கடந்த ஜனவரி மாதம் நடந்த அதிபர் தேர்தலுக்குப் பின்னர், புலம்பெயர் தமிழர்களிடம் இருந்து சிறிலங்கா அழுத்தங்களை எதிர்கொள்ளவில்லை என்று, அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
“முன்னர், சிறிலங்காவுக்கு எதிராக புலம்பெயர் தமிழர்கள் வெளிநாடுகளில் ஆர்ப்பாட்டங்களை நடத்தியதாக அறிக்கைகள் வெளியாகும்.
தமிழர்களின் பிரச்சினைகளை சிறிலங்கா அரசாங்கம் தீர்க்கத் தொடங்கிய பின்னர், புலம்பெயர் தமிழர்கள் அமைதியாகி விட்டனர்.
முன்னர், ஐ.நாவுக்கு அருகிலும், ஏனைய இடங்களிலும், புலம்பெயர் தமிழர்கள் போராட்டம் நடத்தியதாக, ஊடகங்களில் செய்திகள் வெளியாகும். இப்போது அத்தகைய அறிக்கைகளை காண முடியவில்லை.
வடக்கில் இந்தவாரம் போரில் இறந்தவர்கள் நினைவாக நடத்தப்படும் நிகழ்வுகளில் புலிகளை நினைவு கூரும் நிகழ்வுகளாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை.
அடுத்த வாரம் போர் வெற்றி விழா, படையினரை மட்டுமன்றி, போரில் இறந்த அனைவரையும், நினைவுகூரும் நாளாக கொண்டாடப்படவுள்ளது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளை நினைவு கூர அனுமதிக்க முடியாது – சிறிலங்கா அரசாங்கம்
14-05-2015
சிறிலங்காவில் போர் முடிவுக்கு வந்து ஆறு ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், விடுதலைப் புலிகளை நினைவு கூரும் எந்தவொரு முயற்சிக்கும் அனுமதி அளிக்கப்படாது என்று சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்துக் கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்காவின் பொது நிர்வாக அமைச்சர் கரு ஜெயசூரிய,
“தீவிரவாத அமைப்பான விடுதலைப் புலிகளை நினைவு கூருவதற்கு, எவருக்கேனும் அரசாங்கத்தினால் அனுமதி அளிக்கப்படாது.
நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஜனநாயக சுதந்திரச் சூழலை தவறாகப் பயன்படுத்த முனையும் சக்திகள், தீவிரவாதம் மீண்டும் தலையெடுக்கக் கூடும் என்று காண்பிக்க முனைகின்றன.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
2009ம் ஆண்டு நடந்த இறுதிக்கட்டப் போரில் படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவுகூரும் வாரம் நேற்று முன்தினம் ஆரம்பமாகியுள்ளது.
நேற்றுமுன்தினம் முள்ளிவாய்க்காலிலும், யாழ். பல்கலைக்கழகத்திலும், இறுதிப் போரில் கொல்லப்பட்டவர்களை நினைவு கூரும் ஆரம்ப நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.
இந்தநிலையில், முள்ளிவாய்க்காலில், விடுதலைப் புலிகளை நினைவு கூரும் நிகழ்வு இடம்பெற்றதான கொழும்பு ஆங்கில மற்றும் சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இதனையடுத்தே, சிறிலங்கா அமைச்சர் கரு ஜெயசூரிய இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
எனினும், முள்ளிவாய்க்காலில் விடுதலைப் புலிகளை நினைவு கூரும் நிகழ்வு நடத்தப்படவில்லை என்றும், போரில் கொல்லப்பட்ட பொதுமக்களை நினைவு கூரும் நிகழ்வே நடத்தப்பட்டதாகவும், அந்த நிகழ்வில் கலந்து கொண்ட வடக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.