கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த பலகோடி பெறுமதியான தங்கம், இரத்தினக்கற்கள் மற்றும் விலை உயர்ந்த ஆபரணங்கள் காணாமல் போயுள்ளன.

இது தொடர்பில் பரிசீலனை செய்யு மாறு விமான நிலைய உத்தியோகத்தர்களால் ஊழல், மோசடிகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர்.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய முன்னாள் தலைவர் கேர்ணல் பிரசன்ன விக்ரமசூரியவின் நிர்வாக காலத்திலேயே இந்த விலை உயர்ந்த ஆபரணங்களும், தங்கமும் காணாமல் போயுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பெறுமதிவாய்ந்த மாணிக்ககல் ஒன்றை விமானப் பயணியொருவர் கைவிட்டுச் சென்ற நிலையில் விமான நிலையத்தினால் கண்டெடுக்கப்பட்டு பாதுகாப்பாக வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

விமானப் பயணிகளின் மறதியினால் மீட்கப்பட்ட பொருட்கள், சட்டரீதியற்ற முறையில் இங்கிருந்து கொண்டு சென்ற மாணிக்கம், வைரம் உட்பட தங்கமாலை, சந்தேகத்தின் பேரில் மீட்கப்பட்ட பைகளில் இருந்து பெறப்பட்ட தங்கம், மோசடிக்காரர்களினால் விமான நிலையத்தில் இருந்து கொண்டு செல்ல முடியாத தங்கம், மாணிக்கம் உட்பட கோடிக்கணக்கான பொருட்களே விமான நிலைய பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்தன.

இந்த பாதுகாப்பு பெட்டகத்தை விமான நிலைய உயர் அதிகாரியின் தலையீட்டினால் தான் திறக்க முடியும். வேறு எவரினாலும் இதனை திறக்க முடியாது.

இந்தப் பொருட்களுக்கான உரிமையாளர்கள் முன்வராத காரணத்தினால் இவை அரச சொத்துக்களாக பாது காப்பு பெட்டகத்தில் சேமிக்கப்பட்டு வந்தன.

gemsபெறுமதிவாய்ந்த மாணிக்கக்கல், முத்து மாலை, வைரம், தங்கம் ஆகியனவே இதில் இருந்தன.

கடந்த ஆட்சியின் போதும் இந்தப் பொருட்கள் காணப்பட்டதுடன் இதில் காணப்படும் பொருட்கள் தொடர்பிலான ஆவணமொன்றும் காணப்பட்டது.

எனினும் இந்த ஆவணமும் தற்போது காணாமல் போயுள்ளதாக பாதுகாப்பு பிரிவு தெரிவித்தது.

கடந்த காலத்தில் காணாமல் போன பொருளை மீட்பதற்காக வருகை தந்த உரிமையாளரின் பொருளை தேட முற்படும் போதே பாதுகாப்பு பெட்டகத்தில் உள்ள அனைத்தும் காணாமல் போனமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்த போதும் சிலரின் அழுத்தம் காரணமாக விசாரணைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply