மீண்டும் அதே பழைய பல்லவி!: தமிழ் மக்கள் தமது ஒற்றுமையை உள்நாட்டுக்கும் சர்வதேசத்திற்கும் வெளிப்படுத்த வேண்டும்.
அவர்கள் ஓர் அரசியல் அமைப்பின் கீழ், ஒரே அரசியல் தலைமையின் கீழ் ஒன்று திரண்டிருக்கின்றார்கள் என்பதை காட்ட வேண்டும் என்ற கோரிக்கைகள் மீண்டும் எழத் தொடங்கியிருக்கின்றன.

வரப்போகின்ற பொதுத் தேர்தலை முன்னிறுத்தி இந்த வேண்டுகோள்கள்,  தமிழ் மக்களை நோக்கி தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அரசியல் தலைவர்களினால் நேரடியாகவும், மறைமுகமாகவும் முன்வைக்கப்படுவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.ஒற்றையாட்சி முறைமையைக் கொண்டுள்ள இலங்கை அரசியலமைப்பின் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு ஒருபோதும் தீர்வு காணமுடியாது.
அதேநேரம் மாறி மாறி ஆட்சிக்கு வருகின்ற பேரினவாத அரசியல் கட்சிகளும், அவற்றின் அரசியல் தலைவர்களும், தமிழ் மக்களுக்கு நியாயமாகச் சேர வேண்டிய அரசியல் உரிமைகளை வழங்குவதற்கு விரும்பாத ஒரு போக்கையே கடைப்பிடித்து வருகின்றார்கள்.
ஆகவே, தமிழர்கள் தமக்கென தனியான ஓர் ஆட்சியை அமைத்துக கொள்வதைத் தவிர வேறு வழி தெரியவில்லை.
எனவே, தமிழ் மக்கள் தமக்கென தனியானதோர் அரசியல் தலைமையின் கீழ் ஒன்றிணைய வேண்டும். தனித்துவமிக்க தமது அரசியல் பலத்தை அதன் மூலம் வெளிக்காட்ட வேண்டும் என்ற கோரிக்கை தமிழ் அரசியல் தலைவர்களினால் முன்வைக்கப்பட்டிருந்தது.
தனிநாட்டுக் கோரிக்கையை வலியுறுத்திய வட்டுக்கோட்டை தீர்மானத்தின் போது தமிழ் அரசியல் தலைவர்கள் மக்களிடம் உணர்ச்சிகரமாக இந்த வேண்டுதலை முன்வைத்திருந்தார்கள்.
அன்று அந்தக் கோரிக்கையில் இருந்த யதார்த்தத்தையும், அத்தகைய ஒற்றுமையின் கட்டாயத் தேவையையும் தெளிவாக உணர்ந்து கொண்ட தமிழ் மக்கள் தமது ஏகோபித்த ஆதரவை வழங்கியிருந்தார்கள்.அதன் பின்னர் காலத்துக்குக் காலம் ஓரணியில் தமிழ் மக்கள் திரள வேண்டும் என்ற அரசியல் கோரிக்கை தமிழ் மக்களிடம் முன்வைக்கப்படுவது சாதாரண ஒரு நிகழ்வாக இடம்பெற்று வந்திருக்கின்றது.
ஓரணியில் ஒற்றுமையாகத் திரண்டிருக்க வேண்டும் என்ற அரசியல் தேவை தமிழ் மக்களுக்கு, தொடர்ச்சியாகவே இருந்து வருகின்றது.
நாடு அந்நியரிடமிருந்து சுதந்திரம் பெற்ற காலம் தொடக்கம், இனப்பிரச்சினையைப் பாராமுகத்துடனும், மாற்றாந்தாய் மனப்பான்மையுடனும் பேரினவாத சிங்களத் தலைவர்கள் கையாண்டு வருவதன் விளைவாகவே இந்த அரசியல் தேவை இன்னும் உயிர்ப்புடன் இருக்கின்றது.
