ஈராக் அந்தக் காலப்பகுதியில் கிட்டத்தட்ட ஓர் அபிவிருத்தியடைந்த நாடாக இருந்தது. அந்த நாட்டு மக்கள் அபிவிருத்தியடைந்த நாடுகளின் மக்கள் அனுபவிப்பதற்கு சமமான வாழ்க்கைத் தரத்தை அனுபவித்து வந்தனர்.
மார்ச் 2003இல் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ், அப்போதைய பிரிட்டிஷ் பிரதமர் டொனி பிளேயருடன் இணைந்து சர்வதேச கூட்டணி ஒன்றை அமைத்து ஈராக் மீது ஆக்கிரமிப்பை மேற்கொண்டார்.
ஈராக்கின் எண்ணெய் வளத்தை சூறையாடுவதும், பண்டைய பெருமை மிக்க அந்த நாட்டை தமது தீய நோக்கங்களின் அடிப்படையிலான நிகழ்ச்சி நிரலுக்கு இசைய வைப்பதும்தான் இந்த ஆக்கிரமிப்பின் குறிக்கோளாக இருந்தது.
மேலைத்தேய ஊடகங்களால் கட்டுப்படுத்தப்படும் சர்வதேச ஊடகங்கள், அமெரிக்காவும் அதன் யுத்தப் பங்காளிகளும் ஈராக்கில் இழைத்த அட்டூழியங்களை உலகுக்கு எடுத்துக் காட்டத் தவறிவிட்டன.
ஈராக் என்பது யூப்பிரடீஸ் மற்றும் டைக்கிரீஸ் நதிகளுக்கு இடையில் 7000 வருடங்களுக்கு முன் மொஸபத்தேமியா, சூமர், அக்காத், பாபிலோனியா, அஸிரியா என பண்டைய நாகரிகங்கள் பல தோற்றம் பெற்ற ஒரு பண்டைய பூமியாகும்.
இந்தப் பூமி அவ்வப்போது ஐரோப்பிய காலனித்துவவாதிகளால் ஈவிரக்கமற்ற விதத்தில் கற்பழிக்கப்பட்டு வந்துள்ளது. அதன் தொடராக அமெரிக்காவும் பல நூற்றாண்டுகளாக அதன் எண்ணெய் செல்வத்தை சூறையாடி வந்துள்ளது.
உதாரணத்துக்கு முதலாம் உலகப் போருக்கு முன்பிருந்தே ஈராக்கின் எண்ணெய் வளம் மீது கட்டுப்பாடுகளைக் கொண்டிருப்பது அமெரிக்காவின் கொள்கையாகவே இருந்து வந்துள்ளது.
முதலாம் உலகப் போருக்குப்பின் அப்போதைய ஊழல்மிக்க ஈராக்கின் ஆட்சியாளர்களுடன் தனது எண்ணெய் கம்பனிகள் சுதந்திரமாகப் பேரம் பேச அனுமதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அமெரிக்கா முன்வைத்தது.
1927இல் பாரிய அளவிலான எண்ணெய் அகழ்வுகள் தொடங்கப்பட்டன. மோசூல் பிராந்தியத்தில் அதிகளவான எண்ணெய் படிவுகள் கண்டு பிடிக்கப்பட்டன.
ஈராக்கின் பெற்றோலிய கம்பனி பிரிட்டிஷ் பெற்றோலியம் (அப்போதைய ஆங்கிலோ- – ஈரான், கம்பனி) ஷெல், மொபில், எக்ஸன் (அப்போதைய நியூ ஜேர்ஸியின் ஸ்டேன்டர்ட் ஒயில்) என்பனவற்றை உள்ளடக்கிய முழு அளவிலான ஏகபோகம் கொண்ட ஒரு கம்பனியாக இருந்தது.
அவர்கள் ஈராக்கின் எண்ணெய் வளத்தை அமெரிக்கா, பிரிட் டன், பிரான்ஸ் மற்றும் ஒல்லாந்து ஆகிய நாடுகளுக்கிடையில் தலா 23.75 சதவீதமாகப் பகிர்ந்து கொண்டனர்.
