தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் விசாரணைக் கைதி ஒருவரை, கைவிலங்குடன் திரைப்படம் பார்க்க அழைத்துச் சென்ற காவல்துறையினர் நான்கு பேர் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சமீபத்தில் வெளியான 36 வயதினிலே படத்தை, கைவிலங்கிடப்பட்ட கைதியுடன் காவலர்கள் பார்த்து ரசித்தனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் இரு சக்கர வாகனங்களைத் திருடுபவராகக் கருதப்படும் ஒருவரை அம்மாவட்ட காவல்துறையினர் சனிக்கிழமையன்று கைதுசெய்தனர்.
அந்த நபரை வைத்து மேலும் ஒருவரை அடுத்த நாள் காலையில் கைதுசெய்ய காவல்துறையினர் முடிவுசெய்திருந்தனர். இதன் காரணமாக, அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படவில்லை.
இரவில் கைதிகள் யாரையும் காவல்நிலையத்தில் வைக்கக்கூடாது என கூறப்பட்டிருப்பதால், இரவில் அந்தக் கைதியையும் ஏற்றிக்கொண்டு, ரோந்து வாகனத்தில் காவல்துறையினர் வலம் வந்தனர்.
ரோந்து செல்லும் வழியில் ஒரு திரையரங்கில் 36 வயதினிலே என்ற புதிய தமிழ்த் திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தது.
இதையடுத்து ஆய்வாளர் ராஜேந்திரன், சிறப்பு உதவி ஆய்வாளர் அழகேசன், தலைமைக் காவலர் ஞானப்பிரகாசம், வாகன ஓட்டுனர் ராமச்சந்திரன் ஆகிய மூவரும், விசாரணைக் கைதியுடன் படம் பார்த்தனர்.
அப்போது அந்த விசாரணைக் கைதி கைவிலங்கிடப்பட்டிருந்தார். கை விலங்குடன் ஒருவர் திரைப்படம் பார்ப்பதைக் கண்ட பொதுமக்கள் செல்போன் மூலம் தகவலைப் பரப்பினர்.
இத்தகவல் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நரேந்திர நாயருக்குக் கிடைத்தவுடன் காவலர்கள் நான்கு பேரும் ஆயுதப் படைக்கு மாற்றம் செய்யப்பட்டனர். அதன் பிறகு நடந்த விசாரணையின் முடிவில் நான்கு காவலர்களும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.