இந்த அரசியல் தேவையை தமிழ் மக்கள் நன்கு உணர்ந்து அதற்கேற்ற வகையில் அவர்கள் தொடர்ச்சியாகச் செயற்பட்டு வந்துள்ளதை, இதுவரையிலான தேர்தல் முடிவுகளை ஒப்பிட்டு நோக்குகின்ற எவரும் இலகுவில் புரிந்து கொள்ள முடியும்.ஒற்றுமையை வலியுறுத்துகின்ற தமிழ்த் தலைவர்கள் தமக்குள் ஒற்றுமையாக இருக்கின்றார்களா, ஐக்கியத்துடன், ஒரு கட்டமைப்பின் கீழ் செயற்படுகின்றார்களா என்பது இன்னும் கேள்விக்குறியாகவே இருக்கின்றது.
 selva4தமிழ் அரசியல் கட்சிகள் தனித்தனியாகச் செயற்படுவதன் மூலம் எதனையும் சாதிக்க முடியாது. அதனால் எந்தப் பலனும் கிடையாகது என்ற அரசியல் ஞானோதயத்தின் காரணமாகவே தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற கூட்டமைப்பு வடக்குகிழக்கு பிரதேசத்துடன் மலையகத்தையும் உள்ளடக்கியதாக நாட்டின் அனைத்துத் தமிழ் மக்களையும் ஒரே அணியில் ஒன்று திரட்டுவதற்காக அன்றைய தமிழ்த் தலைவர்களினால் உருவாக்கப்பட்டது.
ஆனால் அந்தக் கூட்டணி தலைவர்களின் ஒற்றுமையின்மை காரணமாகவே சிதைந்து போனது.
அப்போது நாட்டில் ஏற்பட்டிருந்த அரசியல் போக்கு காரணமாக மிதவாத அரசியல் தலைவர்களிடமிருந்து தமிழ் மக்களுடைய அரசியல் தலைமை ஆயுதமேந்திய இளைஞர்களின் கைகளுக்கு மாற்றம் பெற்றது.
அதனைத் தொடர்ந்து இடம் பெற்றுவந்த, தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்கான ஆயுதப் போராட்டம் இல்லாதொழிக்கப்பட்டதையடுத்து, கடந்த ஐந்து வருடங்களாக இந்த அரசியல் ஒற்றுமை பற்றிய வேண்டுதல்களும் கோரிக்கைகளும் எந்தவிதமான சலிப்புமில்லாமல் மக்களிடம் முன்வைக்கப்படடு வந்துள்ளது.ஆயுதப் போராட்ட காலத்திலும்சரி, யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த 2009 ஆம் ஆண்டின் பின்னரும்சரி தமிழ் மக்கள் தாங்கள் அரசியல் ரீதியாக ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்து வழுவாமல் இறுக்கமாகவே செயற்பட்டு வந்திருக்கின்றார்கள்.
தேசிய கட்சிகளாகிய வர்ணிக்கப்படுகின்ற சிங்களப் பேரின அரசியல் கட்சிகளின் கோரிக்கைகளை அவர்கள் புறந்தள்ளியிருந்தார்கள்.
பல்வேறு வழிகளில் தம் மீது பிரயோகிக்கப்பட்ட அழுத்தங்களுக்கு அவர்கள் அடிபணியவில்லை.
அலங்கார வார்த்தைகள், ஆசைகாட்டுகின்ற அரசியல் வாக்குறுதிகள் என்பவற்றில் அவர்கள் மயங்கவில்லை.
அதேநேரம் ஆயுதமேந்திய இராணுவ அடக்குமுறை அச்சுறுத்தல்களுககு மத்தியிலும்கூட தமிழ் மக்கள் தாங்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற அரசியல் நிலைப்பாட்டில் இரும்புப் பிடியாக உறுதியாக இருந்தார்கள். யுத்தும் முடிவடைந்து ஆறு வருடங்களாகின்றன. ஆயினும் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை.
அரசியல் தீர்வு என்ற இலக்கை நோக்கிய நகர்வுகளையும் காண முடியவில்லை. ஆனால் இனப்பிரச்சினையை மையமாகக் கொண்டு நாளந்தப் பிரச்சினை குறுகிய காலப் பிரச்சினை, நீண்டகாலப் பிரச்சினை என்று பிரச்சினைகள் பல்வேறு நிலைகளில், பல்வேறு வடிவங்களில் பல்கிப் பெருகிச் செல்வதையே காணக் கூடியதாக இருக்கின்றது.