எஞ்சிய ஐந்து வீதம் இந்த உடன்பாடு எட்டப்படுவதற்கான பேரம் பேசலை வெற்றிகரமாக நடத்திய கலோஸ்ட் குல்பென்கின் நிறுவனத்துக்கு சென்றது.
இதில் பரிதாபகரமான நிலை என்ன வென்றால், இந்த எண்ணெய் வளத்தின் உண்மையான உரிமையாளரான ஈராக்கிற்கு கொஞ்சம் கூட இந்தப் பகிர்வில் இடமளிக்கப்படவில்லை.
இந்த அநீதியான உடன்பாட்டுக்கு எதிராக அரபு மக்களும் குர்திஷ் மக்களும் கிளர்ந்து எழுந்தபோது, 1925இல் அந்த எழுச்சி மிகவும் கொடூரமான முறையில் நசுக்கப்பட்டது.
வரலாற்றில் முதற் தடவையாக இந்தக் காலப்பகுதியில் தான் பிரிட்டன் ஆகாயத்திலிருந்து விமானங்கள் வாயிலான நச்சு வாயுவை பிரயோகித்தது. ஈராக்கின் குர்திஷ் நகரமான சுலைமானியாவில் மக்கள் மீது இந்த நச்சு வாயு தூவப்பட்டது.
இந்தக் கொடுமைகள் மற்றும் சதித் திட்டங்கள் எல்லாவற்றையும் தாண்டி 1970ல் எண்ணெய் வள மேம்பாட்டுக்குப் பின் ஈராக் பல நவீன உட்கட்டமைப்பு வசதிகள், சுகாதார வசதிகள், கல்வி வசதிகள் என பல்வேறு வசதிகளுடன் கிட்டத்தட்ட அபிவிருத்தி அடைந்த ஒரு நாடாகத் தலைநிமிர்ந்து நின்றது, அதன் மக்களும் உயர்தரமான வாழ்க்கைத் தரத்தை அனுபவித்து வந்தனர்.
இந்த நிலையில் தான் 1979இல் ஈரானில் இஸ்லாமியப் புரட்சி இடம்பெற்றது. அந்தப் புரட்சியின் வெற்றிக்குப் பின் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் அவற்றின் வளைகுடா பங்காளிகளான அரபு நாடுகள் காலஞ்சென்ற ஈராக்கிய ஜனாதிபதி சதாம் ஹுஸைனைத் தூண்டிவிட்டு ஈரான் மீது யுத்தம் தொடுக்கச் செய்தன.
இந்த யுத்தம் எட்டாண்டு காலம் நீடித்தது. இந்த யுத்தத்தில் இஸ்ரேலின் நலனுக்காகவும், மேலைத்தேய ஆயுத உற்பத்தியாளர்களின் நன்மைக்காகவும் இலட்சக்கணக்கான மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இந்த யுத்தத்தின் இழப்பு சுமார் 100 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என சிலர் மதிப்பிட்டுள்ளனர்.
1988இல் இந்த யுத்தம் முடிவுக்கு வந்தது. எவ்வாறேனும் அன்றைய அமெரிக்க ஜனாதிபதி புஷ் (தந்தை) மீண்டும் சதாம் ஹுஸைனை தூண்டிவிட்டு குவைத்தை ஆக்கிரமிக்கச் செய்தார்.
ஈராக்கின் படைகள் குவைத்தை ஆக்கிரமித்ததும் சதாமுக்கு எதிராக அமெரிக்காவே ஒரு படு பாதகமான ஊடக பிரசாரத்தையும் முன்னெடுத்தது.
அத்தோடு வரலாற்றில் என்றும் இல்லாத வகையில் ஒரு பாரிய குண்டுத் தாக்குதலை ஈராக் மீது மேற்கொண்டு இந்த நாட்டை கிட்டத்தட்ட அதன் பண்டைய வரலாற்றுக்கு முந்திய நிலைக்கு கொண்டு வந்தது.
மனித உடல்களை துண்டு துண்டாக சிதறடிக்கக் கூடிய கொத்தணி குண்டுகளை அமெரிக்கா இங்கு பயன்படுத்தியது.
மனித உடலின் சதைப் பகுதியை அப்படியே பொசுக்கிவிடக் கூடிய நேபாம் மற்றும் வெள்ளை பொஸ்பரஸ் குண்டுகளும் அமெரிக்காவால் பயன்படுத்தப்பட்டன.
