரிபால, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் (தவிசாளர்) ஆவார். மஹிந்த அக் கட்சியின் போஷகர்களில் ஒருவர். ஆனால், ஒரு கடசியின் தலைவர்கள் இருவரிடையே நடைபெறும் பேச்சுவார்த்தையாக அந்த பேச்சுவார்த்தை நடைபெறவில்லை.
எதிரிகளான இருக்கும் இரு குழுக்களிடையே நடைபெறும் பேச்சுவார்த்தையாகவே அது நடைபெற்றது.
உண்மையிலேயே ஒரே கட்சியில் இருந்த போதிலும் அவ் விரு சாராரும் எதிரிகளே. மஹிந்தவை தோற்கடித்தே மைத்திரிபால ஜனவரி 8ஆம் திகதி ஜனாதிபதியாக பதவிக்கு வந்தார்.
அது சாதாரண தேர்தலாகவன்றி வாழ்வா சாவா என்ற நிலையிலான தேர்தலாகவே அமைந்தது. இன்று தமது ஆதரவாளர்கள் பழிவாங்கப்படுவதாக கூறும் மஹிந்தவின் ஆட்சியின் கீழ், மைத்திரிபாலவுக்கு கூட்டம் ஒன்றை நடத்த இடமொன்றை தேடிக் கொள்வதும் பெரும் பிரச்சினையாக இருந்தது.
தாம் தோல்வியடைந்திருந்தால் இப்போது ஆறடி நிலத்துக்குள் தான் இருப்பேன் என மைத்திரிபால பல முறை கூறியிருக்கிறார். மஹிந்தவின் ஆட்கள் இது வரை அதனை மறுக்கவும் இல்லை.
அவர்களும் அக்காலத்தில் அவ்வாறானதோர் நிலைமை இருந்ததை ஏற்றுக் கொள்கிறார்கள் போலும்.
இரு சாராருக்கும் இடையிலான அந்தப் பகை தேர்தலுக்குப் பின்னரும் வளர்ந்து வந்துள்ளது.
மஹிந்த இனி ஜனாதிபதியாக வர முடியாத வகையில் மைத்திரிபால, அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தை நிறைவேற்றிக் கொண்டார்.
அரசாங்கத்தின் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளின் கீழ் மஹிந்தவின் ஆதரவாளர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மஹிந்தவும் சும்மா இருக்கவில்லை. அவரும் நாள் தோறும் நாட்டில் விஹாரைகள் தோறும் கூட்டங்களை நடத்தி மைத்திரிபாலவின் ஆட்சிக்கு எதிராக மக்களை தூண்டுகிறார்.
இந்தப் பின்னணியில் தான் மைத்திரிபால-மஹிந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. எனவே தான் இதனை சமாதான பேச்சுவார்த்iயாக முதலில் குறிப்பிட்டோம்.
ஆனால், இந்த விடயத்தில் ஒரு சாராரும் நேர்மையாக பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளவில்லை.
இந்தப் பேச்சுவார்த்தை மஹிந்த அரசியல் ரீதியாக செல்லாக்காசாகிப் போனால் தமக்கு அரசியல் எதிர்க்காலமே இல்லாமல் போய்விடும் என்று அச்சப்படும் ஒரு சிலர் அவரை மீண்டும் அரசியல் ரீதியாக உயிர்ப்பித்து அதன் மூலம் தமக்கு வாழ்வழித்துக் கொள்ளும் நோக்குடன் ஏற்பாடு செய்த ஒன்றாகும்.
மறுபுறத்தில் மஹிந்தவுக்கு சற்றேனும் இடம் கொடுத்தால் அது தமக்கு ஆபத்தாகிவிடும் என்பதை மைத்திரிபாலவுக்கு தெரியாத விடயம் அல்ல.
எனவே, அவருக்கும் இந்த பேச்சுவார்த்தையில் உண்மையான அக்கறை இருக்கும் என்று கூற முடியாது.
ஆனால், ராஜபக்ஷ ஸ்ரீ.ல.சு.க. வுக்குள் மிகவும் பிரபல்யம் வாய்ந்தவர் என்பதையும் மைத்திரிபால அறிந்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் வரை ராஜபக்ஷ, ஸ்ரீ. ல.சு.க தலைவராக இருந்தவர்.
நாட்டில் சகல ஊடகங்களையும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அவர் அதன் மூலம் தமது கட்சிக்காரர்கள் மத்தியில் மட்டுமன்றி நாட்டிலும் தமது இமேஜை விசாலமாக்கி அவர்கள் தம்மை ஏறத்தாழ வணங்கும் நிலையை உருவாக்கிக் கொண்டிருந்தார்.