இந்த நிலையில்தான் தமிழ் மக்கள் தமது ஒற்றுமையையும் ஐக்கியத்தையும் நாட்டின் தென்பகுதி அரசியல்வாதிகளுக்கும் சர்வதேசத்திற்கும் வெளிக்காட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கின்றது.
அரசியல் ரீதியாக ஒற்றுமையாக இருந்து உறுதியாகச் செயற்பட்டு வருகின்ற – இதுவரையில் செயற்பட்டு வந்துள்ள மக்களை நோக்கி தலைவர்களினால் இந்தக் கோரிக்கை இப்போதும் முன்வைக்கப்படுகின்றது.தமிழர் விடுதலைக் கூட்டணியின் பின்னர் பலவேறு சவால்கள், பிரச்சினைகளுக்கு மத்தியில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு என்ற கூட்டு அணியின் கீழ் மக்கள் உறுதியாக ஒன்று திரண்டிருந்தார்கள்.
இப்போது, இந்தக் கூட்டமைப்புக்கு என்ன நடக்கப் போகின்றது என்ற கவலையும், தீவிரமான சிந்தனையும் தமிழ் மக்களின் பலதரப்பினரையும் ஆட்கொண்டிருக்கின்றது.தமிழ்த்தேசிய கூட்டமைப்பை, தனியானதோர் அரசியல் கட்சியாகப் பதிவு செய்ய வேண்டும். அதனைக் கட்டுக்கோப்பான அமைப்பாக உருவாக்கி உறுதியான அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.
இதற்காக தங்களைப் போலவே தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் பங்காளிகளாக இணைந்துள்ள அரசியல் கட்சிகளும் அவற்றின் தலைவர்களும் ஒற்றுமையாக உறுதியான ஒரு கட்டமைப்புடன் செயற்பட வேண்டும் என்று தமிழ் மக்கள் விரும்பினார்கள். இன்னும் விரும்புகின்றார்கள்.அதுமட்டுமல்லாமல், கூட்டமைப்புக்கு வெளியில் இருந்து தேசிய கட்சிகளுடன் இணைந்து செயற்பட்டு வருகின்ற தமிழ் அரசியல் கட்சிகளும் இந்த அமைப்பினுள் உள்வாங்கப்பட வேண்டும்.
அதன் ஊடாக தமிழ் மக்கள் தனித்துவமானவர்களாகவும், தனித்துவமான அரசியல் கட்டமைப்பைக் கொண்டவர்களாகவும் திகழ வேண்டும்.
அதன் ஊடாக தமது பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்குரிய அரசியல் நகர்வுகளை முன்னெடுக்க வேண்டும் என்று விரும்பியிருந்தார்கள்.
ஆனால் அவர்களுடைய விருப்பமும் எதிர்பார்ப்பும் இப்போது படிப்படியகக் கானல் நீராகி அவர்களை வெறுப்பின் விளிம்பில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கின்றதோ என்று கவலையடையும் அளவிற்கு நிலைமைகள் மோசமடைந்திருக்கின்றன.தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இப்போதைக்குப் பதிவு செய்யப்படமாட்டாது. ஆனால் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தந்தத்தின் கீழ் அது செயற்பட்டு வரும் என்ற நிலைப்பாடு இப்போது வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது.
கூட்டமைப்பில் இணைந்துள்ள தமிழ் அரசியல் கட்சிகளை அந்த அமைப்பின் பங்காளிக் கட்சிகளாக – பங்காளிகளாகவே பலரும் நோக்குகின்றார்கள்.
ஆனால் கூட்டமைப்பின் தலைமை நிலையில் உள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சி, அத்தகைய நிலைப்பாட்டிற்குத் தயாராக இல்லை. கூட்டமைப்பின் தலைமைக் கட்சியாகவும், பிரதான கட்சியாகவும், பெரும்பான்மை பலமுள்ள கட்சியாகவுமே தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றது. அதற்கேற்ற வகையிலேயே செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.பழம்பெரும் கட்சியாகிய இலங்கைத் தமிழரசுக் கட்சியே தமிழ் மக்களின் உரிமைகளுக்காகப் பல்வேறு வழிகளில் உறுதியாகச் செயற்பட்டு வந்திருக்கின்றது.
