போர் வெற்றிக் கொண்டாட்டங்களை சீர்குலைத்தமைக்காக சிறிலங்கா அரசாங்கம் வெட்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச.
கொழும்பு விகாரமாதேவி பூங்காவில் நேற்று மாலை நடந்த, மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான குழுவினரால் ஒழுங்கு செய்யப்பட்ட போர் வெற்றி விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
“தீவிரவாதத்தை நாம் தோற்கடித்த நாள், ஒரு வெற்றி நாள். இந்த நாளை, வெற்றி நாளாகத் தான் கொண்டாட வேண்டுமே தவிர, நினைவு நாளாக அல்ல.
முன்னைய அரசாங்கங்கள் விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்கத் தவறியிருந்தன. அவர்கள் எப்போதுமே, தீவிரவாதிகள் முன் மண்டியிடத் தயாராக இருந்தார்கள்.
விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பது சாத்தியமில்லை என்று வெளிநாட்டு அரசாங்கங்கள் கூட, என்னை சமாளிக்க முற்பட்டன.
ஆனால் நாட்டைப் பாதுகாப்பதற்காக, நான் அவர்களுடன் போரிட முடிவு செய்தேன்.
என்னைப் பழிவாங்க விரும்பும் எவரும், என்னைத் தண்டிக்கலாம். அவர்களால் என்னை சிறையில் அடைக்க முடியும்.
நான் அதற்குப் பயப்படவில்லை. ஆனால், போர் வீரர்களின் மகிழ்ச்சியை அழிக்கக்கூடாது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நேற்றைய நிகழ்வில், சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவும் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்வில், மேடையில் அமைக்கப்பட்டிருந்த துப்பாக்கி ரவை போன்று வடிவமைக்கப்பட்ட தீபத்தை மகிந்த ராஜபக்ச ஏற்றி வைக்க, அரங்கில் கூடியிருந்தவர்கள் கைகளில் மெழுகுவர்த்திகளை ஏந்தியபடி, சிறிலங்கா படையினரை நினைவு கூர்ந்தனர்.
இன்று மாத்தறையில் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு ஒழுங்கு செய்துள்ள, போர் வீரர் ஞாபகார்த்த அணிவகுப்பு நிகழ்வு இடம்பெறவுள்ளது.
இந்த நிகழ்வுக்கு மகிந்த ராஜபக்ச அழைக்கப்படவில்லை என்று, ரணவிரு அதிகார சபையின் தலைவர் அனோமா பொன்சேகா தெரிவித்துள்ளார்.