பல சகாப்தங்களாக அடுத்தடுத்து வந்த அரசாங்கங்களுக்கு எதிராக தமிழர்களது மொழி, மண் உரிமைக்காகவும், சுயாட்சி அதிகாரத்திற்காகவும், கல்வி வேலைவாய்ப்புகளில் தங்களது அதிருப்தியை தெரிவிப்பதற்காகவும், மேடைகளேறி வீர வசனங்கள் பேசி எதிர்ப்புக் குரலை கொடுத்து தமிழ் மக்களின் அமோக கைதட்டல்களை மட்டுமல்லாமல், வாக்குகளையும் சேகரித்துப் பழகிப்போன பல தமிழ் அரசியல்வாதிகள் இணக்க அரசியலில் அவ்வாறான அடுக்கு வசனங்களை பேசித்தீர்த்துக் கொள்ள முடியாத சூழ்நிலையில் திண்டாடுகின்றனர்.
அதற்காக முந்திரிக்கொட்டை போன்று முந்திக் கொண்டு சில தேவையற்ற குற்றச்சாட்டுக்களை அரசாங்கத்தின் மீது குறிப்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீது சுமத்த முயற்சி பண்ணுவதையும் காணக்கூடியதாக உள்ளது.
ஆணித்தரமான குற்றச்சாட்டுக்களை முன்வைக்க முடியாது பிழையைக் கண்டுபிடிக்க வேண்டுமென்ற ஒரே மனப்பான்மையில் அவ்வாறு செயற்படுகின்றார்கள் என்பதும் வெளிப்படையாகத் தெரிந்தது.
நல்லாட்சியில் படிப்படியாக முன்னைய அரசால் பறிக்கப்பட்ட சகல உரிமைகளும் மீளளிக்கப்படுமென கூறிவரும் ஆட்சியாளருக்கு எதிராக பெரிதளவில் குற்றம் சுமத்த முடியாத நிலைமையில் தமிழ் தலைவர்கள் சிலர், முழுப் பாராளுமன்றமும் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படும் முன்னரேயே சிறுபான்மையினரின் தீர்வுகளை நிறைவேற்றும்படி கேட்டு அரசாங்கத்தை சங்கடத்திற்குள்ளாக்குகின்றார்கள்.
நீங்கள் கேட்பதைத் தருகிறோம் படையினரை வெளியேற்றுகின்றோம் என்று ஐ.தே.க. யால் கூறப்பண்ணினால் பொதுத் தேர்தலில் அவர்களின் வாக்கு வங்கியில் சரிவு ஏற்படும் எனச் சிலர் தப்புக் கணக்குப் போடுகிறார்கள்.
மைத்திரியுடனல்லாமல் ரணிலுடன் எந்தத் தொடர்பும் வைத்திருக்க மாட்டோம் என வட மாகாண சபை பகிரங்கமாக கூறியுள்ளதை பத்திரிகைகளில் படித்துள்ளோம்.
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படக்கூடிய நல்ல சகுனங்கள் தென்படும்போது சில தமிழ் தலைவர்கள் இவ்வாறு அடம்பிடிப்பதில் பின்னணி என்னவாயிருக்கும் என்பது சிறுகச் சிறுக வெளியாகின்றது.
மைத்திரி ஜனாதிபதியாக வென்றது ஐ.தே.க. யின் வாக்குப் பலத்தினாலேயே என்பதை சிலர் இன்னும் ஏற்க ஆயத்தமாகவில்லை.
பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் ஐ.தே.க. 2/3 கொண்ட பெரும்பான்மையையோ அல்லது அதனை அண்டிய பெரும்பான்மையை பெறத்தான் போகின்றது என்பதற்கு கெம்பல் பார்க் ‘மே’ தினக் கூட்டம் சான்று பகரும்.
ஊவா மாகாண சபைத் தேர்தல் முடிவும் முன்னர் இதை உணர்த்தியிருந்தது. ஜனாதிபதித் தேர்தல் முடிவு ஜனாதிபதியை மட்டும் மாற்றியதாக கருதப்படமுடியாது சுதந்திரக் கட்சியிலிருந்து ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆட்சியும் மாறிவிட்டது என்பதும் ஏற்றுக்கொள்ளப்படவேண்டும்.
ரணிலை எதிர்த்துக் கொண்டு ரணிலின் அதிகாரத்திலுள்ள அரசாங்கத்துடன் எவ்வாறு மாகாண சபை நல்லுறவைப் பேணப்போகின்றது என்பது ஒரு கேள்வியாகின்றது.
