சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தினரால் நடாத்தப்பட்ட புங்குடுதீவு மகாவித்தியாலயத்தில் உயர்தர வகுப்பில் கல்வி பயின்ற செல்வி. வித்தியா சிவலோகநாதன் அவர்களின் கண்டனக் கூட்டமும் அஞ்சலி நிகழ்வும் பேர்ண் ஞானலிங்கேச்சுரர் ஆலய மண்டபத்தில் இன்று 17.05.2015 ஞாயிற்றுக்கிழமை மாலை ஆறு மணிக்கு ஆரம்பமாகியது.
சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் செயலாளர் திரு.தர்மலிங்கம் தங்கராஜா தலைமையில் உணர்வுபூர்வமாக நடந்தேறியது.
முதலில் சபையோரை வணங்கி வரவேற்று வித்தியாவுக்கு நடந்த கொடுமைகளுக்கு சட்டமும் நீதியும் தம் கடமையைச் சரிவரச் செய்ய வேண்டும் என்றும் தலைமை வகித்தவர் கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து வித்தியாவின் குடும்ப உறவினர்களான திரு. தம்பிஐயா செல்வராஜா அவர்கள் நினைவுச் சுடரினை ஏற்ற, திரு.திருமதி. பத்மராஜா குடும்பத்தினர் மலர்மாலை அணிவிக்க, திருமதி. ராதிகா ஈசன் அவர்கள் மலர் அஞ்சலியை செய்யதனர்.
அமைதி வணக்கத்தினைத் தொடர்ந்து, சபையோர்கள் மலராஞ்சலியும், தீபாஞ்சலியும் செய்யும் சமநேரத்தில் ஞானலிங்கேச்சுரர் ஆலய சசிதரன் ஐயா அவர்களின் இரங்கலுரை நடைபெற்றது.
தொடர்ந்து புங்குடுதீவில் இருந்து “புங்குடுதீவு மக்கள் அபிவிருத்திக்கான ஒன்றியத் தலைவர் திரு. சண்முகலிங்கம் அவர்கள் தொலைபேசி மூலம் தமது இரங்கலுரையை பதிவு செய்தார்.
அதனைத் தொடர்ந்து, ஊடகவியலாளர் திரு. சண் தவராஜா அவர்கள், லவுசான் மானில எஸ்.பி கட்சியைச் சார்ந்த திரு.தம்பிப்பிள்ளை நமசிவாயம் அவர்கள், தமிழ்க் கல்விச் சேவைத் தலைவர் திரு. உதயபாரதிலிங்கம் அவர்கள், திரு. பொலிகை ஜெயா அவர்கள், திரு. வாவி பாஸ்கர் அவர்கள்,
ஒன்றியத்தின் உபசெயலாளர். திரு. துரைராஜா சுவேந்திரன் அவர்கள். எமது ஒன்றிய ஆலோசனைச் சபை உறுப்பினர்களான திரு. சிவசம்பு சந்திரபாலன் அவர்கள், திரு. செல்வரெட்ணம் சுரேஸ் அவர்கள், ஞானலிங்கேச்சுரர் ஆலய முரளி ஐயா அவர்கள் மற்றும் திருமதி.
சிவாஜினி தேவராஜா அவர்கள், திருமதி. தர்ஷிகா கிருஸ்ணானந்தராஜா போன்றோர் தமது காட்டமான இரங்கல் உரைகளைப் பதிவாக்கினர்.
கவிதாஞ்சலிகளாக திரு. கேதீஸ்வரன் அவர்கள், திரு. மோகனதாஸ் அவர்கள், திரு.ரமணதாஸ் அவர்கள், திரு. மதி போன்றோரின் உருக்கமான கவிதைகள் இடம் பெற்றன. வணக்கத்துக்குரிய ஒல்ரென் சுந்தரேஸ்வரக் குருக்கள் தமது அனுதாபத்தைத் தெரிவிக்கும்படி கேட்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் உபதலைவர் திரு. சொக்கலிங்கம் ரஞ்சன் அவர்கள் ஏற்புரையுடன் நன்றிஉரையும் வழங்கினார்.
திரு. ரமணதாஸ் அவர்களால் இந்த நிகழ்வின் நோக்குப் பற்றிய விளக்கவுரை நிகழ்த்தப்பட்டது. திரு. மதி அவர்களின் கண்டன அறிக்கை வாசித்தளிக்கப்பட்டது.
மண்டபம் நிறைந்த மக்கள் இறுதியாக எழுந்து நின்று தங்கள் கலைமகளான வித்தியாவிற்கு மௌன அஞ்சலி செலுத்தலுடன் கண்டனக் கூட்டமும் கண்ணீர் அஞ்சலியும் இரவு 8.30 மணியளவில் நிறைவிற்கு வந்தது.
குறுகியநேர அறிவித்தல் (முதல்நாள் மாலை) விடுத்தும், மண்டபம் நிறைந்த பொதுமக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.
-புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிற்சர்லாந்து.-