18dec1948-e1390472290889
தந்தை செல்வா
ஈழத்துக் காந்தி
என்று வர்ணிக்கப்படுகின்ற தந்தை செல்வாவின் வழிகாட்டலில் அர்ப்பணிப்போடு அந்தக் கட்சி அஹிம்சை வழியில் செயற்பட்டு வந்திருக்கின்றது.
யுத்தம் முடிவடைந்துள்ளதையடுத்து, அத்தகைய அஹிம்சை வழியிலான அரசியல் போக்கைக் கொண்டிருந்த அந்தக் கட்சியின்  தலைமையே  தமிழ் மக்களை சரியான அரசியல் வழியில்  வழிநடத்திச் செல்ல வல்லது என்று வலியுறுத்தி அந்தக் கட்சியை மக்கள் மத்தியில் மீண்டும் செல்வாக்கு பெறச் செய்வதற்கான காரியங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதை காண முடிகின்றது.
இதற்காக மேற்கொள்ளப்படுகின்ற முயற்சிகளுக்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பு என்ற பெயரைப் பொருத்தமான இடங்களில் மிகவும் சாதுரியமாகப் பயன்படுத்துகின்ற ஒரு போக்கும் கையாளப்பட்டு வருகின்றது.தமிழ்க்கட்சிகளும் தமிழ்த்தலைவர்களும் ஓரணியில் – தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் இணைய வேண்டும் என்ற விருப்பத்திற்கும் எதிர்பார்ப்புக்கும் மாறாக கட்சி அரசியல் நடத்துகின்ற ஒரு போக்கு தலையெடுத்திருப்பது தமிழ் மக்களின் பெரும்பான்மையோருக்குக் கவலையை ஏற்படுத்தியிருக்கின்றது.
இதனால், மக்கள் மத்தியிலான ஒற்றுமை என்னவாகும், வரப்போகின்ற தேர்தலில் தமிழ் மக்கள் என்ன செய்யப் போகின்றார்கள் என்ற சிந்தனையும் இப்போது தலையெடுத்திருக்கின்றது.தமிழ் மக்களின் விடாப்பிடியான, ஒற்றுமையான செயற்பாட்டின் விளைவாகவே கடந்த ஜனவரி மாதத்தில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் மூலம் நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, நல்லாட்சி மலர்ந்திருக்கின்றது.
இத்தகைய மக்களின் ஒற்றுமையை மேலும் வலுப்படுத்தி முன்னோக்கி வளர்த்தெடுத்துச் செல்ல வேண்டியது இன்றைய காலத்தின் தேவையாக இருக்கின்றது. ஆனால், அந்த ஒற்றுமையைப் பதம்பார்க்கும் வகையிலேயே, கட்சி அரசியல் போக்கு தலையெடுத்திருப்பதாகக் கருதப்படுகின்றது.இறுக்கமான ஓர் அரசியல் கட்சியாக அல்லாமல், புரிந்துணர்வு ஒப்பந்தம் என்ற நூலில் இணைக்கப்பட்ட ஓர் அமைப்பாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் எதிர்காலச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான முயற்சிகள் மக்கள் மத்தியில் சந்தேகத்தையும் அரசியல் ரீதியான அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றது.புதிய ஆட்சியாளர்களுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியுள்ள தமது தலைவர்கள், அந்த ஆதரவைப் பேரம் பேசுகின்ற சக்தியாகப் பயன்படுத்தி தமது அன்றாடப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு உறுதியாகச் செயற்படுகின்றார்களில்லையே என்று மக்கள் கவலையடைந்திருக்கின்றார்கள்.

இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ள பொதுமக்களின் குடியிருப்புக் காணி பிரச்சினை, காணாமல் போயிருப்பவர்கள் தொடர்பிலான பிரச்சினை, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை என்பன முக்கிய பிரச்சினைகளாக இருக்கின்றன.