மேலும் இனிவரும் பாராளுமன்றத்தில் ஜனாதிபதியிலும் பார்க்க பிரதமருக்கே கூடிய பலம் பாராளுமன்றத்தின் மூலம் கிடைக்கப் போகின்றது என்பதையும் ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டும்.
கட்சிக் கட்டுக்கோப்பு உடைப்பு
அதே நேரம், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மேலிடத்திலுள்ளவர்கள் இன்று எதிர்ப்புக்காட்டும் அரசியலுக்கேற்ற நிலைமையில்லை என்றும் தமிழ் முஸ்ஸிம் மக்களுக்கு தீராத தொல்லைகளைக் கொடுத்து வந்த மஹிந்த அரசாங்கத்தை வீழ்த்தி இனவாதமற்ற மதவாதமற்ற தமிழ் சிங்கள முஸ்லிம் மக்களிடையே எதுவித பாரபட்சமும் பாகுபாடும் காட்டக்கூடாது என்ற உறுதியோடு நல்லாட்சியை ஏற்படுத்தும் விதத்தில் பல அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து தேசிய அரசை நிறுவியதினால் தமிழர்களுக்கு நன்மையை தருமேயன்றி தீங்கிழைக்க மாட்டாதென்ற விளக்கத்தை அளித்து வருகின்றார்கள்.
தேசிய நிறைவேற்றுச் சபை என பல சிறு கட்சிகளையும் உள்ளடக்கிய சபை ஒன்று உருவாக்கப்பட்டிருப்பதும் அதில் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் இல்லாத கட்சிகளின் தலைவர்கள் கூட குறிப்பாக விக்கிரமபாகு கருணாரட்ன, மனோ கணேசன், அசாத் சாலி போன்றவர்கள் அதில் உள்வாங்கப்பட்டிருக்கிறார்கள் என்பதையும் நினைவூட்டி வருகின்றார்கள்.
மஹிந்த ராஜபக் ஷவின் அராஜக செயற்பாடுகளைக் கண்டும் பட்டுத் தெளிந்ததன் பின்பு இந்த அரசாங்கம் உருவாகியதையிட்டு ஒரு நிம்மதிப் பெருமூச்சை விடுவதா, அல்லது மீண்டும் இந்த அரசையும் எதிர்த்துக் கொண்டிருப்பதா என்பதை திசைமாறி செல்லும் வட – கிழக்கு தமிழ் அரசியல்வாதிகளுக்கு புரியவைக்க வேண்டிய தேவையும் கடப்பாடும் தமிழ் மக்களுக்குண்டு.
முஸ்லிம் மக்களும் மலையக தமிழ் மக்களும் ஒரு தீர்க்கமான முடிவெடுத்து நல்லாட்சி அரசை முழுவதுமாக ஆதரித்துச் செயற்படுகின்றார்கள்.
ஆனால், வடக்கில் சில தமிழ் அமைப்புக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்களை கண்டிப்பதும் நிந்திப்பதும் சிலரின் உருவப் பொம்மைகளை எரிவூட்டுவதும் வெளிநாட்டிலுள்ள ஒரு சக்தியின் செல்வாக்கினால் நடைபெறுகின்றது எனவும் விடயமறிந்த சில வட்டாரங்களிலிருந்து கசிகின்றது.
லண்டனிலும் கூட்டமைப்புத் தலைவர் சம்பந்தரின் உருவ பொம்மைக்கு எரியூட்டியமை இந்தக் கருத்துக்கு வலுவூட்டுகின்றது.
இவை வடக்கில் ஒரு புதிய கட்சி உருவாக்களுக்கு அத்திவாரமாகவும் அல்லது ஏலவே இருக்கின்ற ஒரு அரசியல் கட்சியை மையமாக வைத்து கூட்டமைப்பிலுள்ள சிலரையும் ஒன்றிணைக்கும் முயற்சியாகவும் அதை கூட்டமைப்புக்கு எதிரான ஒரு சக்தியாக பலப்படுத்தும் நோக்கமாகவும் இருக்கலாம் என்ற தகவலும் இருக்கின்றது.
எதிர்ப்பு அரசியலினால் மக்களைக் கவர்ந்துவிடலாம் என்ற எதிர்பார்ப்பில் மைத்திரி அரசுக்கு எதிராக என்றிராமல் ரணிலை ஒரு குறியாக வைத்து காய்களை நகர்த்தி வருகின்றார்கள்.