சொத்துக்களுக்கு பாரிய சேதம் விளைவிக்கக் கூடிய சிறிய வகை அணுகுண்டு வகையைச் சார்ந்த, ஆகாயத்திலேயே வெடித்துச் சிதறி தீப்பிழம்பாக கீழே வரக்கூடிய குண்டுகளையும் அமெரிக்கா பயன்படுத்தத் தவறவில்லை.
இரண்டாம் உலக மகா யுத்த காலத்தில் நேசப்படைகள் பாவித்த மொத்த விமானக் குண்டுகளின் எண்ணிக்கையை விட அதிகளவு குண்டுகளை அமெரிக்கா இந்த யுத்தத்தில் பாவித்தது.
சவூதி அரேபியா தலைமையில் வளைகுடா நாடுகள் இந்த இராணுவ நடவடிக்கைகளுக்காக வழங்கிய நிதி உதவிகள் மூலம் 1,30,000 ஈராக்கிய பொதுமக்கள் எரித்து சாம்பலாக்கப்பட்டனர்.
இந்த யுத்தத்தால் மேலைத்தேய ஆயுத உற்பத்தி செழிப்படைந்தது. அவர்களின் ஆயுத விற்பனை வருமானம் 157 அமெரிக்க பில்லியன் டொலர்களை எட்டியது.
விமானக் குண்டு வீச்சுக்கள் காரணமாகவும் ஐக்கிய நாடுகளின் தடைகள் காரணமாகவும் ஐந்து லட்சத்துக்கும் அதிகமான சிறுவர்கள் கொல்லப்பட்டனர்.
ஈராக் இன்று கிட்டத்தட்ட ஒரு ஆக்கிரமிக்கப்பட்ட நாடு. 1991 முதல் வெளியே சொல்ல முடியாத பல துன்பங்களையும், கஷ்டங்களையும் அந்த மக்கள் அனுபவித்து வருகின்றனர்.
அந்த நாட்டின் சனத்தொகையில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானவர்கள் போஷாக்கின்மை, தொற்றுநோய்கள், கருச்சிதைவு, ஆயுள் எதிர்பார்க்கை குறைவு என்பனவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தனது தந்தையின் வழியைப் பின்பற்றி மகன் ஜோர்ஜ் புஷ் தன் பங்கிற்கு 2003 மார்ச்சில் ஈராக்கை ஆக்கிரமித்தார். ஜனநாயகத்தை நிலைநாட்டப் போவதாகவும் ஈராக்கில் என்றுமே இல்லாத இருந்திராத இரசாயன ஆயுதங்களை தேடிக் கண்டுபிடித்து அழிக்கப் போவதாகவும் இந்த ஆக்கிரமிப்புக்கு காரணம் கூறப்பட்டது.
அமெரிக்கப் படைகள் ஈராக் நகரங்கள் மீது குண்டுகளை மழையாகப் பொழிந்தன. முன்னொரு போதும் இல்லாத அளவுக்கு இது தீவிரமாக அமைந்தது.
ஒருசில தினங்களுக்குள் ஈராக்கிய மக்களின் நீர், மின்சாரம், மருந்து, உணவு, தங்குமிட வசதி என எல்லாமே மறுக்கப்பட்டன. ஏற்கனவே தீக்காயங்களால் பாதிக்கப்பட்ட ஈராக்கிய பொதுமக்களின் நிலை என்னவாகி இருக்கும் என்று சற்றுக் கற்பனை செய்து பாருங்கள்.
அன்றாடம் ஈராக்கிய வான்பரப்பிலிருந்து குண்டுகள் தான் அந்த மக்களை நோக்கி வந்தன. மிகக் கொடிய அழிவுகளை அவை ஏற்படுத்தின. அவற்றால் பூமியே நடுங்கியது.
ஒரு காலத்தில் மிகவும் செழிப்பாக இருந்த நகரங்கள் மனிதர்கள் பலி எடுக்கப்படும் பூமியாக மாறின. உயிர் தப்பிய சிறுவர்கள் தம்மைச் சுற்றி அரங்கேறும் அழிவுகளைக் கண்டு அதிர்ச்சி அடைந்தவர்களாகக் காணப்பட்டனர்.
