புங்குடுதீவில் பாடசாலை மாணவியின் கொலைச்சம்பவத்துடைய குற்றவாளிக்காக வாதாடிய வக்கிலை மறித்து தங்களிடம் வக்கிலை தருமாறு போலிசாரிடம் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்…
புங்குடுதீவு உயர்தர மாணவி வித்தியா சிவலோகநாதன் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குப் பின்னர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் கொலைச் சந்தேகநபர்களென மக்கள் இனங்கண்ட முதலில் மூவரையும், பின்னர் மேலும் ஐவரை பொலிஸார் கைது செய்தனர்.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள ம.சிவதேவன், துசாந்தன், சசிதரன், சந்திராஜ, நிசாந் உள்ளிட்டோர் வயது முறையே 31, 31, 26, 25, 23 ஐ உடையவர்களாவர். இந்த ஐந்து பேரும் மட்டுமல்லாது முதலில் கைது செய்யப்பட்ட மூவர் உட்பட எட்டுப்பேரும் புங்குடுதீவை சேர்ந்தவர்கள் எனவும் தெரிய வருகிறது.
அத்துடன் இவர்களது கைதினை அடுத்து மற்றுமொரு நபரும் மக்களினால் பிடிக்கப்பட்டு மின்கம்பத்தில் கட்டப்பட்டு பொதுமக்களினால் தாக்கப்பட்டார். இவர் சுவிசில் இருந்து சென்ற பிரகாஸ் அல்லது குமார் எனப்படும் சிவகுமார் எனவும் தெரிய வருகிறது.
ஆயினும் இவர் புங்குடுதீவு மாணவி வித்தியாவின் சம்பவத்துடன் நேரடியாக எந்தவொரு சம்பந்தமும் இல்லாத போதிலும், இவரே மேற்படி சந்தேகநபர்கள் அனைவருக்குமாக மது, போதைவஸ்து போன்றவற்றுக்கு செலவழிப்பவர் எனவும், அத்துடன் கைது செய்யப்பட்டுள்ள எட்டுப்பேரில் ஒருவரான சசிதரன் என்பவர் இவரது கூடப்பிறந்த தம்பி என்பதும் இங்கு குறிப்பிடத் தக்கது.
மேற்படி சுவிசில் இருந்து சென்ற பிரகாஸ் அல்லது குமார் எனப்படும் சிவகுமார் ஆட்டோ ஒன்றில் கொழும்புக்கு செல்ல இருந்தவேளை, பொதுமக்களினால் வேலணைப் பகுதியில் பிடித்து, மின்கம்பத்தில் கட்டி வைத்திருந்த போது உடனடியாக சம்பவ இடத்தை சென்றடைந்த பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், வேலணை பிரதேசசபை தலைவர் தவராசா ஆகியோர் தலையிட்டு மக்களிடையே சமரசத்தை ஏற்படுத்தினர்.
இன்றுகாலை (சற்று முன்னர்) கிடைத்த தகவலின்படி மேற்படி சுவிசில் இருந்து, விடுமுறைக்கு வந்திருந்த பிரகாஸ் அல்லது குமார் எனப்படும் சிவகுமார் என்பவரை, பொலிசாரிடம் ஒப்படைப்பதாகக் கூறி சட்டத்தரணி திரு.வி.ரி. தமிழ்மாறனால் அழைத்து செல்லப்பட்டு விடுவிக்கப்பட்டு விட்டதாகவும், இதனையடுத்து புங்குடுதீவு பொதுமக்களினால் சட்டத்தரணி திரு.வி.ரி. தமிழ்மாறன், பிடிக்கப்பட்டு புங்குடுதீவு சர்வோதய மண்டபத்துக்குள் அடைத்து வைத்து ஆர்ப்பாட்டம் செய்து வருவதாகவும்,
இதேவேளை இவர் சுவிசுக்கு தப்பி செல்லும் நோக்கில் இருந்தவேளை வெள்ளவத்தை பொலிசாரினால் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், இருப்பினும் மேற்படி பிரகாஸ் அல்லது குமார் எனப்படும் சிவகுமார் என்பவரை, தம்மிடம் அதாவது புங்குடுதீவு கொண்டுவந்து, தமக்கு முன்னாள் பொலிசாரிடம் ஒப்படைக்கும் வரை சட்டத்தரணி திரு.வி.ரி. தமிழ்மாறனை, தாம் விடுவிக்க மாட்டோம் எனவும் பொதுமக்கள் தெரிவித்து தொடர்ந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேவேளை சட்டத்தரணி திரு.வி.ரி. தமிழ்மாறன் அவர்களுக்கு பொலிசார் பலத்த பாதுகாப்பு வழங்கி, பொதுமக்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை மேற்படி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் இடத்துக்கு வடமாகாண சபை உறுப்பினர்கள், தமிழ் கூட்டமைப்பு பிரதிநிதிகள், ஈ.பி.டி.பி உறுப்பினர்கள், புங்குடுதீவு ஒன்றியப் பிரதிநிதிகள் சமூகம் தந்துள்ளனர்.