இந்த நிலையில் தான் ஜனவரி மாதம் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றது. தாம் தெய்வமாக வணங்கிக் கொண்டிருந்தவர் திடீரென பதவி நீக்கம் செய்யப்பட்டாலும் கட்சிக் காரர்களின் பக்தி அவரை விட்டுப் போகவில்லை.
அவருக்கு ஸ்ரீ.ல.சு.க ஆதரவர்கள் மத்தியில் இன்னமும் பெரும் வரவேற்பு இருக்கிறது. இது நியாயமானதே.
மைத்திரிபால இதனை நன்கு அறிந்திருக்கிறார். எனவே கட்சிக் காரர்களை பகைத்துக் கொள்ளவும் அவர் விரும்பவில்லை. கட்சியின் சிலர் மஹிந்தவுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்த போது அதனை எடுத்த எடுப்பில் நிராகரிக்க மைத்திரபால முற்படாததற்குக் காரணம் அதுவே.
ஆனால், ராஜபக்ஷவுக்கு கட்சிக்குள் மைத்திரிபால பெரிதாக இடம் கொடுக்கப் போவதில்லை என்பதும் தெளிவாக தெரிகிறது.
இந்தப் பேச்சுவார்த்தைக்கு சில நாட்களுக்கு முன்னர் ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் சிலர் ஜனாதிபதியை சந்தித்து எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது ராஜபக்ஷவை பிரதமர் வேட்பாளராக களத்தில் இறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
ராஜபக்ஷவுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டக்கள் இருப்பதனால் அதைச் செய்ய முடியாது என ஜனாதிபதி கூறியிருக்கிறார்.
இனி ராஜபக்ஷ பெறக்கூடிய அதி உயர் பதவி பிரதமர் பதவியே. அதற்கும் மைத்திரிபால வாய்ப்பு அளிக்காவிட்டால் அதுவும் வெறும் கனவாகிவிடும்.
கட்சியைப் பலப்படுத்தவே தாம் மஹிந்தவையும் மைத்திரிபாலவையம் ஐக்கியப்படுத்த முயற்சி செய்வதாக மஹிந்தவின் ஆதரவாளர்கள் கூறுகிறார்கள். ஆனால் இது உண்மையல்ல. இது அவர்களும் மஹிந்தவும் தமது இருப்பை பாதுகாத்துக் கொள்ளும் நோக்குடன் போடும் திட்டமாகும்.
தாம் ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியுறுவோம் என மஹிந்த கனவிலும் நினைக்கவில்லை. எனவே தேல்தலில் தோல்வியடந்தவுடன் அவரும் அவரது கையாட்களும் மானசீகமாக பெரிதும் வீழ்ச்சியுற்றனர்.
அந்த நிலையிலிருந்த மஹிந்தவுக்கு மன உறுதியை வழங்கியவர்கள் விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணியினரும் தினேஷ் குணவர்தனவின் மக்கள் ஐக்கிய முன்னணியினரும் கம்மன்பிலவின் பிவித்துரு ஹெல உருமயகாரர்களும் வாசுதேவ நாணயக்காரவின் ஜனநாயக இடதுசாரி முன்னணியினருமே.
மஹிந்தவின் தோல்வியை அடுத்து இந்த நான்கு கட்சிகளும் அரசியல் பிச்சைகாரர்களின் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
அவர்கள் ஜனாதிபதித் தேர்தலின் போது இனவாதத்தை தூண்டி தமக்கு எதிராக செயற்பட்ட முறையினால் மைத்திரிபாலவும் தேர்தலின் பின்னர் இவர்களை திரும்பியும் பார்க்கவில்லை.
இந்த நிலையில் இக் கட்சிகள் பெரும் நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டனர். அவர்கள் தனியே போட்டியிட்டு பிரதேச சபை ஆசனமொன்றையாவது பெற்றக் கொள்வது கடினமான காரியம்.
எனவே மஹிந்தவை எவ்வாறோ முன்னிறுத்தி அவரது அபிமானிகளின் வாக்குகளை கொள்ளையடித்தால் தமது இருப்பை பாதுகாத்துக் கொள்ள முடியும் என அவர்கள் நினைக்கிறார்கள். அது மிக சாதுரியமான திட்டம் தான்.