அதேநேரம் மீள்குடியேற்றப்பட்டுள்ள, தேவைகள் மிகுந்த குடும்பங்களுக்கு,  தகுதிக்கேற்ற, பொருத்தமான, உறுதியான வாழ்வாதார உதவிகள் வழங்கப்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை என்ற ஆதங்கமும் மக்கள் மத்தியில் நிலவுகின்றது.புலம்பெயர் மக்களால், பல்வேறு அமைப்புக்களும் தனிப்பட்டவர்களும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குப் பல்வேறு வழிகளில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களின் ஊடாக, வாழ்வாதார உதவிகள், அவசர உதவிகள் நிவாரண உதவிகள் என பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த உதவிகள் பாதிக்கப்பட்டுள்ள பல குடும்பங்களுக்கு பேருதவியாக அமைந்திருக்கின்றன. ஆயினும் அடிப்படைத் தேவைகளை வகைப்படுத்தி, நிலைத்து நிற்கத்தக்க வகையிலும், நீடித்திருக்கத் தக்க வகையிலுமான வாழ்வாதார உதவிகள் முறையாகத் திட்டமிடப்பட்ட வகையில் முன்னெடுக்கப்படவில்லை என்ற பொதுவான குறைபாட்டை மக்கள் முன்வைத்திருக்கின்றார்கள்.ஆண் தலைமைத்துவத்தை இழந்துள்ள குடும்பங்கள், மாற்று வலுவுள்ளவர்கள் என்று குறிக்கப்பட்டாலும், உடல் வலுவற்ற நிலையில் உள்ளவர்களோடு, அன்றாட வாழ்க்கையை சீராக நடத்த வழியின்றி வறுமையில் தவிக்கும் குடும்பங்கள்,
தாய் அல்லது தந்தையை இழந்து, ஒரு பெற்றாரின் அரவணைப்பில் வாழும் தேவைகள் மிகுந்த பிள்ளைகளைக் கொண்ட குடும்பங்கள் என்பன உரிய உதவிகளின்றிறும் சரியான வாழ்வாதார உதவிகளின்றியும் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள்.imagesவடமாகாண சபையின் ஆட்சிப் பொறுப்பை தமிழ்த்தேசிய கூட்டமைப்பிடம் மக்கள் கையளித்திருக்கின்ற போதிலும், அதன் ஊடாகத் தங்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்குரிய உறுதியான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவில்லையே என்ற கவலை பாதிக்கப்பட்ட மக்களிடம் காணப்படுகின்றது.
வடமாகாணசபைக்குரிய அதிகாரங்கள், அவர்களுக்குத் தேவையான நிதி என்பவற்றை வழங்குவதில் மத்திய அரசாங்கம் பின்னடிக்கின்றது, மாற்றாந்தாய் மனப்பாங்குடன் செயற்பட்டு வருகின்றது, புதிய அரச தரப்பினரும்கூட, மாகாண சபையைப் பறந்தள்ளி, மக்களை நேரடியாகத் தமது கைக்குள் அடக்கிக் கொள்வதற்கான செயற்பாடுகளில் ஈடுபடத் தொடங்கியிருக்கின்றார்கள் என்பதைப் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் நன்கு உணர்ந்திருக்கின்றார்கள்.
ஆயினும், தமது அரசியல் தலைவர்கள், மத்திய அரசாங்கத்தினதும், தென்பகுதி அரசியல் தலைவர்களினதும் போக்குகளையும், அரசியல் தந்திரோபாயங்களையும் பட்டறிந்தவர்களாக, பாதிக்கப்பட்ட மக்களாகிய தமது தேவைகளை நன்கு உணர்ந்துள்ள நிலையில் காரியங்களை முன்னெடுக்கும் வகையில் செயற்படுகின்றார்களில்லையே என்ற கவலையையும் அவர்கள் கொண்டிருக்கின்றார்கள்.ஆட்சி மாற்றத்தின் பின்னர் முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாகிய அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள காணிகளை அவற்றின் உரிமையாளர்களாகிய மக்களிடம் கையளித்து அவர்களை அங்கு மீள்குடியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள போதிலும், அது, வெறும் கண்துடைப்பு நடவடிக்கையாகவே மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது என்பதைப் பலரும் சுட்டிக்காட்டியிருக்கின்றார்கள்.வலிகாமம் வடக்கில் ஆயிரம் ஏக்கர் காணிகளைப் பொதுமக்களிடம் கையளிக்கப்போவதாக முன்னைய அரசாங்க காலத்திலேயே அறிவிக்கப்பட்டிருந்தது.