அச்சமும் பீதியும் ஆட்கொண்ட நிலையில் அவர்கள் அழுது புலம்பினர். ஏன் தங்கள் மீது இந்தக் கொடூரம் இழைக்கப்படுகின்றது, ஏன் தாங்கள் ஈவிரக்கமின்றி இதயம் இன்றி இலக்கு வைக்கப்படுகிறார்கள் என்பதை அவர்களால் எண்ணிக் கூடப் பார்க்க முடியவில்லை.
நீண்ட காலமாக நீடித்த முற்றிலும் தீயதும் கொடூரமானதுமான இந்த இரத்தக் குளியலால், ஈராக்கிய மக்களின் வாழ்க்கையே திசை மாறிப் போனது. எதுவுமே நிச்சயமற்ற நிலையில் எந்தக் கணமும் மரணம் வரலாம் என்ற அச்சம் அவர்களை ஆட்கொண்டது.
நீண்டகால வறுமை நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டனர். எங்கிருந்து குண்டுகள் போடப்படும், எங்கு பதுங்கலாம் என்பதற்காக வானத்தை அண்ணாந்து பார்த்தவாறே அவர்கள் வாழ்க்கையை கடத்தத் தொடங்கினர்.
இதனிடையே அமெரிக்கப் படைகள் ஈராக்கிய பெண்களை கூட்டமாகச் சேர்ந்து வேட்டையாடும் அதிர்ச்சியூட்டும் புகைப்படங்களும் வெளிவந்தன.
இந்தக் கொடூரங்களை இழைத்த அமெரிக்கப் படைகள், தமது நாட்டிலுள்ள தமது தாய்மார் மற்றும் சகோதரிகளைப் போன்ற பெண்கள்தான் இவர்களும் என்பதை ஒரு கணமாவது எண்ணிப் பார்த்திருப்பார்களா?
ஆயிரக்கணக்கான அப்பாவி ஆண்களும் பெண்களும் எந்தக் காரணமும் இன்றி வகை தொகையாகக் கைது செய்யப்பட்டனர்.
மனித குலம் இதுவரை எதிர் நோக்காத மிகவும் கீழ்த்தரமான கொடிய சித்திரவதைகளுக்கு அவர்கள் ஆளாக்கப்பட்டனர். உலகம் முழுவதும் இது கண்டனத்துக்கு ஆளானது.
விசாரணை என்ற போர்வையில் நிர்வாணப்படுத்தல், உடம்பில் அதிகளவு வெப்பம் ஏற்றல், அதிகளவு குளிச்சி அடையச் செய்தல், காதுகளுக்குள் அதிகளவு ஓசையை பாய்ச்சல், கண்களுக்கு அதிகளவு வெளிச்சத்தை பாய்ச்சல்…,
உறங்க விடாமல் தடுத்தல் என ஜெனீவா பிரகடனத்தில் சித்திரவதை, கொடுமை, மனிதாபிமானமின்றி அல்லது தரக்குறைவாக நடத்துதல், அல்லது தண்டித்தல் என என்னவெல்லாம் சொல்லப்பட்டுள்ளனவோ அவை அனைத்தும் அமெரிக்கப் படைகளால் ஈராக் மக்கள் மீது பிரயோகிக்கப்பட்டன.
இவற்றோடு இணைந்ததாக கடுமையான தாக்குதல்கள், பாலியல் ரீதியாக தரக்குறைவான செயற்பாடுகள், பலவந்தமான ஓரினப் பாலியல் துஷ்பிரயோகம், மின்சாரம் பாய்ச்சல், நீரில் மூழ்கடித்தல் என கொடுமைகள் தொடர்ந்த நிலையில் பலர் இந்த விசாரணைகளின் போதே மரணத்தையும் தழுவினர்.
புலிட்ஸர் விருது பெற்ற புலனாய்வு ஊடகவியலாளர் சீமொர் ஹேஷ் திடுக்கிட வைக்கும் புகைப்படங்களுடன் இந்த உண்மைகளை வெளியிட்ட பிறகுதான் உலகுக்கே இது தெரிய வந்தது.