எனவே தான் அவர்கள் மஹிந்தவை பிரதமராக்க வேண்டும் என்ற சுலோகத்தை முன்வைத்தனர். முதலில் இதனை முன்வைத்தவர்கள் ஸ்ரீ.ல.சு.க.காரர்கள் அல்ல என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
தாம் ஒரு நவீன கால மன்னர் என் நினைத்துக் கொண்டு நிறைவேற்ற ஜனாதிபதி பதவியை வகித்த மஹிந்த மற்றொரு நிறைவேற்று ஜனாதிபதியின் கீழ் பிரதமராக பதவி வகிப்பதில் மஹிந்தவுக்கு ஏற்படும் தன்மானப் பிரச்சினை இந்தக் கோரிக்கையை விடுப்பவர்களுக்கு ஒரு பிரச்சினையாக தெரியவில்லை.
தேர்தல் காலத்தில் மைத்திரிபாலவை புலம்பெயர் தமிழர்களின் கையாள எனக் குற்றஞ்சாட்டிய மஹிந்தவும் அவரது ஆதரவாளர்களும் அதே மைத்திரிபாலவிடம் பிரதமர் பதவியைக் கேட்டுக் கெஞ்சுவது வேடிக்கையான விடயமாகவே தெரிகிறது.
தேர்தல் தோல்வியால் மனமுடைந்து இருந்த மஹிந்தவின் சாதாரண ஆதரவாளர்களுக்கும் மஹிந்த வேண்டும் என்ற இந்த சுலோகம் ஆறுதலாகவும் ஊக்கமளிப்தாகவும் அமைந்தது.
எனவே அந்த நான்கு கட்சிகளும் மஹிந்த வேண்டும் எனறு வலியுறுத்தி நடத்திய கூட்டங்களுகன்கு பெருந்திரலான மக்கள் சமூகமளித்தனர்.
அதன் பிரகாரம் மஹிந்தவும் ஊக்கமடைந்து இருக்கிறார். அவரது குடும்பத்தினருக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து தப்புவதற்கும் ஓரளவாவது அரசியல் அதிகாரம் இருக்க வேண்டும் என அவர் கருதுகிறார் போலும். எனவே தான் அவர் மீண்டும் அரசியல் களத்தில் இறங்க முயற்சிக்கிறார். மானப் பிரச்சினையை அவர் கருத்திற் கொள்ளவில்லை போலும்.
இதன் ஓர் அங்கமாகவே அவரது குழுவினர் மைத்திரிபாலவை சந்திக்க முற்படுகின்றனர். இதில் அவர்கள் கூறுவதைப் போல் ஸ்ரீ.ல.சு.க.வை பாதுகாப்பது அல்லது ஒன்றிணைந்து ஐக்கிய தேசிய கட்சியை எதிர்வரும் பொதுத் தேர்தலில் தோல்வியுறச் செய்வது என்ற நோக்கம் இல்லை. தம்மை பாதுகாத்துக் கொள்வதே இந்த சந்திப்பின் நோக்கமாகும்.
உண்மையிலேயே ஸ்ரீ.ல.சு.க ஐக்கியப்பட்டால் ஐ.தே.க பெரும் நெருக்கடியை சந்திக்கும். ஏனெனில் நீண்ட காலமாக தொடர்ந்து தேர்தல்களில் தோல்வியடைந்து வந்த காரணத்தினால் ஐ.தே.க.வில் அமைப்பு ரீதியான பிரச்சினைகள் இருக்கின்றன. அதனால் ஸ்ரீ.ல.சு.க ஐக்கியப்பட்டாலும் அக் கட்சி வெற்றி பெறும் என உறுதியாக கூற முடியாது.
எவ்வாறாயினும் மைத்திரிபால மஹிந்தவை உள்வாங்க மாட்டார் என்பதற்கே கூடுதலான அறிகுறிகள் தென்படுகின்றன.
மஹிந்த மீண்டும் அரசியல் ரீதியாக பலம் பெறுவதானது தமது அழிவுக்கு வழி சமைததுக் கொள்வதாகும் என்பதை மைத்திரிபால அறிந்திருக்கிறார்.
அதனால் தான் மஹிந்தவை சந்திப்பதற்கு முதல் நாள் அந்த சந்திப்பைப் பற்றிய அறிக்கை ஒன்றில் தமக்கு வாக்களித்த 63 இலட்சம் வாக்காளர்களின் நம்பிக்கைக்கு துரோகமிழைப்பதில்லை என ஜனாதிபதி கூறியிருந்தார்.