புதிய அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதையடுத்து, இந்தக் காணிகள் படிப்படியாக பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டிருக்கின்றன.
இது வரவேற்கத்தக்க முன்னேற்றகரமான நடவடிக்கையாகும். ஆனால் கையளிக்கப்பட்ட காணிகள், முறையான திட்டமிடலின் ஊடாக காணி உரிமையாளர்கள் அங்கு சென்று மீள்குடியமரத்தக்க வகையில் கையளிக்கப்படவில்லை.
பொது மக்களின் காணிகளை பெயரனவில் கையளிப்பதற்காகக் கையளித்த வகையிலேயே காணிகள் விடுவிக்கப்பட்டிருக்கின்றன. பல காணிகள் முழுமையாக விடப்படவில்லை. இதனால் அந்தக் காணிகளில் மக்கள் சென்று மீள்குடியேற முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது, காணியின் ஒரு பகுதி விடப்பட்டுள்ளது.
காணியில் உள்ள கிணறு இராணுவத்தின் எல்லை வேலிக்குள் அகப்பட்டிருக்கின்றது. அந்தக் காணியில் குடியேறுவர்கள் குடிநீருக்காக புதிதாகக் கிணற்றை அமைக்க முடியுமா என்று பாதிக்கப்பட்டவர்கள் கேள்வி எழுப்பியிருக்கின்றார்கள்.
விடுவிக்கப்பட்ட காணிகளில் குடியேறுபவர்கள் வெளியிடங்களுக்குச் சென்று வர முடியாத வகையில் வீதிகளை மறித்து படையினர் வேலி அமைத்திருக்கின்றார்கள்.
காணிகளுக்கு அடிப்பாதைகளின் ஊடாக நடந்து செல்ல முடியும். ஆனால் அந்தக் காணியில் குடியிருப்பதற்குரிய நடவடிக்கைகளை மேறகொள்வதற்குரிய பொருட்களை வாகனங்களில் ஏற்றிச் செல்வதற்கு உரிய பாதைகள் இல்லை.கையளிக்கப்பட்டுள்ள காணிகள் ஏற்கனவே இராணுவத்தினரால் மட்டமாக்கப்பட்டு, எல்லை வேலிகள் காணிகளுக்குரிய அடையாளங்கள் என்பவற்றை இல்லாமல் செய்து வெட்டவெளியாக வெற்றுத் தரையாக விடப்பட்டிருக்கின்றது.
இத்தகைய இடங்களில் தமது காணிகளை சரியான முறையில் உரியவர்கள் அடையாளம் காண முடியாத நிலையேற்பட்டுள்ளது,அதேநேரத்தில் காடுகள் அடர்ந்து பற்றைகள் நிறைந்துள்ள இடங்களிலும் காணிகளின் எல்லைகளைச் சரியாகக் கண்டறிந்து கொள்ள முடியாமல் பல குடும்பங்கள் தவிக்கின்றன.
மீள்குடியேற்றத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ள காணிகளின் எல்லைகளைக் கண்டுபிடிப்பதில் காணி உரிமையாளர்கள் பெரும் சிரம்ஙகளை எதிர்நோக்கியிருக்கின்றார்கள்.
அவரவர் தமது காணியை நில அளவை செய்து எல்லையைக் குறிப்பதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதனால் அயல் அயல் காணிகளின் எல்லைப் பிரச்சினை ஏற்பட்டு மீள்குயேறச் சென்ற இடத்தில் மக்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்ளும் நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.காணிகளை விடுவித்து, சொந்தக் காணிகளில் மக்கள் மீள்குடியேற்றப்பட்டிருப்பதாக அரசாங்கத்துடன் இணைந்து மக்கள் பிரதிதிகள் ஒத்துப்பாடுகின்றார்களே தவிர, அந்த மக்கள் அங்கு எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குரிய நடவடிக்கைகளை அடிமட்டத்தில் மேற்கொள்வதற்கு முயற்சித்திருப்பதாகத் தெரியவில்லை.அதேநேரம் கிழக்கு மாகாணத்தில் சம்பூர் மக்களுக்குச் சொந்தமான காணிகள் 800க்கும் அதிகமான ஏக்கர் காணிகளை அரச முதலீட்டுச் சபையிடமிருந்து விடுவித்து உரிமையாளர்களிடம் கையளிப்பதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அதற்குரிய வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி கையெழுத்திட்டிருப்பதற்கு மிகுந்த முக்கியத்துவமளித்து தகவல்கள் செய்திகளாக வெளியிடப்பட்டிருந்தன.