அதுவரை இவை பரம இரகசியமாக மூடி மறைக்கப்பட்டிருந்தன. ஈராக்கின் பக்தாத் நகருக்கு அருகில் உள்ள அபூ கராய்ப் சிறைச்சாலைக்குள் தான் இந்த அசிங்கங்கள் அரங்கேறியிருந்தன என்ற உண்மையை அவர் உலகுக்கு எடுத்துக் காட்டினார்.
ஈராக்கின் அழிவு மிகவும் உன்னிப்பாக திட்டமிடப்பட்ட ஒன்றாகும். ஈராக்கில் உள்ள புத்திஜீவிகளையும், தொழிற்சார் நிபுணர்களையும் இன்னும் கல்வியியலாளர்களையும் திட்டமிட்டு அழித்து விடுவதோடு இனிப் பல தலைமுறைகளுக்கு அவ்வாறானவர்கள் உருவாவதை தடுப்பதும் ஒரு முக்கிய நோக்கமாகும்.
2003 மே மாதம் அளவில் இஸ்ரேலின் புலனாய்வு சேவையான மொஸாட், ஈராக்கின் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள், விஞ்ஞானிகள், டாக்டர்கள், சட்டத்தரணிகள், பொறியிலாளர்கள் மற்றும் புத்திஜீவிகள் என தன்னால் கொல்லப்பட வேண்டியவர்களின் பெயர்ப் பட்டியலோடு ஈராக் வந்துள்ளது.
இந்தப் பட்டியலோடு வீடு வீடாகச் சென்று அவர்களை தேடித் தேடி அவர்கள் உறங்கிக் கொண்டிருந்த வேளையிலேயே கொலை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தக் கொலைகளுள் பல, கூரிய ஆயுதங்களால் கழுத்து வெட்டி செய்யப்பட்ட கொலைகளாகும். மனைவிமார் முன்னிலையில் கணவன்மாரை இவ்வாறு கொன்று விட்டு பின்னர் மனைவிமாரையும் கொலை செய்துள்ளனர்.
அமெரிக்கப் படைகள் ஈராக்கிய நூதனசாலையிலிருந்து வரலாற்றுப் பெறுமதிமிக்க தொல்பொருள்களை திருடிச் சென்றனர்.
ஷீஆக்களுக்கு ஆயுதங்களை வழங்கி ஸுன்னிகளுக்கும் அவர்களுக்கும் இடையில் மோதல்களையும் தூண்டி விட்டனர்.
பல புதிய தகவல்களின் பிரகாரம் இரண்டாயிரம் டாக்டர்களும் மற்றும் 5,500 கல்வியாளர்கள் மற்றும் புத்திஜீவிகளும் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது சிறை வைக்கப்பட்டுள்ளனர்.
அப்பாவிப் பொதுமக்கள் கொன்று குவிக்கப்பட்டதற்கு அப்பால் தம்மிடம் சரணடைந்த ஈராக் படை வீரர்கள் பலரையும் அமெரிக்கப் படையினர் ஈவிரக்கமின்றி கொன்று குவித்துள்ளனர்.
ஆனால் துரதிஷ்டவசமாக உலகைப் பொறுத்தமட்டில் இந்த வெறியாட்டத்துக்கு எத்தனை ஈராக்கிய மக்கள் பலியானார்கள் என்பது இன்னமும் தெரியவில்லை.
1991 குவைத் நெருக்குதல் மற்றும் ஆப்கானிஸ்தான் யுத்தம் என்பனவற்றிலும் இதே நிலைதான். பிறப்பு இறப்பு, திருமண, காணி, கம்பனி, வாகன பதிவு ஆவணங்கள் வைக்கப்படடிருந்த இடங்கள் கூட எரித்து சாம்பலாக்கப்பட்டுள்ளன. முற்று முழுதாகப் பதிவுகள் எதுவும் அற்ற ஒரு குழப்ப நிலையை தோற்றுவிப்தே இதன் நோக்கமாகும்.
சுமார் மூன்று இலட்சம் மக்களைக் கொண்ட பலூஜா நகரில் அமெரிக்க படை கள் கொத்தணி குண்டுகளையும், பொஸ்பரஸ் ஆயுதங்களையும் பயன்படுத்தியுள் ளன.
