மானிப்பாய் செல்லமுத்து மைதானத்தில் கடந்த மாதம் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் பல்கலைக்கழக மாணவனின் கையை வெட்டிய குற்றச்சாட்டில் மேலும் 3 சந்தேகநபர்களைக் வியாழக்கிழமை (14) கைது செய்துள்ளதாக மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.ஏ.டி.றொகான் மகேஸ் தெரிவித்தார்.
சந்கேதநபர்களிடமிருந்து 3 வாள்கள், முச்சக்கரவண்டி, 2 மோட்டார் சைக்கிள் என்பன மீட்கப்பட்டன.
மேற்படி வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய அறுவர் கடந்தமாதம் 27ஆம் திகதி கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய சூத்திரதாரி கடந்த 8ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கடந்த மாதம் 25ஆம் திகதி செல்லமுத்து மைதானத்தில் இடம்பெற்றிருந்த இசை நிகழ்ச்சியை பார்த்துவிட்டு திரும்பிய யாழ் பல்கலைகழக மாணவர்கள் மீது மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் வாள் வெட்டை மேற்கொண்டிருந்தனர்.
இந்தச் சம்பவத்தில், வவுனியாவை சேர்ந்த ந.முரளிதரன் (வயது 23) என்ற மாணவனின் கை துண்டிக்கபட்டு, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், வவுனியாவை சேர்ந்த க.ரஜீவன் (வயது 23), முல்லைத்தீவை சேர்ந்த எஸ்.ஜெபர்ஸன் (வயது 23), ஆகிய இருவரும் கடுமையான வெட்டுக்காயங்களுக்கு உள்ளாகி யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என இதுவரையில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.