அவருக்கு வாக்களித்தவர்களில் பெரும்பான்மையினர் ஐ.தே.க ஆதரவாளர்களே. அந்த ஐ.தே.க ஆதரவாளர்களின் நம்பிக்கைக்கு துரோகமிழைப்பதில்லை என்றே அவர் கூறுகிறார்.
மறுபுறத்தில் மஹிந்தவை உள்வாங்கினால் ஸ்ரீ.ல.சு.க.வுக்கு சிறுபான்மையினரின் வாக்குகள் கிடைக்காது என அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க கூறியிருந்தார்.
ஸ்ரீ.ல.சு.க. வெற்றி பெறுவதாக இருந்தால் சிறுபான்மை மக்களின் மனதை வெள்ள வேண்டும் என கடந்த 25 ஆம் திகதி மஹிந்த ராஜபக்ஷவின் மாவட்டமான ஹம்பாந்தோட்டை மாவட்ட ஸ்ரீ.ல.சு.க மாநாட்டில் உரையாற்றம் போது ஜனாதிபதியும் கூறியிருக்கிறார்.
உண்மையிலேயே ஸ்ரீ.ல.சு.க. எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது சிறுபான்மை மக்களின் வாக்குகளை பெறுவதில் பெரும் சவாலை எதிர் நோக்கும்.
ஏனெனில், அவர்கள் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ஐ.தே.க.வுடன் சேர்ந்து மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்தனர்.
பொதுத் தேர்தலின் போது ஐ.தே.க ஒரு பக்கமும் மைத்திரிபால மற்றொரு பக்கமுமாக நின்று போட்டியிட்டால் எந்தக் கட்சியை ஆதரிப்பது என்ற நிலை பல சிறுபான்மையினருக்கு ஏற்படலாம்.
ஆனால், ஸ்ரீ.ல.சு.க.வுக்குள் மஹிந்த உள்வாங்கப்பட்டால் அவர்கள் எவ்வித தயக்கமுமின்றி ஐ.தே.க.வை ஆதரிப்பார்கள்.
தாம் சிறுபான்மையினரிடமிருந்து அந்நியப்பட்டுவிட்டோம் என்பதை மஹிந்தவும் இப்போது உணர்ந்துள்ளார் போலும்.
எனவே தான், தாம் நோர்வே மற்றும் அமெரிக்க சதியொன்றின் காரணமாக தோல்வியடைந்ததாகவும் பொது பல சேனாவின் மூலமே அந்த சதி நடைமுறைப்படுத்தப்பட்டதாகவும் அண்மையில் அவர் இந்திய ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியொன்றில் கூறியிருந்தார்.
கடந்த வாரம் அவர் தம்மை ஆதரிக்கும் ஒரு சில முஸ்லிம்களை நாராஹேன்பிட்ட அபயாராமய என்ற விஹாரைக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
அப்போது அங்கு உரையாற்றிய ஒரு முஸ்லிம் இந் நாட்டு முஸ்லிம்கள் நன்றிகெட்டவர்கள் என்றம் கூறியிருந்தார். இவ்வாறு கூட்டம் நடத்தினாலும் இந் நாட்டு சிறுபான்மை மக்கள் அவரை இந்த விடயத்தில் நம்புவார்களா? என்பது சந்தேகமே.
ஏனெனில், அவர் சதி என்றெல்லாம் கூறிய போதிலும் அவரது ஆட்சிக் காலத்தில் சிறுபான்மை மக்கள் பாதிக்கப்படும் போது தாம் நடந்து கொண்ட முறை பிழையானது என்பதை அவர் எங்கும் இன்னமும் ஏற்றுக் கொள்ளவில்லை.
ஸ்ரீ.ல.சு.க.வுக்குள் பிரச்சினை இல்லாவிட்டாலும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும் மஹிந்தவை உள்வாங்க ஜனாதிபதிக்கு இடமளிப்பார்களா என்பதும் கேள்விக்குறியே.
எனவே, மஹிந்த வேறு வழி பார்த்துக் கொள்ள வேண்டி வரும் என்றே தெரிகிறது.
இது விமல் போன்றோர்களுக்கு சாதகமான நிலைமையாகும் ஏனெனில் மஹிந்தவை தம்மோடு நேரடியாக இணைத்துக் கொண்டு மஹிந்த ஆதரவாளர்களின் வாக்குகளை தம் வசம் இழுத்துக் கொள்ள அவர்களுக்கு அதனால் வாய்ப்பு கிடைக்கும். அவர்கள் தனியாக போட்டியிட்டால் மண்ணைக் கௌவ வேண்டியது தான்.
-எம்.எஸ். எம. ஐயூப்-