வியட்நாம் யுத்தத்துக்குப் பின் நகர்ப்புறம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட மிகத் தீவிரமானதோர் தாக்குதல் இதுவேயாகும். அதுமட்டுமன்றி, இந்த தாக்குதல் மூலம் மிக மோசமான எரிகாயங்களுக்கு மக்கள் ஆளானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பத்து நாட்களுக்குள் பலூஜா நகரம் (Fallujah city) இந்தப் பூமியில் ஒரு நரகம் போல் காட்சியளிக்கத் தொடங்கியது. நகர வீதிகள் தோறும் சிதறுண்ட மனித உடல்களும் சிதைவுற்ற கட்டட இடிபாடுகளுமே காணப்பட்டன.
அமெரிக்க ஏகாதிபத்தியம் மனித குலத்துக்கு மாபெரும் கொடூரம் இழைத்த நகரம் என்ற வரலாறும் அந்த நகரில் பதிவானது.
பிர்அவுன் (மன்னன் பாரோ), ஹிட்லர், முசோலினி ஆகியோர் மனித குலத்துக்கு இழைத்த கொடுமைகள் மற்றும் மனிதப் படுகொலைகள் என்பனவற்றை பலூஜா சம்பவம் மிஞ்சிவிட்டது என்று துருக்கியின் பாராளுமன்ற மனித உரிமை குழு தெரிவித்துள்ளது.
அப்பாவிப் பொதுமக்களை கொன்று குவிக்க நேபாம் குண்டுகளையும் ஏனைய தடை செய்யப்பட்ட ஆயுதங்களையும் அமெரிக்கா பாவித்தது என்ற தகவல் பிற்காலத்தில் அமெரிக்க இராணுவ வட்டாரங்களில் இருந்தே கசியத் தொடங்கியது. உருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட நூற்றுக்கணக்கான சடலங்கள் நேபாம் குண்டுகள் பாவிக்கப்பட்டதை நிரூபித்துள்ளன.
“பலூஜா நகரைத் தரைமட்டமாக்குவதற்கு அமெரிக்கர்கள் யுத்த தாங்கிகள், பீரங்கிகள் உட்பட ஏனைய மரபு ரீதியற்ற ஆயுதங்கள் பலவற்றையும் பாவித்தனர்.
இந்த குண்டுகள் காரணமாக காளான் போன்ற புகைக் கூட்டம் பரவத் தொடங்கியது. வானத்திலிருந்து அதன் வால் பகுதியூடாக புகையை கக்கியவாறு வந்த பொருள்களில் இருந்து சிறு துண்டுகள் கீழே விழுந்தன.
இந்தத் துண்டுகள் பாரிய தீ சுவாலையை ஏற்படுத்தியவாறு வெடிக்கத் தொடங்கின. இவை மனிதர்களின் தோல்களை சுட்டெரித்தன.
அந்த தீயின் மீது தண்ணீரை ஊற்றியபோதும் அது அடங்கவில்லை” என்று உயிர் தப்பிய மக்கள் தமது அனுபவத்தை விபரித்துள்ளனர். இவை தான் நேபாம் மற்றும் பொஸ்பரஸ் குண்டுகள் ஏற்படுத்திய தாக்கங்கள் என்று தெரியவந்துள்ளது.
ஈராக் இன்று இலட்சக்கணக்கான விதவைகளும், சுமார் ஐம்பது லட்சம் அநாதைகளும் வாழும் ஒரு நாடாக மாறிவிட்டது.
இவர்களுள் அநேகமானவர்களுக்கு வீடு வாசல்கள் கிடையாது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. ஈராக்கிய சிறுவர்களுள் மூன்றில் ஒரு பங்கினர் போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கல்வி வசதி, மருத்துவ வசதி என எந்தவிதமான வசதிகளுமின்றி மிக மோசமான நிலையில் சுமார் ஐம்பது லட்சம் பேர் அகதி முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
70 வீதமான ஈராக் பெண் பிள்ளைகள் இப்போது பாடசாலைகளுக்கு செல்வதில்லை. ஒரு காலத்தில் இந்தப் பிராந்தியத்தில் மிகச் சிறந்த மருத்துவ வசதி கிடைத்த இடம் இப்போது முற்றாக உருக்குலைந்து போய் விட்டது.