அதேநேரம் கடற்படையினரின் பயிற்சி முகாம் அமைக்கப்பட்டுள்ள 200க்கும் அதிகமான ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்காக விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல் பற்றியும் பெரிய அளவில் பிரசாரம் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது. இந்த நடவடிக்கைகளின் மூலம் சம்பூர் மக்கள் தங்களுடைய கைகளுக்கு மீண்டும் வந்துவிட்டன என்ற வகையில் பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் பிரசாரம் செய்து வருவதைக் காண முடிகின்றது.பல வருடங்களாக இடம்பெயர்ந்து, தமது சொந்தக் காணிகளுக்குத் திரும்பிச் செல்வதற்காகப் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்ற அந்த மக்களுக்கு, அந்தக் காணிகள் கையளிக்கப்படும் என்ற உத்தரவாதத்தையே அரசாங்கம் வாய்மொழியாகவும், வர்த்தமானி அறிவித்தலின் ஊடாகவும் வழங்கியிருக்கின்றது. இன்னும் அந்தக் காணிகள் மக்களுடைய கைகளில் வந்து சேரவில்லை.
காணிகள் எப்போது அவர்களிடம் கையளிக்கப்படும் என்பது பற்றிய திட்டவட்டமான அறிவித்தல் கிடையாது.
இந்த நிலையிலேயே சம்பூர் காணிப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டுவிட்டதாகத் தமிழ்த் தலைவர்கள் மேடைகளில் பிரசாரம் செய்து வருகின்றார்கள். 
இந்த நடவடிக்கையானது, வரப்போகின்ற தேர்தலை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படடுள்ள அதீத பிரசாரமாகவே பார்வையாளர்களினால் நோக்கப்படுகின்றது.வடக்கிலும்சரி கிழக்கிலும்சரி தமிழ் மக்கள் தமிழ்த்தேசிய கூட்டமைப்புத் தலைவர்களையே நம்பியிருக்கின்றார்கள். அவர்கள் மீது அளவற்ற நம்பிக்கை வைத்திருந்தார்கள்.
ஆனால் யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் கடந்த ஐந்து வருடங்களிலும், முறையான அரசியல் செயற்பாட்டை முன்னெடுக்க முடியாது போயிருந்த போதிலும், தமது எதிர்பார்ப்புக்களையும் நம்பிக்கையையும் தக்கவைக்கத்தக்க வகையில் காரியங்களை அந்தத் தலைவர்கள் முன்னெடுக்கவில்லை என்ற கசப்பான உணர்வை உணரத் தொடங்கியிருக்கின்றார்கள்.
தமது தலைவர்கள் கட்சி அரசியலையும் தேர்தலையும் இலக்கு வைத்து சாதாரண காலத்து அரசியல் சூழலில் செயற்படுகின்ற அரசியல்வாதிகளைப் போன்று செயற்படுகின்றார்களே என்ற கவலை அவர்களைவ வாட்டத் தொடங்கியிருக்கின்றது.
எதிர்பார்த்த ஒற்றுமையும் இல்லை. எதிர்பார்த்த அரசியல் செயற்பாடுகளும் இல்லை என்ற நிலையில் வரப்போகின்ற பொதுத் தேர்தலானது, தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அரசியல் பிரதிநிதிகளுக்கும், தமிழ் மக்களுக்கும் கூட சோதனை மிகுந்ததாகவே அமையப் போகின்றது. அதற்கான அறிகுறிகள் இப்போது வெளிப்பட்டிருப்பதைத் தெளிவாகக் காண முடிகின்றது.
-செல்வரட்னம் சிறிதரன்-

Share.
Leave A Reply