நன்மைகள் தமிழருக்கும்
மைத்திரி – ரணில் – சந்திரிகா கூட்டு முயற்சியாக நல்லாட்சி என்ற தேசிய அரசை அமைத்த பின்னர் பாராளுமன்றில் சிறுபான்மை பலத்தை மட்டும் கொண்டிருந்தாலும் கூட அரசால் செய்யப்பட்ட நன்மைகள் அனைத்தும் தமிழ் முஸ்லிம் மக்களுக்கும் கிடைக்கப் பெற்றவைகளே என்பதை ஞாபகப்படுத்த வேண்டியது அவசியமாகின்றது.
வாழ்க்கைச் செலவின் சுமையைக் குறைக்க சமையல் எரிவாயு தொடக்கம் பெற்றோல், டீசல், மண்ணெண்ணெய் மின்சாரம் மற்றும் வேறும் அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பினால் பொது மக்கள் நிம்மதியடைந்துள்ளார்கள்.
சம்பளம், ஓய்வூதியம் அதிகரிப்பு இன்னொரு வகையில் மக்களின் வாழ்க்கைச் சுமையை குறைத்துள்ளது.
இலஞ்சம், ஊழல் வேலைகளில் ஈடுபட்டுவந்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருங்காலத்தில் எவரும் நாட்டை சுரண்ட முடியாத நிலைமை உருவாக்கப்படுகின்றது.
இந்த வேலைகளும் ஆரம்பிக்கப்பட்டுவிட்டன. நாட்டில் ஜனநாயகம் முழு அளவில் தழைத்தோங்க வேண்டுமென்பதற்காக 19ஆவது திருத்தச் சட்டத்தை அரசியலமைப்புக்கு கொண்டுவந்து சகல உயர் அரச திணைக்களங்களதும் தாபனங்களினதும் செயற்பாட்டிற்கும் சுயாதீன ஆணைக்குழுக்களை நியமித்தலால் அவை ஜனநாயக ரீதியாகவும் எவருடைய செல்வாக்குக்கும் அடிபணியாது பாரபட்சமின்றி தனித்துவமாக நீதியாகவும் நேர்மையாகவும் செயற்பட வழிசமைக்கப்பட்டுள்ளது.
இனிமேல் நீதிச் சேவை, பொலிஸ் சேவை, பகிரங்க சேவை, தேர்தல் திணைக்களம், கணக்காய்வாளர் திணைக்களம் போன்ற இன்னும் பல அரச சேவைகள் அரசியல்வாதிகளின் பொம்மைகளாக இராமல் சுதந்திரமாக உண்மையுடனும் நேர்மையுடனும் இயங்கி இனமத பேதமின்றி செயல்படும். வெகு விரைவில் இவை அமுலாக்கப்படும்.
நாட்டின் பாதுகாப்புக்கென ஏற்படுத்திய உயர் பாதுகாப்பு வலயம் இனிமேல் தேவையற்றது எனக் கருதப்படுபவையெல்லாம் அகற்றி எடுக்கப்பட்டு காணிகளை மீண்டும் மக்களுக்குப் படிப்படியாக கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.
இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களிடையே நல்லிணக்கத்தையும் புரிந்துணர்வையும் சமாதானத்தையும் ஏற்படுத்துவதற்கான கல்வி வேலைவாய்ப்புக்களில் சமசந்தர்ப்பத்தை உருவாக்குதல் ஆரம்பிக்கப்படும்.
இவ்வாறான நல்ல திட்டங்களுடன் ஜே.விபி., ஹெல உறுமய, ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியுதீன் ஆகியோரின் முஸ்லிம் கட்சிகள் இரண்டும் அதனுடன் சரத் பொன்சேகா, விக்கிரமபாகு கருணாரட்ன, அசாத் சாலி, மனோ கணேசன் ஆகியவர்களின் கட்சிகளையும் அரவணைத்துக் கொண்டு தேர்தலை எதிர் கொள்ளவுள்ள நேரத்தில் மஹிந்தவின் ஜனாதிபதியுடனான சந்திப்பும் பேச்சுவார்த்தையும் மற்றொரு பயனற்ற செயற்பாடாகிவிடுவதைக் காணலாம்.
-சட்டத்தரணி கனக நமநாதன்-