75 வீதமான மருத்துவத்துறை ஊழியர்கள் இப்போது வேலை வாய்ப்புக்கள் எதுவும் இன்றி உள்ளனர். இவர்களில் பாதிக்கும் அதிகமானவர்கள் நாட்டை விட்டே வெளியேறிவிட்டனர்.
ஆறு வருட கால புனரமைப்புப் பணிகளுக்கு பின்னரும் கூட ஈராக்கின் சுகாதார சேவை இன்னமும் குறைந்தபட்ச தரத்தை கூடப் பெறவில்லை.
ஈராக்கின் உட்கட்டமைப்பு சிதைவடைந்து விட்டது. எங்கு பார்த்தாலும் சட்டமும் ஒழுங்கும் சீர்குலைந்து பல்வேறு குண்டர்கள் குழுக்கள் வலம்வரத் தொடங்கியுள்ளன.
இவர்களுக்கு மறைமுகமாக சில அதிகார மட்ட ஆதரவும் கிடைத்து வருகின்றது. ஏற்கனவே சொல்லொணா துயரங்களால் நொந்துபோன அப்பாவிப் பொது மக்கள் மீது தற்போது இந்த குழுக்களைக் கொண்டு பயங்கரவாதமும் ஏவிவிடப்பட்டுள்ளது.
அன்றாடம் இடம்பெறும் குண்டு வெடிப்புக்களும் கொலைகளும் ஆங்கிலோ-–அமெரிக்க படைகளால் அன்றாடம் நடத்தப்படும் கண்மூடித்தனமான கைதுகள் என்பனவும் வாழ்வுக்கான பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளன.
தாங்க முடியாத வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, வேலைவாய்ப்பின்மை, சீர்குலைந்துபோன சுகாதார சேவை, முடங்கிப்போன கல்விச் சேவை, செயலிழந்துபோன அடிப்படை வசதிகள் என்பன தான் ஈராக்கின் இன்றைய கோலம்.
எதிர்காலத்துக்கான எந்தவொரு சிறு நம்பிக்கைத் துளியும் அந்த மக்களிடம் இல்லை. பல்லாயிரக்கணக்கானவர்கள் தமது குடும்ப வாழ்வாதாரத்துக்கு வழிகாண முடியாமல் தடம்புரண்டு போயுள்ளனர்.
உலக சுதந்திர ஊடக தினத்தை நினைவு கூரும்: யுத்தப் பொறிமுறையோடு பின்னிப் பிணைந்துள்ள மேலைத்தேய ஊடகங்கள்
இப்போது சொல்லுங்கள், இந்த சுதந்திர ஜனநாயக ஊடகவியலாளர்களும் அதனைக் காப்பவர்களும் எங்கே உள்ளனர்? கருத்துச் சுதந்திரத்தைப் பேணிப் பாதுகாப்பதாக பெருமையுடன் மார்தட்டிக் கூறிக் கொள்பவர்கள் எங்கே? அவர்கள் இருக்கின்றார்கள்.
வெட்கக்கேடான முறையில் கபடத்தனமாக நாடுகளை ஆக்கிரமித்து சூறையாடுபவர்களுடன் அவர்கள் உள்ளனர். அவர்களின் வெட்கக்கேடான விருந்தினர்களாக உள்ளனர். இவர்கள்தான் இன்று உலக ஊடக சுதந்திர தினத்தையும் நினைவு கூருகின்றனர்.
மே மாதம் மூன்றாம் திகதியை உள்ளூர் மற்றும் சர்வதேச ஊடகங்கள் சுதந்திர ஊடக தினமாக நினைவு கூர்ந்தன.
எவ்வாறேனும், இதே சர்வதேச ஊடகங்கள்தான் உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம் நாடுகளை சூறையாடி சின்னாபின்னமாக்கிக் கொண்டிருக்கும் மேலைத்தேய யுத்த இயந்திரத்தோடு பின்னிப் பிணைந்த ஓர் அங்கமாகவும் காணப்படுகின்றன.